இடுகாட்டு மனிதர்கள்

நெருங்கிய நண்பனின் தந்தை இறந்துவிட இறுதிச்சடங்குகளில் அவனுக்கு நிகராக எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு இருந்தது. அது கிராமம் என்பதால் நிறைய சடங்குகள் அதை எல்லாம் முடித்து மயானம் சென்றோம் . மது போதையில் இருந்த அனைவரும் தங்கள் வீரத்தை சவ அடக்கம் செய்யும் அந்த நபர்களிடம் காட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த நபர்களை ஒருமையில் அழைப்பது,  அடிக்கக்  கை ஓங்குவது என்று அத்தனையும் எனக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களுக்கு இறுதியில் பணம் கொடுக்கும்போது அவர்கள் கைகட்டி ஊர் வழக்கப்படி எவ்வளோ கொடுத்தாலும் அதைத்தான் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள்  வேறு !.. அனைவரும் சென்றபின் அவர்களிடம் பேசினேன் .

படம்:bbc

எங்க சாதியை சேர்ந்தவங்க தான் இந்த தொழில ரொம்ப வருஷமா செய்யுறோம் தம்பி , சவத்துக்கு முன்னாடி மணி அடிக்கிறது , சவத்துக்கு குழி தோண்றதுனு எல்லாமே இங்க எங்க சாதிக்காரங்கதான்   பண்ணனும். எங்க பெரியவங்க சவத்துக்கு தொண்டூழியம் (இறுதி காரியங்கள் ) பண்றது சாமிக்கு பண்றது மாதிரின்னு சொல்லித்தான் பண்ணாங்க. இங்க அந்த சாமிகூட எங்கள மனுசங்களா பாக்க மாட்டேனுது. ஊர் திருவிழால எங்கள தேர் இழுக்க விடமாட்டாங்க   என்றார். சரி சம்பளம் எல்லாம் எப்படி மாசம் மாசம் தருவாங்களா ?  ஹா,ஹா பலமாக சிரித்துவிட்டு நாங்க என்ன சர்க்கார் உத்தியோகமா பாக்குறோம் மாச சம்பளம் வாங்க . சாவு விழுந்தா உண்டு அதுவும் ஊர் பஞ்சாயத்து சொன்ன காசுதான் வாங்கணும் . நீங்க பிரியப்பட்டு கூடகொடுத்தாலும் விடமாட்டங்க . அந்த கூட கொடுக்குற 1௦௦ரூபாய  வச்சு மச்சுவீடா கட்டபோறோம், கூட கொஞ்சம் அரிசி வாங்க போறோம் சலனமில்லா புன்னகையை மீண்டும் தந்தார்.

இத வச்சு எப்படி அண்ணே சமாளிக்கிறிங்க ? பெரும்பாலும், இந்த மாதிரி  சாவு விழும் போது சொல்லுவாங்க செய்வோம் . ஊருக்குள்ள பெருசா வேலை தரமாட்டாங்க. எதோ கட்டட வேலை ,கூலி வேலைன்னு பாத்து பொழப்பு ஓடுது . இப்ப இருக்க பயலுக்கு ஊருக்குள்ள இருந்தா நம்மளையும் இப்படி  கடைசிவர இந்த வேலை பாக்க விட்ருவாங்கனு வெளிநாடுகளுக்கு ஓடிருதுக. அதுக தலைமுறையாது நல்லா இருக்கட்டும் என்று சொல்லி விட்டு அடுத்த சாவு பற்றிய தகவல் வர அதை கவனிக்கச்  சென்றார். இது ஏதோ ஊர் பேர் தெரியாத கிராமத்து சுடுகாட்டு மனிதனின் தனி புலம்பல் அல்ல ! . இந்தியாவில் எத்தனை அரசு சுடுகாடு உள்ளது ? , எத்தனை சாதி வாரிய சுடுகாடு உள்ளது ?எத்தனை மின் மயானங்கள்உள்ளது ? எத்தனை சுடுகாடுகளுக்கு சரியான பாதை வசதி உள்ளது ? இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை என்பது மட்டும்தான் உண்மை .

படம்: tamildailynews

இந்த சம்பவத்திற்குப் பின் இந்த விளிம்புநிலை மனிதர்களை பற்றிய தகவல்கள்களை சேகரிக்க பல மாதங்கள் , பெரும் பயணங்களை  மேற்கொண்டும் மிக துல்லியமாக  எந்தப்  புள்ளி விபரங்களும் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். அரசாங்க தகவல்களும் பெரும்பாலும் கிடைக்கவில்லை. தங்கள் மரணம் காசியில் நிகழ்ந்தால் புண்ணியம் என்றும் நினைக்கும் மக்கள் அங்கும் பிணம் எரிக்கும் மனிதர்களை சாதிய அடையாளம் காட்டி ஒதுக்கியே வைத்துள்ளது என்று காசிக்கு பயணித்து அங்கு பிணம் எரிக்கும் மனிதர்களிடம் பேசியபோது புரிந்தது. புண்ணியம் தரும் ஊரின் நிலையே இதுதான் என்றால் இந்தியாவின் மற்ற பகுதிகளின் இந்த தொழில் செய்யும் மக்களின் நிலைமை இன்னும் மோசம். இந்த மனிதர்களுக்கு முறையான சம்பளம் கூட கிடையாது.

படம்: thebetterindia

அரசாங்க  சுடுகாட்டின் நிலைமை இதைவிட கொடுமை.  சில ஆண்டுகளுக்கு முன்னர்தான்  குறைந்த அளவு ஆட்களை அரசு ஊழியர்கள் என்று அறிவித்தது அரசு. அதுவும் பெரும்பாலும் மின் மயானத்தில் இருப்பவர்கள் மற்றும் பெருநகரங்களில் இருக்கும் சுடுகாட்டில் வேலை செய்பவர்களை மட்டுமே . இந்தியாவில் அதிகம் இருப்பது கிராமம் என்பது அரசுக்கு தெரியாதா ? அவர்களின் வருமானமும் வெகு சொற்பமே ! மின் மயானங்ளில் பிணங்களை எரிக்க பெரும்பாலானோர் இன்னமும் விரும்புவதில்லை அப்படி இருக்க அரசு இதற்கு  என எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமே

படம்: nermaiyendrum

இறந்துபோன அந்த நபர் நமக்கு உறவினர் அல்லது நமக்கு தெரிந்தவர் என்பதால் நாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறோம். அதிலும் பிணத்தைத்  தொடுவதைக்  கூட நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. நோயில் கிடந்த உடம்பு என்றால் சொல்லவே வேண்டாம் அருகில் கூட செல்ல மாட்டோம். ஆனால் யார் என்று தெரியாத அந்த உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யும் மனிதர்களின் வலி என்பது நமக்கு தெரிவதே இல்லை .  சவ அடக்கம் செய்யும் குமார் அண்ணனுடன் பேசியபோது , “அதுவரை இறந்துபோன மனுஷன்ட சாப்டியான்னு கேட்ருக்க மாட்டான்க தம்பி , இங்க நாம எரிக்க போகும்போது  எங்க அப்பனுக்கு வலிக்காம எரினு போதைல நம்மல போட்டு சாவடிப்பாங்க. ஒரு பொணம் எரிய கொறஞ்சது 3 மணிநேரமாவது ஆகும். அதுவரை பக்கத்துலதான் இருக்கணும். சில சமயம் நரம்பு முறுக்கி பொணம் எந்திரிக்கறப்போ, அடுச்சு படுக்க வைக்கணும். அவுங்க சாமி கும்புட கொஞ்சம்  எலும்பும், சாம்பலும் எடுத்து வைக்கணும். பொதைக்கிறப்போ குழி தோண்டுறதுதான் கஷ்டம் அப்போ மட்டும் வெளில ஒருத்தர் ரெண்டுபேர கூப்டுக்குவோம். கட்டிருந்த அரணாக்கயிறு வரை அவுத்துட்டுதானே கொண்டு வர்றாங்க. ஆனா நாங்க ஏதோ அந்த பொணத்துட்ட இருந்து தங்கத்தை எடுத்துக்குற மாதிரி  பார்ப்பாங்க . சரி வேலைய நிம்மதியாவாவது பாக்க விடுவாங்களா, அதுவும்  இல்லை நெற போதைல என்னையும் சேத்து கொளுத்துனு வருவாங்க . போதைல அடிக்கலாம் செய்வாங்க தம்பி நாம ஏதாவது கேட்டா, அவ்ளோ பெரிய ஆள் ஆயிடிங்களாக்கும்னு சண்டைக்கு வருவாங்க தம்பி !. வயசுக்காவது மரியாதையை கொடுக்கணும்ல”.  அவரின் வார்த்தைகளில் இருந்த வலியை கண்டிப்பாக என் எழுத்துகள் முழுவதும் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே .

படம்: betterindia

சாதிய ரீதியாகவும் , பொருளாத ரீதியாகவும் ஒரு குறிப்பிட்ட மக்களை இன்னுமும் அடிமைகளாகவே வைத்திருக்கிறோம் என்பது மட்டும் உண்மை . என்ன அவர்களை அவ்வாறு வெளிப்படையாக அழைப்பது இல்லை அவ்வளவே! என்னப்பா சுடுகாடு, வெட்டியானு சும்மா இல்லாத கதையெல்லாம் விடுற என்று சிலருக்காவது தோன்றும். நமது சொந்த ஊரில் இருக்கும் சுடுகாடு மற்றும் அங்கு வேலை செய்யும் மனிதர்களை பற்றிக்  கொஞ்சமாவது யோசித்துப்  பார்த்திருப்போமா ?. சரி நான் எதுக்கு இதலாம் நெனைச்சு பாக்கணும் ? என்றும் தோன்றலாம்.  ஒரு மனிதன் இறந்துவிட்டால்  கண்டிப்பாக   அடக்கம் செய்யாமல் தெருநாய் போன்று தெருவில் கிடக்கக்  கூடாது சரிதானே  ? ( தெரு நாய்களுக்கு கூட அமைப்புகள் இருக்கு ) அந்த நிலை வராமல் இருக்க வேண்டுமென்றால்    அந்த இடமும், அங்கு இருப்பவர்களும்  கவனிக்கப்பட  வேண்டும்.

படம்: wyborcza

சில மாதங்களுக்கு முன் ஒரு குறுப்பிட்ட சாதி மக்களின் பிணம் சரியான பாதை வசதி இல்லாத காரணத்தால் ஊருக்குள் கொண்டுவரப்பட்டு, அது பெரிய கலவரமானது . பின் காவல்துறையின் பாதுகாப்போடு அடக்கம் செய்யப்பட்டது ( எல்லா இடத்திலும் முதலில் புதைக்கப்பட வேண்டியது நமது சாதிய உணர்வு தான் ). பெரும்பாலான ஊர்களில் சுடுகாடுகளும், அதன் பாதைகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதுதான் கொடுமையிலும் கொடுமை . எனது சொந்த ஊரான மேலூரில் மின் மயானம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அது இன்னமும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தொடர்ச்சியாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தான் அங்கு உள்ளார். இருந்தும்  என்ன பயன் !. குடிநீர் வசதி மட்டுமல்லாது  அங்கு பணிசெய்பவர்களுக்கும் , சுடுகாட்டுக்கு வரும் நபர்களுக்கும்  பயன்பட உப்புநீர் வசதிகூட இல்லை. இது எங்க ஊர் பிரச்சனை  மட்டுமல்ல, இந்தியாவில் 9௦% ஊர்களின் நிலை இதுதான் .

படம்: thehindu

அரசாங்கம் கிராமப்புர பூசாரிகளுக்கு சம்பளம் வழங்க , சட்டம் கொண்டு வந்ததுபோல இதற்கும் எதாவது செய்தே ஆக வேண்டும். அதாவது இந்தியாவில் இருக்கும் எல்லா சுடுகாடுகளையும் , அங்கு வேலை செய்யும் நபர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கு அடிப்படை ஊதியமாவது வழங்க வேண்டும். அதைவிட மிகவும் முக்கியம் நாம் சாதியை காரணம் காட்டி சக மனிதர்களை கீழ்த்தரமாக நடத்துவதை நிறுத்தியே ஆக வேண்டும். நமக்காக மலம் அள்ளும், பிணம் எரிக்கும் நபர்கள் தாழ்ந்தவர்கள் என்றால் நாம் அதனிலும் தாழ்ந்தவர்களே. விறகுடன் எரியவேண்டியது பிணங்கள் மட்டும் அல்ல, நமது சாதிய வெறியும் தான் . ஆனால் அங்கு எரிந்து கொண்டிருப்பதோ அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை மட்டுமே !

Related Articles

Exit mobile version