இலங்கையின் 1978 ஆம் ஆண்டு வரையப்பட்ட அரசியல் அமைப்பானது, அடிப்படை உரிமைகள், அரச கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் வழிகாட்டிக் கோட்பாடுகளைச் சுமந்துகொண்டு, இந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருந்துவருகின்றது. இந்த அரசியலமைப்பின் கீழ் பல்வேறு உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள உரிமைகள், அடிப்படை உரிமைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அவற்றின் மூலம் தனி மனிதனினதும் சமூகத்தினதும் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும், அதில் காணப்படக்கூடிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், தற்போது புதிய அரசியலமைப்பொன்றை வரையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நீங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும்.
புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒரு இன்றியமையாத உரிமை பற்றியே இன்று இந்த விவரணத்தில் நோக்குகின்றோம்.
இலங்கை அரசியலமைப்பில் உயிர்வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா?
எமது தற்போதைய அரசியலமைப்பில் உயிர் வாழும் உரிமை வெளிப்படையாக வழங்கப்படவில்லை. உயிர் வாழும் உரிமையானது அரசியலமைப்பின் கீழ், உட்கிடையாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் நீதிமன்றமானது, காலத்திற்குக்காலம் தம் முன் வரும் வழக்குகளுக்கான தீரப்புக்களினூடாக, இலங்கைப் பிரசைகளுக்கு உயிர் வாழும் உரிமையானது அரசியலமைப்பின் கீழ், உட்கிடையாக வழங்கப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்தி வருகின்றது.
தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் உயிர்வாழும் உரிமையுடன் தொடர்பான ஏற்பாடுகள்
இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ், உயிர் வாழும் உரிமையானது வெளிப்படையாக வழங்கப்படவில்லை. இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 13 (4) இல் “சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் கட்டளையிடப்பட்டாலன்றி, எவரும் தண்டனைக்குட்படுத்தப்படக்கூடாது” என்ற விதி முன்வைக்கப்படுகின்றது. இது இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 21 இல் விரிவான அர்த்தத்தில் சுதந்திரம் என்ற அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அரசியமைப்பின உறுப்புரை 11 ஆனது, எவரும் சித்திரவதைக்குட்படுத்தப்படுதல் இழிவான, தரக்குறைவான நடத்தைக்குட்படுத்தப்படுதல், தண்டனையளிக்கப்படுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அரசியலமைப்பு உருவாக்குனர்கள் இவ்வுறுப்புரையில் உயிர் வாழும் உரிமையையே உள்வாங்கி உட்கிடையாக குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த உரிமையின் முக்கிய அம்சமாக இழிவான நடாத்துகை தடுக்கப்படுவதனூடாக கௌரவத்துடனான வாழ்வு உறுதிப்படுத்தப்படுகின்றது. உறுப்புரை 11 ஆனது, உறுதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு பிரிவாகும். இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் தேசிய பாதுகாப்பு கருதியேனும் மீறப்பட முடியாது.
உயிர்வாழும் உரிமையை நீதிமன்றம் எவ்வாறு பாதுகாக்கின்றது?
நீதிமன்றம் தம் முன் கொண்டுவரப்படும் அடிப்படை உரிமைகளுடன் தொடர்பான வழக்குகளுக்கு தகுந்த தீர்ப்பினை வழங்குவதற்காக, அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அவ்வுரிமைகளுடன் தொடர்பான உறுப்புரைகளை பொருள்கோடலுக்கு உட்படுத்தும். அத்தகைய சந்தர்ப்பத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் நீதிபதிகள் ஒவ்வொருவரும், நியாயமான காரணங்களை முன்வைப்பர். இதனூடாக வழங்கப்படக்கூடிய நீதிமுறை தீர்ப்புக்கள் மூலம், உயிர் வாழும் உரிமையானது அரசியலமைப்பின் கீழ் உட்கிடையாக வழங்கப்பட்டுள்ளது என்ற விடயம் உறுதிப்படுத்தப்படும். இத்தகைய நீதிமுறை நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை வழக்குகளினூடாக அவதானிக்கலாம்.
மனித உரிமைகளுடன் தொடர்பான சர்வதேச ஏற்பாடுகள்
மனித உரிமைகளுடன் தொடர்பான சர்வதேச ரீதியான ஏற்பாடுகளை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.
- அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration For Human Rights)
அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் – Universal Deceleration For Human Rights [UDHR] உலகளாவிய ரீதியாக மனித உரிமைகளைப் பிரகடனப்படுத்தி, மனிதன் முழுமையான கௌரவமான வாழ்வை வாழ்வதை உறுதிப்படுத்துகின்றது. இதன் உறுப்புரை 03 வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் சகலரும் உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
- குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கட்டுறுத்து (International Covenant For Civil And Political Rights)
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கட்டுறுத்து -International Covenants For Civil And Political Rights [ICCPR] இலும் உயிர் வாழும் உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுறுத்தின் உறுப்புரை 06 இல் வாழ்வதற்கும் சுதந்திரத்திற்கும், சகலரும் உரித்துடையவர்கள். சட்டத்தால் இவ்வுரிமை பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் மனிதனுக்குரிய உயிர் வாழும் உரிமை கட்டுறுத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சர்வதேச ஏற்பாடுகளிலும் மனிதனின் உயிர்வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பில் உயிர்வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படுவதன் அவசியம்
உயிர் வாழும் உரிமையானது பௌதீக ரீதியான இருத்தலை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, உயிர் வாழ்வதற்கான சகல தடைகளையும் விட்டு பாதுகாப்பு அளிக்கப்படுதலையே குறிக்கின்றது.
உயிர் வாழும் உரிமை என்பது முழுமையான கௌரவமான வாழ்வை வாழ்தலை குறிக்கின்றது. இது மட்டுப்படுத்தப்பட முடியாத அர்த்தத்தினை வழங்குகின்றது. உயிர் என்பதற்கான அர்த்தம் குறுகிய விதத்தில் நோக்கப்பட முடியாது. இது சகல பிரஜைகளுக்கும், பிரஜை அல்லாதோருக்கும் பொதுவானது. இதன் மூலம் ஒருவர் சிறைவைத்தல் மூலம் மற்றொருவரை பௌதீக ரீதியாக தடுத்து வைத்தலிலிருந்தும் பாதுகாப்பினை வழங்குகின்றது.
புதிய அரசியலமைப்பில் வெளிப்படையாக உயிர் வாழும் உரிமையை உள்ளடக்கி அங்கீகரிப்பதனூடாக, மனிதனுக்கான முழுமையான கௌரவமான வாழ்வு வெளிப்படையாக அங்கீகரிக்கப்படுகின்றது. அரசியலமைப்பின் உறுப்புரை 13 (4) இல் உள்ளடங்காத ஏனைய உரிமைகளையும், இதன் மூலம் பிரஜைகளுக்கு வழங்க முடிகின்றது. அரசானது சகல மக்களுக்கும் எந்த விதமான இன, மத, சாதி மற்றும் பால் வேறுபாடின்றி அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை வழங்குவதற்கான கடப்பாட்டினைக் கொண்டுள்ளது.
உயிர் வாழும் உரிமையானது அடிப்படை உரிமைகள் எனும் உயிருள்ள தொகுதிக்கான இதயம் போன்றது. தற்போது வழக்குகளில் இந்த உறுப்புரையானது தாராளவாத நோக்கில் பொருள்கோடலுக்கு உட்படுத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில் உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகிய சொற்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கியுள்ள பொருள்கோடலினை நோக்கும்போது, உயிர் வாழும் உரிமையானது பௌதீக ரீதியான இருத்தலை மட்டும் குறிக்கவில்லை. உயிர் வாழ்வதற்கான சகல தடைகளையும் விட்டு பாதுகாப்பு அளிக்கப்படுதலையே குறிக்கின்றது.
உயிர் வாழும் உரிமையானது மனிதனுக்குரிய கௌரவம் மற்றும் அதனுடன் தொடர்பான சகல அம்சங்களும், வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்பவற்றை முறையாக பெறுவதைக் குறிக்கும். உயிர் வாழும் உரிமையானது வசிப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கும். இது உயிர் வாழும் உரிமையின் ஒரு பகுதியாகும். ஏனெனில், இந்த உரிமையின்றி உயிர் வாழும் உரிமைக்கு அர்த்தமில்லை. இத்தகைய உரிமை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவன்றி மீறப்பட முடியாது.
மனிதனுக்கான உரிமைகள் மட்டுப்பாட்டுக்குட்படுத்தப்படவில்லை என்பது உலகளாவிய ரீதியாக உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனை சர்வதேச சமவாயங்கள் வாயிலாக அறியலாம். இந்த அடிப்படையில் புதிய அரசியலமைப்பில் உயிர் வாழும் உரிமை மற்றும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதானது, மனித வாழ்வினை அடையாளப்படுத்தி அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பினை வழங்கும். மனிதனின் தனித்துவத்தினையும், கௌரவத்தையும் பேணுவதற்கும் இது அடிப்படையாக அமையும். எந்தவொரு சிறந்த சட்டமொன்றிற்கு அமைவாகவும் வழங்கப்படக்கூடிய கட்டளையினதும் கட்டமைப்பில் மனிதனின் கௌரவத்துடன் தொடர்பான கோட்பாடு நிலைபெற்றிருக்கும். மனிதனின் தனித்துவத்தினை பேணுவது மனிதனின் கௌரவத்திற்கான அடிப்படையாகும்.
புதிய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கான அத்தியாயத்தில், உயிர் வாழும் உரிமையானது வெளிப்படையாக உள்வாங்கப்படுமாயின், மனிதனின் கௌரவத்துடன் தொடர்பான கோட்பாடு மேலும் பயன் வலுப்பெறும். ஒவ்வொரு மனிதனும் உயிர் வாழும் உரிமையை உடையவர்கள் மற்றும் அவ்வுரிமை பறிக்கப்பட முடியாது. இத்தகைய உரிமை மீது எந்த விதமான தடைகளும் விதிக்கப்பட முடியாது. உயிர் வாழும் உரிமையானது வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.