தேர்தலுக்கு பின், ஆட்சிக்கு முன் – ட்ரம்ப்

கடந்த நவம்பர் 8ம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலானது சர்வதேச அரங்கில் மிகப்பரபரப்பாக உற்றுநோக்கப்பட்ட தேர்தலாகும். காரணம், தேர்தலில் போட்டியிட்ட முக்கிய இரு வேட்பாளர்களும் சர்ச்சைக்குரியவர்களாக இருந்ததுடன், அவர்களின் வெற்றி வாய்ப்பு என்பது இறுதிநேரத்தில் மிக நெருங்கியதாகவுமிருந்தது. இறுதியில், யாருமே எதிர்பாராதவகையில், அமெரிக்கர்கள் தமது 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பை தெரிவு செய்திருந்தார்கள்.

(ichef.bbci.co.uk)

(ichef.bbci.co.uk)

டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் 8ம் திகதி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும், அவர் ஜனாதிபதி சேவைகளை உத்தியோகபூர்வமாக அமெரிக்க சம்பிரதாயங்களுக்குட்பட்டு ஜனவரி 20ம் திகதியே பொறுப்பேற்றுக் கொள்ளமுடியும். இந்தநிலையில், தேர்தலுக்கு பின்னும், ட்ரம்பின் ஆட்சிக்கு முன்னும் அவர் தொடர்பிலும் அவரது கொள்கை தொடர்பிலும், வேறுபட்ட கருத்துக்கள் அவரை ஆதரித்தோர் தரப்பிலிருந்தே தோன்றியிருப்பது, ட்ரம்பின் ஆட்சிக்காலத்தை மேலும் கடினநிலைக்குள்ளாக்கபோவது நிச்சயமாகியிருக்கிறது.

அமெரிக்கர்களின் மனநிலை என்ன ?

CBS செய்தியின் ஆய்வறிக்கையின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், ஒட்டுமொத்த அமெரிக்காவில் 34%மானவர்கள் ட்ரம்ப் மிகச்சிறந்த எதிர்கால ஜனாதிபதியாக அமெரிக்காவை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கிறார்கள். அதுபோல, 23%மானவர்கள் ட்ரம்பை ஒரு சராசரி அமெரிக்க ஜனாதிபதியாக நினைக்கிறார்கள். ஏனையவர்கள் அனைவருமே, ட்ரம்ப் சர்ச்சைக்குரிய ஜனாதிபதியாக இருப்பதுடன், ஐக்கிய அமெரிக்காவுக்குள் பிளவினை ஏற்படுத்தக்கூடியவராக கணக்கிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள பிரதான கட்சிகளைப் பொறுத்தவரை, ட்ரம்பின் எதிர்க்கட்சியாக அமையவுள்ள ஜனநாயக கட்சியின் 60%மானவர்கள், ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதியாக இருப்பார் என எதிர்பார்க்கிறார்கள். இதைவிடவும், ட்ரம்பின் கட்சியான குடியரசு கட்சியில் கூட, ஒவ்வரு பத்து பேரில் ஏழு பேர் மாத்திரமே ட்ரம்ப் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என நினைக்கிறார்கள்.

இதைவிடவும், ஆச்சரியமாக ஆட்சியிலிருந்து விலகிச்செல்லும் பராக் ஒபாமாவின் ஆட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக, ஒபாமாவின் இறுதி நான்காண்டு ஆட்சிக்காலத்தில் இறுதி ஆண்டில் 56%மான அமெரிக்கர், ஒபாமாவின் ஆட்சியை சிறந்த ஆட்சி என அங்கீகரித்து இருக்கிறார்கள்.

இது, அமெரிக்கர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கை உணர்த்துவதுடன், ஒபாமாவின் வழிசார்ந்ததாக ட்ரம்பின் ஆட்சி அமையவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அமைந்துள்ளது.

ட்ரம்பின் மந்திரி சபை (Trump’s Cabinet)

அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவாகி, ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் காலத்தில் பொருத்தமான மந்திரிசபையை ஒவ்வரு ஜனாதிபதியும் பெயரிடுவது வழக்கமான கலாச்சாரமாக உள்ளது. அவ்வகையில், டொனால்ட் ட்ரம்ப் பெயரிட்ட மந்திரிசபை தொடர்பிலும், அமெரிக்கர்கள் வேறுபட்ட கருத்தினை கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, ட்ரம்பின் மந்திரிசபையினை 41%மானவர்கள் ஆதரிக்கும் அதேசமயம், 41%மானவர்கள் எதிர்க்கவும் செய்கிறார்கள். ஆனால், பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபோது அவரது தேர்வினை ஒவ்வரு பத்து அமெரிக்கர்களுக்கும் ஏழு பேர் அங்கீகரித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ட்ரம்பின் மந்திரி சபையானது சர்ச்சைக்குரிய தேர்வுகளுடனேயே தொடக்கி வைக்கப்பட இருக்கிறது. குறிப்பாக , எரிசக்தி செயலாளராக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ரிக் பேரியின் தெரிவு இதற்க்கு சிறந்த உதாரணமாகும். அடிப்படையில், அமெரிக்காவின் எரிசக்தி, கல்வி, மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை உடைய இவர், எரிசக்தி தொடர்பிலான எத்தகைய பின்புலத்தினையோ அல்லது கல்வியறிவினையோ கொண்டிராத அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். ட்ரம்பின் ஜனாதிபதி பிரசாரத்தின்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் கலாநிலை மாற்றம் என்கிற பெயரில், எரிசக்தி சார்ந்த அமெரிக்க வணிகத்துக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டியதுடன், ஒரு நிலையில் காலநிலை மாற்றம் என்பதே ஒரு மாயையான கட்டுகதை என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.இவரைப்போல, ட்ரம்பின் மந்திரி சபையும் சர்ச்சைகளை கொண்டதாகவே எதிர்காலத்தில் அமையப்போகிறதென்பது நிதர்சனமான உண்மையாகும்.

எதிர்கால அமெரிக்க வணிக நலன்கள் (Business Interests)

தேர்தலுக்கு பின்னதாக, சமூகவலைத்தளங்களில் ட்ரம்ப், பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடர்பிலும், நாடுகளினது செயற்பாடுகள் தொடர்பிலும் விமர்சனமிகுந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது, அமெரிக்கர்கள் மத்தியிலும், சர்வதேச விமர்சகர்கள் மத்தியிலும் வேறுபட்ட கருத்துக்களை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக CBS அறிக்கையின் பிரகாரம், அமெரிக்காவின் 60%மானவர்கள், டொனால்ட் ட்ரம்ப் தேவையற்றவகையில் சமூகவலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். அதுபோல, அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின், அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் உள்ள உறவுநிலையில் சுமுகநிலை நிலவாது என கவலை கொண்டுள்ளனர். இது எதிர்கால அமெரிக்காவின் சர்வதேச அதிகாரதன்மையை கேள்விக்குறியாக்குவதாக அமைந்துள்ளது.

ட்ரம்பின் வணிகமும், சர்ச்சைகளும்

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தொடங்கியது முதலே சர்சைகளுக்கு பஞ்ச்சமிருந்ததில்லை. குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலின் இறுதிநேரத்தில் ட்ரம்ப் தனது வணிகம் சார்ந்த வரி அறிக்கைகளை வெளியிடாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தேர்தலுக்குபின்பும், அமெரிக்கர்கள் மனதில் அது நீறுபூத்த நெருப்பாக உள்ளது என்பதை CBS அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது. அறிக்கையின் பிரகாரம், அமெரிக்காவிலுள்ள 60%மானவர்கள் ஆட்சியை பொறுப்பேற்க முன்பு, ட்ரம்ப் தனது வணிகம் சார்ந்த வரி அறிக்கைகளை வெளியிடவேண்டும் என விரும்புகிறார்கள். கூடவே, 50%க்கும் மேற்பட்டவர்கள், ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும்போது, அவரது தொழில்கள் அனைத்தையுமே அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு, அமெரிக்காவின் ஜனாதிபதியாக மட்டுமே இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள்.

(heavyeditorial.files.wordpress.com)

(heavyeditorial.files.wordpress.com)

அதேபோல, ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை பயன்படுத்தி தனது சொந்த நிறுவனங்களுக்கே ட்ரம்ப் சுமார் 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்து கொடுத்துள்ளார் என்கிற சர்ச்சை பல அமெரிக்கர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 18மாதகால தேர்தல் பயணத்தில். தனது சொந்த விமானசேவைக்கு $8.7 மில்லியனையும், ட்ரம்ப் கோபுரத்திற்கு சுமார் $2.2 மில்லியனையும், ட்ரம்பின் கோல்ப் நிறுவனத்திற்கு $1.4 மில்லியனையும் செலுத்தி இருக்கிறார். இவற்றுக்கு மேலாக இவரது மகனின் மதுபான நிறுவனத்திற்கும் சுமார் $32,196 அமெரிக்க டொலர்களை செலுத்தி இருக்கிறார். இவை அனைத்துமே, சட்டரீதியாக செலுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலேயே தனது குடும்ப தொழிலை ட்ரம்ப் முன்னிறுத்தியவர், தேர்தலுக்குபின்பும் இதனைத்தான் தொடர்வார் என்கிற ஜனநாயக கட்சியின் எதிர்ப்புக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய செயல்பாடுகள் அனைத்துமே, அமெரிக்கர்கள் மத்தியில் ட்ரம்புக்கு, ஆதரவுக்கு சமனான எதிர்ப்புநிலையினையே தோற்றுவித்து இருக்கிறது. இந்த நிலையில், ஜக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்போது, எப்படி ஆச்சரியகரமாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றியினை பெற்றுக்கொண்டாரோ, அதுபோலவே, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தபின்பும், ஏதேனும் ஆச்சரியகரமான முறையில் மக்கள் மனதை வெல்லத்தக்கவகையில் அவரது ஆட்சி அமைந்தால் மட்டுமே, எதிர்வரும் காலம் அமெரிக்காவுக்கும் உலக அரசியலுக்கும் நம்பிக்கை தருவதாக அமையும். இல்லையேல், ட்ரம்பின் தெரிவை போல பல அனர்த்தங்களை சந்திக்க தயாரகி கொள்ளவேண்டியிருக்கும்.

Related Articles

Exit mobile version