இலாபம் உழைக்கும் இயந்திர வணிகங்கள்

வணிகங்களை ஆரம்பிக்க விரும்பும் அனைவருக்குமே இலாபம் என்பதே முதன்மையான நோக்கமாக இருக்கும். அவ்வாறு முதன்மை நோக்கமாக உள்ள இலாபம் சரியான முறைமையின் ஊடாக ஈட்டப்படுகிறதா? அவை சரியான முறையில் சமூகத்துடன் பகிரப்படுகிறதா? என்கிற கேள்விகளை முன்வைப்போமாயின் அதற்கான பதில்கள் நிச்சயம் தொக்கியே நிற்கும்.

இன்றைய நிலையில் பலரும் வணிகங்களை பணம் தரும் இயந்திரங்களாக மாத்திரமே பார்க்கிறார்கள் தவிர, வணிகங்களை சமூகத்திற்கு வலுசேர்க்கும் ஒரு அங்கமாக பார்ப்பதில்லை. இந்த நிலைதான், 2008ம் ஆண்டு சர்வதேச ரீதியில் பொருளாதார ரீதியான நெருக்கடி நிலை உருவானபோது பலரையும் பாதிப்படையச் செய்திருந்தது. அதாவது, தனித்து இலாப நோக்கங்களை மாத்திரமே அடிப்படையாக கொண்டு நடாத்தப்பட்ட தொடர்ச்சியான வணிக தொழிற்பாடுகளின் விளைவாக, உலக மக்களே எதிர்கொள்ளவேண்டிய பொருளாதார சிக்கல் நிலையினை தோற்றுவித்திருந்தது.

தனித்து இலாப நோக்கங்களை மாத்திரமே அடிப்படையாக கொண்டு நடாத்தப்பட்ட தொடர்ச்சியான வணிக தொழிற்பாடுகளின் விளைவாக, பொருளாதார சிக்கல் நிலை தோன்றியது (turner.com)

வணிகங்களின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தமக்கான வணிக கோட்பாடுகளை (Business Guidelines) முறையாக பின்பற்றாமல் தொழிற்பட்டதன் விளைவாக இந்தநிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணமே, நிறுவன இயக்குனர்கள், நிர்வாகிகள் என அனைவருமே வணிகத்துடன் அக்கறையுடய தரப்பினருக்காக மாத்திரம் தொழிற்படாமல், வணிகத்தின் பங்குதாரர்களுக்காகவும், இலாபத்தை உச்சப்படுத்தவும் தொழிற்படுவதே ஆகும்.

இதன் காரணமாகத்தான், அண்மைய காலங்களில் அரசும் சரி, வணிகத்தில் தாக்கத்தை செலுத்தகூடிய குழுக்களும் (Interested Groups) சரி வணிகங்களை முறையான கூட்டுநிறுவன ஆட்சிமுறையை (Coporate Governance) அமுல்படுத்த உந்துதல் தருகின்றன. இதன்விளைவாக, அண்மையகாலத்தில் தொழில்முறை கற்கைநெறிகளிலும் கூட கூட்டு நிறுவன ஆட்சிமுறைமை தொடர்பில் அதிகளவிலான விடயங்கள் உள்ளடக்கப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்லாது, சில பல்தேசிய நிறுவனங்களும் கூட, பங்குதாரர்களின் நலன் என்கிற குறுகிய வடிவத்திலிருந்து வணிகம் சார்ந்த தரப்பினர்களான வாடிக்கையாளர், ஊழியர், விநியோகஸ்தர், மற்றும் நிறுவனம் சார்ந்த சமூகத்தினர் போன்ற அக்கறையுடைய தரப்பினரையும் தமது நோக்கங்களை வகுக்கும்போது கவனத்தில் கொள்கின்றனர்.

தற்போதைய நிலையில், இத்தகைய பல்தேசிய நிறுவனங்கள் தமது அக்கறையுடைய தரப்பினருக்கு அல்லது பங்குதாரர்களுக்கு, நிறுவனத்தின் நோக்கம் என்ன? நிறுவனத்தின் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் என்ன? நிறுவனத்தின் சமூக பொறுப்பு மற்றும் அடையப்படவேண்டிய இலக்குகள் என்ன ? என்பது தொடர்பிலான விளக்கங்களை வழங்க முன்நிற்பதுடன், பங்குதாரர்களிடமிருந்து தமது பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து புதிய நுட்பங்களை கற்றுகொள்ளவும் தவறுவதில்லை.

சில பல்தேசிய நிறுவனங்களும் கூட, பங்குதாரர்களின் நலன் என்கிற குறுகிய வடிவத்திலிருந்து வணிகம் சார்ந்த தரப்பினர்களான வாடிக்கையாளர், ஊழியர், விநியோகஸ்தர், மற்றும் நிறுவனம் சார்ந்த சமூகத்தினர் போன்ற அக்கறையுடைய தரப்பினரையும் தமது நோக்கங்களை வகுக்கும்போது கவனத்தில் கொள்கின்றனர். (romanpichler.com)

இத்தகைய தெளிவுபடுத்தல் செயற்பாடுகளுக்கு நிறுவனம் தனது இலாபத்தின் ஒருபகுதியை செலவிட வேண்டியதாக உள்ளபோதிலும், இன்றையநிலையில் அவை ஒரு மறைமுகமான முதலீடாகவே அமைகிறது. காரணம், மக்களுக்கான தெளிவுபடுத்தல்கள் நிறுவனம் தொடர்பிலான பூரண அறிவையும், அதன் பொருட்கள் தொடர்பிலான எண்ணவோட்டத்தையும் மக்களுக்கு மேலும் வழங்குகிறது. இதனால், மக்களிடையே குறித்த வணிகங்கள் மீதும் அதன் சேவைகள் மீதும் ஒரு நம்பிக்கை ஏற்பட வழியேற்படுகிறது.

பங்காளர் பெறுதியை உருவாக்குதல் (Shareholder Value)

வணிகங்கள் தமது உரிமையாளர்களான பங்காளர்களின் (Shareholder) பெறுதியை உருவாக்குதல் என்பது தனித்து அவர்களின் இலாப நலனை உச்சப்படுத்துவதாக ஆகாது. அப்படி இடம்பெறுமாயின், அது பங்காளர்களினதும், பங்குதாரர்களினதும் (Stakeholder) நலனை நீண்டகாலத்தில் ஆபத்துக்குட்படுத்துவதாக அமையும்.

திறன்வாய்ந்த இயக்குனர்களும் (Directors) , முகாமையாளர்களும் (Managers) எத்தகைய நலனுக்காகவும் இவ்வாறான குறுகியகால நன்மை பயக்ககூடிய பங்காளர் பெறுதியை மாத்திரம் உருவாக்க நினைக்கமாட்டார்கள். மாறாக, பங்காளர் பெறுதியை எவ்விதமான குறுக்கு வழி கணக்கீட்டு முறைமைகளும் அற்றவகையில், பங்குதாரர்களுக்கும் நன்மை தரக்கூடியதாக பங்காளர்களின் பெறுதியை அதிகரிக்கவே செய்வார்கள்.

பங்குதாரர்கள் எதிர்பார்ப்பை சமானாக நிறைவேற்றல் (Stakeholder Interest)

முன்னைய காலத்தில் நிறுவனங்களில் முதன்மை நோக்கமாக பங்காளர்களுக்கு இலாபம் உழைத்து கொடுப்பதாகவே இருந்தது. ஆனாலும், அண்மையகாலத்தில் பங்காளருக்கு மேலதிகமாக பங்குதாரர்களையும் இணைத்துகொண்டு வளர்ச்சியடைவதே நிறுவனங்கள் நிலைத்து நிற்பதற்கு ஆதாராமாக உள்ளது.

வணிகங்கள் தமது உரிமையாளர்களான பங்காளர்களின் (Shareholder) பெறுதியை உருவாக்குதல் என்பது தனித்து அவர்களின் இலாப நலனை உச்சப்படுத்துவதாக ஆகாது (cdn.shutterstock.com)

குறிப்பாக, நிறுவனங்கள் உரிமையாளருக்கு தனியே உழைத்து கொடுப்பதை விட நிறுவனத்தின் இலாபத்தில் தன்னில் அக்கறையுடைய தரப்பினருக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்துகொடுப்பதன் மூலமாக, ஒன்றிணைந்து வளர்ச்சியடைதல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு, நிறுவனம் தனக்காக பணிபுரியும் ஊழியர்களுக்காக மேலதிக ஊதியம் வழங்கல், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தல், வாடிக்கையாளருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மேலதிகமான சேவைகளை வழங்குதல் என அனைவரது எதிர்பார்ப்புகளையும் சமனாக நிறைவேற்றவேண்டியதாக உள்ளது. இல்லையெனில், போட்டிமிகுந்த இன்றைய நிலையில் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு சந்தையில் வெற்றி பெறுவது கடினமாகும்.

இன்றைய காலகட்டத்தில் உரிமையாளர் ஒட்டுமொத்த இலாபத்தையும் தனித்தே அனுபவிப்பது என்பது சாத்தியமற்றதாகும். அதிலும், தற்போது வணிகங்கள் மத்தியில் பிரபல்யமாகி வருகின்ற கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate Social Responsebility) எனும் எண்ணக்கருவுக்கு அமைய வணிகங்கள் தம்மை சமூகத்தின் ஒரு அங்கமாக அடையாளப்படுத்திகொள்ள பாடுபடுகின்றன. இவற்றுக்கு எல்லாம், தனது இலாபத்தில் கணிசமான தொகையினை விட்டுகொடுக்காதவிடத்து சந்தையில் நிலைத்து நிற்க முடியாதநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், தற்போது வணிகங்கள் இலாபத்தை மாத்திரம் உழைக்கும் இயந்திரங்களாக மாத்திரம் தொழிற்படுவதில்லை.

பொருத்தமானவர்களில் முதலீடு செய்தல்

இலாபம் உழைக்கும் இயந்திரங்களாக வணிகங்கள் இருக்கவேண்டும் என்றால், உழைக்கும் இலாபத்தையும் மீண்டும் அந்த இயந்திரத்தின் உதிரிப்பாகங்களான பொருத்தமானவர்கள் மீது முதலீடு செய்யவேண்டியது அவசியமாகும். இல்லையெனில், ஒரு குறித்த காலத்திற்கு பின்பு நிறுவனம் முழுமையாகவே சந்தையிலிருந்து வெளியேற வேண்டியநிலை வந்துவிடும்.

வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பல்வேறு தரப்பினர் மீதும் பேண்தகுநிலையை கொண்டிருப்பதற்காக நிறுவனங்கள் முதலீடுகளை செய்வது அவசியமாகிறது. (incimages.com)

நிறுவனங்கள் பொருத்தமான ஊழியர்கள் மீது முதலீடு செய்வது அவசியமாக இருக்கிறது. பொதுவாக, திறமையானவர்களை சிறந்த ஊதியத்தொகையை வழங்குவதன் மூலமோ அல்லது ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பொருத்தமான பயிற்சிகளை முதலீடு செய்வதன் மூலமாகவோ மிக நீண்டகாலத்துக்கு தனக்கு தேவையான திறனானவர்களை தக்கவைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதுபோலவே, வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பல்வேறு தரப்பினர் மீதும் பேண்தகுநிலையை கொண்டிருப்பதற்காக நிறுவனங்கள் முதலீடுகளை செய்வது அவசியமாகிறது.

மாறிவரும் வணிகசந்தைக்கு ஏற்ப வணிகங்களும் தமது செயல்பாடுகளை காலத்துக்கு காலம் தமது மூலோபாயங்கள் மூலம் மாற்றி தன்னை புதுப்பித்து கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கு, வணிகங்கள் தனது இலாபத்தில் விட்டுகொடுப்புக்களை செய்தே ஆகவேண்டும். எனவேதான், தற்போதைய காலகட்டத்தில் வணிகங்கள் பெரும்பாலும் பங்காளர் சார்ந்த மூலோபாயங்களை வகுப்பதை தவிர்த்து, பங்குதாரர்கள் சார்ந்த மூலோபாயங்களை வகுத்து வருகின்றன. இதன்மூலம், வணிகங்கள் தங்கள் பைகளை இலாபம் மூலமாக நிரப்பிகொள்வதனை பார்க்கிலும், கூட்டாண்மை சமூக பொறுப்பு, பேண்தகு அபிவிருத்தி என்பன மூலமாக சமூகத்திலிருந்து தாம் எடுத்துகொள்வதற்கு ஈடாக ஏதேனும் சிலவற்றறை மீளவும் சமூகத்திற்கு வழங்க தொடங்கி இருக்கின்றன. இவற்றையும் கூட, இன்றைய வணிகங்கள் இலாப நோக்கம் கருதியும், தனது நீட்சி தன்மைக்காகவுமே செய்கின்றன என்கிற சர்ச்சை உள்ளது. ஆனாலும், ஒட்டுமொத்த இலாப பங்கினையும் ஒருவரோ அல்லது சில பங்காளர்கள் மாத்திரமோ அனுபவிக்க இயலாது என்பதே யதார்த்தமாக உள்ளது

Related Articles

Exit mobile version