பாலியல் துஷ்பிரயோகங்கள் பதாகையேந்தி முடியுமா?

பதாகைகள் தாங்கிய மாணவர்கள், பொதுமக்கள், உறவினர்கள், பாதிக்கப்பட்டோர் என இன்று அதிகம் காணக்கிடைக்கும் ஒரு நடைமுறையாக போராட்டங்கள் அதிகரித்துள்ளன. சமூக வைத்தாளங்களில் அன்றாடம் ஒரு புகைப்படத்துடன்கூடிய செய்தியறிக்கையை கடந்தவண்ணமே எமது நாட்கள் நகர்கின்றன. காணாமல் போனோர், நில அபகரிப்பு, மீள்குடியேற்றம், வேலையில்லா பிரச்சினை என அவை எமது அவதானத்துக்கு வந்தபோதும், அவதான அளவிலேயே அவை இன்றும் இருக்கின்றன.

மல்லிகைத்தீவில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொள்ளும் சிறுமிகள் (twimg.com)

கடந்த இரு வாரங்களாக இவற்றோடு சேர்ந்து மூதூர் மல்லிகைத்தீவு மாணவிகள், இல்லை இல்லை சிறுமிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகள் அவதானத்தைத் தாண்டி எமது உயிரை உலுக்கியது. இதுவொன்றும் புதிதல்லவே! இன்னுமொரு வித்யா எம்மைக் கடந்துசெல்கிறாள் என்று அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்புவதுதானே வழமை? அங்குதான் இருக்கிறது சுவாரஸ்யம், முகநூல் போராளிகளுக்கும், பிரபலங்களுக்கும், அரசியல் ஆசாமிகளுக்கும் இதில் இன்னுமொரு பேசுபொருள் இருக்கிறதே! நடந்த குற்றச்செயலை மதத்தின் பெயர்கொண்டு அரசியல் ஆக்கும் பணியில் சிலர், பேசுபொருள் கிடைத்த ஆவலில் தங்கள் சமூகப் பணிமூலம் பிரபலம் தேடக்கிளம்பிய சிலர் என்று இவர்களின் திசைதிருப்பல் உத்திகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி இதுவும் காணாமல் போகும்.

இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அப்பிள்ளைகளின் வயதொத்த பிள்ளைகளின் பெற்றார் மற்றும் உறவினர்களுக்கும் “தமது பிள்ளைகள் இவ்வாறான சூழ்நிலைகளுக்குள் தள்ளிவிடப்பட்டால்!” என்ற அச்சமும் பரிதவிப்பும் ஒட்டிக்கொள்ளும். இவற்றின் வெளிப்பாடாக குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினர் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு எதிராக போராட்டக் களங்களில் முனைப்புடன் இறங்குவார்கள். பதாகைகளும்,கோஷங்களும் செய்தி ஊடகங்களில் வலம்வரும், கருத்துக்கள் நாலாபுறமும் சீறிப்பாயும். குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டுமா, மனநல சிகிச்சைக்கு செல்லவேண்டுமா, அல்லது அடுத்த குற்றச் செயலுக்காக கட்டவிழ்த்து விடப்படவேண்டுமா என்று அறிவரிக் குழந்தையிலிருந்து அரிதாரத்துடன் நிற்கும் முன்னணி கதாநாயகன்வரை ஆளாளுக்கு கருத்துக்களை பதிவுசெய்வர். வழிவழியாக நடக்கும் இந்நடைமுறைகள் அடுத்த துஷ்பிரயோகத்தை நடக்கவிடாமல் தடுத்த கதை கண்டிருக்கிறோமா?

நிலைபேறான தீர்வுக்கு வழி?

ஒவ்வொருமுறை பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான செய்திகளை படிக்கையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய “நடுநிசி நாய்கள்” திரைப்படத்தை அச்சத்தோடு பார்க்க ஆரம்பித்து கடைசிக்கட்டத்தில் பெற்ற ஞானோதயம்தான் நினைவுக்கு வரும். பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; துஷ்பிரயோகத்துக்கும், குற்றவாளிகளின் தண்டனைக்கும் இடைப்பட்டது மட்டுமல்ல. குற்றவாளிகளின் உருவாக்கம் தொடக்கம், பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளின் எதிர்க்கலாம்வரை நீண்டுசெல்லும் ஓர் பெரும் சமூகப் பொறுப்பு. (நடுநிசி நாய்கள் பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்க)

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான தண்டனைகள் புறக்கணிக்கப்படுகின்ற சமூகங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களை மேற்கொள்ள ஆண்கள் தூண்டப்படுகின்றனர் (charityworld.com)

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் “பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மையம்” இனால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், 2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வினடிப்படையில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான தண்டனைகள் புறக்கணிக்கப்படுகின்ற சமூகங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களை மேற்கொள்ள ஆண்கள் தூண்டப்படுவதாக அறியக்கிடைக்கிறது. (National Sexual Violence Resource Center, 2004) “தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு; விளைவுகளோட சைச பாருங்க! எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!!” என்ற அந்நியன் திரைப்படத்துக்காக எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்கள்தான் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான தண்டனைகளின் அலட்சியங்களுக்கு சாட்டையடி.

ஒரு குழந்தையை, அதன் உளவியல், வளர்ச்சி, எதிர்காலம் என்ற எதைப்பற்றியும் சிந்திக்காமல், சுய இச்சைகளுக்காக துஷ்பிரயோகம் செய்கின்ற எவராக இருந்தாலும் அவர்கள் வாழத் தகுதியற்ற ஈனர்களாகவே கருதத் தோன்றுகிறது. குற்றம் உறுதிப்படுத்தப்படுமிடத்து, அவர்களுக்கான கடுமையான தண்டனை எவ்வித பாரபட்சமுமின்றி நிறைவேற்றப்படல் வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ந்தும் பத்திரிகைகளிலும், செய்தி ஊடகங்களிலும் நாளாந்தம் அணிவகுக்கும் இவ்வாறான குற்றச் செயல்களின் செறிவு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இல்லாவிடின் தொடர்ந்தும் மக்கள் பதாகைகள் தாங்க வீதியோரம் தஞ்சம் பெறவேண்டியதுதான்.

டெல்லியில் இடம்பெற்ற கூட்டுப் பாலியல் வன்முறை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தில்

“நடத்த வன்முறையை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், 23 வயதுப் பெண்ணொருத்திக்கு நடந்திருக்கும் இவ்வநீதியை நினைத்து நான் மனம் வருந்தினாலும், குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். மரணதண்டனை வழங்குவதன் மூலம் இப்பிரச்சினையை அணுகுவது தவறு. மரண தண்டனை எனப்படுவது சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொலையே! பாதிக்கப்பட்டது எனது சகோதரி, குற்றவாளியும் எனது சகோதரனே!”

என்று பதிவுசெய்திருந்தார்.

சுய அறிவுடனும், தெளிவான சிந்தனையுடனும், பாரிய குற்றச் செயலில் ஈடுபடுகிறோம், இது இந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் என்று தெரிந்தே இவ்வாறான தவறுகள் இழைக்கப்படுகின்றன. (doctorinsta.com)

குற்றவாளி குற்றம் புரிந்ததற்கான மனோநிலை, உளவியல், சந்தர்ப்ப சூழ்நிலை என்பவற்றை கருத்தில்கொண்டு குற்றவாளியும் மனிதனே என்கின்ற  அடிப்படை மனுதாபிமானம் இவ்வாறான கருத்துக்களை பலரும் பதிவுசெய்யக் காரணமாக இருக்கிறது. அது தவறுமன்று, ஜீவகாருண்யமும், மனித நேயமும் பின்னிப்பிணைந்த எமது கலாச்சாரத்தில் இந்தக் கருத்து இன்றியமையாததே.

இருந்தும் ஆய்வுகள் கூறும் சில உண்மைகள் எமது இந்த கருத்துக்களுக்கு சவால் விடுப்பதை புறக்கணிக்க முடியாது. பொதுவாக பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர், அவாறான குற்றச்செயலில் ஈடுபடுவோர், சிறுவயதிலிருந்தே பாலியல் ரீதியான அல்லது வேறு உளவியல் தாக்கங்களை கடந்துவந்தோர், அவர்களது விடயத்தில் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கையாளவேண்டும் என்ற கருத்துக்கள் நிலவிவருகின்றன. உண்மையில் இவ்வாறான நிலைமைகள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவே! மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கென்று தனியான சுயவிபரமோ, தோற்றவடிவமோ கிடையாது.

ஒருவரைப் பார்த்தவுடன் இவர் பாலியல் குற்றம் புரியக்கூடியவர், இவர் அவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டாதவர் என்ற பாகுபாடுத்த முடியாது. பாலியல் குற்றவாளிகள் கல்வி, அந்தஸ்து, இன, மத, சமூக ரீதியில் பாகுபடு அற்றவர்கள். சாதாரணமாக வாழ்க்கையில் கடந்துசெல்கின்ற, எமது அன்றாட வாழ்வில் பங்குவகிக்கின்ற யார் வேண்டுமானாலும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடலாம். எனவே, சுய அறிவுடனும், தெளிவான சிந்தனையுடனும், பாரிய குற்றச் செயலில் ஈடுபடுகிறோம், இது இந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் என்று தெரிந்தே இவ்வாறான தவறுகள் இழைக்கப்படுகின்றன. இவர்களுக்கும் ஜீவகாருண்யம் வேண்டுமா?

பெண்களின் மற்றும் சிறுவர்களின் பாதுகாவலர்களின் கவனத்திற்கு

சிறுவயதில் பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் நாங்கள் வீட்டினுள் அடைபட்டு இருந்ததாக நினைவில்லை. பாழ் வளவுகளுக்குள்ளும், பக்கத்துவீட்டு முற்றத்திலும் கொல்லைப்புறத்திலும் பின்னேரப் பொழுதுகள் விளையாடிக் கழிந்த ஞாபகங்கள் அதிகமதிகம். அடுத்த வீட்டாரும் சொந்த மாமா, அண்ணா, சித்தப்பா, போன்றே எம்மோடு பழகினார்கள். அதற்கு அப்போதிருந்த சமூக அமைப்புக்களும் காரணம் எனலாம். இயல்பாகவே ஒருவருக்கொருவர் கொண்டிருந்த உறவும் பொறுப்புணர்வும் அப்போதைய சமூகக் கட்டமைப்புக்களை அவ்வாறு பேணியது.

உங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் தொடர்பாக அவர்கள் உங்களோடு பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு உரிய கருத்துச் சுதந்திரத்தைக் கொடுங்கள். உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் தேவைகள் தொடர்பாக பாராமுகமாக இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். (scmp.com)

ஆனால் இன்று ஆண் பிள்ளைகளையே வீட்டைவிட்டு வெளியே அனுப்பப் பயப்படுகின்ற நிலைமையில் எமது சகவாழ்வும், சமூக அமைப்பும் மாறியுள்ளது. மெய்நிகர் உலகில் தங்களுக்கென உருவாக்கிய முகங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எமக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த தங்கை அண்டைவீட்டில் கிடைப்பதில்லை. தங்களை நல்லவர்களாக, ஒழுக்கசீலர்களாக பதிவுசெய்து பாராட்டுப் பெறத்துடிக்கும் பலரது மறைவான முகம் இவ்வாறான ஈனச் செயல்களின்பால் ஈடுபடுவது பலபேர் அறியாதது.

இன்னுமின்னும் பூக்களையும், மொட்டுக்களையும் பிஞ்சுகளையும் ஓநாய்களின் வெறியாட்டத்திற்கு பலிகொடுக்க பெற்றோர்கள் தயவுசெய்து இடம்கொடுக்க விளையாதீர்கள். உங்கள் பிள்ளைகள் மீதான உங்கள் கண்காணிப்பு எப்போதும் தீவிரமாக இருக்கட்டும். துஷ்பிரயோகம் செய்வோரின் நடவடிக்கைகள் அவர்களுக்கு சந்தேகமளிக்காதவண்ணம் அவர்களின் வயதுக்கு பொருந்தாத சினிமாக்களையும், நிகழ்ச்சிகளையும், பழக்கவழக்கங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தாதீர்கள். உங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் தொடர்பாக அவர்கள் உங்களோடு பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு உரிய கருத்துச் சுதந்திரத்தைக் கொடுங்கள். உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் தேவைகள் தொடர்பாக பாராமுகமாக இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில், துஷ்பிரயோகம் செய்வோர் பிள்ளைகளை உளவியல்ரீதியில் மிக கெட்டித்தனமாக அணுகுகின்றனர். குழந்தைகளோடு அன்புமிக்கவர்களாகவும், அவர்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை வழங்கியும், அவர்களோடு விளையாடியும், பிள்ளைகள் அவர்களை வேற்றுமனிதர்களாக நினைத்து ஒதுக்காதவண்ணம் செயற்படுகின்றனர். அதன்மூலமாகவே அவர்களது இச்சைக்கேற்ப பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர். 10 இல் 8 பிள்ளைகளை அறிந்தோரும் நெருங்கிய உறவினர்களுமே துஷ்பிரயோகம் செய்கின்றனர். எனவே அவர்கள் நுழையக்கூடிய இடைவெளியை உங்களுக்கும் உங்கள்பில்லைகளுக்குமிடையில் ஏற்படுத்தாதிருப்பதே சாலச்சிறப்பு.

நல்லமுறையில் வாகனம் செலுத்தப் பழகி, சாரதி அனுபதிப் பத்திரம் வாங்கியும், வாகனம் ஓட்டப்போவது பொது வீதியிலன்றி வீட்டினுள் இல்லை. வீதி விதிமுறைகளுக்கு அமைய நாம் வாகனம் செலுத்திச் செல்லும்போதும், குறுக்கால் வந்துவிழும் குடிபோதைக் காரனால் நமக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இயலாதுதானே. அவ்வாறுதான் பிள்ளைகளை பாலூட்டி சீராட்டி வளர்த்து இவ்வாறான காட்டுமிராண்டிகளின் இச்சைக்கு பலியாக்க நேரிடுவதை தடுக்க முடிவதில்லைதான். ஆனாலும் அவதானமாக இருப்பது சாலப்பொருத்தமல்லவா?

பெண்கள் சாதாரண சமூக அமைப்பில் தனது உடலியல் பலவீனங்களோடும், இயற்கையின் அமைப்போடும் வாழ்வதற்கு எடுத்துக்கொகின்ற பிரயத்தனமும் வலியும் ஆண்களால் சொல்லிப் புரிந்துகொள்ள இயலாத, அவர்களின் கற்பனாசக்திக்கு அப்பாற்ப்பட்ட விடயங்கள். அவ்வாறு வாழ்வில் அன்றாடம் இயற்கையும் சமூகமும் விடுக்கும் சவால்களை வலியுடன் கடந்துவரும் பெண்ணை போகப்பொருளாக நினைத்து, இயற்கை கொடுத்த வலிமையைக்கொண்டு அவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆண்கள் இன்னுமா வாழத் தகுதியுடையவர்கள்?

Related Articles

Exit mobile version