அண்மைக்காலங்களில் இலங்கை பிரதமரின் ஜரோப்பிய பயணங்களின்போது பெரும்பாலும் பேசும்பொருளாக இருப்பது “GSP+” என்பதேயாகும். அவ்வாறு சிலாகித்து பேசப்படும் “GSP+” எந்தவகையில், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிபை செய்கிறது அல்லது தடுமாறும் நிலையில் உள்ள தற்போதைய பொருளாதாரத்தை எவ்வாறு நிலைபெற உதவும் என்பதை அறிந்திருக்கிறோமா ?
GSP+ என்றால் என்ன ?
GSP+ (Generalized Scheme of Preferences + ) என்பது, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் உற்பத்தி ஏற்றுமதிகளை ஜரோப்பிய சந்தையினுள் வரி முழுமையாக அறவிடப்படாமல் (NO Tax System) அல்லது ஒப்பீட்டளவில் பூச்சிய வரி முறைமை (ZERO tax System) மூலமாக சந்தையினுள் அனுமதிக்கின்ற ஒரு திட்டமாகும். இதன்மூலாமக, போட்டி குறைவாக ஜரோப்பிய சந்தையை கையாளமுடிவதுடன், பொருளாதார விருத்தியினையும் அபிவிருத்தி அடைந்தநாடுகள் பெற்றுக்கொள்ள முடியும்.
GSP சலுகைக்கும் GSP+ சலுகைக்குமான வேறுபாடு ?
ஜரோப்பிய ஒன்றியத்தினால் GSP+ சலுகையானது 2005ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, இலங்கை GSP சலுகையையே 1971ம் ஆண்டுமுதல் பெற்று வந்துள்ளது. GSP மூலமாக இலங்கை முழுமையான வரிவிலக்கை பெறுவதில்லை. மாறாக, ஏற்றுமதி-இறக்குமதி வரிச்சலுகையை (ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவான வரி அறவிடப்படும்) மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன், இத்தகைய சலுகையை ஜரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள், சேவைகளுக்கு மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது.
ஆனால், GSP+ ஜரோப்பிய ஒன்றியத்தினால் தெரிவு செய்யப்பட்ட 13 அபிவிருத்தி நாடுகளுள் இலங்கையையும் (2005-2010) உள்ளடக்கி முழுமையான வரிவிலக்கை பெற்றுத்தருகின்ற திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிரகாரம், போர் சார்ந்த ஆயுதங்கள் தவிர்த்து எந்தவகையான பொருட்கள், சேவைகளையும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு GSP+ திட்டத்தினூடாக வழங்கமுடியும். இதனை 2005ம் ஆண்டின் ஆரம்பம் முதல் இலங்கை பெற ஆரம்பித்தது. GSP+ திட்டத்தினுள் இலங்கை உள்வாங்கப்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக, 2004ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் ஒரு காரணமாகும்.
2005-2010 வரையிலான GSP+ சலுகையும், அபிவிருத்திகளும்
GSP+ கிடைக்கப்பெற்ற ஜந்து வருடங்களுமே, இலங்கையின் ஏற்றுமதி-இறக்குமதிசார் உற்பத்திதுறையின் பொற்காலம் எனக் குறிப்பிட முடியும்.
Srilanka Business இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைவாக, இலங்கையின் ஏற்றுமதியில் 57%மானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டது. அதில், 30% மான ஐரோப்பிய ஏற்றுமதிகள் எவ்விதமான வரியும் அறவிடப்படாமல் வருமானத்தைப் பெற்றுத்தந்த ஏற்றுமதிகளாக அமைந்துள்ளது. அத்துடன் இந்தக்காலப்பகுதியில், இலங்கையின் ஆடைத்தொழிற்துறையின் ஏற்றுமதியும் மிகப்பாரியதாக வளர்ச்சியடைந்தமையையும் மறுக்க முடியாது. மொத்த ஐரோப்பிய ஏற்றுமதியில் 45%மாக ஆடை தொழிற்துறை அங்கம் வகித்திருந்தது. குறிப்பாக, இலங்கை GSP+ சலுகையை இழந்ததும், ஆடைத் தொழிற்துறை $ 782 மில்லியன் பெறுமதியான வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை இழக்க நேரிட்டமை இதற்கு சான்றாகும்.
இலங்கை GSP+ இழக்க காரணம்
இலங்கையில் போர் உச்சம்பெற்ற காலகட்டத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அடிப்படை விடயங்களான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை ஜனநாயக முறையில் பேணல், சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படல், குழந்தைகளின் உரிமையை முறைமையாக பாதுகாத்தல் தொடர்பில் இலங்கையின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தினால், 2009 மார்கழி மாதம் தொடக்கம் தற்காலிகமாக முதல் ஆறு மாதங்களுக்கு GSP+ சலுகையை இடைநிறுத்த தீர்மானித்தது. இதன்மூலமாக, இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்குவதன் மூலமாக, நீதியான போர்சூழலை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நினைத்தாலும் அத்தகைய செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படாததனால், 2010ம் ஆண்டுக்குபின் முழுமையான சலுகை வழங்கலை நிறுத்தியது.
GSP+ சலுகையை மீளபெற வேண்டிய அவசியம் ?
போர் முடிவுக்கு வந்தபின்பு, இலங்கை அரசு உலக அரங்கில் அபிவிருத்தி ரீதியாக பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து பின்தங்கிய நிலையில் உள்ளதை உணர்ந்துகொண்டது. தொடர்ச்சியாக, இலங்கையை முதலீட்டாளர்களின் இடமாகவும், முதலீடுகளை உள்வாங்கவேண்டிய நிலையிலும், GSP+ போன்ற பெரிய சலுகையை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியநிலையை உருவாக்கியது. அத்துடன், இலங்கையின் தரம்மிக்க ஆடைத் தொழிற்துறையினை லாபகரமான தொழிற்துறையாக மாற்றவும், இழந்த சந்தை இடத்தினை பெற்றுக்கொண்டு இலங்கையின் அபிவிருத்திக்கான மூலதன உட்பாய்ச்சலை பெற்றுக்கொள்ளவும், GSP+ மிகப்பாரிய அளவில் உதவிடும் என்பதில் ஐயமில்லை.
GSP+ யும், தற்போதைய நிலையும்
தற்போதை நிலையின் பிரகாரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளையும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கைகளின் பெரும்பான்மையானவற்றை இலங்கை அரசு பூர்த்தி செய்திருப்பதன் விளைவாக, முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கான மீன்வள உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், GSP+ சலுகையும் 2017ம் ஆண்டின், முதலாவது காலாண்டு பகுதியில் இலங்கைக்கு கிடைக்கபெற அதிகசாத்தியங்களை கொண்டுள்ளது. இது மிகப்பாரிய சாதகத்தன்மையையும், வீழ்ச்சியடைந்துள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கைதன்மையை மீட்டெடுக்க மிகப்பெரிய உறுதுணையாக அமையும்.
அத்துடன், சார்க் வலயத்தில் 2010ம் ஆண்டில் இலங்கை GSP+ சலுகையை இழந்தபின்பு, அத்தகைய சலுகையையும் நன்மையையும் பெறுகின்ற நாடாக பாக்கிஸ்தான் உள்ளது. அதேபோல, இலங்கை சலுகையை மீளபெறுகின்ற நிலையில் வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் ஆகியநாடுகளும் இத்தகைய சலுகையை பெறும் வாய்ப்புள்ளது. மலிவான தொழிலாளர் வளம் கொண்ட இத்தகைய நாடுகளும் GSP+ சலுகையை பெற்றுக்கொள்ளுமாயின், இலங்கை தனது தரம்மிக்க உற்பத்திகளை மிகப்போட்டித்தன்மையுடனே ஐரோப்பிய சந்தைக்கு வழங்கவேண்டிய நிலைக்கு உள்ளாகும். குறிப்பாக, பங்காளதேஷ் இலங்கையுடன் ஆடை உற்பத்தி, தேயிலை மற்றும் மீன்வள ஏற்றுமதி என்பவற்றில் நேரடி போட்டியாளராக உள்ளது. அதிலும், ஜரோப்பிய சந்தையில் ஆடை ஏற்றுமதியில், இலங்கையின் வெற்றிடத்தை பூர்த்தி செய்கின்ற நாடாக பங்காளதேஷ் உள்ளது. அத்துடன், பெரும்பாலான இலங்கையின் வளர்ச்சியடைந்த நிறுவனங்களே மலிவான தொழிலாளர் வளத்தை கருத்திற்கொண்டு, தங்கள் தொழிற்சாலைகளை பங்களாதேஷ் நாட்டுக்கு மாற்றியுள்ளன. எனவே, இந்த நிலையானது இலங்கைக்கு மிகப்பெரிய சவாலான நிலையாகும். இந்த நிலையில், இலங்கை தனக்கு கிடைக்கபெறுகின்ற GSP+ சலுகையை எவ்வாறு வினைத்திறனான முறையில் பயன்படுத்திகொள்ள போகிறது என்பதே நம்முன்னே தொக்கி நிற்கின்ற மிகமுக்கிய கேள்வியாகும்.