போற்றத்தக்க பொதுக்கொள்கை அகிம்சை

”கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”. தமிழ்நாட்டில், தமிழ்வழியில் கல்வி கற்றவர்கள் இந்தப் பாடலை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. சுதந்திர போராட்டக் காலத்தில்  மகாத்மா காந்தி குறித்து நாமக்கல் கவிஞர்  எழுதிய வரிகள் இவை. அதுவரை உலகின் அடக்குமுறைகளுக்கு, அடிமைத்தனத்திற்கு எதிரான  சுதந்திரப் போராட்டங்கள் அனைத்தும் பின்பற்றியது ஆயுத போராட்டமே. அதுதான் வழக்கம். அந்த வழக்கத்திற்கு முரணாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரும்  ஏற்றுக்கொண்ட வகையிலான ஒரு போராட்டத்தை கட்டமைத்தார் காந்தி. அதுதான் அகிம்சை.

“உலகில் உண்மையான இரு கிறிஸ்துவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஒருவர் இயேசு கிறிஸ்து. மற்றொருவர் காந்திஜி” – என்று இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட்ஷாவாலும்,  “நமக்குப்பின் வரும் சந்ததிகள் தசையோடும், இரத்தத்தோடும் இது போன்ற ஒரு மனிதர் பூவுலகில் உலவினார் என்பதைக் கூட நம்பக்கூட மாட்டார்கள்”  என்று பெருவிஞ்ஞானி ஐன்ஸ்டீனாலும் புகழப்பட்டவர் காந்தி. உலகின் உயர்ந்தவர்களின் காந்தி குறித்த வார்த்தைகளை இக்கட்டுரைக்குள் ஒருபோதும் அடக்கயிலாது. ஆகையால் இவ்விரு உதாரணம் போதும். இந்திய விடுதலைப் போராட்டத்தினர் காந்தியின் அகிம்சை நெறியைப் பின்பற்றி விடுதலை வேள்வி நடத்தினர். போரில் உயிர்ப்பலி ஏற்படுவது இயல்பு. போரில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது போர் தர்மம். ஆனால் ஆயுதப் போரைக்காந்தி வெறுத்தார். சத்திய நெறியில் அகிம்சை அடிப்படையில் போரிடுவதை விரும்பியவர் காந்தி. ஆங்கிலேயர்கள் தாங்களாகவே இந்தியாவை விட்டுவெளியேற, காந்தியின் அகிம்சைப் வழியே காரணமாகும். அகிம்சை மூலம் ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்க முடியும் என உலகுக்கு நிரூபித்த முதல் தலைவர் காந்திதான். காந்தி, இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு கூறாக இருந்த காங்கிரஸிற்கு தலைமை ஏற்று வழி  நடத்தினார். அகிம்சை மற்றும் சத்யாகிரக கொள்கைகளுக்கு இருக்கும் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டினார். இதனாலேயே அவரின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதிதான் சர்வதேச அகிம்சை தினமாக (International Day of Non-Violence) அனுசரிக்கப்படுகிறது.

படம்: yourarticlelibrary

உலகம் முழுக்க இன்று அகிம்சை தேவைப்படுகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும், ஏமனிலும், மியான்மரிலும், கொசாவாவிலும், ஆஃப்கானிஸ்தானிலும், இன்னும் உலகின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் மதத்தின் பெயராலும் இன்ன பிற காரணத்திற்காகவும் வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் அதைப் போக்க அகிம்சை என்ற நிலை இந்த உலகின் எல்லாப் பகுதிக்கும் தேவைப்படுகிறது. கொல்லாமையையும், துன்புறுத்தாமையையும் அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை தான் வாழும் காலம் முழுவதும் போதித்ததோடு நில்லாமல், ஒரு மாபெரும் நாட்டின் சமூக, அரசியல் விடுதலைக்காக அதனையே கருவியாக்கி, அதில் வெற்றியும் பெற்ற தேசத்தந்தை மகாத்மா காந்தி துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானது தான் அகிம்சையின் துர்பாக்கியம். இந்த தேசம், இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளாக கூறுபோடப்பட்டபோது உருவான மதக் கலவரத்தை ராணுவத்தாலோ, காவல்துறையினராலோ கூட அடக்க முடியவில்லை. ஆனால், மகாத்மாவின் உண்ணாவிரதம் மூலம் விடுக்கப்பட்ட அமைதி செய்தி, ரத்த வெறியில் திளைத்த மக்களின் உணர்வுகளை சமாதானத்தை நோக்கி தட்டி எழுப்பியது. ஆனால் அது மதபயங்கரவாதிகளை கோவப்படுத்தியது.  தனது அமைதி போராட்டத்தை விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி நிறுத்திக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயை பிரதமர் நேரு தலைமையிலான அமைச்சரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தார். பிரிவினையை மகாத்மா காந்தி ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்களை அதற்குரிய நியாயமான நடைமுறைகளை தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளச் செய்தார் காந்தி. காந்தியின் ஒவ்வொரு சமாதான நடவடிக்கையும் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரானதாகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாக போலியாக உருவகப் படுத்திக்கொண்ட மத பயங்கரவாதிகள் காந்தியை சுட்டுக் கொன்றனர்.”கத்தியெடுத்தவர்கள் மட்டுமல்ல கத்தியை கீழே போடச் சொன்னவர்களுக்குக் கூட கத்தியால் தான் சாவு”. இப்படி நாம் யோசிக்க காரணம் அந்த மத பயங்கரவாதிகள்.

படம்: hindusamhati

காந்தியின் அகிம்சையை அதிகம் போதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் குறிப்பாக இன்றைய இந்தியா உள்ளது. ஏனென்றால் ஜனநாயகத்துக்கு எதிரான  நிலைப்பாட்டில் பெறும் வன்முறையை சந்தித்து வருவதில் நிலைமை மோசமானதாகவே உள்ளது. அகிம்சை வழி நாடு என்று பெருமையாக நாம் கொள்வதில் துளியும் உண்மையில்லை. மேடைகளில் அவ்வப்போது அரசியல் தலைவர்களும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மாட்டுக்காக மனிதன் துடிக்க துடிக்க அடித்துக்கொள்ளப்படும் கேவலமான தேசமாக இது மாறிக் கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மட்டுமல்ல நியாயத்தை பேசுகின்ற, ஜனநாயகத்தை பாதுகாக்க விளைகின்ற நபர்கள் உயர்சாதியினராய் இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுகின்றனர். அகிம்சைக்கு எதிராக  என்று அல்ல துளியும் மனிதத் தன்மையே இல்லாத படுபாதக செயல்கள் இந்தியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாதம் என்ற பெயரில் வன்முறைகள் தாண்டவமாடுவதும், ரத்த வெள்ளம் பாய்ந்தோடுவதும் மிகுதியாகிக் கொண்டிக்கிறது.  பயங்கரவாதத்தைக் கையிலெடுப்பவர்களைக் குறைகூறுவதோடு நின்றுவிடாமல், இந்த நிலைமையை முற்றிலும் அகற்றிட, உலக நாடுகளின் அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.  “உலக வரலாற்றில் உண்மையும், அன்புமே எப்போதும் வென்றுள்ளன. வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும் கூட வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்” என்ற காந்தியின் சொல்லை எந்த அரசாங்கமும் மறந்து விடக்கூடாது. காந்தியைக் கடுமையாக எதிர்த்துவந்த அம்பேத்கரே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வன்முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை, அதைத் தன் மக்களுக்கு போதிக்கவுமில்லை. காந்தியை எதிர்த்துவந்த மற்றொரு ஆளுமையான பெரியாரும் தனது போராட்டங்களை வன்முறை வழியில் நடத்தவுமில்லை, தனது தொண்டர்களுக்கு வன்முறையை போதிக்கவுமில்லை. ஏன் பாகிஸ்தானை விரும்பிய, அதற்காகவே காந்தியை எதிர்த்த முகமது அலி ஜின்னாவும் வன்முறையை தேர்ந்தெடுக்கவில்லை, தனது தொண்டர்களுக்கு போதிக்கவும் இல்லை. ஆனால் காந்தியை கொன்றவர்கள், இன்றளவும் அதை போதித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து செய்தும் கொண்டிருக்கின்றனர்.

படம்: rediff

காந்திக்கு சத்தியம், அகிம்சை மீதெல்லாம் நம்பிக்கை வர காரணம் என்று சொல்லப்படும் முக்கிய கூறு பகவத் கீதை, அரிச்சந்திர புராணம் உள்ளிட்ட புராணங்களை அவர் படித்ததுதான். ஆனால் அதையெல்லாம் படித்த, அதன்படி நடப்பதாக சொல்லப்படும், அதை காப்பதற்காகவே போராடும் நபர்களாலேயே கொள்ளப்பட்டிருப்பது பெரும் முரண். பேராபத்தும் கூட. அந்த முரணை வளரவிடாமல் தடுப்பதோடு அழிப்பது அகிம்சையாளர்களின் கடமை.  மதத்திலிருந்து வந்ததாக சொல்லப்படும் அகிம்சைக்கு இன்றைய பெரும் எதிரி மதம் தான் என்பதை நீண்ட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமிது. இந்தியாவின் சாதிய கட்டமைப்பை பாதுகாக்கும், வளர்ச்சியை தடுக்கும், மதத்தின் பேரால் கலவரத்தை தூண்டும் அத்தகைய தீய சக்திகளை அழிக்க வேண்டிய கடமை அகிம்சையை போதிக்கும் இந்திய அரசுக்கு உள்ளது.  அகிம்சையை போதித்த காந்தியை கொன்ற அந்த கயவர்களை அழிப்பதில்தான்,  துப்பாக்கி தூக்கிய காந்தியவாதிகளிடம் அகிம்சை குறித்து பேச நமக்கு தார்மீக உரிமை கிடைக்கும். சில நேரங்களில் சாத்தான் வேதம் ஓதுவதைப் போல, ஓநாய் ஆட்டுக் குட்டிக்கு வழிகாட்டுவதைப் போல , காந்தியை கொன்ற அந்த பயங்கரவாதிகளே அகிம்சையை புகழ்வார்கள்,   நாம் தான் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.  நாம் காந்தியின் பிள்ளைகள், இது காந்தி தேசம் என்று போலியாக பேசித்திரிவதை விட்டுவிட்டு, அகிம்சையை அரிக்கும் ”அந்த” பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். அதுதான் சர்வதேச அகிம்சைக்கு ஒரு துவக்கமாக இருக்கும்..

Related Articles

Exit mobile version