நீர்நிலைகளில் தேங்கிய உயிர்கள் – அனர்த்தங்களுக்கு யார் காரணம்?

எதிர்பாராத அழிவுகள் உலகின் நாலாபுறமும் நாள்தோறும் நடந்தவண்ணம்தான் இருக்கின்றன. எந்த நொடி எவ்வாறான அனர்த்தம் யாரைக் காவுகொள்ள இருக்கிறதோ என்ற கேள்விக்கு பதில் அறியாதவர்களாய் செய்திகளையும், சமூக ஊடக வலைத்தள காலக்கோடுகளையும் கடந்தவண்ணம் மனித இனம் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

மண்சரிவு என்றும், சுனாமி என்றும், பூமியதிர்வு என்றும், வெள்ளப்பெருக்கு என்றும், சூறாவளி என்றும் நாளாந்தம் பல இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டு வருகிறது இவ்வுலகு. இயற்கையின் சீற்றத்துக்கு மேலதிகமாக மனிதனின் சீற்றம் கொண்டுவரும் செயற்கையான அழிவுகள் யுத்தம், குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு, உயிரியல் யுத்த வியூகங்கள் என மனிதனை மனிதன் அறிந்தே அழிக்கும் நிலையும் இவ்வுலகுக்குப் புதிதல்ல.

இவ்விரண்டும் மனிதகுலத்துக்கு விடுத்திருக்கும் பாரிய அச்சுறுத்தலையும் அழிவையும் கண்கூடு பார்த்து, அனுபவித்து, இன்னல்களை எதிர்நோக்கும் நாம், இவ்வாறான அனர்த்தங்களின் விளைவை மேலும் பலமடங்காக அதிகரிக்கின்ற வேறு பல செயற்பாடுகள்பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறான செயற்பாடுகளை செய்வது, அதற்குத் துணைபோவது, அவற்றைக் கண்டும் காணாது விடுவது, வேறு பல குறுங்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எமது இனத்துக்கே கேடுவிளைவிக்கும் பல இடர்பாடுகளைத் தெரிந்தே அதன் பாரதூரம் பற்றிக் கவலைகொள்ளாது ஏற்படுத்தி வைப்பது போன்ற செயற்பாடுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறோம்.

சுனாமி அனர்த்தம் இலங்கை 2004 (cnn.com)

சுனாமி அனர்த்தம் இலங்கை 2004 (cnn.com)

கடந்த ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிப்போட்ட கனத்த மழையையும் வெள்ளப் பெருக்கையும் அதனால் சென்னை வாழ் மக்கள் பட்ட அவதியையும் அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்க மாட்டோம். எதிர்பாராத கனத்த மழைவீழ்ச்சி அடுக்கு மாடிகளையும் ஆட்டம்காண வைத்ததும், ஏழை பணக்காரன் நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வீடிழந்து பொருளிழந்து இடம்பெயர்ந்து வாழவைத்தது. இயற்கைக்குண்டான இப்பெரும்சக்தி மட்டுமல்ல, எமது அழிவுக்கும் இன்னல்களுக்கும் நாமும் ஓர் காரணம் என்றால் மிகையல்ல.

இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பை அதிகப்படுத்தும் மனித செயற்பாடுகள் யாவை?

வரலாறு காணாத வெள்ளப்பெருக்குகளும் சூறாவளியும் மண்சரிவுகளும் அதன் விளைவுகளைப் பொறுத்து “வரலாறு காணாத” என மிகைப்படுத்தப்பட்டாலும், அவை காலாகாலமாக மனித இனம் கடந்துவந்த அனுபவங்களே. இருந்தும் முன்னைய காலங்களை விட தற்காலத்தில் ஒப்பீட்டளவில் இயற்கை அனர்த்தங்களின் நிகழ்வுகள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. மனிதனின் எல்லைமீறிய இயற்கை நுகர்வு, பூகோள வெப்பமுறுகை, காடழிப்பு இப்படி பல்வேறுபட்ட காரணங்களை மேற்கோள் காட்ட இயலும். இருந்தும் இதிலுள்ள சுவாரஸ்யமான அனால் சிந்திக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இயற்கை அனர்த்தங்களுக்கும் அழிவுகளுக்கும் மனித செயற்பாடுகளே காரணமாக அமைகின்ற அதேவேளை, அவ்வனர்த்தங்களின் விளைவுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளையும் அவனே செய்துவைத்திருப்பதுதான். அத்தோடு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து தனது சமூகத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் திட்டங்களையும் குறுகிய நோக்கங்களுக்காக அவன் புறக்கணித்து வாழ்வது வேதனைக்குரிய உண்மை.

வெள்ளத்தில் மூழ்கியிருந்த சென்னைப் புறநகர்ப் பகுதியின் தோற்றம் (ibtimes.co.uk)

வெள்ளத்தில் மூழ்கியிருந்த சென்னைப் புறநகர்ப் பகுதியின் தோற்றம் (ibtimes.co.uk)

கடந்த வருடம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பான ஆய்வில் சென்னை மெட்ரோபொலிடென் அபிவிருத்தி அதிகாரசபை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையில், இவ்வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக அமைந்திருந்த மூன்று முக்கிய அம்சங்களை வெளியிட்டிருந்தது.

  1. சட்டவிரோதமான கட்டிட நிர்மாணங்கள் – கட்டிட நிர்மாணங்கள் குறித்து பெறவேண்டிய அனுமதிகள், அது தொடர்பான நடைமுறைகளைப் புறக்கணித்து சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட நிர்மாணப் பணிகள்
  2. வடிகான்களில் உள்ள தடுப்புக்கள் – மழை நீர் மற்றும் நகருக்குள்ளிருந்து நீர் வடிந்துசெல்லும் வடிகாங்களில் உள்ள அடைப்புக்கள், தடைகள் போன்றவை. உரிய பராமரிப்பின்மை, வடிகாலமைப்பிலுள்ள வழுக்கள் போன்ற காரணிகள் இதற்குள் அடங்கும்.
  3. தவறான மற்றும் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் – உரிய/அத்தியாவசியமான திட்டங்களை நடைமுறைப்படுத்தாமை மற்றும் பிழையான, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

இம்மூன்று காரணிகளையும் நன்கு ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் நடைமுறை ரீதியான வழுவிடங்கள் நன்கு புலப்படும். எப்படி இவ்வாறான தவறுகள் நடக்கின்றன? சட்டம் ஒழுங்கு தொடர்பாக இருக்கின்ற இடர்பாடுகள் என்ன? இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதற்கான கிளைக் காரணிகள் என்ன என்பது சொல்லித் தெரியவேண்டிய விடயமன்று.

உரிய முறையில் பராமரிக்கப்படாத வடிகான்கள் (mapsofindia.com)

உரிய முறையில் பராமரிக்கப்படாத வடிகான்கள் (mapsofindia.com)

மேலும் அவ்வறிக்கை கூறுவதாவது, சுமார் 1.5 லட்சம் சட்டவிரோத நிர்மாணங்கள் மூலம் 300 உக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. குறுகிய நோக்கங்களுக்காக, இயற்கைக்கு விரோதமாக மனிதன் செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நீர் வடிந்தோடவேண்டிய நீர்நிலைகள் அழிந்துபோயுள்ளன. மக்கள் வெள்ளத்தினால் அவதியுற்றதற்கு கனத்த மழையும் புயலும்தான் காரணமா? எங்களது அழிவை நாங்களே தேடிக்கொண்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா? நீர்வழிந்து ஓடும் கால்வாய்களையும் அடைத்துவிட்டு, நீர்நிலைகளையும் அழித்துவிட்டால் மழைநீர் உங்கள் வீடுகளுக்குள்ளே தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழியேது?

வெள்ளத்தால் இடம்பெயரும் மக்கள் (wsj.net)

வெள்ளத்தால் இடம்பெயரும் மக்கள் (wsj.net)

இது உலகின் ஒரு பகுதியிலுள்ள புள்ளி விபரம் மட்டுமே. ஆனால் இவ்வாறான சட்டவிரோதமான மற்றும் அதிகாரபூர்வமற்ற விடயங்கள் உலகின் நிறைய நாடுகளில் நடந்துவருவது மறுக்க இயலாத உண்மை. வருமானத்தையும், இலாபத்தையும் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு அதிகாரத்திலுள்ளவர்கள் செய்யும் இச்செயற்பாடுகள் மனிதகுலத்துக்கே சாபக்கேடாய் வந்து முடியும் நிலை எவ்வளவு துர்பாக்கியமானது?! நாம் சிறுவர்களாக இருந்தபோது எமது ஊர்களில் இருந்த எத்தனை நீர்நிலைகள் இப்போதும் உயிரோடு இருக்கின்றன? நாம் மீன்பிடித்து விளையாடிய, நீலோற்பனங்களை பிடுங்கி மகிழ்ந்த, நீர்நிலைகள் எங்கே? தண்ணீரில் பட்டு வந்த குளிர்காற்று இப்போதெல்லாம் எம்வாசல் வருவதே இல்லையே ஏன்?

இளைய சமுதாயத்திற்கு இக்கேள்விகள் குறித்து அறிவூட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். நாம் பார்த்த நீர்நிலைகள் பற்றி அவர்களுக்கு சொல்லாது மறந்துபோவது அல்லது மறைத்துவிடுவது நாம் எமது சந்ததிக்குச் செய்கின்ற துரோகம். நீர்நிலைகளும் எமது சூழலில் ஓர் பங்கு. அவற்றை அழிப்பது எமதினத்தின் அழிவுக்கு நாம் இடும் பிள்ளையார் சுழி. மனிதன் அழித்தான், மனிதன் அழித்தான் என நாம் சொல்லும் அல்லது பழி போடும் மனிதன் யார்? அது வேறு யாரோ அல்ல, நாம்தான். நம் ஒவ்வொருவர்மீதும் இதுகுறித்த கடமை இருக்கிறது. வெறும் எழுத்துக்களோடு நிறுத்திவிட்டு நடைமுறையில் எங்களை நாங்கள் மாற்றிக்கொள்ளாது விடுவது உசிதமல்ல. இவ்வாறான இயற்கைச் சீர்கேடுகளில் இருந்து நாம் விடுபடுவதோடு, அடுத்தவரையும் அறிவூட்டுதல் எமதனைவரதும் தலையாய கடமை. நீர்நிலைகளைக் காப்பாற்றுங்கள். இனிவரும் வெள்ளங்களுக்கு முன்னாவது அணைக்கட்டப் பழகிக்கொள்ளுங்கள். இல்லையேல் “நாடா”க்களுக்கும் “வர்து” களுக்கும் பீதியோடுதான் பெயர்வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

Related Articles

Exit mobile version