தொலைக்காட்சியில் தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் கதை கவனிப்பில்லாத பள்ளி மூடுவிழா காணப்போகிறது. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதை எவ்வாறு மீட்டார்கள் என்பதே! சரி இப்ப எதுக்குப்பா இதுலாம் நமக்கு என்கிறீர்களா ? (மூடுவிழா காணப்போகும் நமது அரசு பள்ளிகள் பற்றியதுதான் இந்த ஆக்கம்).
கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்ற சண்டையெல்லாம் எப்பொழுதோ போய்விட்டது. இப்போது இருப்பது குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற சண்டைதான். குழந்தையின் அனைத்து ஆற்றல்களிலும் பள்ளியின் பங்கு என்பது அளப்பரியது ! அப்படி இருக்கும் போது, என் குழந்தையை நான் எப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லாத அரசு பள்ளியில் படிக்க வைப்பேன் ? இது இன்று இருக்கும் பெரும்பாலான மக்களின் குரலாக உள்ளது . அவர்களின் வசதிக்கு ஏற்ற ஏதோ ஒரு தனியார் பள்ளியை அவர்கள் நாடுகிறார்கள். பணம் இருக்கும் மக்கள் எல்.கே.ஜிக்கே சில இலட்சங்களைக் கொடுக்கவும் தயாராக உள்ளார்கள் . அப்படி இருக்க கப்பலில் பணியாற்றி , இலட்சங்களில் சம்பளம் வாங்கிய பிரபு அண்ணன் தன் பையனை அரசு பள்ளியில் படிக்க வைப்பதாகவும், அந்த பள்ளி மற்ற அரசு பள்ளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் சொன்னதில் வியப்பாகி, கோவையில் அந்த பள்ளியைக் காணச் சென்றேன்.
தம்பி, சுதந்திரமா யோசிக்கிற மனநிலை தான் கண்டிப்பா ஒரு குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கொடுக்கும்னு நான் நம்புறேன். ரிசல்ட்டை மட்டும் முக்கியமாகக் கருதி இயங்குற தனியார் பள்ளிகளிடம் நாம் அதைத்தாண்டி வேற எதையும் எதிர்பார்க்க முடியாது, சரிதானே என்றார் . எல்லாம் சரி அண்ணே ! அது என்ன ஸ்பெஸல் அரசு பள்ளி அதச்சொல்லுங்க என்றேன் , வா போகலாம் என்று உடன் அழைத்துச் சென்றார். கோவை மலுமாச்சம்பட்டி மதுக்கரையில் இருக்கிறது அந்த துவக்கப்பள்ளி. அரசு பள்ளி என்று சொன்னதும் எதுவெல்லாம் நமது நினைவுக்கு வருமோ அதையெல்லாம் உள்ளே நுழைந்ததும் முற்றிலும் உடைத்துவிடுகிறது அந்தப் பள்ளி. சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் , சறுக்கு விளையாட்டு என எல்லாம் இருந்தன. தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றோம் . என்னை அறிமுகப்படுத்திய பின் பேச ஆரம்பித்தார்.
“நான் இங்க வந்தப்ப எல்லா அரசு பள்ளி கூடம் மாதிரிதான் இதுவும் அடிப்படை வசதிகூட இல்லாமதான் இருந்தது . எதாவது செய்யணும்னு எல்லா ஆசிரியர்களிடமும் சொன்னப்ப எல்லாரும் சந்தோசமா ஒத்துழைப்பு தந்தாங்க. எங்களோட சம்பளத்துல ஆளுக்குக் கொஞ்சமா போட்டு ஸ்போகன் இங்கிலீசுக்கு தனி டீச்சர் போட்டோம். பிறகு அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இந்தப் பள்ளியில் சேரும் குழந்தைகளின் சேர்கை அதிகரிக்கும். அதோடு குழந்தைங்க நல்லா படிக்க சுகாதாரமான சூழல் அவசியமானது என்பதால் அதையும் செய்யலாம்னு , பக்கத்துல இருக்க சில பெரிய தனியார் நிறுவனங்கள்கிட்ட உதவி கேட்டோம். அவுங்களும், இங்க படிக்கிற பிள்ளைங்களோட பெத்தவங்களும் அவங்களால முடிஞ்சளவு உதவிகள் செஞ்சாங்க. “இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளிலேயே எங்கள் பள்ளியில்தான் 266 மாணவர்கள் படிக்கிறார்கள்” என்றார் பெருமிதத்தோடு. இப்போ இங்க ஸ்மார்ட் கிளாஸ் இருக்கு, கூடவே ஆங்கில உச்சரிப்பை எல்லா குழந்தைகளும் டேப் வச்சு படிக்கிறாங்க. தரமான சீருடை, காலணி போட்டுட்டு வர்றாங்க, தனியார் பள்ளி மாதிரி தனி நாற்காலி மற்றும் பெஞ்சுல உட்காருறாங்க” என்று சொல்லிக்கொண்டே போனதும் நான் சந்தேகமா பார்த்தேன். எல்லா வகுப்புக்கும் அழைத்து போனாங்க. நாங்க போனதும் குழந்தைங்க எழுந்து ஆங்கிலத்துல வெல்கம் சாங் பாட, நான் ‘பே’ என்று விழித்து நின்றேன். “உங்களைத்தான் வெல்கம் பண்றாங்க” என்று சொன்னதும் வியந்து வணக்கம் சொன்னேன் .
மலுமிச்சம்பட்டி தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி. வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் இங்கு வசிக்கிறார்கள். தமிழ் அறியாத, அவர்களது குழந்தைகள் 40 பேரை, தமிழ் மாணவர்களாக மாற்றியிருப்பது இப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்த முயற்சியின் வெற்றி. “ஒரு மொழியைப் பற்றி எதுவுமே தெரியாத, அதுவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது எளிது எனப் புரிந்து கொண்டோம். அதுவே நடந்தது. இன்று 40 வடமாநில குழந்தைகளும் தமிழை புரிந்து பேச, எழுதப் பழகியுள்ளனர். அடுத்ததாக ஆங்கிலத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். பியானோ உள்ளிட்ட இசைப் பயிற்சிகளையும் அளிக்க உள்ளோம்” என்றார் ஆசிரியர் நிர்மலதா.
அங்கு எந்த ஆசிரியரிடமும், எந்த குழந்தையும் எப்பொழுதும் சந்தேகம் கேட்கலாம். அதையும் கண்கூடப் பார்த்தேன். வகுப்புகள் முழுவதும் குழந்தைகளே வரைந்த வண்ண ஓவியங்கள், கழிவுப் பொருட்களைக்கொண்டு செய்த கலைப்பொருட்கள் மற்றும் மறுசுழற்சிக்கென தனிவகுப்பு, பள்ளித் தோட்டத்தில் மாணவர்களே வளர்க்கும் காய்கறிகள், புதிய கட்டிடம், மார்பிள் தரை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், கூடுதல் ஆசிரியர்கள், கணினி வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, டிஜிட்டல் நூலகம், வண்ண மேசைகள் என மெர்சல் காட்டியது அந்த பள்ளி .
சமீபத்தில் இந்த பள்ளி மாணவர்கள் பெற்ற விருது பற்றி கிராமத்தில் நகைச்சுவையோடு பேசப்படுகிறது. சாலையோரங்கள், வீதிகள், பள்ளி விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்கள் திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவதை இந்த பள்ளி மாணவர்கள் தடுத்து வருகிறார்கள். இது பற்றி தெரிவித்த 5-ம் வகுப்பு மாணவி சம்யுக்தா, “ஆமாங்க சார், இன்னிக்கு காலைல கூட 20 பேர விரட்டினோம். எங்க டீம் பேரு, ‘குட்டி கமாண்டோ படை’. இதுல பத்து பேரு இருக்கோம். தினமும் காலைல அஞ்சு மணிக்கு விசில் எடுத்துட்டு போவோம். யாராச்சும் ரோட்டோரமா காலைக்கடன் கழிக்க ஒதுங்குனா உடனே விசில் அடிச்சு விரட்டுவோம். இப்ப எங்க ஊருக்குள்ள திறந்தவெளியில யாரும் மலம் கழிக்கிறதே இல்ல. அதுக்குத்தான் எங்களுக்கு விருது கொடுத்தாங்க” என்றார் மழலைக் குரலில். இது சாதாரணமான முயற்சியாகத் தெரியவில்லை. கிராமத்தையே சுகாதாரமாக மாற்றுவது என்பது கல்வியுடன் கலந்த ஒரு சமூகப் பொறுப்பாகவே பார்க்க முடிகிறது.
இத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம் தலைமை ஆசிரியர் இரா.சக்தி என ஒட்டுமொத்த பள்ளியும், ஊரும் அவரை நோக்கிக் கைகாட்டுகிறது. ஆனால் அவரோ, “நாங்கள் எதையுமே புதிதாகச் செய்யவில்லை. இருந்த வசதிகளையே சிறப்பாக்கியுள்ளோம்” என்றார் எளிமையாக. இதுல பாதி வசதி கூட இல்லாத பல தனியார் பள்ளிகள் லட்சங்களில் பீஸ் வாங்குகிறார்கள் என்று நான் சொல்ல, “இப்போ எங்க கவலையெல்லாம் நிறைய ஏழை மாணவர்களை இங்கு இருக்க வசதிகளைச் சொல்லி சேர்க்கணும்னு சொன்னாங்க” . நானும் நம்ம ஸ்கூல் பத்தி பெருமையா எழுதுறேன்னு சொல்ல, “அதெல்லாம் வேணாம் தம்பி உண்மைய எழுதுங்க போதும்” என்று விடை தந்தார்கள் (நிறைகுடம் தழும்பாது ). அதே போன்ற ஒரு துவக்க பள்ளியை நான் ஈரோட்டிலும் கண்டிருக்கிறேன் .
இப்படி உதாரணமாக இருப்பது ஆயிரத்தில் ஒரு பள்ளி மட்டுமே. அதிலும் அங்கு இருக்கும் சில நல்ல ஆசிரியர்களின் கடும் உழைப்பினால் உருவானதே . மீதம் இருக்கும் 999 பள்ளிகளின் நிலை ? கவலைக்கிடம்தான் , ஏன் தனியார் நிறுவங்களிடம் உதவி கேட்டீர்கள் அரசிடம் கேட்க வேண்டியது தானே ? என்ற கேள்விக்கு, தலைமை ஆசிரியர் சொன்ன பதில் வியப்பாக இருந்தது . அரசு , பள்ளிக்கு ஒதுக்கும் பணம் மிகவும் குறைவு கரும்பலகைக்கு பெயிண்ட் அடிக்க பணம் கொடுப்பதே பெருசு இதுல சுவற்றிருக்கு பெயின்ட் அடிக்க பணம் கேட்டால் அவ்ளோதான் கண்டிப்பாக வராது , இங்கு குப்பைகளைச் சுத்தம் செய்ய முதலில் ஆள் இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கும் ஆசிரியர்களே ஆளுக்குக் கொஞ்சமாக செலவளித்து மாத சம்பளத்திற்கு ஒரு துப்புறவுப் பணியாளரையும் நியமித்திருக்கிறார்கள். நான் வந்ததும் எனது அறையை சுத்தம்செய்து பின்தான் மற்ற வேலைகளை கவனிப்பேன். ( ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுத்தம் செய்கிறார், அதுவே வியப்பாகத்தான் இருந்தது ). எல்லாவற்றையும் மாற்ற கடினமாக உழைக்க வேண்டி இருந்தது என்றார் அவர் .
தமிழ்நாட்டில் மட்டும் 55,667 பள்ளிகள் உள்ளன. இதில் 67 விழுக்காடு அரசு பள்ளிகளாகும். இதில் 1,35,05,795 மாணவர்கள் படிக்கிறார்கள் . இவர்களுக்கு ஏற்ற போதுமான ஆசிரியர்கள் இருப்பதில்லை .75% தொடக்கப் பள்ளிகளில் பயிற்சி ஆசிரியர்களை வைத்தே பாடங்களை நடத்துகின்றனர். பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை, கழிப்பறை வசதிகளும் சொல்லும்படி இல்லை , சரியான கழிப்பறைவசதி இல்லாத காரணத்தால் அவதியுறும் மாணவிகள் அதனாலும் பள்ளிக்கு வருவதை நிறுத்துகிறார்கள் என்ற செய்தி எத்தனை பெரிய அவமானமாக அரசு கருத வேண்டும். ஆனால் அவ்வாறு அரசு எதையும் செய்யாமல் இருப்பதன் காரணம் என்ன ? வேறென்ன எல்லா அரசியல்வாதிகலும் கல்வி நிறுவனம் நடத்துகிறார்கள். நல்ல அரசு பள்ளிகள் வந்துவிட்டால் அவர்களின் பிழைப்பில் மண் விழுமே அதுதான்.
சமகல்வி இயக்கம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் பல முக்கியப் பெருநகரங்களில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 155 அரசு பள்ளிகளில் 37% பள்ளிகளில் மேற்கூரையே இல்லை ( இன்னமும் பாதி பள்ளிகள் மரத்தடியில்தான் நடக்கிறது) 38% பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதியை ஒதுக்குகிறார்கள் ஆனால் அது சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வளர்ச்சி நிதியாக மட்டுமே மாறுகிறது என்பதுதான் நிதர்சனம்.
வீதிக்கு ஒரு தனியார் பள்ளி என்ற நிலை வந்துவிட்டது. பக்கத்து தெருவே என்றாலும் அவர்களின் வாகனத்தில் ஏற்றித்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் குழந்தைக்கு சீட் கிடையாது என்றெல்லாம் விதிமுறை போடும் பள்ளிகளின் நடுவே , பாட்டாளி வர்க்கத்தினரும், ஒடுக்கப்பட்டவர்களும், வறுமையில் வாடும் எளியோரும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஒரே பள்ளி நம் அரசு பள்ளிதான். உலகம் போற்றும் விஞ்ஞானி இந்தியாவின் குடியரசுத்தலைவர் அய்யா அப்துல்காலம் போன்ற மாமனிதர்களை உருவாக்கியதும் இந்த அரசு பள்ளிதான் என்பதில் பெருமை கொண்டாலும் , இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் (கணினி வகுப்புகள் உட்பட ) பூர்த்திசெய்யும் விதத்தில் நம் அரசு பள்ளிகள் இருக்கிறதா? என்பதே நம்முன் இருக்கும் 1௦௦௦ மார்க் கேள்வி.
“பிச்சை எடுத்தாவது என் மக்களைப் படிக்க வைப்பேன்” என்று ஒரே ஆண்டில் 10000 பள்ளிகளைக் கட்டிக் கல்விக் கண் திறந்த கர்ம வீரர் முன்னாள் முதல்வர் காமராசரின் சிந்தனை இனி எந்த ஆட்சியாளர்களுக்கும் வரப்போவதில்லை. ஆனால் மக்களுக்காவது வரவேண்டுமல்லவா? அரசு ஊழியர்களே தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும்போது, இந்த நிலைக்கு அரசையே குறைகூறவும் முடியவில்லை. மூடுவிழாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளைக் காப்பது பொதுமக்களாகிய நம் அனைவரது கடமை. மலுமிச்சம்பட்டி பள்ளிபோல் இன்று சில மாதிரிப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் உருவாகி வருகின்ற சூழலில் ஓடி, ஓடித் தனியார் பள்ளிகளில் காசுகளைக் கொட்டாமல் சிறிதளவேனும் பொதுநலன் கருதி தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவதோடு அந்தப் பள்ளியைப் போலவே தரம் உயர்த்த ஒவ்வொருவரும் தொண்டளித்தால் அனைத்து ஊர்களிலுமே இது சாத்தியம்தான். தரமான கல்வியை இலவசமாக வழங்கும் ஒரு நாடு தற்சார்பில் தன்னிறைவை எட்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. தலைசிறந்த தலைமுறை உருவாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான சாமானியர்களுள் நானும் ஒருவனே.