தமிழ்நாட்டில் இன்று சினிமா இல்லாத அரசியலும், அரசியல் இல்லாத சினிமாவும் இல்லையென்று சொல்லுமளவிற்கு இவையிரண்டும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்து காணப்படுகின்றன. இதற்கு காரணம் என்னவென்று அனைவருக்கும் தெரிந்தவையே நம் மக்களின் அளவு கடந்த சினிமா மோகம் மட்டுமே என்பதை சொல்லி புரிய தேவையில்லை. நடிகைகளுக்குக் கோயில் கட்டிக் கும்பிடும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் சினிமா என்னும் மோக வலையில் சிக்கிக்கிடக்கின்றனர். கோயில் கட்டுவது மட்டுமின்றி நடிகர்களுக்கு என்று மன்றங்களை அமைத்துச் செயல்படுவதில் இவர்கள் தமது நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
தனது விருப்பமான ஆத்மார்த்த நடிகர்களின் திரைப்படம் என்றால் அந்த முதல் காட்சியை ஒரு விழா போல் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மக்களின் மனதை அறிந்த அரசியல்வாதிகளும் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுவதை தான் இன்று நாம் காண்கிறோம்.
தமிழகத்தில் 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் முதல்வரானார். தொடர்ந்து அவர் 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வரை மூன்று முறை முதல்வர் பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1967ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பக்தவச்சலம் முதல்வராக இருந்தார். 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா தமிழக முதல்வராக இருந்தார். அண்ணா மறைந்ததை தொடர்ந்து நெடுஞ்செழியன் 7 நாட்கள் தற்காலிக முதல்வராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1969ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதல் 1976ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தார். இவர்கள் தமிழக முதல்வராக இருந்த வரை சினிமா நடிகர்கள் அல்லது நடிகைகள் தமிழக அரசியலில் பெரிய பதவிக்கு வரமுடியவில்லை. பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அண்ணா மற்றும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சினிமா உலகில் எம்ஜிஆர் பிரபல முன்னணி கதாநாயகனாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்கத்தின் கொள்கையை எம்ஜிஆர் ஏற்றுக்கொண்டார். அதனால் அண்ணா முதல்வராக இருந்தபோது எம்ஜிஆரை அரசியல் பிரசாரத்துக்கும், திராவிட கொள்கையை வளர்ப்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டார்.
எம்ஜிஆர் தானாக அரசியலுக்கு வந்து, அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். சினிமாவில் தான் பெற்ற புகழை அவர் அரசியலில் பயன்படுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆர் பெரும்பாலும் திரைப்படங்களில் ஏழைகளுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் உதவுவது போன்ற காட்சிகளில் நடித்து பிரபலமானதால், பொதுமக்களும் அரசியலில் அவரை ஏற்றுக் கொண்டனர். சினிமாவின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்று தமிழக முதல்வரானார். தொடர்ந்து 1977ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி முதல் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி மரணம் அடையும் வரை தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற ஜெயலலிதா மக்கள் செல்வாக்குடன் 1991ம் ஆண்டு தமிழக முதல்வரானார். எம்ஜிஆரின் ரசிகர்கள் தான் அதிமுகவுக்கு வாக்களித்தனர். தற்போது வரை எம்ஜிஆர் ரசிகர்கள் தான் அதிகளவில் அதிமுக தொண்டர்களாக உள்ளனர்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததைப் பார்த்து தமிழக திரைப்பட நடிகர்கள் அதிகப் பேர் தொடர்ச்சியாக தனிக்கட்சி ஆரம்பித்தனர். அதன்படி தமிழ் திரைப்பட கதாநாயகனாக இருந்த விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்தார். சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்தார். ஆனால் இவர்களால் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று மக்கள் செல்வாக்கை பெற முடியவில்லை. காரணம், இப்போது பொதுமக்கள் அதிகளவில் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தொலைப்பேசி, முகநூல், உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் தான் காரணம்.
ஒரு மேடையில் ஒரு நடிகர் பேசினார் என்றால் எதற்காக அவர் அப்படி பேசுகிறார், அவரின் உண்மையான சுபாவம் என்ன, சில வருடங்களுக்கு முன் மேடையில் எப்படி பேசினார், வாரிசு அரசியல் பற்றி பேசினார்கள் ஆனால் இவர்கள் கட்சி ஆரம்பித்து மனைவி, குழந்தைகள், உறவினர்களுக்கு பதவி கொடுத்து வைத்துள்ளனர் என்று அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து வாட்ஸ்ஆப் தகவலாக வைரலாக பரவி விடுகிறது. இதனால், எம்ஜிஆர், ஜெயலலிதா தவிர எந்த நடிகர்களுக்கும் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அப்படியே வெற்றிபெற்றாலும் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி சேர்ந்துதான் இவர்களால் ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது.
தமிழ் திரைப்படத்துறையின் பிரபல நடிகையாக இருந்து, எம்ஜிஆர் வாரிசு நான் தான் என கூறி அதிமுகவை கைப்பற்றி முதல்வரான ஜெயலலிதா தற்போது மறைந்து விட்டார். இதையடுத்து தமிழக அரசியலில் சினிமா மாயை உடைகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியல் பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “கேரளாவில் முன்னணி கதாநாயகர்களாக எத்தனையோ நடிகர், நடிகைகள் இருந்தாலும் எளிதில் அரசியலுக்குள் நுழைந்து மக்கள் செல்வாக்கை பெற முடியாது. இதுவரை ஒரு நடிகர் கூட கேரளாவில் முதல்வரானது கிடையாது. ஆந்திராவில் என்டிஆருக்கு பிறகு எந்த சினிமா நடிகர்களும் வர முடியவில்லை. கர்நாடகாவில் ரஜினிகாந்துக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக பேசப்பட்ட அம்பரீஷ் கூட அரசியல் களத்தில் மக்கள் செல்வாக்கை பெற முடியவில்லை. மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் எத்தனையோ முதல்வர்கள் இதுவரை ஆட்சிக்கு வந்தும் கூட ஒரு நடிகர், நடிகை கூட முதல்வராக வந்ததில்லை. ஹேமமாலினி, கோவிந்தா, சுனில்தத், சத்ருகன்சின்கா இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது. இதே சூழ்நிலைதான் தற்போது தமிழகத்திலும் உருவாகியுள்ளது. இனி சினிமா ஆதிக்கம் தமிழக அரசியலில் இருக்காது. அப்படியே ஆர்வக்கோளாறில் நடிகர்கள் அல்லது நடிகைகள் புதிய கட்சி ஆரம்பித்து தமிழக அரசியலுக்குள் நுழைய முயன்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார். ஆனால் இவர் கூறியவை முற்றிலும் மறுக்கமுடியாத ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை. நம் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வும் சினிமா என்னும் மோகம் குறைந்தாலே போதும் சினிமா பிரபலங்களின் செல்வாக்கும் தமிழக அரசியலில் குறைந்து விடும்.
தற்போதைய நிலையில் அதிகமாக மக்களிடையே வலம் வரும் செய்தி இன்று புகழ்பெற்ற நடிகர்களாக அனைவராலும் பார்க்கும் கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம் தான். அரசியலில் ஈடுபட்ட சினிமா நடிகர்களில் மறைந்த எம்.ஜி.ஆர். அளவிற்கு எவராலும் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை என்பதே ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றே. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்தார் எனினும் அந்த கட்சிக்கு தமிழக மக்களது ஆதரவு கிடைக்கவில்லை. சிலவேளை தமிழ்நாட்டின் தற்போதைய நிலை கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முக்கியமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியவில்லை. ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை அவர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அளவு ரசிகர்களை மட்டுமே கொண்டு அரசியலில் இறங்குவது புத்திசாலித்தனமல்ல. எம்.ஜி.ஆர். அரசியலில் சிறந்து விளங்கிய காரணம் அவர் மக்களின் ஆதரவை அதிகளவில் பெற்றிருந்தார். எனவே அவர் தமிழக மக்களால் இன்றளவும் பேசப்படுகிறார். சினிமா நடிகர்கள் தமது தொழிலுடன் தம்மை மேம்படுத்தி கொள்வதே சாலச் சிறந்தது. இதை விடுத்து அரசியலில் பிரவேசம் என்று மக்களை ஏன் குழப்பவேண்டும். இன்று வெளிப்படையாக மறுக்க முடியாத உண்மை சினிமா மோகம் குறைந்து அரசியலின் விழிப்புணர்வு இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தில் வேரூன்ற தொடங்கியுள்ளது.
Web Title: Influence of cinema in politics of tamilnadu
Featured Image Credit: feedfad, joslinv, adhithyaguruji, pravindesigns