ஆப்கானிலிருந்து வெளியேறிய அமெரிக்கா படையினரும் வெள்ளை மாளிகையின் இராஜதந்திர அணுகுமுறையும்!

இன்று உலகின் மிக முக்கிய கருத்தாடல்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ள நிலையில் இக்கட்டுரை அமெரிக்காவின் வெளியேற்றத்தை வேறு கோணத்தில் அணுக விளைகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தாக்குதலின் (செப்டெம்பர் தாக்குதல், 2001) விளைவாக ஆப்கானை மையமாக கொண்ட அல் கைதா அமைப்பினை இலக்கு வைத்து அமெரிக்கா, ஆப்கானை ஆக்கிரமித்தது. எனினும் தாலிபான்களின் தோற்றம் கெடுபிடி யுத்தத்தின் ஒரு உத்தியாக காணலாம். இது ஒரு வகையில் சோவியத் யூனியனின் ஊடுறுவலை தடுக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டாலும், இன்று அதன் அசுர வளர்ச்சி ஒரு நாட்டை கைப்பற்றுமளவிற்று உயர்த்தியுள்ளது.  

தாலிபான்கள் பயங்கரவாதிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதன் வளர்ச்சி ஆப்கானிஸ்தானின் அதிகார மையங்களை கைப்பற்றியுள்ளது. மறுபுறம், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தமது துருப்புக்களை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அங்கு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இது ஜனநாயகத்தின் மீதும், சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் மீதும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. இன்னொருபுறம் அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு நெருக்கடியானது இத்தகைய ஒரு முடிவிற்கு அமெரிக்காவை கட்டம் கட்டமாக நகர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 ஆப்கானிலிருந்து வெளியேறும் அமெரிக்க படையினர் – புகைப்பட விபரம் – www.Dailynews.lk

அமெரிக்காவின் இந்நிலையை உலக நாடுகள் அமெரிக்காவின் பலமிழப்பாகவும், அமெரிக்க புலனாய்வின் தோல்வியாகவும், வெளிநாட்டு கொள்கை நெருக்கடியாகவும் கருதும் நிலையில் அமெரிக்கா இச்செயற்பாட்டை வேறு வகையில் அணுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதானது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு அங்கமாகவே மாறியிருந்ததை ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பதவிக்காலத்திலிருந்தே காணலாம். கடந்த வருடம் (2020) அமெரிக்கா மற்றும் தாலிபான்களுக்கிடையில் சமாதானத்தை தருவிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இதன் மூலம் அமெரிக்கா உட்பட நேட்டோ உடன்படிக்கை நாடுகள் 14 மாதத்திற்குள் தனது படையினரை வாபஸ் பெறுவதற்கு உடன்பட்டிருந்தன. 

எனவே அமெரிக்காவின் வெளியேற்றம் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டுக் கொள்கை நெருக்கடியாக வெள்ளை மாளிகை காணவில்லை, மாறாக உள்நாட்டு அபிவிருத்தியின் ஒர் அங்கமாக காணுவதாகவே தெரிகிறது. சில சந்தர்ப்பங்களில் போர் புரிவதை காட்டிலிலும் பணமிழப்பை தவர்ப்பதே உள்நாட்டு அபிவிருத்திக்கு உதவியளிக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது என்பதே இங்கு முக்கியமான விடயம். 

மேலும், இங்கு அவதானிக்க வேண்டிய முக்கிய விடயம் ஜனாதிபதி டிரம்பின் உரையே (2020). இவ்வுரையில் அவர் ஆப்கானின் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அயல் நாடுகளின் வேலை என்றும், ஆப்கானில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்மை முக்கியமானது. டிரம்பின் இக்கூற்று இரு வரைகயான வாதங்களை உருவாக்கியிருந்தது.

  • அமெரிக்கா பொறுப்புகளை அயல் நாடுகளுக்கு பகிர்வதன் மூலம் ஆப்கானின் அன்டை நாடுகளை இராஜதந்திர ரீதியில் நெருக்கடிக்குள்ளாக்கி அமெரிக்காவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த முற்படுகின்றதா?
  • அமெரிக்கா ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்ற தன் நிலையிலிருந்து தேய்ந்து கொண்டிருக்கிறதா?

இவ்வாதத்தின் முதல் கேள்வி தற்போது யதார்த்தமாகிக்கொண்டிருப்பது போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கியுள்ளது. ஆப்கான் அரசை தாலிபான்கள் வீழ்த்தியது அன்டை நாடுகளை கடந்து உலக அளவில் பேரதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்நிலை அமெரிக்காவின் இடத்தை வேறு எவறாலும் பூர்த்தி செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது. 

பிரபல ஆப்கான் எழுத்தாளர் காலித் ஹூசைனியினால் எழுதப்பட்ட  A Thousand Splendid Suns எனும்  புத்தகத்தை தமது ஒய்வுநேரமொன்றில் வாசித்து கொண்டிருக்கும்அமெரிக்க படைவீரர்  ஒருவர்!  – புகைப்பட விபரம் –  The Associated Press/David Guttenfelder

அமெரிக்கா உலக அரசில் அதிகாரத்திலிருந்து முழுமையாக விடைபெறும் காலம் உருவாகுமானால் ஆப்கானைப்போல ஆயிரம் மனிதாபிமான நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற யதார்த்தத்தை இது வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரம், அமெரிக்கா மீண்டும் தன்னை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தியை மட்டுமே நோக்காக கொள்ளுமாயின், அமெரிக்காவின் இச்செயல் சரிந்து வரும் பொருளாதார நிலைமையை அது சரி செய்ய முற்படுகிறது என்றும், இதனை பொருள் கொள்ளலாம்.மறுபுறம், அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்ற நிலையை அது கைவிடுவதாகவும் தெரியவில்லை. காரணம், அதன் ஏனைய இராணுவச் செயற்பாடுகள் முடக்கப்பட்டதற்கோ அல்லது படைக் குறைப்பு செய்யப்பட்டதற்கோ எதுவித ஆதாரங்களும் இல்லை. 

ஜோ. பைடனின் இந்த முடிவு, முழுமையாக அமெரிக்க பொருளாதாரத்தையும் அதன் உள்நாட்டு அபிவிருத்தியையும் மட்டுமே நோக்காக கொண்டு எடுக்கப்பட்டிருக்குமாயின் அது உலக அளவில் தான் இழந்ததை மீட்க பிரயத்தனப்படுகிறது என்று அர்த்தம். அமெரிக்க பாதுகாப்புத்திணைக்களத்தின் தரவுகளின் படி ஒக்டோபர் 2001 முதல் செப்டெம்பர் 2019 வரையான காலப்பகுதியில் யுத்தத்திற்கென 778 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செலவானது அமெரிக்கப்படை கட்டம் கட்டமாக குறைக்கப்படும் போது அதற்கான செலவுகளும் குறைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. எனவே அமெரிக்காவின் வெளியேற்றம் லாபகரமான ஒரு செயற்பாடாகவே வெள்ளை மாளிகையால் பாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. 

அமெரிக்க படையினரின் உயிரிழப்பும் அவர்களது குடும்பங்களும் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவால் என்றால் மிகையில்லை. அமெரிக்க பாதுகாப்புச் செயலகத்தின் படி, 2001ம் ஆண்டிலிருந்து எட்டு லட்சம் அமெரிக்கப் படையினர் ஆப்கானில் பணி புரிந்ததாகவும் அதில் 2352 பேர் மரணித்தும், 2000ம் பேர் காயமடைந்துமுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இது பயிற்சியளித்தல், போர்கருவிகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைதல், மருத்துவச் செலவு மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களை பராமரித்தல் என விரயப்பட்டியல் அமெரிக்கத் தரப்பில் நீண்டு கொண்டே செல்கிறது. மறு முனையில், உயிரிழந்த வீர்களின் குடும்பங்கள் அமெரிக்காவின் இம்முடிவினை தமது இழப்பிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுகின்றனர். இது வருங்கால தேர்தல்களில் தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனைத்தவிர, அமெரிக்காவின் இச்செயலானது ஆப்கானில் போரில் பங்களித்த நேட்டோ நாடுகளையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. 

ஆப்கான் யுத்தத்தில் இது வரை 2300 இற்கும் அதிகமான அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர் – புகைப்பட விபரம் – www.news-decoder.com

இவ்வளவு எதிர்மறைக் கருத்தையும் புறந்தள்ளி அமெரிக்கா, ஆப்கான் மண்ணிலிருந்து வெளியேறியது ஏன்? என்ற கேள்வி, ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல அதன் பலமிழப்பாக வெளி வட்டாரத்தால் கூறப்பட்டிருந்தாலும், தனது பலத்தை அது சேமிக்க முற்படுகிறதோ என்ற பதிலையும் அது விட்டுச் செல்லுகிறது. இது அமெரிக்காவின் மீட்சிக்கு வழிவகுக்கக்கூடும் என்பதுடன் இழப்புகளை மட்டுமே அதிகம் சந்திக்கும் ஆப்கான் மண்ணிலிருந்து வெளியேறுவதை அமெரிக்கா பொருளாதார ரீதியில் அணுகியுள்ளது என்பதையும் சிந்திக்க வைக்கிறது. 

மேலும், இதனை அமெரிக்கத்தரப்பின் இராஜதந்திர தோல்வியாக சர்வதேசம் கருதினாலும், பைடனின் உரை இரண்டு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.

  • அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிரான போரிலிருந்து விலகவில்லை,
  • அமெரிக்காவின் படை பலம் ஆப்கானுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. எனவே அமெரிக்காவின் வெளியேற்றத்தை அமெரிக்க படையின் செயற்திறன் இன்மையின் வெளிப்பாடாக கருதுவது தவறு. 

மேலும் அமெரிக்காவின் இச் செயல் உலக நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஆப்கானின் இன்றைய மனிதாபினா நெருக்கடிக்கு தீர்வாக அமெரிக்க இருப்பின் முக்கியத்துவத்தை மீளறிவிப்பதாக மாறியுள்ளது. உலக சமாதானத்தில் அமெரிக்காவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில் அமெரிக்காவை குறை கூறியவர்களுக்கு இது பேரிடராக அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.  

Related Articles

Exit mobile version