நாம் வாழும் உலகம் அழிவை நோக்கி செல்கின்றதா? காலநிலை மாற்றம் தொடர்பில் IPCC வெளியிட்ட அதிர்ச்சிதரும் அறிக்கை

பருவநிலை மாற்றம் குறித்த IPCC அறிக்கை 10.08.2021 அன்று வெளியானது.பருவம் தவறும் மழை, திடீர் புயல், சுட்டெரிக்கும் வெயில் போன்ற அனைத்துவிதமான இயற்கையின் கோர தாண்டவங்களுக்கும் சீரற்ற பருவநிலை மாற்றமே காரணமாகும். வளிமண்டலம், பெருங்கடல் மற்றும்  நிலப்பகுதி ஆகியவற்றின் அசாத்தியமான வெப்பநிலை உயர்வுக்கு மனிதர்களின் செயற்பாடுகளே பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதாக  இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்பட உதவி- Google.com

கடல், பூமி வெப்பமயமாதல், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, புயல் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் விளைவாக ஏற்படும் சில பாதிப்புகள் மீண்டும் குறித்த அந்த இயற்கை வளங்கள் அதன் பழைய தன்மைக்கு மீள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் என  இவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய தரவுகள்

  • சியாவின் கடல் மட்ட அளவு அபாயகரமாக அதிகரித்து வருகின்றது

 

  • பூமியின் 2000 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புவி வெப்பமடைந்துள்ளது.
  • 1750-ம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம்.
  • 2019-ம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கரிம வாயுவின் (CO2) செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஒட்சைட்டின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும்.
புகைப்பட உதவி- Pixabay.com
  • 1970-ம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்று.
  • 1900-ம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 2100-ம் ஆண்டில் 2 மீட்டர் அளவிற்கும் 2150-ம் ஆண்டில் 5 மீட்டர் அளவிற்கும் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
  • கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1980-ம் ஆண்டிற்குப் பிறகு இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • ஆர்க்டிக் கடல் பகுதியிலுள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979-1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% இலிருந்து 10% இற்கு குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம்.

காலநிலை மாற்றத்தால் உலகின் நீரியல் சுழற்சி வலுவடைகிறது. இதன் காரணமாக கனமழை பொழிவும் அதனால் வெள்ள பாதிப்பும் உண்டாகிறது. இதே நீரியல் சுழற்சி சில இடங்களில் வறட்சிக்கும் காரணமாகிறது.

புகைப்பட உதவி- the conversation.com

“இது இப்படியே தொடர்ந்தால், எதிர்கால பூமி நரகமாக இருக்கும்” என்று எச்சரிக்கிறார் அறிவியலாளர் டிம் ஃபாமர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர், “இது மனித இனத்துக்கான ரெட் அலர்ட்” என்று தெரிவித்திருக்கிறார். வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திட்டங்கள் வகுக்காமல், எரிபொருள் பயன்பாட்டில் பெரிய அளவிலான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் அதிகரிப்பதை நம்மால் தடுக்க முடியும். நாம் கவனமற்ற போக்கினால் அந்த நிலையை எட்டிவிட்டால் என்ன நடக்கும் என்பது அறியக்கூடுவதில்லை. 

Related Articles

Exit mobile version