சூரியப் புயல்களால் இன்டர்நெட் இணைப்புகள் பாதிக்கப்படுகின்றனவா?

தரைமட்டத்தில் இருந்து 100Km தூரத்திற்கு அப்பால் உள்ள வெளியினையே நாம் விண்வெளி என்று வரையறை செய்திருக்கின்றோம். அதற்குள் அடங்குபவை பல படைகளில் அமைந்த பூமிக்குரிய வளிமண்டலமாகும்.பூமியை சூழவுள்ள விண்வெளியின் தன்மை நிரந்தரமில்லாதது. அது சூரியப் புயலின் அளவைப் பொறுத்து மாற்றமடையக்கூடியது. சூரியனிலிருந்து வெளியிடப்படும் மின்காந்த கதிர்வீச்சினையே நாம் சூரியப் புயல் என்றழைக்கின்றோம்.

இந்த கதிர்வீச்சு சூரியனிலிருந்து வெளிநோக்கி அலை வடிவில் பரவிச் செல்லும். இதன்போது பூமி உட்பட சூரியனை சுற்றிவரும் அத்தனை பொருட்களின் மீதும் இந்த அலைகள் சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்தும்.சூரியனின் மின்காந்த அலைகள் பூமியினை சுற்றியிருக்கும் காந்தப் புலத்தோடு மோதுகையில் சில விளைவுகளை தரும். இந்த மோதலால் மேல் வளிமண்டல படையில் மின்னோட்டம் ஏற்படுத்தப்படுகின்றது.

இந்த மின்னோட்டம் அங்கிருக்கும் வளியினை சூடாக்கும் போது அது மேல் வளிமண்டலத்தில் ஒரு புயலினை உருவாக்குகின்றது. வீட்டில் ஒரு மின்சூடாக்கியை வைத்து எப்படி எம்மால் நீரை கொதிக்க வைக்க முடிகிறதோ அதேபோல்.மேல் வளிமண்டலத்தில் நடக்கும் இந்த மாற்றம் பூமியின் வட, தென் முனைகளின் வானில் அசையும் அழகிய வர்ணமயமான காட்சிகளை கொடுக்கின்றது. இதையே நாம் Auroras என்றழைக்கிறோம். அதிகமான கதிர்வீச்சு வரும் போது அதிகளவு பிரகாசமான Auroras தோன்றுகின்றன.

மேல் வளிமண்டலத்தில் ஏற்படும் இதே புயலினால் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் செய்மதிகளினதும், சிறிய விண்வெளிக் குப்பைகளினதும் பாதைகளில் குறிப்பிட்ட அளவு பாதிப்பினை ஏற்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்வது எமக்கு அவ்வளவு கடினமாக இருக்காது.இதைத் தாண்டி சூரியனிலிருந்து மிக அதிகளவான கதிர்வீச்சு உமிழப்படும் போது பூமியின் கீழ் வளிமண்டலத்தில் கூட பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய அளவு மின்னோட்டங்களை அதனால் உருவாக்க முடியும்.

புகைப்பட உதவி: googleimage.com

 

இதன்போது உயரமான இடத்திலிருக்கும் மின் கோபுரங்கள், மின் இணைப்புகள் என்பன பாதிக்கப்படலாம். 1989 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் கியூபெக் நகரத்தில் ஏற்பட்ட 12 மணித்தியாலத்துக்கு மேலான மின்தடைக்கு இதுதான் காரணமென நாஸா தெரிவித்துள்ளது.

மிக அண்மையில் SpaceX நிறுவனத்தின் 40 செய்மதிகள் சூரியக் கதிர்வீச்சினை கவனத்தில் கொள்ளாததினால்  பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதனால் பூமியில் இன்டர்நெட் இணைப்பு பாதிக்கப்படவில்லை.காரணம் இன்டர்நெட் இணைப்பு பிரதானமாக கடலின் அடியில் செல்லும் கேபிள்களிலேயே தங்கியிருப்பதாலாகும். கேபிள்கள் கதிர்வீச்சினால் ஏற்படுத்தப்படும் மின்னோட்டங்களால் பாதிக்கப்படுவதில்லை.

ஆனால் இன்டர்நெட்டின் வேகத்தை அதிகரிக்கும் Boosters இதனால் பாதிப்படையலாம். அப்படி குறிப்பிடும்படியான Boosters பாதிக்கப்படுமிடத்தில் பூமியிலுள்ள ஒட்டுமொத்த இன்டர்நெட் இணைப்பும் செயலிழக்கும்.அப்படியொரு நிலை ஏற்படுமானால் அது நமது உலகத்தில் மருத்துவத்திலிருந்து, பங்குச் சந்தை வரை அத்தனை விடயங்களையும் முற்றாக பாதிக்கும். செய்மதிகள், சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட அத்தனையும் கட்டுப்பாட்டினை இழக்கும்.

இப்படி ஒரே நாளில் உலகத்தை ஸ்தம்பித்து நிற்க வைக்குமளவுக்கு சூரியக் கதிர்வீச்சு சக்தி கொண்டது. அதிர்ஷ்டவசமாக அப்படி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் அளவில் பொதுவாக சூரியன் கதிர்வீச்சினை உமிழ்வதில்லை.இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக விஞ்ஞானிகள் இதிலிருந்து எப்படி இன்டர்நெட் இணைப்புகளை பாதுகாக்கலாம் என்பது குறித்து பல வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர்.

சூரியப் புயல் இருக்கிறதோ இல்லையோ வட்ஸ்ஆபில் நம்மிடம் வந்து சேர்கின்ற இந்த செய்தியில் பாதி உண்மை இருக்கின்றது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால் அதில் சொல்லப்படுவது போல தொலைபேசிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை, அவை வெடித்துவிடுவதுமில்லை.

Related Articles

Exit mobile version