ஒரு நாட்டின் கல்வித்தரம், எழுத்தறிவுவீதம் மற்றும் அந்நாட்டினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் கல்வியும் அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நாட்டின் அபிவிருத்திசார்ந்த விளைவுகளும் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவல்லவை.
ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்விகளை இலவசமாக வழங்கும் எம்மிலங்கைத் திருநாடு இந்தவிடையத்தில் தனது மக்களுக்கு ஆற்றும் சேவை அளப்பரியதே எனலாம். இலங்கையின் முதலாவது கல்வியமைச்சரான மதிப்பிற்குரிய சீ. டபள்யூ. டபள்யூ கன்னங்கரா அவர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வித்திட்டமும் அக்கல்வித்திட்டத்தில் உள்ளடடக்கப்பட்டிருந்த அம்சங்களும் இந்நாட்டினதும் நாட்டு மக்களினதும் கல்விவரலாற்றில் ஏற்படுத்திய மாற்றமும் எமது நாட்டின் கல்வித்தரத்திற்கு வழங்கியுள்ள சேவையும் எத்துணை பெறுமதிவாய்ந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் கல்வியைப் பெற்றுக்கொள்வது எந்தவொரு மாணவனதும் அடிப்படை உரிமையாகக் கொள்ளப்படுவது இதனை மேலும் வலுவூட்டும் ஓர் அம்சமாக அமைகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் இறுதி ஆண்டறிக்கையின்படி இரண்டாயிரத்து நான்காமாண்டின் மனித அபிவிருத்திச் சுட்டிக்கமைவாக (Human Development Index) HDI – 2014 இலங்கையிலுள்ள மாணவர்கள் ஒவ்வொருவரதும் சராசரி பாடசாலைக் கல்விக்காலம் 10.8 வருடங்களாகும். அதாவது இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதோடு, சராசரியாக க.பொ.த சாதாரண தரம் வரையில் கல்வி கற்கின்றனர் என்பது புலனாகின்றது. குறித்த உயர் மனித அபிவிருத்திச் சுட்டியில் உள்ளடங்கும் நாடுகளின், சராசரிப்பாடசாலைக் கல்வி வருடங்களின் பட்டியலை நோக்கும் போது, இவ்வரிசையில் எமது நாடே முதலிடத்தில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது அதியுயர் மனித அபிவிருத்திச் சுட்டியைக்கொண்டுள்ள சில நாடுகளை விடவும் அதிகம் என்றால் மிகையில்லை.
இருப்பினும் எமது நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி நிலை போன்ற பல்வேறுபட்ட காரணிகளால் இலவசமாக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைப் பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான உயர்கல்வியையும் இலவசமாக வழங்குவது இலங்கை அரசினால் சாத்தியப்படாத நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை மூலம் போட்டியடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்தேர்வை இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுவருகிறது.
நாடளாவிய ரீதியில் பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களில் சொற்ப வீதமான மாணவர்களே இவ்விலவச உயர்கல்விக்காகத் தெரிவுசெய்யப்படுகின்றனர். இவர்களுக்கான உயர்கல்வி அரச பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. தற்போதுள்ள காலப்பகுதியில் உயர்கல்வியைத் தனியார் கல்வி நிறுவனங்களில் பெற்றுக்கொள்வதென்பது இலங்கையில் வாழும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரு பெரும் பொருளாதாரச் சவாலாகவே உள்ளது. துறையடிப்படையில் பாடநெறிகளுக்கான கட்டணங்கள் வேறுபட்டபோதிலும் ஒப்பீட்டளவில் அது ஓர் பெருந்தொகையாகவே உள்ளது. தனியார் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக பல பெற்றார் தங்களது நிலையான சொத்துக்களையே விற்கின்ற நிலைகளையும் நாம் கண்கூடு பார்க்கின்றோம். கல்வி மற்றும் உயர்கல்விக்கான கேள்வி மற்றும் செலவினம் இவ்வாறிருக்கும் நிலையில், இயன்றளவு அரச கல்லூரிகளில் உள்ள தரமான துறையினுள் எப்படியாவது நுழைந்துவிடுதல் என்பது எந்தவொரு சாதாரண மானவனதும் பெற்றோரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. கல்விச்சந்தையில் உரிய தரமான துறையில் கல்விகற்க பாரிய விலை கொடுக்கவேண்டியுள்ள இந்நிலையில், உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இலவசமாக உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வது எந்தவொரு மானவனதும் தேவையாக உள்ளது.
மேலும் உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த சித்தியைப் பெற்று அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுதல் என்பது ஓர் மாணவன் அவனது குடும்பம் மற்றும் அவன் கல்விகற்ற பாடசாலை போன்றவற்றின் கெளரவம் சார்ந்த விடயமாகவும் பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத் தேர்வு எனப்படுவது ஒரு மாணவனின் பாடசாலைப் பருவத்திலிருந்து அவனது சமூகம் சார்ந்த அங்கீகாரத்தினுள் நுழையும் சாவியாகவே கொள்ளலாம். வளர்ந்த ஓர் மனிதனாக ஒரு ஆணோ ஓர் பெண்ணோ தனது சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் முதல் கட்டம் இதுவேயாகும் எனலாம்.
சாதாரணமாக உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களில் 50 – 60 சதவீதமான மாணவர்களே உயர்தரப் பரீட்சையில் சித்தியைப்பெற்று பல்கலைக்கழகத் தேர்வுக்கான இழிநிலைத் தகுதியைப் பெறுகின்றனர். ஆகவே இத்தேர்வுப்பட்டியலில் தங்கள் பெயர்களையும் இணைத்துக்கொள்வதென்பது இலங்கை மாணவர்களின் கல்விப்பாதையில் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பாடசாலைகளும் ஆசிரியர்களும் ஏன் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பரீட்சைக்குத் தயார்படுத்தும் வேலையைத் தங்கள் முக்கிய நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். பாடசாலைக்கல்வியைத் தாண்டி தங்கள் பிள்ளைகளைப் பிரத்தியேக வகுப்புக்கள், மேலதிக பயிற்ச்சிகளென உச்சபட்ச தயார்படுத்தல்களுக்குள்ளாக்குகின்றனர்.
இதனடிப்படையில் ஒரு பாடசாலையின் அடைவு எனப்படுவது அப்பாடசாலை வருடாவருடம் வெளியிடும் பல்கலைக்கழக அனுமதிகளின் எண்ணிக்கையைவைத்தே கணிக்கப்படுகிறது.15 பல்கலைக்கழகங்கள் 18 உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்ற உயர்கல்வியை மேற்கொள்வதற்காக அகில இலங்கைரீதியில் சுமார் எண்பதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வருடாவருடம் தேர்வுசெய்யப்படுகின்றனர். கடந்த வருடம் மாத்திரம் 87,085 மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதியும் பால் அடிப்படையிலான அடைவுகளும்
இத்துணை முக்கியத்துவம்வாய்ந்த இப்பல்கலைக்கழகத் தேர்வு மற்றும் உயர்கல்வி என்பன எவ்விதமான அடைவுகளை எமது சமுதாயம் மற்றும் நாட்டுக்கு வழங்குகிறது என்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும். அரசு எமது மாணவர்களுக்கு வழங்குகின்ற இலவசக்கல்வி மற்றும் இன்னோரன்ன சலுகைகள் அதன் உச்சபட்ச பலனை சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் வழங்குகின்றதா? இக்கல்விமுறைமை உண்மையிலேயே எமக்குப் பயன்தரக்கூடியதாக இருக்கிறதா? இம்முறைமையில் உள்ள நிறை குறைகள் என்ன? தார்மீகப்பொறுப்போடு எமது மூத்த தலைவர்கள் எமக்காய் உருவாக்கிச்சென்ற வரப்பிரசாதங்களை உரிய முறையில் நாம் பயன்படுத்துகின்றோமா? போன்ற பல கேள்விகளுக்கு நாம் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்! இத்தலைப்பு மிகவும் பரந்தது. பல ஆண்டுகாலமாக பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களைக் கண்டது. இருந்தும் கடந்த மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் வெளியான உயர்கல்வி குறித்த அறிக்கையில் சில சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான உண்மைகள் பகிரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இக்கட்டுரையின்மூலம் பல்கலைக்கழக அனுமதி மற்றும் மாணவர்களின் உயர்கல்வியை பாலடிப்படையிலான அடைவுரீதியாக நோக்கவிழைகிறோம்.
கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 255,191 மாணவர்களில் 60.91% சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான இழிநிலைத் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். சராசரியாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் மொத்தப் பரீட்சாத்திகளின் எண்ணிக்கையில் 58 தொடக்கம் 62 சதவீதமான மாணவர்கள் இவ்வகைக்குள் அடங்குகின்றனர்.
இப்புள்ளிவிபரத்தில் பொதிந்துள்ள சுவாரசியமான உண்மையென்னவென்றால், இவ்வாறுவருட காலப்பகுதியில் உயர்தரச் சித்தியெய்திய மொத்த மாணவர்களில் சராசரியாக 64.81% வீதமானவர்கள் பெண் மாணவர்கள். அதாவது ஆண் மாணவர்களோடு ஒப்பிடுகையில் அரைவாசிக்கும் அதிகமாக பெண் மாணவர்களே பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் இழிநிலைத் தகுதிபெற்றவர்களாக இருக்கின்றனர். பெண் மாணவர்களின் கல்வியடைவு ஆண் மாணவர்களைவிட எல்லா ஆண்டுகளிலும் அதிகமாகவே இருந்துவந்துள்ளது. ஒப்பீட்டளவில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் ஆண் பெண் மாணவர் விகிதம் சமமாக இருக்கும் பட்சத்தில் பெண்மாணவர்களின் அடைவு வீதம் ஆண் மாணவர்களைக் காட்டிலும் தொடர்ச்சியாக எல்லா வருடங்களும் அதிகமாக இருப்பது வேடிக்கையான உண்மையாகும். இதற்கான காரணங்கள்தாம் என்ன? பெண்களின் கல்வியுரிமை அவர்கள் கல்விகற்பதற்கான ஒத்துழைப்புக்கள் போன்றவை இன்னும் முழுமையடையாத எமது சமூகத்தில், ஆண் மாணவர்களை விட பெண் மாணவர்கள் இவ்வளவுதூரம் தங்கள் அடைவுகளால் மேலோங்கிநிற்பது எவ்வாறு சாத்தியம்?
பெண் மாணவர்களின் இவ்வடைவுநிலை பாராட்டத்தக்கதே! பல்வேறுபட்ட சமூக, கலாசார, பொருளாதாரச் சூழ்நிலைகள் பெண்களின் கல்வியின் இஸ்திரத் தன்மையைப் பாதிக்கின்ற அதேவேளையில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெண்கள் அடைந்திருப்பது ஒரு சமூக நோக்கில் மிக மிக ஆரோக்கியமானதாகவே கொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் கல்வி எனப்படுவது அவளோடு மாத்திரம் அழிந்துபோவதல்ல. மாறாக ஒரு சந்ததியின் எதிர்காலத்தைச் சிறக்கச்செய்யும் வலிமை அவர்களது கல்விக்கு உண்டு என்பது நிதர்சனமான உண்மை.
அது ஒருபுறமிருக்க, ஆண் மாணவர்களின் இப்பின்னடைவிற்கு என்ன காரணம்? பாடசாலைக் கல்வியைத் திறம்படத் தொடரமுடியாத நிலையில் அல்லது பாடசாலைக் கல்வியில் சிறந்துவிளங்கமுடியாத நிலைக்கு ஆண் மாணவர்களைக் கொண்டுசெல்லும் காரணிகள்தாம் யாவை? குடும்பப் பின்னணி, பொறுப்பு, பொருளாதார ரீதியில் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய நிலை இப்படி நியாயமான காரணங்களா? அல்லது அதிகரித்த பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வளங்களின் மிகைத்த பாவனை, கல்வி மற்றும் அதன் பேறுபற்றிய அறியாமை போன்ற நிலைகளா? இக்கேள்விக்கு முதற்கண் பெற்றோர்களும், பாடசாலைகளும் மிகுந்த சிரத்தையுடன் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, துறைரீதியான அடைவுகளோ ஆண் பெண் இருபாலாரிடையேயும் அவ்வத் துறைக்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகிறது.
கலைத்துறையை நோக்குவோமாயின் 75% சதவீதம் பெண்மாணவர்களே உயர்தரச் சித்தி பெற்றுள்ளனர். இவ்வெண்ணிக்கையில் கலைத்துறையைத் தேர்வுசெய்யும் ஆண் பெண் மாணவர்களின் விகிதமும் செல்வாக்குச்செலுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்க. கலைத்துறையை பொதுவாக ஆண் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. பெண் மாணவர்களோடு ஒப்பிடுகையில் கலைத்துறையில் உள்ள ஆண் மாணவர்களின் பரம்பல் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. தொழில் துறையில் ஆண்களால் அதிகம் வெற்றிகரமாக துலங்க இயலாத அல்லது தொழில் துறையில் அதிக வருமானமீட்டக்கூடிய உயர்கல்வி வாய்ப்புக்கள் கலைத்துறையைப் பொறுத்தமட்டில் குறைவாகக் காணப்படுவதும் இதற்கு ஓர் காரணமாக இருக்கலாம். வர்த்தகம் மற்றும் விஞ்ஞானத் துறைகளில் சராசரி ஆண் பெண் அடைவுவிகிதம் அண்ணளவாக அரைக்கரைவாசியாகவே உள்ளது.
வருடாவருடம் 60% இற்கும் அதிகமான பெண்மாணவர்கள் உயர்தரச் சித்தி பெற்றிருந்தும், பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற பெண் மாணவர்கள் ஆண்களை விடவும் குறைவானவர்களே. சராசரியாக 20% அதிகமான உயர்தரச் சித்தியைப் பெண் மாணவர்கள் பெற்றபோதும், பட்டப் படிப்பிற்காய் தெரிவுசெய்யப்படும் மாணவர்களில் ஆண்களை விட பெண்கள் சராசரியாக 2.6% சதவீதம் குறைவாகவே உள்ளனர்.
அதாவது ஆண் மாணவர்களின் உயர்தரச் சித்தி மற்றும் பபல்கலைக்கழகத் தெரிவு விகிதத்திலும் பார்க்க பெண் மாணவர்களின் விகிதம் சராசியாக குறைவாகவே உள்ளது. சுருங்கக்கூறின், வருடா வருடம் சராசரியாக 76,000 இற்கும் அதிகமான பெண் மாணவர்கள் உயர்தரச் சித்தியைப் பெற்றிருந்தும் அவர்கள் பல்கலைக்கழகத் தேர்வுக்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆக அதிகமான பெண் மாணவர்கள் உயர்தரச் சித்தியினை இழிநிலை தரத்திலேயே பெற்றிருக்கின்றனர். பெண் மாணவர்களால் பெறப்பட்ட மொத்த உயர்தரச் சித்தியின் அளவோடு ஒப்பிடுகையில் பெண் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு வீதம் மிகக் குறைவே. இருந்தும் ஆண் மாணவர்களின் பல்கலைகழக அனுமதியோடு ஒப்பிடுகையில் பெண் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையில் அதிகமாகும். இதனைத் துறைரீதியாக நோக்குவோமாயின்;
கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் பெண் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு ஆண் மாணவர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள அதேவேளை விஞ்ஞான மற்றும் பிற பிரிவுகளில் ஆண் மாணவர்களின் அடைவும் பல்கலைக்கழக நுழைவும் பெண்களை விட அதிகமாகவே உள்ளன. விஞ்ஞானப் பிரிவில் பெண் மாணவர்களின் இப்பின்தங்கிய நிலை ஆராயப்படவேண்டிய ஓர் விடயமாகும். விஞ்ஞான பிரிவில் மொத்த சித்தி வீதத்தை நோக்கும்போது பெண் மாணவர்களே அதிக சித்தியைப் பெற்றிருக்கின்றனர். இருந்தும் புள்ளி அடிப்படையிலான அடைவில் ஆண் மாணவர்களே மேலோங்கி நிற்கின்றனர். இது இயற்கையான ஓர் அமைப்பா? விஞ்ஞானத் துறையில் ஆண் மாணவர்களின் திறமை இயல்பிலேயே அதிகமா அல்லது விஞ்ஞானப் பிரிவில் கல்விபயிலும் பெண் மாணவர்களுக்கு பாடநெறி மற்றும் வளக்கிடைப்பனவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகளா?
எது எவ்வாறாயினும், வருடா வருடம் ஏறத்தாழ எண்பது சதவீதமான மாணவர்கள் உயர்தரத்தில் சித்தி பெற்றிருந்தும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இப்பெருந்தொகை மாணவர்கள் தமது உயர்கல்வியை எவ்வாறு மேற்கொள்கின்றனர்? அல்லது பல்வேறுபட்ட சமூக பொருளாதார காரணிகளால் உயர்கல்வி என்கின்ற ஓர் அங்கத்தைத் தன் வாழ்வில் அடையமுடியாதவர்களாக இருக்கின்றனரா? இவர்களது உயர்கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான வழிமுறைகள் என்ன? உயர்கல்வியில் சித்திபெறாத மாணவர் தொகையுடன் சேர்த்து இம்மாணவர்களும் கல்விச் சந்தை மற்றும் தொழிற் சந்தையில் எவ்வாறான போட்டியை எதிர்கொள்ளப்போகின்றனர்? இது அவர்களின் எதிர்காலத்தையும் நாட்டினது எதிகாலத்தையும் எந்தவிதத்தில் பாதிப்பிற்குள்ளாக்கும்? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு நாம் விடைகாணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!
எனவே மாணவச் செல்வங்களே! நீங்கள் எவ்வளவுதான் சிரத்தையோடு படித்தாலும், எந்தளவு சிறந்த பெறுபேற்றைப் பெற்றாலும், உங்களில் குறித்த ஓர் குறுகிய விகிதமான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெறப்போகின்றனர்! இது அரசினால் அனைவருக்குமான உயர்கல்வியை இலவசமாக வழங்கமுடியாத நிலையேயன்றி உங்களுடைய திறமையில் உள்ள குறைபாடல்ல! இதனைப் பெற்றோர்களும் நன்கு புரிந்துவைத்திருத்தல் மிக அவசியம். உங்களின் திறமையை அறிந்து, நீங்கள் எந்தவிதமான எதிர்காலத் திட்டங்களை வகுத்துக்கொள்ள இயலுமோ அதனைச் சரிவரத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். பரந்து விரிந்த உலகில் எண்ணற்ற துறைகளும், தொழில் வாய்ப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து அதில் துலங்கி வெற்றிபெறுவதற்காக உழையுங்கள். பன்னிரண்டு வருடங்கள் உங்களுக்கு இலவசக் கல்வியை வழங்கிய நாட்டுக்கும் அதன் எதிர்காலத்திற்கும் உறுதுணையாக இருங்கள்.
பெண் மாணவர்கள் இவ்விடையத்தில் இன்னும் சற்று சிரத்தை எடுத்துக்கொள்வது சிறந்தது. பெண் மாணவர்கள் எண்ணிக்கையில் அதிகமான சித்திகளைப் பெற்றும் அவர்களது சித்திகள் இழிநிலை அடைவுகளாகவே இருக்கின்றன. எனவே உங்களது சித்தியைச் சாதாரண சித்தியிலிருந்து திறமைச் சித்திக்கு இட்டுச்செல்லும் வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுங்கள். பெண்களின் உயர்கல்வி அரச பல்கலைக்கழகங்கள் என்று வரும்போது பெரும்பாலும் பெற்றோர்களால் விரும்பத்தக்கதாக உள்ளது. உயர்தரம் மூலம் அரச பல்கலைக்கழக அனுமதி பெறாத பெண் மாணவிகள் தனியார் கல்விக்கல்லூரிகளில் பயில்வதற்கென வெளியேறும் வீதம் பெரும்பாலும் கிராமப்புறங்களில் மிக மிக அரிதாகவே உள்ளது. நகரப்புறங்களில் இந்நிலை சற்றுக் குறைவாக இருப்பினும் இந்நிலையில் சமூக, சமய, கலாசாரம் சார்ந்த காரணிகள் பாரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
எனவே பெண் மாணவர்களே உங்களது கல்வி உங்களோடு முடிந்துபோவதல்ல. ஒரு சந்ததியின் சிறப்பைத் தீர்மானிக்குமளவு வலிமைவாய்ந்ததே உங்கள் கல்வி. எனவே இயன்றளவு உயர்கல்விக்காய்ப் போராடுங்கள் அதற்காக உழையுங்கள். பெண்களின் சிறந்த சீரிய கல்வி, நாட்டின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவல்லது!