திரைப்பட வரலாறு தொடங்கி நூற்றாண்டுகள் கடந்துவிட்டபிறகும் ஒருசில கதைக்களங்கள் இன்றுவரை சலிப்பை ஏற்படுத்துவதேயில்லை. காதல், ஆக்க்ஷன், படங்களின் வரிசையில் மக்களை மீண்டும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கவைப்பவை பேய்ப்படங்கள் என்றால் மிகையில்லை. எல்லா படங்களினதும் ஒற்றுமை இரண்டுமட்டுமே . முதலாவது விடயம் இதிலிருக்கும் பயமுறுத்தும் பேய்கள், இரண்டாவது விடயம் இந்த படங்கள் குவிக்கும் கோடிகள்! முனி , காஞ்சனா, பிட்சா, பிசாசு, யாமிருக்க பயமேன் , ஆ , டார்லிங் , அருந்ததி , மாயா , அரண்மனை (part 1, part 2 , part 3), “ஹலோ நா பேய் பேசுறேன்” , ஜீரோ , ஜாக்சன் துறை, தேவி, டோரா என ஆரம்பித்து, தற்போதுவரையில் நீண்டுகொண்டேயிருக்கின்றது இந்தப் பட்டியல்! ஆம், தமிழ்த் திரை உலகத்திற்கே பேய் பிடிக்கிற அளவுக்கு வரிசைவரிசையாக வரிந்துகட்டியவண்ணம் வெளிவந்துகொண்டிருக்கும் பேய்த் திரைப்படங்கள். பேய்களின்மீதும், அமானுஷ்யங்ள்மீதும் நம்பிக்கையில்லாதவர்கள்கூட இந்தவகையிலான திரைப்படங்களை ரசித்து பார்க்கும்வகையில் அமைந்துவிடுவதுதான் பேய்கள் மீதான ஈர்ப்புக்கும் இவ்வாறான திரைப்படங்களுக்குமான பிளஸ்! அண்மைக்காலங்களில் பேயை ஓர் காமடிப் பீஸாக வலம்வரச் செய்து , வெற்றிகண்ட பெருமையும் நம் தமிழ் சினிமாவுக்கு உண்டு ….!
பேய்ப்படங்கள்மீது இத்தனை மோகம் ஏன் நமக்கு? பயப்படப்போகின்றோம் என தெரிந்தும் திரையரங்கு சென்று அதை பார்க்க முனைவது ஏன் ? பேய்ப்படங்களில் இடம்பெறும் வன்முறைகள் பார்ப்பவர்களை ஈர்ப்பதற்கான காரணம் என்ன? மொழிகள் கடந்து தியேட்டர்களை நோக்கி ரசிகர்களை எது ஈர்க்கிறது ? இதற்கான பதிலை இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கூறிவிட்டு சென்றிருக்கின்றார். பேய்க்கதைகள், பேய்நாடகங்கள் போன்றவற்றால் மன்னர்கள் முதல் மக்கள்வரை ஈர்க்கத்தொடங்கிய காலமது, இதனை ஆராய்ந்த அரிஸ்டாட்டில் மனிதன் தனக்குள் அடக்கிவைத்திருக்கும் எதிர்மறை உணர்ச்சிகளை களையெடுக்கும் ஆயுதமாக பேய்க்கதைகளை பயன்படுத்திக்கொள்வதாக கூறியுள்ளார்.
பேய்ப்படங்கள் எப்படி இந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன ? 1896ஆம் ஆண்டு ஸ்பெயினில் எடுக்கப்பட்ட மூன்றே நிமிடங்களேயான “house of the devil” என்கிற குறும்படமே இன்றைய பேய்ப்படங்களிற்க்கெல்லாம் முன்னோடியாக கூறப்படுகிறது. அதன்பின்னர் 18ஆம் நூற்றாண்டில் பேய்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் பலவும் திரைப்படமாக உருவாக்கப்பட்டன.
தீயதை அழிக்க கடவுள் என்கிற சக்தி உதவும் என்கிற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையினை ஊர்ஜிதப்படுத்துவதாக இந்த பேய்ப்படங்கள் அமைந்தமையும் அவற்றின் வெற்றிக்கு காரணமாயின என உளவியலார்கள் கூறுகின்றனர். மேலும் பேய்ப்படங்களில் இருக்கும் மர்மம். படத்தில் உள்ளவர்கள் அந்த மர்மத்தை கண்டுபிடிக்க போராடுவதைப்போலவே அதை பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் தங்களுக்குள் ஒரு குட்டி போராட்டத்தினை நடத்திக்கொண்டிருப்பதாக உளவியலார்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் தங்களை படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களோடு இணைத்து கற்பனை செய்துகொள்ளும் சுபாவமானது ஒருவித த்ரில்லை ஏற்படுத்துவதாகவும் அந்த பயங்கர த்ரில்லை எமது ஆழ்மனம் விரும்புவதாகவும் கூறும் ஆய்வாளர்கள் திரையரங்கு போன்ற பாதுகாப்பான இடங்களில் பயப்படுவதை அநேகர் விரும்புவதாகவும் (அதாவது ஒரு “Roller coaster train” போல) உயிருக்கு ஆபத்தில்லாத த்ரில்லை அனுபவிக்க தயாராக இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இவ்வாறான திரைப்படங்களில் கொலை ரத்தம், போன்ற விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் இருந்தாலும் பெரும்பாலும் முடிவு மகிழ்ச்சியாக இருப்பதால் மக்கள் ஒருவித மனதிருப்தியுடன் வீடு திரும்புகின்றமையும் ஒருவித உளவியல் அடிப்படைதானாம்.
உண்டா ? இல்லையா ? கடவுளுக்கு அடுத்த படியாக அதிகம் விவாதிக்கப்படும் விடயம் பேய்தான்! ஆதிகாலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் நவீன யுகம்வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துகொண்டேதான் செல்கிறது என்றால் அதுதான் உண்மை . ஆவி , பேய் , பூதம் , கொள்ளிவாய்ப் பிசாசு , மோகினி , ரத்தக் காட்டேரி , காத்து , கருப்பு என்று பல வடிவங்களில் மனிதர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் பேய்கள் நிஜமா? கற்பனையா? ஆவிகள் பலிவாங்குமா? இறந்துபோனவர்களோடு மீடியம் வழியாக பேசலாமா? பில்லி , சூனியம் , இது போன்ற மாந்திரீக விடயங்களில் எந்த அளவு உண்மை உள்ளது? “மரணத்திற்குப்பின் நிகழ்வது என்ன”? என்ற இந்த கேள்வியில் இருந்துதான் மேற்கூறிய இந்த அத்தனை சந்தேகங்களும், அத்தனை பயங்களும், அத்தனை நம்பிக்கைகளும், உருக்கொள்கின்றன! கீழைத்தேய நாடுகளில் மட்டுமல்ல மேற்கத்தைய வல்லரசு நாடுகளிலும்கூட பேய்களும், பேய் நம்பிக்கைகளும் விதம்விதமாக உலவிக்கொண்டுதான் இருக்கின்றன காலங்காலமாக. அறிவியலுக்குப் பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள் , ஆனால் பேயின்”இருப்பை ” மறுதலிக்க முடிந்தது போல்பேய்பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம்.
தொன்றுதொட்டு இன்றைய அறிவியல் காலம்வரையில் மனிதன் பயப்படுவது “பேய் ” என்ற இந்த ஒன்றுக்குத்தான் . “பேய் பிசாசு போன்றன உண்மையில் உலகில் உள்ளனவா”? என்ற கேள்விக்கு “உளன் எனில் உளன், அலன் எனில் அலன்” என்ற கடவுள் நிலைதான் பேய்க்கும் என்று சொல்லுவர். இன்றும்கூட உலகில் நடக்கும் சில அமானுஷ்யங்கள் மற்றும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்திகள், பேய் உண்டு என்று கூறுபவர்களுக்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது என்றே கூறலாம் . இருளுக்கும் பேய் நம்பிக்கைகளுக்கும் அப்படியென்ன தொடர்பு? பேய்களின் நடமாடும் நேரமாக நள்ளிரவு 12 தொடக்கம் 03 மணிவரையிலான நேரப்பகுதி குறிப்பிடப்படுவதன் காரணம் என்ன?
உடல் அழிந்துவிட்ட நிலையில் ஏன் பலரும் தாம் கண்ணுற்றதாக சொல்லும் பேய்களும், சினிமாக்களில் காட்டப்படும் பேய்களும் ஆடையோடு உலவுவதாக சொல்லப்படுவதன் அடிப்படை என்ன? (உடல் அழிந்துவிட்ட நிலையில் ஆடைகளை பேய்கள் எவ்வாறு அணியமுடியும் என்ற லொஜிக் சினிமாவுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்) சரி, எதற்க்காக பேய்கள் பெரும்பாலும் பெண்களை மட்டும் குறிப்பாகத் தாக்குகின்றன? துர்மரணம் அடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவியாக உலவுவார்கள், பழிவாங்குவார்கள் என்றால் இந்த உலகில் தீர்க்கப்பாத வழக்குகள் இன்னுமே இருப்பதற்க்கான காரணம்தான் என்ன? பேய்களின் “இருப்பு” பற்றிய விவாதங்கள் எழும்போதெல்லாம் மேற்கூறிய இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களின் நீண்ட நெடிய சந்தேகங்களுக்கு விடை கிடைப்பதேயில்லை!
மக்கள் முதன்முதலில் கதைகூற ஆரம்பித்த நாள்முதல் பேய்க் கதைகளுக்கும் பஞ்சமேயில்லாது கூறி வருகின்றனர் . இவ்வாறாக சிறுவயது முதல் ஆழ்மனதில் விதிக்கப்படும் பேய்ப்பயம் பலருக்கும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம் . இந்தவகையான நம்பிக்கைகள் மனித சமூகங்களில் தொன்றுதொட்டே இருந்துவருகிறது
இந்த அச்சத்திற்கு அடிப்படை என்னவாக இருக்கும் ?
இருட்டைக்கண்டு அஞ்சிய மனிதன் பிற்காலத்தில் பேய்கள் , பிசாசுகள் , ஆவிகள் , தேவதைகள் , கடவுள்கள் , என ஒவ்வொரு உணர்வையும் தத்தமக்குள் உருவாக்கம் செய்துகொண்டான். மேலும் பழங்கதைகள் , நாட்டுப்புற இலக்கியங்கள் தொடங்கி புராண இதிகாசங்கள் எனத் தொடர்ந்து இன்றைய சினிமா வரையில் பேய்க்கதைகள் இருந்துகொண்டேதான் இருக்கிறது . ஆனால் இவையாவுமே அப்பட்டமான உண்மை என நம்பத் தொடங்கும்போதுதான் பலகீனமான பலருக்கு சிக்கல் எழத் தொடங்குகிறது . தொன்மப் புனைவுகளும் , கதைப்பின்னல்களும், கலாசாரப் பின்னணிகளும் பேய்கள் குறித்த கற்பனையை மனிதர்கள் மனதில் உருவாக்க , குலதெய்வ கோவில்கள் , தர்க்கா சமாதி மற்றும் சர்சுகளில் நடக்கும் பேயோட்டும் சடங்குகள் திரைப்படங்களில் காட்டப்படும் புல்லரிக்கவைக்கும் பேயோட்டும் நிகழ்சிகள் போன்றன மனதில் உருவாகும் பேய் பற்றிய கற்பனைகளை பெரிதும் பேணி வளர்க்க உதவுகின்றன என்றே கூறவேண்டும்!
இன்றைய அறிவியல் உலகம் இவ்வாறான பேய்பற்றிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை . வெறும் மூடநம்பிக்கை மட்டுமே என ஒதுக்கிவிடுகின்றன . இருட்டான இடங்களை பார்க்கும்போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது . வெளிச்சம் சூழ்நிலை பற்றிய அதிகமான நம்பகத் தகவல்களை பார்வைவழி தருவதால் பகலில் இந்தப் பேய்ப்பயம் இல்லாமல் போகிறது அல்லது குறைந்துவிடுகிறது . ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள் அமானுஷ்யங்கள் மீதான கூற்றுக்களை மறுத்து எல்லாம் பிரம்மை என்கின்றனர். வழிவழியாக கடத்தப்படும் கற்பனைகள் பிரம்மை உருவங்களை தோற்றுவிக்கக்கூடும் அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதுதான் அவர்களது வாதம். பேய்கள் பிசாசுகள் என நாம் நம்பிக்கொண்டிருப்பவை எண்ணத்தில் உருவாக்கப்பட்டு எண்ணத்தில் கடத்தப்பட்டு எண்ணத்திலேயே நிலைத்து நிற்கும் ஒரு கற்பிதமே . குறிப்பாக இத்தகைய கற்பிதங்கள் ஒன்றை இல்லாத நிலையிலும் இருப்பதுபோல் காட்டிவிடும் . அதனால்தானாம் சிலருக்கு பேய்கள் உள்ளது போலவும் , அசரீரி கேட்பதுபோலவும், உணர்வு ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
போதைப் பொருட்களை உட்கொண்டாலோ, மனச் சிதைவு நோய்க்கு உள்ளானலோ , மூளையில் அடிபட்டாலோ , கடுமையான தியானங்களில் ஈடுபட்டாலோ , கூட இல்லாதவைகளும் இருபதாக உருவகித்துக்கொள்ளும் நிலைக்கு மூளை வந்துவிடும் என்பதுதான் அறிவியல் கூறும் உண்மை . பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறுவீதம் மனநோய் அல்லது பாசாங்கு வகையினரையே சாருவர். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்லமுடியாத உளப்போராட்டங்களின் பாதிப்பு ,சமூகத்தால் சக மனிதர்களால் உண்டான பாதிப்புகள், அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள், உளச்சிக்கல் , பிளவுபட்ட ஆளுமை போன்றனவே இவ்வாறான எண்ணங்களுக்கு அடிப்படை. உண்மையில் யாரும் அருகில் இல்லாத நிலைமையில் “யாரோ “ இருப்பதாக உணர்வது மூளையின் கவர்சிகரமான கற்பனையே. இது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள புனித நூல்கள், கற்பனைக் காவியங்கள் கதைகள் போன்றவற்றை சார்ந்திருக்கும். சுவாரஷ்யமாக கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வம் இதற்க்கான மூலகாரணம். கண்கள் காணும் காட்சியை மூளை சில நேரங்களில் தவறாக பதிவு செய்து விடுவதும் உண்டு. கயிற்றைப் பாம்பாக கருதிவிடுதல்போல்!
முன்னைய காலங்களில் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊருக்குள் பேய்க் கதைகளை உருவாக்கி விட்டிருக்கலாம் இல்லையா? ஏன் புதையல்கள், பொக்கிசங்கள் போன்றவை இருப்பதாக ஊகிக்கப்படும் இடங்களை பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அரசுகளே இவ்வாறான திட்டமிடப்பட்ட வதந்திகளை பரப்பிவிட்டிருக்க கூடுமே? அதுமட்டுமா வேண்டாதவர்களை அடித்துக் கொன்றுவிட்டு பேய்மீது பழிகளை தூக்கிப்போட்டிருக்கலாமே? இரவில் தன்னந்தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஹார்ட் அட்டாக் வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பாவத்தையும் பேய்கள் சுமந்திருக்ககூடுமே? கள்ளக் காதல்கள் மாட்டிக்கொள்ளாமல் தொடரக்கூட பாழடந்த / ஒதுக்குப்புறமான பேய் பங்களாக்கள் வீடுகள் உதவியிருக்கலாமே? கிராமப்புறங்களில் தினமும் குடித்துவிட்டு அடிக்கும் கலாட்டா செய்யும் கணவனிடமிருந்து தப்பிக்கவும் அவனை பயமுறுத்தவும்கூட பெண்களுக்குள் பேய் புகுந்து துணைநின்றிருக்கலாமோ? காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரஷன் கூட பேய் பிடித்ததாக கருதப்பட்டிருக்கலாமே? பலர் குற்ற உணர்சிகளில் இருந்து தப்பிக்கவும் , குற்றங்களை செய்யவும்கூட பேய் பிடித்திருப்பதாக நடித்திருக்கலாமே ? பணத்துக்காக பேயோட்டும் இடங்களில் மற்றவர்களது பேயோடு பேசுவதாக அல்லது அதை தம்மீது ஏவிக் கொள்வதாக பேயோட்டிகள் நாடகமாடவும் கூடுமே ? “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ” என்பதுபோல் ஆள் அரவமில்லாத இடங்களில் குருட்டாம் போக்கில் எதையாவது பார்த்துவிட்டு பேய் இருக்கிறது என்று புரளியைக் கிளப்பிவிடிருக்கலாமே? சிந்தியுங்கள் …
உண்மையில் இதற்க்கெல்லாம் நல்ல மனநல மருத்துவர்களின் உதவி, ஆலோசனை தேவை. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் கேள்வி! தங்களை மனநோயாளிகள் என்று சொல்வதோடு, தங்களது புனித நூல்கள் கூறும் ஆத்மாக்கள் பற்றிய நம்பிக்கைகளை, இறப்பு, இறப்பின் பின்னரான வாழ்க்கை போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்துவதாக சொல்லி சண்டைக்கு வரக்கூடும் இல்லையா ? எது எப்படியோ இப்படியான மனநோயாளிகளை பேயோட்டுதல் என்ற பெயரில் கட்டி வைத்து சித்திரவதை செய்வதும், உரிய மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளாது மத வணக்கஸ்தலங்களில் வைத்து மந்திரம் ஓதி , ஜபித்து நிலைமையை மென்மேலும் சிக்கலாக்குவதும்கூட இன்றுவரை தொடரத்தான் செய்கிறது .
பேய்கள் உண்மை இல்லை என்றாலும் , பேய்கள் தெய்வங்கள் போன்றவற்றை பின்னணியில் வைத்து உருவாக்கப்படும் தொன்மப் புனைவுக் கதைகள் , திரைப்படங்கள் என பலவும் மனிதர்களுக்கு சுவாரஷ்யத்தையும் , திகில் உணர்வினையும் அளிக்கின்றன என்பதுமட்டும் சர்வ நிச்சயம் . அந்த திகில் உணர்வினை நம்மில் பலர் விரும்பவும் செய்கிறோம். ஆகவே இந்த உணர்வு இருக்கும்வரையில் பேய்க்கதைகளும் அதுபற்றிய நம்பிக்கைகளும் நம்மிடம் உலவிக்கொண்டேதான் இருக்கும்.