தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அறிமுகம்

இன்றைக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம்பற்றிப் பேசாத ஆளில்லை. அதனை ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டாடுவோர் ஒருபுறம். ‘அட போங்கப்பா, அது ஒரு தோல்வியடைந்த சட்டம். வெறும் கண் துடைப்பு’ என்று சொல்வோர் மற்றொருபுறம். ‘தகவல் உரிமைச்சட்டம்னா என்னப்பா?’ என்று அப்பாவியாகக் கேட்போருக்காகத்தான் இந்த தொடரே!

இப்படி ஒரு சட்டம், இப்படி ஒரு சொல் புழக்கத்துக்கு வந்தபோது பலருக்கும் வியப்பு.. அரசாங்கத்தகவல்களை தனி மனிதனிடம் பகிர்ந்துகொள்வதற்காக ஒரு சட்டமா? அதுவும் நம்மூரிலா?-என்பதே அந்த வியப்புக்குறியின் பொருள்.

எதனால் வந்தது அந்தத் திகைப்பும் வியப்பும்?

இந்தியாவில் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் நம்மை வைத்திருந்த ‘அழகு’ அப்படிப்பட்டது. அரசாங்கம் என்பது ஏதோ அந்தரத்தில் மிதக்கிற அதிசயம் போலவும், அது நினைத்தால்தான் நம் மீது அருள் மழை பொழியும் எனவும், நாம் நினைத்தபோதெல்லாம் நம் கையருகே வராது எனவும் கற்பிக்கப்பட்டுவிட்டது.

அரசாங்கம், தனி மனிதனை என்னவெண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், செய்யலாம்; ஆனால் தனிமனிதன் அரசாங்கத்தைக்கேள்வி கேட்டால் அவன் கதி  அதோ கதிதான் என்பதே காலம்காலமாக உலகமெங்கும் நிலவிவரும் உண்மைநிலை.

அதனால்தான் ‘அரசாங்க முட்டை அம்மியை உடைக்கும்’ என்று தமிழகத்தில் நீண்ட நாட்களாக ஒரு பழமொழி நிலவிவருகிறது. இது சில நூறு ஆண்டுகளாக. ‘அரண்மனை விவகாரம் நமக்கெதுக்கு?’ என்று மக்கள் ஒதுங்கியிருந்தது சில ஆயிரம் ஆண்டுகளாக.

தங்களைப் புகழ்ந்துபாடசொல்லிக் கேட்டு சோம்பியபடி படுக்கையில் உருண்டு கொண்டிருந்தவர்கள்கூட புலவர்களின் புண்ணியத்தால் ‘மாவீர புஜ பராக்கிரம சக்ரவர்த்தி’ ஆயினர். (exoticindia.com)

ஆக, அரசும் மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருந்தாலும் பின்னிப் பிணைந்திருக்கவில்லை. ஒருவரைக்கேட்டு இன்னொருவர் இயங்கவில்லை.’அரசன் வாயிலிருந்து வருவதெல்லாம் சட்டம்’ என்று ஆனது. கொடுங்கோலர்களும் சோம்பேறி மன்னர்களும் காமுகர்களும் மத, இனவெறி பிடித்த மன்னர்களும் வாய்க்கு வந்ததையெல்லாம் சட்டமாக்கினர். “இதுவே எனது கட்டளை. கட்டளையே சாசனம்” என்று முழங்கினர். தங்களைப் புகழ்ந்துபாடசொல்லிக் கேட்டு சோம்பியபடி படுக்கையில் உருண்டு கொண்டிருந்தவர்கள்கூட புலவர்களின் புண்ணியத்தால் ‘மாவீர புஜ பராக்கிரம சக்ரவர்த்தி’ ஆயினர். அரண்மனை சகவாசம் கொண்டிருந்தவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். மத குருக்களும் சாமியார்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழர்களுக்கு எப்போதுமே பழம்பெருமை பேசுவதில் அலாதி ஆர்வம் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் மன்னன், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே நாங்கள் ஆண்ட பரம்பரை என்றெல்லாம் நேரிலும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பெருமை பொங்கிவழியப் பேசுவோரைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் உண்மையில் மன்னராட்சிக்காலம் என்பது எப்போதும் பொற்காலமாக இருந்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயம் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. வெறும் மண்ணாசையின் விளைவாக அப்பிராணிகளாக இருந்த மன்னர்களைப் போரில் தோற்கடித்து, அந்த மன்னர்களையும் அவர்தம் குடும்பத்துப் பெண்களையும் போர் வீரர்களையும் பொதுமக்களையும் சிறைப்பிடித்து, கொடுமைப்படுத்தி, பாலியல் ரீதியில் சுரண்டி, தோற்ற நாட்டின் சொத்துக்களைக் களவாடி, தோற்ற மன்னனின் தலையில் கல்லைச் சுமந்துவரச்செய்து, அந்தக் கல்லில் கோவில் கட்டுவது என்று மன்னர்கள் எதனைச் செய்தாலும் கேட்க அன்று நாதி இருந்திருக்காது.

மண்ணாசை, பொன்னாசை, தற்பெருமையைத் தவிர ஒரு போருக்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? எவரோ ஒரு மன்னரின் தனிப்பட்ட விருப்பமே மக்களின் விருப்பமாகத் திணிக்கப்பட்டிருக்கும். (pinimg.com)

அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுநில மன்னர்களும் இனக்குழுக்களின் தலைவர்களும் சமத்துவம் பேணியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் மன்னராட்சி என்பது ஒரு மனிதனுக்குக்கீழ் ஒரு நாடே அடிமையாக இருப்பதுதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் மக்கள் தேர்தல் நடத்தி, வாக்களித்து தங்கள் மன்னரைத் தேர்ந்தெடுத்ததாக நம்மிடம் வரலாறு இருக்கிறதா? நான் கண்டவரை அதுபோல ஏதுமில்லை.

படைபலம்மிக்க குழுத்தலைவன், இன்னொரு குழுவைத்தாக்கி, அக்குழுவின் சொத்துக்களை அபகரித்து, தோற்றவனை அடிமையாக்கித்தான் தனது பகுதியை விரிவுபடுத்தியிருக்கிறான். மண்ணாசை, பொன்னாசை, தற்பெருமையைத் தவிர ஒரு போருக்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? எவரோ ஒரு மன்னரின் தனிப்பட்ட விருப்பமே மக்களின் விருப்பமாகத் திணிக்கப்பட்டிருக்கும். அதைமீறுவோரும் கேள்வி கேட்போரும் கழுவில் ஏற்றப்பட்டிருப்பர். அரசனுக்குப் பிடிக்காத மதம், பிடிக்காத கொள்கையைப் பின்பற்றுவோரின் நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எத்தனை மன்னர்கள் விமர்சனங்களையும் எதிர்க்குரல்களையும் காதுகொடுத்துக் கேட்டிருப்பார்கள். ஒத்து ஊதுவோர் பேச்சைக்கேட்டு எதிர்க்குரல்களை நசுக்கியிருப்பார்கள். இந்த ஜனநாயகமற்ற தன்மைதான் உலகமெங்கும் சமூகங்களைக் கொந்தளிக்க வைத்தது.

”மாதம் மும்மாரி பெய்ததா?” என்று அமைச்சரைப்பார்த்து மன்னர்கள் கேள்வி கேட்பதாகப் பல்வேறு வரலாற்று நாடகங்களில் பார்க்கிறோம் இல்லையா! மிக எளிதாகக் கடந்துபோய்விடக்கூடிய வசனமா  அது? அரண்மனைக்கு வெளியே மழை பெய்ததா என்றுகூடத்தெரியாமல் ஒரு மன்னன் அரண்மனைக்க்குள் வாழ்ந்துகொண்டிருந்தால்  நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றிய அவனது புரிதல் எப்படி இருந்திருக்கும்?

மன்னராட்சி தூக்கி எறியப்பட்டாலும் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தைச் சுவைத்த அதிகார வர்க்கம், வேறு சாத்தியமுள்ள வழிகளில் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. (udaypai.in)

ஆக, ஒருபுறம் ஜனநாயகமற்ற தன்மை, இன்னொரு பக்கம் சொந்த மக்களே சுரண்டப்படுதல் என்று இரண்டு பக்கமும் மக்கள் மத்தள அடி வாங்கிக்கொண்டிருந்தனர். உலகமெங்கும் மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது அதன் விளைவுதான்.  பெயரளவுக்காவது ஜனநாயகம் என்கிற பெயர் உலகெங்கும் ஊசலாடிக்கொண்டிருப்பது ஒரு பெரிய பிரளயத்துக்குப் பின்புதான். இன்றும் மன்னர்கள், இளவரசர்கள் என்கிற பெயரில் பல்வேறு நாடுகளில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் எந்த அதிகாரமும் இல்லாமல். இது காலத்தின் கட்டாயம்.

மன்னராட்சி தூக்கி எறியப்பட்டாலும் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தைச் சுவைத்த அதிகார வர்க்கம், வேறு சாத்தியமுள்ள வழிகளில் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. யார் படிக்க வேண்டும், யார்  எந்த வேலைக்கு வர வேண்டும், யார் எந்தத் தொழிலைச் செய்யவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை வகுத்தது. இதனை எதிர்த்தும் காலம் காலமாகக் கலகக் குரல்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. படிக்கவும் வேலை/தொழில் செய்யவுமே அரண்மனைகளின் ஒப்புதலைப்பெற வேண்டியிருந்த பொதுமக்கள், ஆட்சி அதிகாரத்தைக் கேள்வி கேட்கவும், அதில் பங்கு கேட்கவும் துணிந்தால் விட்டுவிடுவார்களா? அதற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளும் நடக்கவே செய்தன. இன்றளவும் செய்யப்படுகின்றன.

ஆனால் ஜனநாயகத்தில் எவ்வளவோ ஓட்டைகள் இருப்பினும் அதில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன. அதன்விளைவாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்டோரின் கருத்துக்களுக்கும் எதிர்வினையாற்றவேண்டிய தேவை  அதிகார வர்க்கத்துக்கு ஏற்பட்டது. அப்படிக் கிடைத்த ஒரு வெற்றிதான் ‘அரசுத் தகவல்களில் வெளிப்படைத்தன்மையை’ வலியுறுத்தும் வகையிலான சட்டங்கள். எப்படி இந்திய விடுதலைப்போராட்டத்துக்கு ஓர் ஒற்றை நபரைக் காரணமாகச் சுட்டிக்காட்ட முடியாதோ, அதேபோல ‘தகவல் பெறும் உரிமைச் சட்டங்களுக்கும்’ ஓர் ஒற்றை ஹீரோவைக் காரணமாகக் காட்டிவிட முடியாது. இது ஒரு நெடும் போராட்டத்தின் விளைவு என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ளவேண்டும்.

(தொடரும்)

Related Articles

Exit mobile version