ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 5 | இது வெறும் ஃபேன்டஸி மாத்திரம் அல்ல!

வோல்டிமார்ட் எனும் ஒற்றை வில்லனை அதர்மத்தின் குறியீடாகச் சித்தரித்து, அவனுக்கு எதிரான ஹாரியின் போராகவே ‘ஹாரி பாட்டர்’ கதை தோன்றும். காலம் காலமாக வரும் கதைக்கருவில் ஒரு மாயாஜால பூச்சு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தோன்றக் கூடும். எல்லாக் கதைகளிலும் இப்படித்தானே… இறுதியாக தர்மம் வெல்லும். கதாநாயகன் வெல்கிறார்.

ஆனால், மற்ற கதைகளில் இருந்து ‘ஹாரி பாட்டர்’ மாறுபடும் முக்கியமான இடம்: அனைவரும் மனிதர்களாக, நல்லது – கெட்டது இரண்டும் கொண்ட சராசரி மனிதர்களாக இருக்கிறார்கள். கதாநாயகன், கதையில் நல்லவர்கள், கெட்டவர்கள், வில்லன் என அனைவருமே சராசரியான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தேர்வு அவர்கள் வாழ்க்கையைத் தெரிவு செய்கிறது. அவர்களால் மாயாஜாலம் செய்ய முடிந்தாலும், மனிதர்கள் வாழ்வின் எல்லைக்குள்ளேயே இருக்கிறார்கள்.

ஏழு புத்தகங்களையும் வாசித்த பிறகு, நமக்குப் புரியும் விஷயம்: ஹாரி பாட்டார் அன்பை, நட்பை, வலிமையை, அறத்தைப் பேசுகிறது.

மேலோட்டமாக என்ன நிகழ்வை முன்வைத்தாலும், அதற்கு அடியில் மேற்சொன்னவற்றில் ஒரு விஷயம் இருக்கும். முதல் புத்தகத்தில் இருந்தே ரெளலிங் இதை அடிப்படையாக வைத்தே கதையைப் பின்னி வருகிறார். முதல் பாகத்தில், நட்பிற்காக தங்களையே பணயம் வைக்கும் ரான் ஹெர்மாய்னி; இரண்டாம் பாகத்தில் டம்பிள்டோர் மீது ஹாரி கொண்டிருக்கும் அளவற்ற நம்பிக்கையும் விசுவாசமும்; மூன்றாம் பாகத்தில் அறத்திற்காக காலத்துடனே விளையாடும் டம்பிள்டோர்; நான்காம் பாகத்தில் எங்கு சென்றாலும் அன்பு நம்மை கவசமாகக் காக்கும்; ஆறாம் பாகத்தில் அனைவரின் நன்மைக்காக உயிரைக் கொடுக்கத் துணியும் கதாபாத்திரம்; இறுதிப் பாகத்தில், அறத்திற்காக, சத்தியத்திற்காக, நன்மைக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என ஒவ்வொரு பாகத்திலும் இந்த நான்கு அடிப்படை விஷயங்களையே பேசியிருக்கிறார். இதை ஐந்தாம் பாகத்தில் ஹாரி வோல்டிமார்ட்டிடம் பேசும் ஒரு வசனம் தெளிவாகக் கூறிவிடும்,
“நீதான் வலிமையற்றவன். உனக்கு அன்போ நட்போ தெரியாது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன்”.

picswe.com

அன்பும் நட்பும் மட்டுமே நம் உலகில் நமக்கானவையாக இருக்கின்றன. நமக்கு வலிமை சேர்ப்பவையாகவும் அவையே உள்ளன. ஆனால் அவ்விரண்டுமே இன்று மெள்ள மெள்ள மதிப்பிழந்துகொண்டு வருகின்றன. கையில் எப்போதும் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள், மனிதர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுகின்றன. சக மனிதர்கள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறோம். குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தனித்து இருப்பதாக உணர்கிறார்கள். இதனால் பல உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். சின்ன சின்ன பத்திகளாய் வாசிக்கும் அளவிற்கு, யாராலும் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியவில்லை. ஒரு புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களோடு பயணிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், ஒரு கதாபாத்திரம், ஒரு கதையானது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதை வேறு யாரும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது. அதனால்தான், குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கதைகள் சொல்வார்கள். அதை நன்குணர்ந்து எழுதப்பட்ட கதையாகவே ஹாரி பாட்டர் அமைந்திருக்கிறது.

pinterest.com

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையான நம்பிக்கையயும், வலிமையையும் அவனுக்கு/அவளுக்கு அளிப்பதுதான் ஒரு படைப்பின் அடிநாதம். சிறார் இலக்கியம் என்று ஒன்றை வகைப்படுத்தினால், அதிகக் கவனம் தேவையாகிறது. நாம் இப்போது சொல்லப் போவது அடுத்து வரும் அனைத்துத் தலைமுறைகளையும் பாதிக்கக் கூடும். அதுமட்டுமில்லாமல், தான் சொல்வது அனைத்துக் குழந்தைகளுக்கும் பொருந்த வேண்டும். ஏழு பாகங்கள் கொண்ட ஒரு தொடர் கதையில், இக்கவனம் மிக மிக அத்தியாவசியமாகிறது. ஒவ்வொருவரும் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள, ஒரு கதாபாத்திரம் இருக்கும். அனைத்துக் கதாபாத்திரங்களின் அடிப்படையுமே, மேற்சொன்ன நான்கு குணங்களின் அல்லது அவற்றின் எதிர்குணங்களில் அமையப் பெற்றிருக்கும்.

அன்பு, நட்பு, வலிமை, அறம் ஆகியவற்றில் ஒரு குழந்தையிம் மிகச் சிறிய வயதில் ஊட்டப்பட வேண்டியது அறம். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் நட்பும் வந்து சேரும். இவை மூன்றும் இருந்தாலே வலிமை கிடைக்கும். தான் செய்வது பிறருக்கு நன்மையா இல்லையா என்பதில்தான் ஒருவரின் அறம் அடங்குகிறது. அதாவது, ஏழைகளிடம் பணம் பறிக்கும் முதலாளியிடம் நாணயமாக இருப்பது அறம் ஆகாது. இதை, டாபி என்ற ஹவுஸ்-எல்ஃப் காட்டுகிறது. தான் வேலை பார்க்கும் இடத்தில் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றாலும், டாபியால் தவறை ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதை, ஹாரியிடம் மறைமுகமாகத் தெரிவிக்கிறான் டாபி. அப்படி முதலாளிக்குத் துரோகம் செய்ததற்குத் தன்னை துன்புறுத்திக் கொள்கிறான். தனக்கு விடுதலை பெற்ற தந்த ஹாரிக்காக தன்னுயிரையும் கொடுக்கிறான். ஹாரியால் அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானே எவ்வித மாயாஜாலமும் இல்லாமல், டாபிக்கான குழியை வெட்டுகிறான். இது டாபிக்கு ஹாரியால் செய்ய முடிந்த ஒரு நன்றிக்கடனாக வைத்துக் கொள்ளலாம்.

pottermore.com

ஹெர்மாய்னி – ஹாரி – ரான் இடையே எத்தனை வேறுபாடுகள் வந்தாலும், ‘நான் எப்போதும், எச்சூழலிலும் உன்னுடன் இருப்பேன்’ என்ற நம்பிக்கை அவர்களுள் இருந்தது. அவர்களின் காதலும் அப்படித்தான். கைக்குள் இறுகப் பிடித்து வைக்கும் காதல் அல்ல ஜின்னியுடையதும், ஹெர்மாய்னியுடையதும். பறவையை பறக்கவிட்டு காத்திருக்கும் கூடு போன்றது அவர்கள் அன்பு. அவர்கள் யாருமே ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தவே இல்லை. வழிநடத்தினார்கள்.

தான் செய்த தவறுக்காக ஸ்னேப் வருந்துவது, லில்லி மீது தான் கொண்ட அளவற்ற அன்பினால்தான். தான் செய்த தவறைத் திருத்திக்கொள்ள முனைகிற போதிலும், ஹாரியிடமோ பிறரிடமோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தனக்குள்ளேயே மருகிக் கொண்டு கதை முழுவதும் பயணிக்கும் ஸ்னேப்பின் வலிமை வேறு யாரிடமும் இல்லை. தன் பேச்சின் மூலம் இல்லாமல், செயலின் மூலம் தைரியத்தைக் கற்பிக்கிறார் மெகோனக்கல். சற்றும் எதிர்பாராமல், நியாயத்திற்காக இறந்து போகிறான் செட்ரிக். இப்படி பலர், அறத்திற்காக தங்கள் வாழ்வை, உயிரை இழக்கிறார்கள். நெவில் பெற்றோர், லூப்பின் – டாங்க்ஸ், ஃபிரெட் என்று பட்டியல் பெரிது.

அனைவரின் மத்தியிலும் இருந்தது, நம்பிக்கை என்ற ஒற்றை விஷயம்தான். ஒருநாள் உலகம் தாங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறும் என்ற நம்பிக்கை. அதற்கு அவர்கள்தான் போராட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிந்தது. போரில் இறந்தவர்கள் குழந்தைகளைப் பற்றி கவலை கொள்ளவில்லை. காரணம், நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த அடிப்படை நம்பிக்கை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

தனியாகவே வாழும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு ஹாரி பாட்டரை குழந்தைகள் வாசிக்க வேண்டிய காலம் இது. வாசித்து, விவாதிக்க வேண்டும். நிறை குறைகளைப் பற்றிப் பேச வேண்டும். ஒடுக்குமுறைகளை, மன அழுத்தங்களை, பெண்களின் நிலையைப் பற்றி உரையாட வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கருத்துகள் அடங்கிய புத்தகங்களை அவர்களிடம் கொடுக்க வேண்டும். வாசித்தலும் சிந்தித்தலுமே நம்மிடம் உள்ள ஆயுதங்கள்.

ஒரு கதையை, கதையாக மட்டும் வாசித்தால் பல விஷயங்கள் புரிவதில்லை. அதற்கும் அடியில், பல்வேறு நிலைகளில் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறது. ஹாரி பாட்டர் மேலோட்டமாக, ஒரு ஃபேன்டஸி நாவல். அவ்வளவுதான். ஆனால், உள்ளே போகப் போக, இக்கதை பேசாத விஷயங்கள் இல்லை என்று தோன்றும். ஹெட்விக்கின் மரணம் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு விபத்தில் இறந்ததாகத் தோன்றும். ஆனால், ஹெட்விக்கின் மரணம், ஹாரியின் கவலைகளற்ற நாட்களின் முடிவைக் குறிக்கிறது.

macpricesaustralia.com.au

இப்படி எத்தனை முறை வாசித்தாலும், ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயத்தை உணர்த்திச் செல்கிறது இக்கதை. அன்பின் அடிப்படையில் உருவான ஓர் உலகத்தை ஒற்றை நம்பிக்கையாகக் கொடுத்த ஜே.கே.ரெளலிங்கிற்கு வாழ்நாளுக்குமான அன்பும் நன்றியும்!

(நிறைவு)

முந்தைய அத்தியாயங்கள்:

> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 4 | பெண்களை எப்படிச் செதுக்கினார் ரெளலிங்?
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 3 | அப்பாக்களின் ஆதிக்கமும் தாக்கமும்!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்- குறுந்தொடர் – அறிமுகம்

கட்டுரை முகப்பு பட உதவி: acidcow.com
 

Roar தமிழ் உடன் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்:
Mobile App : Android | iOS
Social Media : Facebook | Instagram | YouTube | Twitter 

Related Articles

Exit mobile version