ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை, அத்துணை ஒழுங்கமைவான முன்னேற்பாடு, சிறப்பு பாதுகாப்பிற்கு மத்தியில், கொலை செய்திட முடியுமா என்ன? ஆம். 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமையானது, அன்றைய பொழுது தொட்டு இன்றைய பொழுது வரையிலும் முன்மையான பேசு பொருளாக அமைந்துவிட்டது.
இக்கொலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள் என இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பானது கூறிய நிலையில், 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி பேரறிவாளனும், ஜூன் மாதம் 14ம் திகதி நளினி மற்றும் முருகனும், ஜூலை மாதம் 22ம் திகதி சாந்தனும், மேலும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உட்பட 26 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி இவர்களுக்கு மரண தண்டனையானது சிறப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
தண்டனை பெற்ற இத்தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த நிலையில், 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் ராஜீவ் காந்தி கொலையுடன் அதிகளவில் தொடர்புபட்டவர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவே, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையானது, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அத்தோடு மற்றையவர்களின் குற்றம் தீவிரம் குறைந்தது என்று கூறப்பட்ட நிலையில் அதுவரையிலும் சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாக கருதி அவர்களை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதன் பிற்பாடு மரண தண்டைனையைப் பெற்ற நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தமக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்த மனுக்களுக்கும், ஆளுநருக்கு அனுப்பப்பட கருணை மனுக்களுக்கும் தொடர்ந்து தள்ளுபடியும், முடிவின்மையுமே பதிலாய் அமையப்பெற்றது. இந் நிலையில் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி நளினிக்கு மாத்திரம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
தீவிர குற்றம் புரிந்தவர்கள் என்ற பட்டியலில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான நளினிக்கு ஆயுள் தண்டனையானது கிடைக்கப்பெறவே, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரும் தம் முயற்சி தனை தளரவிடாது குடியரசுத்தலைவருக்கு கருணை மனுவை தாக்கல் செய்தனர். ஆயினும் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு, இவர்கள் தாக்கல் செய்த கருணை மனுவிற்கான பதில் நிலுவையே.
மனுக்களின் நிலுவையால் தொடர் சிறைவாழ்க்கை, தாம் படும் துன்பம் ஆகியனவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நிலையில், இவர்களின் மரணதண்டனையானது இரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2014 ம் ஆண்டில் இவர்களை விடுவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், மத்திய அரசு உயர் நீதிமன்ற உதவியுடன் அதற்கு தடையாணை பிறப்பித்தது. ஆங்கே விடுதலை என்ற இவர்களது ஆவல் தகர்க்கப்பட்டது.
இத்தகையதாக விடுதலையை நோக்கிய தொடர் போராட்டத்தின் விளைவால் 2022ம் ஆண்டு மே மாதம் 18ம்திகதி ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை கிடைக்கப் பெற்றது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையில் தமக்கும் விடுதலை வேண்டுமென மற்றவர்கள் மனு தாக்கல் செய்யவே, ராஜீவ் காந்தி கொலைவழக்குடன் தொடர்புபட்ட நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் சிறைவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை விடுதலை செய்திட உயர் நீதிமன்றமானது உத்தரவிட்டது.
அதனடிப்படையில், இவர்களில் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் பரோலில் இருந்தமையால் நளினி வேலூர் சிறையில் சிறை விடுப்பை ஒப்படைத்து விடுதலை ஆனதோடு, ரவிச்சந்திரன் மதுரை சென்று விடுப்பை ஒப்படைத்து விடுதலை ஆனார். மற்றவர்களும் வேலூர் மற்றம் புழல் சிறைகளில் தமது விடுப்புக்களை தந்து விடுதலை ஆகினர். ஆயினும் ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன் ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் பாதுகாப்போடு தங்க வைக்கப்பட்டனர்.
நளினி இந்தியாவின் குடியுரிமையை கொண்டவர் என்பதாலும் முருகனும், ஜெயக்குமாரும் இந்தியர்களை திருமணம் செய்தமையாலும் இவர்கள் இந்திய நாட்டிலேயே வாழ முடியும் என்பதோடு மற்றையவர்களை விரும்பிய நாட்டிற்கோ அல்லது தமது நாடான இலங்கைக்கோ அல்லது விரும்பினால் தமிழ்நாட்டிலேயோ வசிக்க கோரிக்கையானது முன்வைக்கப்படவுள்ளது.
பல ஆண்டுகளாக நடாத்தப்பட்ட சட்டப்போராட்டத்திற்கு, பல ஆண்டுகளின் பின்னர் எடுக்கப்பட்ட பெரும் முடிவாக இது இருப்பினும், சமூகத்தின் பார்வை தனில் பெரும் குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்ட நபர்களான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்றோரின் சிறைவாச வாழ்க்கைக்கான முடிவினை, இவர்களின் விடுதலைக்காக போராடிய குடும்பத்தவர்களும், இவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தவர்களும் மகிழ்ச்சி தனில் திளைத்துக் கொண்டாடிட, இவர்களால் தான் தாம் பாதிக்கப்பட்டோம் என எதிர்ப்பவர்கள் விமர்சனங்களையும், கோபத்தையுமே வெளிப்படுத்தினர். ஆக, ஒரு சில தரப்பினருக்கு இம்முடிவானது ஏற்புடைமையாகவும், மற்றைய ஒரு சில தரப்பினருக்கு முரண்பாடாகவுமே அமையப்பெற்றுள்ளது.
இந்த முரண்பாடு, முரண்பாடின்மையைத் தாண்டி, இவர்களில் சிலரின் கல்வித்தகைமையானது வியக்கத்தக்கதே.
சிறைப்படுத்தலுக்கு முன் நளினி சென்னைக்கல்லூரி ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் என்பதோடு இவரது ஆங்கிலப்புலமையானது இன்றைய நிலையிலும் அதே சிறப்போடு அமையப்பெற்றுள்ளது. அது போல சிறைப்படுத்தலுக்கு முன் பேரறிவாளன் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதோடு சிறைவாழ் காலகட்டத்தில் தன் வாழ்க்கையின் திருப்புமுனையை எண்ணி துவண்டுவிடாது மாறாக, அறிவு விருத்திக்கான செயற்பாடுகளை திறம்பட மேற்கொண்டார் என்றே கூறலாம். ஆம், பேரறிவாளன் சிறைச் சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் பட்டயப்படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார் என்பதோடு சிறையில் தனது வாழ்க்கையை விவரித்து “An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)” என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் இதன் இந்தி மொழிபெயர்ப்பையும் வெளியிட்டார். ஆக, எந்நிலையிலும் அறிவின் விருத்திக்கான கல்வி எனும் ஆயுதம் தனை கைவிடக்கூடாது என்பதனை இவர்கள் சிரமேற்கொண்டனர் போலும்.
எது எவ்வாறாயினும் பொதுவாக, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களை இச்சமூகமானது வித்தியாசமான பார்வை கொண்டு நோக்கிடும் தன்மையுண்டு. உண்மையில், சொல்லவொன்னா துன்பம், இளமையை இழத்தலின் கழிவிரக்கம், கொண்ட கனவுகளின் தகர்ப்பெறிப்பு என தனிமைச்சிறையின் இறுக்கத்தில், மனுக்களின் துணை கொண்டு உயிர்வாழ அனுமதிக்கப்பட்ட இவர்கள்,இனி வெளிச்சூழலில் வாழ முற்படுகையில், கடினமான பாதைகளையும், சமூகத்தின் பார்வைகளையும், வழி நெடுக செல்பவர்களின் வார்த்தைகளையும் கடந்து மீளவும் பூச்சியத்திலிருந்தே அவர்களது வாழ்வினை தொடங்கிட வேண்டிய நிலையில் தமது வாழ்வின் அடுத்த அத்தியாயம் தனில் அடியெடுத்து வைத்துவிட்டனர்.
இனி வரும் காலங்களில் இவர்கள்,தத்தமது விருப்பின்படி சொந்த நாட்டிற்கோ அல்லது வேறு நாடுகளிற்கோ செல்வார்களா? இவர்களின் விடுதலையை எதிர்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பார்களா? தற்போதைய சமூகத்தின் பார்வைகளைத்தாண்டி விமர்சனங்களை முறியடித்து முன்செல்வார்களா?
காலத்தின் கைகளில்..