ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும்….

உண்மையில் தேயிலையின் வரலாறு சீனாவிலிருந்தே தொடங்குகின்றதாம். மூலிகைகள் பற்றி அறிந்திருந்த மருத்துவரான  “ஷென்னோங்” எனும்   சீன புராதன அரசரொருவர்,    ஓர் மலையடிவாரத்தில் இளைப்பாறியபோது அவர் அருந்துவதற்காக அருகில் வைக்கப்பட்டிருந்த சூடான நீரில் வீழ்ந்த தாவர இலையொன்று நீரின் நிறத்தையும், சுவையையும், மணத்தையும் மாற்றியிருப்பதனைக்கண்டு அந்த இலையை பரிசீலித்ததன் விளைவே இன்றைய தேயிலை வரலாற்றின் முன்னோடி எனக்கூறலாம். சீனாவின்  cha எனப்படும் தேயிலையைக் குறிக்கும் சொல்லானது கசப்பு சுவை என்கிற அர்தத்தைக்கொண்டது . இந்த சொல்லானது ஈராக்கில் பரவும்போது chai  என்றும், அரபியில் shay என்றும், உருது மற்றும் ஹிந்தியில் chai என்றும் மருவியது.

புகைப்பட உதவி:www.guidebits.com

இன்று நாம் பரவலாக உபயோகிக்கும்  “டீ”  என்கிற வார்த்தை டச்சுக் கிழக்கிந்திய கம்பனியினரால் உருவாக்கப்பட்டது. ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட டீ தாவரத்தின் இலை “ டீ இலை”  என உச்சரிக்கப்பட்டு பின்னாளில் டீயிலை என்பது தேயிலை என மருவியது. தேயிலை மூலம் தயாரிக்கப்படும் நீர் “தேயிலை நீர்” என கூறப்பட்டு “தேய்நீர்  “ என மருவி தேநீரானது. 

ஆரம்பத்தில் சீன அரண்மனைகளிலும், உயர்குடி மக்களிடமும் மட்டுமேயிருந்த தேநீர் புழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மங்கோலியர்கள் சீனாவை ஆக்கிரமித்தபின்பே பொதுமக்களுக்கான பானமாக  மாறியது . 1610இல் டச்சுக்காரர்கள் சீனாவிலிருந்து தேயிலையை எடுத்துச் சென்று தமது நாட்டில் மருத்துவ குணம் நிறைந்த பானம் என அறிமுகப்படுத்தினராம் . கிட்டத்தட்ட 17 நூற்றாண்டிலேயே பிரிட்டனில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப்பின் பிரிட்டிஷாருக்கு பிடித்த தேயிலை பித்தால் இந்த உலகின் பல நாடுகளின் சரித்திரமே மாறியதெனலாம்.

கிபி 1662இல் பிரிட்டிஷ் மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துகீச இளவரசி கேத்தரீனை திருமணம் செய்துகொண்டபோது, தேநீர் பிரியையான தனது மனைவிக்காக நூறு பவுண்ட் தேயிலையை கிழக்கிந்திய கம்பெனிகள் மூலமாக ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்தார். நாட்டின் ராணி தேநீர் எனும் புதிய பானம் அருந்தும் செய்தி வெளியில் பரவ அதையே விளம்பரமாக கொண்டு பணக்காரர்களிடையே தேயிலையை விற்க ஆரம்பித்தது கிழக்கிந்திய கம்பெனி .

ஐரோப்பியக் கண்டத்தின் சர்க்கரைத் தேவைக்காக எப்படி ஆபிரிக்க அடிமைகள் கரீபியன் தீவு கரும்புத் தோட்டங்களில் ரத்தமும் வியர்வையும் சிந்தி அல்லல்பட்டார்களோ, அவ்வாறே அப்பாவி தமிழர்கள் பிரிடிஷ் கம்பனிகளின் அடிமைகளாக  இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் சிக்கித்தவித்த  வரலாறும் முக்கியமானது.  1815ஆம் ஆண்டு கண்டியை பிரிட்டிஷார் கைப்பற்றி தமது காலனித்துவத்தினை நிறுவியபோது,  அங்குள்ள மலைப்பகுதிகளில் தேயிலை கொக்கோ, கோப்பி போன்றவற்றை பயிரிடுவதற்காக ஏலவே இருந்த சிங்கள குடியேற்றங்கள் சில அழிக்கப்பட்டன. 

இதனால் கடும் அதிருப்தியடைந்திருந்த சிங்களவர்கள்  பிரிட்டிஷாரின் தோட்டங்களில்  வேலை செய்ய மறுத்தனராம். அதுமட்டுமன்றி செங்குத்தான மலைச் சரிவுகளிலும்  அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கடினமாக உழைக்கவேண்டும் என்பதனை உணர்ந்த அவர்கள் அதற்கு முன்வரவில்லை. இதனால் இலங்கைக்கு வெளியிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவரவேண்டிய நிலையில், 1840 களில் தமிழகத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான பஞ்சம் வறுமை போன்றவற்றை காரணம் காட்டி நயவஞ்சகமாக ஆங்கிலேயர்களால் அங்குள்ள தமிழர்கள் ”ஒப்பந்தக் கூலி முறை” அடிப்படையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். 

புகைப்பட உதவி:www.srilankabyish.com

தென்னிந்தியாவிலிருந்து  வரும்   ஏழைக்குடியானவர்கள்` இலங்கைத் தோட்ட முதலாளிகளிடம் குறிப்பிட்ட காலத்திற்கு பணிபுரியவேண்டும் என ஒப்பந்தத்தில் கைநாட்டு வைக்கவேண்டும். ஒப்பந்த காலம் முடியும் முன்னர் அவர்கள் எக்காரணம்கொண்டும் மலையக தோட்டங்களைவிட்டு வெளியேறக்கூடாது. மீறினால் கடும் தண்டனைகளுக்கு உள்ளாகவேண்டியேற்பட்டது. அப்பாவிகளை ஏமாற்றி கொண்டுவரும் வேலை கங்காணிகளுக்கு கொடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் தமிழகத்தின் தர்மபுரி, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களிலிருந்து  தொழிலாளர்கள் பிடிக்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளற்ற காலமாதலால் தனுசுகோடிவரையில் நடத்தியே கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து தோணிகள் மூலமாக தலைமன்னார் அல்லது கொழும்புக்கு பயணப்பட்டு மீண்டும் அங்கிருந்து மலையகம் நோக்கி நடந்தே செல்ல வேண்டியேற்பட்டதால்,  பலர் இயலாமல் வீழ்ந்து இறந்தனர். அதுமட்டுமன்றி அதிகப்படியான தொழிலாளர்கள் சிறு படகுகளில் ஏற்றப்பட்டதனால் நடுக்கடலில் படகுகள் மூழ்கி மாண்டவர்கள் பல ஆயிரம்பேர் .

அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் “Coolie Lines” என்றழைக்கப்பட்ட தகரக் குடிசைகள் குதிரை லாயங்களைப்போல வரிசையாக கட்டப்பட்டு, மழையிலும், வெயிலிலும் பணியிலும் விஷ பூச்சிக்கடிகளிலும் அங்கேயே தங்கவேண்டி நிர்பந்திக்கப்பட்டனர்.   நாள்முழுவதும் ஓய்வின்றி வேலை. கொழுந்தெடுத்தல், தேயிலைச் செடிகளை கவாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டங்களை உருவாக்குதல், நிலப்பகுதியை திருத்தம் செய்தல் போன்ற அனைத்து  வேலைகளும் கொடுக்கப்பட்டன. 

இன்றும் “லயன்” அறைகளில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்: Newsinasia.com

ஒரு கங்காணி அழைத்துச் செல்லும் தொழிலாளர்களின் பெயர்கள் அந்த கங்காணிகளின்   கணக்கின்கீழ் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியினதும் நாள் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதம் கங்காணியின் கமிஷனாக கொடுக்கப்படவேண்டியது கட்டாயமாக இருந்ததுடன், கடல் பயணத்திற்கு செலவான தொகையும் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்ளப்பட்டது. ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு எடைக்கு தேயிலை பறிக்க  வேண்டும் என்கிற கணக்கிருக்கின்றது. சற்று நிறை குறைந்தாலும் அன்றைக்கு அந்த தொழிலாளிக்கு பாதி கூலிதான் கொடுக்கப்பட்டது. தொழிலாளிகளை நீண்ட பிரம்பால் அடித்து வேலை வாங்கும் கங்காணிகளின்  அடாவடித்தனங்கள் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கான சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே முடிவுக்கு வந்தன எனலாம். கூலிகள் என்று வகைப்படுத்தப்பட்ட இந்த மக்கள்,  தோட்டக்காட்டான் என்றும் கள்ளத் தோணி என்றும் இன்றுவரையில் புறக்கணிக்கப்படுவதுதான் வேதனை.

நம் நாட்டிலிருந்து முதல் தர, உயர்தர, அதி உயர்தர தேயிலை  எல்லாமும் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்பட்டுவிட, நமக்கு சந்தையில் கிடைப்பது Dust Tea  என்கிற மூன்றாம்தர தேயிலையே . இதுவே நாம் பெரும்பாலும் அருந்தும் டீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Exit mobile version