நீட் தேர்வும் சமூக நீதியும்

நீட், அனிதா, டாக்டர் சமீபங்களில் இந்த வார்த்தைகளை கேட்கிற, பார்க்கிறபோதெல்லாம் மனம் வலிக்கிறது. நெருங்கிய இரத்த சொந்தம் இறந்தது போன்ற உணர்வைப் பெறுகிறேன். சாதிய ஆணவப்படுகொலைகளின் போதோ, தலைவர்களின் மரணங்களின் போதோ, ஏற்படும் மனநிலையாக இது இல்லை. நிலநடுக்கத்திலோ, சுனாமியிலோ மொத்தமாக மடியும் மக்களின் செய்தி கேட்டு வரும் மனக் கலக்கமாய் இது இல்லை. மாறாக என் பெருந் தவறாய் உணர்கிறேன். குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போகிறேன்.

‘இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில், சமம் என்ற ஓர் மானுட நீதியை ஏற்படுத்த பல தலைவர்களின், இயக்கங்களின், தொடர் போராட்டங்களால் ஏற்பட்ட  ஒரு நகர்வே இட ஒதுக்கீடு, சலுகை, முன்னுரிமை, போன்றவை. இவையெல்லாம் போதுமானவையா?, இந்த சமூகத்தை சமப்படுத்திவிடுமா? என்ற கேள்விகளும் அது சார்ந்த விமர்சனங்களும் தொடர்ந்து இருந்துவருகிறது. இட ஒதுக்கீடு போன்றவைகள் சமூக நீதிக்கான ஒரு ஆமை வேக நகர்வு. இன்னும் வீரியமான செயல்களோடு சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது என்று தொடர்ச்சியாக சொல்லப்பட்டுவரும் நிலையில், நீட் அந்த குறைந்தபட்ச சமூக நீதிக்கும் குந்தகம் விளைவித்திருப்பதாக இப்போதைய போராட்டங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

படம்: newsminute

’இட ஒதுக்கீடு’ மூலம்  விடியலை உண்டாக்கலாம் என்று நம்பியவர்கள் முன்வைத்த, சமூக நீதியின் வேருக்கே வெந்நீர் ஊற்றிவிட்டது, இந்த நீட் தேர்வு’. தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. இதில் தமிழகம் வெடிக்க அதாவது நீட் குறித்த தங்கள் எதிர்ப்புகளை தமிழக மக்கள் வீதிகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், சமூக வலைதளங்களில், விழாக்களில், மேடைகளில், போரட்டக்களங்களில் சற்று வீரியமாக காட்ட காரணம்  அரியலூர் அனிதாவின் மரணம். கொஞ்சமும் நியாயம் இல்லாத படுகொலை அது. சாதி, மத ’உணர்வு’ இருப்பவர்களைக் கூட பதபதைக்க வைத்த அரசுகளின், ஆட்சியாளர்களின் தோல்வி அது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், ஊடகங்கள், என்று சகலரின் மீதான இரத்தக்கரை அது. உற்று நுகர்ந்தால் என் மீதும் அவளின்  இரத்த வாடை வீசுகிறது.

படம்: newsminute

யார் அந்த அனிதா, ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்த பெண். இந்த உலகில் மிகவும் ஒடுக்கப்பட்டவள் அவள். வர்க்கரீதியில் முதலாளிக்கு பாட்டாளி ஒர் கீழ்நிலை. உலகில் இந்தியர் என்பது மேற்கிற்கு ஓர் கீழ்நிலை. இந்தியாவில் திராவிடம் என்பது வடக்கிற்கு ஓர் கீழ் நிலை. தமிழர் என்பது மற்றோர்க்கு ஓர் கீழ்நிலை. ஆதிக்கத் தமிழரில் தலித் மிகக் கீழ்நிலை. நகரத்தவருக்கு கிராமத்தவர் ஓர் கீழ்நிலை. ஊருக்கு சேரி கீழ்நிலை. அந்தச் சேரியிலும் ஆணுக்கு பெண் கீழ் நிலை. ஒட்டு மொத்தத்தில் அனிதாவோ, இந்த கொடூரமான சமூக படிநிலைகொண்ட உலகின், மிகப்பரிதாபகரமான ஓரு தலித் பெண். அப்படிப்பட்டவளின் விடுதலைக்கு இந்த உலகம் கொடுத்த ஒரே ஒர் கருவி கல்வி.  கற்றால் மட்டுமே உன்னால் நிமிர முடியும் என்ற  கேவலமான ஒரு சூழலை, சமூக நீதி என்ற பெயரில் நாம் போராடி பெற்றுக்கொடுத்திருக்கிறோம். அதையும் உண்மை என்று நம்பிய  அவள் தன் விடுதலையை நோக்கி, தன் நிமிர்வை நோக்கி பயணப்பட்டாள். அவள் முன் கல்விக் கருவியில் சிறந்தது மருத்துவம்.  முன்பு அவளைப் போன்ற தலித்துகளின் ”கீழ்நிலை” தொழில் தான். பணம் கொழிக்கும் தொழிலாய் மாறிய பின்பு அதுவும் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது. அந்த மருத்துவமே கல்வியில் சிறந்தது என்பதையும் இந்த கேவலமான சமூகம் தான் அவளுக்கு போதித்தது. அதையும் அவள் நம்பினாள்.

தன் அடிமை விலங்கை உடைக்கும் கருவி கல்வி எனபதையும், அந்தக் கல்வியில் உயர்ந்தது மருத்துவம் என்பதை அவள் நம்பினாள். அந்த கருவியை எப்படியும்  பெற்று விடுவது என்று தீர்மானித்தாள். ஆனால் அந்த கருவியை அடைவதிலும் அவளுக்கு ஏராளமான தடைகள். அந்த தடைகல் சில தடைகள்தான் என்று கூட அவளுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அப்படி நுட்பாக அந்த தடைகளையெல்லாம் தயாரித்திருக்கிறார்கள் அல்லது அனுமதித்திருக்கிறார்கள் ”நம் முன்னோர்கள்”.

படம்: governancenow

நூறு மீட்டர் ஓட்டப்பந்தையத்தில்,  ஒரு கிலோமீட்டருக்கு பின்னிருந்து அவள் ஓடிவர வேண்டும். இது தான் இங்கு சமூக விதி, 500 மீட்டர் சலுகையை பெற்றுத்தந்திருக்கிறார்கள் அது தான் இங்கு சமூக நீதி.  அந்த சமூக நீதியும் பலருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி சிலர் தூண்டி, பலர் கண்டிக்கின்றனர். இப்போது அவள் 500 மீட்டருக்கு பின்னால் இருந்து ஓட வேண்டும். போட்டியோ 100 மீட்டர். சிலர் 200 மீட்டரிலிருந்து, சிலர் 300 மீட்டரிலிருந்தெல்லாம் ஓடுகிறார்கள். சிலர் வெற்றிக்கோட்டுக்கு 10 மீட்டர் முன்பிருந்தும் ஓடுகிறார்கள். சிலர் வெற்றிக்கோட்டிலேயும் இருக்கிறார்கள். ஆனால் அனிதா 500 மீட்டருக்கு முன்பிருந்து ஓடவேண்டும். கொஞ்சமும் நியாயமில்லாத, கடினமான ஒரு ஓட்டத்திற்கு தன்னை தயாரித்தாள், ஓடினாள், வென்றாள். சுலபமாக சொல்லிவிடலாம், எழுதிவிடலாம். ஆனால் அவள் செய்தே காட்டினாள். அதனால்தான்  1200 க்கு 1176 மதிப்பெண். ஐஏஎஸ் அதிகாரியின் மகனும், அமைச்சரின் மகளும், பெருந்தொழிலதிபரின்  வாரிசும், பெற்ற மதிப்பெண்ணைக் காட்டிலும், மூட்டைத் தூக்கியின் மகளான அனிதா பெற்ற மதிப்பெண் அதிகம்.

படம்: thenewsminute

அடிமை விலங்கை உடைத்துவிடும் பெருநம்பிக்கையை பெற்றாள்  அனிதா. நீட் என்ற கொடிய அரக்கன் வந்தான். எல்லோரையும் சமமாக ஓடவைப்பதாகச்  சொன்னான். அனிதாவை 1000மாவது மீட்டரிலேயே மீண்டும் நிறுத்தினான். அவளை தோற்கடித்தான். என்ன நினைத்திருப்பாள் அவள். இறக்கி வைக்க வேண்டிய இடம் என்று நினைத்த கனத்தில், தன் தலையிலிருக்கும் பெருஞ்சுமையில் இன்னமும் சுமையேற்றியவர்கள் குறித்தும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நம்மைக்குறித்தும் என்ன நினைத்திருப்பாள் அவள்.

இதே சமூகம் அவளுக்கு அநீதிக்கெதிரான நீதியைக் கற்றுக்கொடுத்தது. நீதிமன்றத்தை நாட கற்றுக்கொடுத்தது. தன் மீதான அநீதிக்கு எதிராக நீதி கிடைக்குமென்று நம்பி கடைசி வாய்ப்பாக நீதிமன்ற படியேறினாள். இங்கு நீதி எல்லோரும் சொல்வது போல ஒடுக்கப்பட்டோருக்கு அப்பாற்பட்டதுதான் என்பது மீண்டும் உறுதியானது. நீட் இறுதியானது. அனிதாவின் அடிமைவிலங்கும் உறுதியானது. அவளுக்கு அதுவே இறுதியுமானது.

படம்:timesofindia

இந்த கேவலமான கட்டமைப்பு கொண்ட சமூகத்தில் நாம் காட்டிய வழியில் இனி விடுதலை இல்லை என்று முழுவதுமாக தெரிந்த பின்னரே அவள் விடைபெற்றிருக்கிறாள். காந்தியமும், அம்பேத்கரியமும், பெரியாரியமும், இன்னும் சொல்லப்படும் சீர்திருத்த இயக்கங்களும் இங்கு தோற்றுக் கொண்டிருக்கின்றன. காந்திய, அம்பேத்கரிய, பெரியாரிய வாதிகளாலேயே தொடர்ந்து தோற்கின்றன. அந்த ”வாதிகள்” அந்தந்த இயக்கங்களை வளர்த்தெடுக்காமல் தொடர்ந்து ஈயம் மட்டுமே பூசிக்கொண்டிருப்பதால் தோற்கிறார்கள். அதுவும் பூசிய இடத்திலேயே மீண்டும், மீண்டும் அந்த ஈயங்களை பூசுகின்றனர். காந்தியோ, அம்பேத்கரோ, பெரியாரோ, பெற்றெடுத்த அந்த கருத்துக்களை வளர்க்காமல் தொடர்ந்து அதேநிலையில் ஒரு குழந்தையாகவே வைத்திருப்பதன் விளைவு இது. அவர்களின், தோல்வியின் பலிகடா அனிதா.

எங்கோ? எதையோ? தவறவிட்டிருக்கிறோம். சமூக அநீதிகள் வளர்ந்திருக்கிறது. நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறோம். போகிற, வருகிற வாகனங்களை பார்த்தவாறு இருக்கும் ஒரு புளியமரத்தைப் போல நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த குற்ற உணர்ச்சியில் தான் நாம் அனிதாவிற்காக, நீட்டிற்கு எதிராக போராடுகிறோம். அதிலுள்ள விசயங்கள் என்ன? விசமங்கள் என்ன? என்று ஆராய்வது கூட அவசியப்படாமல் போராடுகிறோம். ஆனால் இந்த போராட்டங்களில் முன்னிருக்க வேண்டிய கட்சி வாதிகளும் நம்மோடு போராடுகின்றனர்  என்பதுதான் நமக்கான சோகம். போராட்டங்களை ஒருமுகப்படுத்தியிருக்க வேண்டிய இயக்கத்தவர்கள் அமைதியாய் பின்னிருக்கிறார்கள். மக்கள் போராட்ட களத்திற்கே வர அவசியமில்லாத சூழலை உருவாக்கியிருக்க வேண்டிய ஈயங்கள்/இஸ்டுகள் அடையாளப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நம்மால் உருவாக்கப்பட்ட இந்த கேவலமான சமூகத்தில், அனிதாவிற்கான விடுதலை கருவி என்று நாம் கொடுத்தது உண்மையாகவே விடுதலைக் கருவிதானா?. நாம் பேசி வருவது வீரியமான சமூக விடுதலைதானா?. இந்த பெருங்கேள்விகளை தவிர்த்து மற்றதையெல்லாம் நாம் தொடர்ந்து பேசும் வரை நமக்கு நீட் தான், நவோதையா தான். இந்தக் கேள்விகளுக்கு விடைதேடாமல் வெறுமனே போராடினால், அவற்றின் பேர் வேண்டுமானால் மாறலாம். ஒரு போதும் சமூகம் மாறாது.  சமூகம் மாறாத வரை நம் மீது ரத்த வாடை வீசும்…

Related Articles

Exit mobile version