“வருமானமீட்டுதல் புருஷலட்சணம்” என்றொரு காலமிருந்தது. ஆனால் இன்று பொருளாதாரம் என்ற அடிப்படைத் தேவை குடும்பத்தில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்ற சமவுரிமைக் கொள்கையை சிபாரிசு செய்கிறது. இருக்கின்ற விலைவாசியும், இஸ்திரமற்ற அரசியல் பின்னணிகளும், பொருளாதாரக் கொள்கைகளும் ஆண்கள் போலவே பெண்களும் வருமானமீட்டவேண்டிய தேவைக்கு எம்மை ஆளாக்கியிருக்கிறது. விடியற்காலை ஐந்து மணி தொடக்கம் ஒன்பது மணி வரை நகர் வீதிகளில் ஓட்டமும் நடையுமாக விரைந்துசெலும் மக்கள் திரளில் சரிக்குச் சரிபாதி பெண்கள் என்பதை அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
பெண்ணானவள் ஆணைப்போல் உயர்கல்வி கற்கிறாள், வேலைக்குச் செல்கிறாள், வருமானமீட்டுகிறாள் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட இயலாது. ஆணைப்போல் வருமானமீட்டும் எந்தப் பெண்ணும் வேலை முடிந்தவுடன் ஆணைப்போல் ஓய்வெடுப்பதில்லை. சொல்லப்போனால் பெண்ணுக்கு அலுவலக வேலை வீட்டு வேலை என மாறி மாறி வருமே தவிர, ஒய்வு கிடைப்பது மிக அரிது. “பின்தூங்கி முன்னெழுவாள்” என்பதற்கேற்ப, அதிகாலையிலேயே ஆரம்பித்திடும் பெண்ணின் வேலைகள், தன்னோடு சேர்த்து முழுக் குடும்பத்தினதும் அன்றைய நாளுக்கான ஆயத்தங்கள், அதன்பின்னர் அலுவலகம் என பரபரவென நகர்ந்துசெல்லும். வீட்டையும் பராமரித்து, வேலைக்கும் செல்லும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் இடையூறுகள் பற்றி நாம் சிந்தித்ததுண்டா?
பெண்ணானவள் இயல்பிலேயே ஆணிலும் இருந்து உடல் மற்றும் உளவியல் ரீதியாக வேறுபட்ட இயல்பைக் கொண்டிருப்பவள். பெண்ணினால் செய்ய முடிகின்ற பல காரியங்கள் ஆண்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை, அதேபோல ஆண்களுக்கு இயல்பாக உள்ள வல்லமைகள் சில பெண்களுக்கில்லை. எனவே ஆண்களுக்குப் பெண்கள் ஆளுக்காள் மிகைநிரப்பிகளாகவே இருக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அங்கீகரித்து, சேர்ந்து இயங்குவதன் இயற்கை நியதியே இவ்வியல்பு வேறுபாட்டின் அடிப்படை. இருந்தும் பெண்ணானவள், குடும்ப நிர்வாகம், பிள்ளைகளின் கல்வி, ஊட்டம் இவைதாண்டி ஆணின் பொருளாதாரச் சுமையையும் தன்னால் இயன்றவரை பங்கிட விழைகிறாள் பெண்.
இவர்களில் தொண்ணூறு சதவீதமான பெண்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை நம்பியே தங்களது வேலைத் தலங்களுக்கான போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். பெரூந்துகளுக்காகவும், இரயில்களுக்காகவும் நீண்ட நேரம் காத்திருப்பதிலேயே அவர்களது பொன்னான நேரம் கழிந்து போவதுண்டு. ஒரு நாள் கெட்டியாவத்தையிலிருந்து கரகம்பிட்டி வரை செல்லும் 176ஆம் இலக்க பேரூந்தில் காலை 7 மணிக்கு இராஜகிரியை சந்தியில் இருந்து பயணித்துப் பார்த்தால் பொதுப் போக்குவரத்துப் பேரூந்துகளில் அன்றாடம் இருதடவை பயணிப்பது எவ்வளவு அசெளகரியமானது என்பது தெளிவாகும். அதிலும் பெண்கள் அந்நெரிசலில் படும் அவதியும் அசெளகரியமும் சொல்லிமாளாது.
இவ்வளவு அசெளகரியங்களுடனும், மன உளைச்சல்களுடனும் அலுவலகங்களின் வேலைப்பழுக்களுக்கு முகம்கொடுக்கும் அவர்களது நாளாந்த வாழ்வு அவ்வளவு சுலபமானதல்ல. அன்றாடம் ரயில் மூலம் பயணிக்கும் பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். உரிய நேரத்தில் செல்லவேண்டிய கட்டாயத்தில் இரயிலில் தொங்கியபடி பயணிக்கும் ஆபத்தான நிலையையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். நெருங்கியடிக்கும் கும்பலில் பெண்கள் சற்று முகம் சுழித்தால் “சொகுசாகப் போகவேண்டும் என்றால் சொந்தக் காரில் போகவேண்டியதுதானே” என்ற ஆண்களின் கிண்டல்களையும் அவர்கள் கடந்தாகவேண்டியுள்ளது.
இதன் விளைவாக தற்காலத்தில் பெண்கள் தங்களது போக்குவரத்துக்காக மாற்று வழிகளைக் கையாள்கின்றனர். போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளும் தனியார் போக்குவரத்து ஊடகங்களை அநேகமானவர்கள் பயன்படுத்தினாலும், எல்லா பெண்களுக்கும் அவ்வாறான ஆடம்பர வசதிகளை மேற்கொள்வது சாத்தியமல்ல. அன்றாடம் அவ்வளவுதூர பயணங்களுக்கு பெரிய தொகையொன்றை செலவு செய்வது உசிதமல்ல. இப்போதெல்லாம் நகர் வீதிகளில் ஆங்காங்கே தலைகாட்டும் ஸ்கூட்டி வகை மோட்டார் வாகனங்கள் பெண்களின் இப்பிரச்சினைக்கான ஓர் இலகு தீர்வென்றே சொல்ல வேண்டும்.
ஆண்களைப்போல் சாதாரண மோட்டார் வாகனங்களை பெண்கள் அனைவராலும் கையாள முடிவதில்லை. மோட்டார் வாகனங்கள் பாரம் கூடியவை, பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் மோட்டார் வாகனங்களை இயக்குவது சற்று கடினமே. ஆதலால் பெண்களால் இலகுவாகக் கையாளக்கூடிய எளிய வாகனங்கள் இந்த ஸ்கூட்டி வகை மோட்டார் வாகனங்களே. சொந்தமாக ஒரு வாகனம் பாவனைக்கு மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் நிலைபெறானது.
முதன்மைச் செலவு மட்டுமே இவ்வாறான வாகனக் கொள்வனவில் உள்ள சவால், ஆனால் வாகனத்தைக் கொள்வனவு செய்த பின்னர் அன்றாடம் பெண்களுக்கு அது ஒரு மிகப்பெரும் ஆறுதல் என்றே சொல்ல வேண்டும். அலுவலக போக்குவரத்து மாத்திரமன்றி ஏனைய வீட்டின் தேவைகளுக்கும் எப்பொழுதும் ஆணை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் இலகுவாக தனது கடமைகளை நிறைவேற்ற உகந்தது.
பெண்களால் இலகுவாகக் கையாளக்கூடிய இவ்வாகனம் பெண்கள் உடையணியும் விதத்திற்கேற்ப பெண்களால் இலகுவாக பயணிக்க ஏதுவாக இருக்கிறது. இது இவ்வாகனம் பெண்களுக்கே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதுபோன்ற அமைப்பு என்றால் மிகையல்ல.
இன்றைய காலகட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளைத்தாண்டி, பெண்கள் பேரூந்து, பார ஊர்தி, முச்சக்கரவண்டி என ஆண்களுக்கு மட்டுமே என அடையாளப்படுத்தப்பட்ட பல வாகனங்களை தங்கள் இலகு வலயத்திற்குள் கொண்டுவந்து புதுமை படைக்க ஆரம்பித்துவிட்டனர். கால மாற்றம் பெண்களை தங்களது இயல்பான இலகு வலயத்திற்கு வெளியே பல சவால்களை எதிர்நோக்கவேண்டி உந்திக்கொண்டு இருக்கிறது. அச்சவால்களை எதிர்கொண்டு வாழ்கையை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நவீன பெண்கள் எத்தனிக்கும் இவ்வேளையில், போக்குவரத்து என்கின்ற தடைகள் பெண்களுக்கு சுமையாக இருப்பது உசிதமல்ல. இனி பெண்களின் போக்குவரத்து விதிகள் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கும் அதேவேளை இப்படியான ஓர் வாகனம் அவர்களுக்கோர் வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல.
அனுசரணை : Hero Dash