“இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல”

அகன்று விரிந்த அகிலத்திலே அளவற்ற உயிரினங்கள் ஆங்காங்கே தப்பிப்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. “தப்பிப் பிழைத்து” என மேற்கோளிடக் காரணம் இயற்கையோ, இறைவனோ அல்ல….இறைவனின் படைப்பில் உயர் பிறப்பை பெற்று நாசகார நடத்தைகளால் இன்று இழிபிறவிகளாகிப் போன நம் மானிட சமூகத்திடமிருந்து ஒவ்வோர் உயிரும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றது.நாம் அனுபவிக்க வேண்டிய அழகிய பூவுலகை அசாதாரண செயற்பாடுகளால் அலங்கோலமாக்கி இன்று அவதிப்படுகிறோம்.

மனிதனின் மதிமங்கிய செயற்பாடுகளின் பிரதிபலனாகவும் சொற்பளவிலான இயற்கையின் மாற்றங்களாலும் இற்றை வரைக்கும் 147,500 உயிரினங்கள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் அருகிவரும் உயிரினங்களாக சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் 41,000 இற்கு மேற்பட்ட உயிரினங்கள் அதிகளவிலான ஆபத்துக்குள்ளான உயிரினங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தனை உயிரினங்களை தன் சுயநலத்தால் மனித குலம் புதைகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இவற்றுள் நாம் அதீத கவனம் செலுத்தவிருக்கும் உயிரினம் மான்களாகும். உலகை பொறுத்த வரையில் 43 வகையான மானினங்கள் உயிர்வாழ்கின்ற அதேவேளை எமது இலங்கையை நோக்கும் போது கடமான் (Sambar Deer) , புள்ளிமான் (Spotted Deer), செம்மான் (Barking Deer) , பன்றி மான் (Hog Deer) ஆகிய நான்கு வகையான மானினங்கள் காணப்படுகின்றன. அதிலும் பன்றி மான் எனப்படுகின்ற Hog Deer இலங்கையில் அருகிவரும் உயிரினங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. மானினங்களின் அழிவுக்கு பிரதான காரணம் அவை உணவுக்காக வேட்டையாடப்படுதலேயாகும்.

இந்த மானினங்களுள் நாம் பரவலாக காணக்கூடியதாக இருப்பது புள்ளிமான் வகையினையே ஆகும். அதிலும் குறிப்பாக இலங்கையின் கிழக்கு கரையோரத்திலே திருகோணமலையை எடுத்துக் கொண்டால் வேறெங்கும் காண இயலாதவகையில் இந்த புள்ளிமான்கள் மனிதநடமாட்டமுள்ள நகர்ப்புற வீதிகளில் துள்ளி விளையாடும் அழகினை காணலாம். அழகின் பின்னே ஆபத்து இருக்கும் என்பது உண்மை போலும், இவ்வாறு நகர்ப்புறங்களில் நடமாடித் திரியும் மான்களின் உணவுகளோடு மனிதன் கவனயீனமாக வெளியேற்றும் பொலித்தீன், நெகிழி (பிளாஸ்ரிக்) கழிவுகள் உணவுக் கால்வாய்த் தொகுதியில் தேங்கி அவற்றை மரணவாயிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

“இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல”. மற்றைய உயிர்களும் வாழ்வதற்காக படைக்கப்பட்டவையே என்ற எண்ணம் எமது மனங்களில் எழ வேண்டும். மதங்களாயினும் மனிதமாயினும் போதிப்பது ஜீவகாருண்யம் எனும் நல்லறத்தையே. ஆனால் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்” என்றாற் போல் நமது நடவடிக்கைகள் அமைவது முறையல்லவே. தன்னுயிர் காப்பது போல் பிற உயிர்களையும் எண்ணி அதற்கு ஏற்றாற் போல் ஒழுகி வாழ்கின்ற வாழ்வை வனப்பானதாக்கி வருகின்ற சந்ததிக்கும் வாழ்வதற்கு வழி கொடுப்போம்….

 

Related Articles

Exit mobile version