முழு மனதோடு போராடும் GottaGoGama ஜீன் Aunty!

இலங்கையின் ஆட்சியாளர்களின் பூசல்கள் மற்றும் அவர்களது இயலாமைகள், முறைகேடான ஆட்சிமுறை போன்றனவற்றிக்கு எதிராகவும் அவற்றை மாற்றக் கோரியும் ஆரம்பமான மக்கள் போராட்டம் தற்போது 100 நாட்களையும் கடந்து நிற்கின்றது. காலி முகத்திடல் “கோட்டாகோ கமவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அமைதியான முறையில் போராட்ட அலையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போராட்ட களத்தில் ஏராளமான இளம் முகங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அம் முகங்களுடன் இளைய சமூகத்திற்கு இடையில்,  தமக்கு பின்னரான சந்ததியினருக்கு பிரகாசமான நாட்டையும், சிறந்த எதிர்காலத்தினையும் உருவாக்கி கொடுக்கும் முனைப்போடு போராடும் ஓர் வயதான சமூகத்தினரையும் காண முடியுமாக இருக்கின்றது. 

அந்தக் கூட்டத்தில் அடிக்கடி பார்க்கக்கூடிய குட்டையான தலைமுடியுடன் உலாவும் வயதான ஒருவர் அனைவரையும் ஈர்க்கின்றார். வயதான தோற்றம்  அச்சமில்லாத, தயக்கமில்லாத பேச்சு, அதேசமயம் தனது ஆவேசமான வெளிப்பாடுகளால் ஜீன் Aunty என்றே பிரபலமாக அழைக்கப்படுகின்றார். போராட்டக்களத்தில் இளைய சமூகத்தினரின் மத்தியில் தங்கியிருந்த இவர் தற்போது சமூகவலைத்தளங்களில் மாத்திரமின்றி ஏனைய ஊடகங்களிலும் அடிக்கடி பேசப்படும் ஓர் பெண்ணாக மாறியுள்ளார்.

ஜீன் ப்ரிம்ரோஸ் நதானியேல்ஸ் thewire.in/ Bhavya Dore

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்

கடந்த புதன்கிழமை (2022.07.20) அதிகாலையில் சில மணிநேரத்திற்குள் கோட்டாகோகமயில் வேக வேகமாக ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போராட்டகளத்தையும், ஜனாதிபதி செயலகத்தை சுற்றியும் பெரும்பாலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஜனாதிபதி செயலகத்தை போராட்டகாரர்களிடம் இருந்து கைப்பற்றும் பிரதான நோக்கத்துடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியதோடு பலர் கைதும் செய்யப்பட்டனர். 

ஆயுதம் ஏந்திய படையினரின் இந்த வகையான செயற்பாடுகளினால் “ஜீன் Aunty” (ஜீன் ப்ரிம்ரோஸ் நதானியேல்ஸ்) அதிருப்தியடைந்தார். இதனால் அன்றை தினம் காலை படையினர் மற்றும் அதிகாரிகளின் முன் கைகளை நீட்டி அச்சமின்றி, ஆவேசமாக தன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. பின்னர் அவர் போராட்ட களத்திற்கு செல்ல முயன்ற போது இராணுவத்தினர் அவரை தடுத்து அவரது வழியை அடைத்தனர். 

“போராட்டகாரர்கள் கைகளில் சிறிய கல் கூட இல்லை” “அப்பாவி சாமானியர்களை இப்படி கஷ்டப்படுத்தும் போது , சாமானியர்களாகிய எம்மால் கோபப்படாமல் இருக்க முடியுமா?” என்பதை அவர் மிக ஆவேசமான தொனியில் இராணுவ படையினரை நோக்கி விரல் நீட்டி உரக்க அறிவித்தார். அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் விரைந்து அதனை, படமாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

துணிச்சல் மிகு ஜீன் Aunty  / facebook.com

துணிச்சல் மிகுந்த ஜீன்

“முறையற்ற கொடுங்கோல் ஆட்சி முறையில் இருந்து நாட்டை விடுவித்து, நமது சுதந்திரத்தினை மீட்டெடுப்பதே இப் போராட்டத்தின் உள்ளார்ந்த நோக்கமாகும்” என்பதை அவர் அறிவித்தார். அதேசமயம் மிகுந்த ஆவேசத்துடன், உணர்ச்சி வசப்பட்ட ஜீன் புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக உஷ்ணமாக கருத்துகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக அவரது பேச்சில், கருத்துகளை வெளிப்படுத்திய விதத்தில் சில தகாத வார்த்தைகள் உள்ளடங்கியிருந்த போதிலும் கூட அப் பேச்சானது போராட்டத்திற்கு உயிர் கொடுக்கின்றது என்பதே பலரதும் கருத்து.

இளைய தலைமுறையில் 13 பேரப்பிள்ளைகள், அதற்கும் கீழ் இரு பிள்ளைகளின் செல்லப்பிராணிகளையும் பார்க்கும் அதிஷ்டசாலியான ஒரு பாட்டியான ஜீன் தனது மிகச் சரியான வயதினை ஊடகங்களுக்கு அறிவிக்காவிட்டாலும், தான் மிக வயதான குடிமகள் என்றே குறிப்பிடுகின்றார். தன்னைச் சுற்றியிருந்த துப்பாக்கிகள் அவரை அச்சப்படுத்தி எல்லைக்குள், வட்டத்திற்குள் வைத்துவிடவில்லை. புதிய தலைமையை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு தனது சுயத்தின்படி சுதந்திரமாக விமர்சித்தார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி  வலுவாக பிரபலமான கோட்டாகோகம போராட்டகளத்திற்கு  ஜீன்  தினமும் வருகை தருகின்றார்.  வத்தளையில் வசிக்கும் இவர் ரயில் பயணம் மூலமாக காலி முகத்திடலுக்கு வருவதோடு, அங்கே தங்கியும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றார்.  சில நேரங்களில் வயதான, பலவீனமான ஒருவர் எதிர்கொள்கின்ற சுற்றுச் சூழல் உட்பட்ட பல கடினமான காரணிகளையும் தாங்கிக் கொள்கின்றார்.  

“நான் நாட்டிக்காக போராடுகின்றேன். என்னை போன்றதோர் மூதாட்டி தன் நாட்டுக்காக போராடுவதற்கு தவறாமல் வர முடியும் என்றால், இளைய சமுதாயத்தினால் அதனை ஏன் செய்ய முடியாது ” என்ற கேள்வியை அவர் கேட்கின்றார். காலி முகத்திடல் போராட்ட பூமிக்கு அருகில் ஜூலை தொடக்கத்தில், போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது ஜீனும் அவ்விடத்தில் இருந்தார். இரண்டு தடவைகள் கண்ணீர் புகை தாக்குதலுக்கும் உள்ளானார். அந்த சந்தர்ப்பத்திலும் பின்னடையாது, துணிச்சலுடன் கண்ணீர் வழியும் கண்களோடு “நாங்கள் எங்கள் மனித உரிமைகளுக்காக போராடுகின்றோம்” “துன்பப்படும் ஏழைகள் சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்து விட்டார்கள் அதனால்தான் அதற்காகத்தான் நாம் போராட வேண்டும்” என்று போராட்டத்தை அர்த்தமுடையதாக்கும் வாக்கியங்களை அப்போதும் கூறினார்.

“எமது போராட்டம் சுதந்திர இலங்கைக்கானது”-  thewire.in/ Bhavya Dore

சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த பாத்திரம்

தற்போது ஜீன் ஆன்ட்டி சமூகலைதளங்களில் பிரபலமடைந்த ஒருவராக மாறியுள்ளார். இவரது சொல்லாடல், போராட்டகள உத்வேகமுடைய பேச்சு காரணமாக இளையோரின் ஆர்வமும், அன்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பலரும் அவருடைய துணிச்சலும், வலிமையும் பேசும் அதே சமயம் அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டுகின்றனர். “மனதளவில் நெஞ்சுரத்தோடு போராடும் தனித்துவம் மிக்க ஒரு பெண்” என்பதே போராட்டகளத்தில் முன்னணியில் இருப்பவர்கள் இந்த மூதாட்டி பற்றி கூறும் கருத்து. எது எப்படியாயினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதைப் போன்று தற்போதைய ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் தொடர்ந்தும் போராடுவதாக ஜீன் ஆன்ட்டி கூறுகின்றார்.

“நாளையும் நான் என் எதிர்ப்பை தெரிவிக்க கோட்டாகோகம வருவேன், போராட்டம் நடக்கும் வரையில் நானும் அதனோடு இணைந்து முன்னோக்கிச் செல்வேன்” என்று கூறும் ஜீன் ப்ரிம்ரோஸ் நதானியேல்ஸ் அதே நம்பிக்கையுடன், உறுதியுடன் போராடிக்கொண்டு இருக்கின்றார், இனியும் போராடுவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!

சிங்கள மொழி மூலம்: தினிந்து ஏக்கநாயக்க

தமிழில்: சந்திரன் புவனேஷ்

Related Articles

Exit mobile version