பிளாஸ்டிக் நம் வாழ்வை பரிதாபகரமாய் மாற்றுகிறதா?

நாம் உருவாக்கும் கழிவுகளில் பிளாஸ்டிக் பைகள் முக்கியமானவை. விட்டெறியும் நம் சமூகத்தின் சின்னங்களாக அவை விளங்குகின்றன.அவைகள் பயன்படுத்தப்பட்டு, பின்பு மறக்கடிக்கப்படுகின்றன. மேலும் அவை என்றும் அழியாத ஒரு கொடூரமான மரபை விட்டுச்செல்கின்றன” -ஜாக் கோல்ட்ஸ்மித்

பிளாஸ்டிக்கின் வரலாறு 1800களின் மத்தியில் ஆரம்பமானது. உலகம் முழுவதும் இருந்த விஞ்ஞானிகள் இறப்பரின் உற்பத்தி செயன்முறையில் இருக்கும் இயற்கை லாடெக்ஸை அகற்றி முழுவதும் செயற்கையான (synthetic) ஒரு உற்பத்தியை மேற்கொள்ள ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். இந்த புதிய உற்பத்தி பாரிய அளவில் உலகெங்கும் மேற்கொள்ளக்கூடியவாறு இருக்க வேண்டும் என்ற நோக்கமும் அவர்களிடம் இருந்தது. இதன் விளைவாக சில தசாப்தங்கள் கழித்து 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் உருவானது. பல நுண்ணிய செப்பமாக்கல்களுக்கு பின்னர் இது பாரிய ஒரு உற்பதிப்பொருளாக மாறியது.

பிளாஸ்டிக் உற்பத்தி நடைபெறும் வரையில் மக்கள் தங்களுடைய பொருட்களை நீரில் இருந்தும், காலநிலை மாற்றத்தில் இருந்தும் பாதுகாக்க இயற்கை இறப்பரையே பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து வந்த மனிதத்தேவைகளின் அதிகரிப்பால் இயற்கை இறப்பருக்கான கேள்வி (demand) அதிகரித்தது. ஆனால் இயற்கை இறப்பரானது, இறப்பர் மரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இறப்பர் பாலால் உருவாக்கப்படுவது என்பதால் அதன் உற்பத்தியை அதிகரிப்பது கடினமாக இருந்தது. இதற்கு மாற்றாக முழுவதும் செயற்கை மூலக்கூறுகளாலான ஒரு பொருளை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் விஞ்ஞானிகளுக்கு உருவானது. அக்காலத்தில் இயற்கை இறப்பரின் கட்டுமான மூலக்கூற்றை ஒரு விஞ்ஞானி கண்டறிந்தார். அவரின் உதவியுடன் முதன் முதலாக பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டது.

முதன்முதலாக ஆய்வுகூடத்தில் பிளாஸ்டிகை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த உலோகவியலாளரும், கண்டுபிடிப்பாளருமான அலெக்சாண்டர் பார்க்ஸ். அலெக்சாண்டர் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை இறப்பர் சார்ந்த பொருட்கள் குறித்து ஆய்வுசெய்வதற்கு செலவழித்தார். இறுதியாக 1950 இல் செலுலோஸ் (cellulose) இல் இருந்து பெறப்பட்ட சில சேதன (organic) மூலப்பொருட்களையும், வேறு சில கனியங்களையும் ஒன்றிணைத்து பார்க்சின் (parkesine) என்ற முதல் பிளாஸ்டிக் உருவானது. பிளாஸ்டிக், இறப்பரை விட சில சிறப்பம்சங்களை பெற்றிருந்ததை அலெக்சாண்டர் கண்டறிந்தார். பிளாஸ்டிக் கைத்தொழில் ரீதியாக பாரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்ததுடன், உயர்வெப்பநிலையில் இளக்கமானதாகவும், குளிர்ந்த வெப்பநிலையில் விரைப்பாகவும் இருந்தது. சிலகாலத்திலேயே அலெக்சாண்டர் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை உருவாக்கினார். எனினும் அது மிகக்குறுகிய காலத்திலேயே முறிவடைந்தது. பிளாஸ்டிக் இற்கு சந்தையில் நிலவிய உயர்ந்த விலையால் மக்கள் அதனை கொள்வனவு செய்யமுன்வரவில்லை. மேலும் பார்க்சின் பிளாஸ்டிக் இலகுவில் உடையக்கூடியதாகவும், தீப்பற்றக்கூடியதாகவும் இருந்தது. இருந்தபோதிலும் இவரின் முயற்சியின் விளைவால் பிளாஸ்டிக் உலகமக்களுக்கும், ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க விஞ்ஞானிகளுக்கும் அறிமுகமானது. இது பிளாஸ்டிக்கின் பரிணாம வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைந்தது.

பட உதவி : www.dungogchronicle.com.au

பௌதீகக்கட்டுமான அலகு

70 ஆண்டுகால வரலாற்றின் அங்கமாக தற்போதைய உலகில் தவிர்க்கமுடியாத ஒன்றாக பிளாஸ்டிக் பரிணமித்துவிட்டது. இன்றைய திகதியில் நாம் நம்மையே சுற்றியுள்ள சூழலை நோக்கும் போது பிளாஸ்டிக்கை நம் கண்களில் இருந்து விலக்கிவிட முடியாது. காலையில் எழுந்ததும் பல்துலக்கும் தூரிகையில் இருந்து, இரவு படுக்கைக்கு முன் பார்க்கும் கடிகாரம் வரையில் பிளாஸ்டிக்கால் சூழப்பட்டுள்ளவர்களாக உள்ளோம். நீண்டவாழ்வுடையதாலும், இயற்கை மாற்றங்களுக்கு தாக்குப்பிடிக்க கூடியதாலும், இன்றைய திகதிக்கு மிகமலிவாக கிடைப்பதாலும் பிளாஸ்டிக்கின் பாவனை உலகம் முழுவதும் பரவியுள்ளது. எனினும் முழு உலகுக்குமான பௌதீகக்கட்டுமான அலகு என்ற அந்தஸ்தை பிளாஸ்டிக்கால் அடையமுடியாது உள்ளது. அதற்குரிய காரணம் அவற்றால் மொத்த உலகுக்கும் ஏற்படும் தீய விளைவுகள். இதன் விளைவாக பல அரசாங்கங்கள் தங்களுடைய நாட்டில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும், கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கும் அநேக கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதுகுறித்த காணொளி ஒன்றை இங்கே காணலாம்.

நிலைத்திருப்பு

நெகிழி (பிளாஸ்டிக்) எடை குறைவானது, விரும்பிய வடிவத்திற்கு மாற்றப்படக்கூடியது, ஸ்திரமானது மேலும் பல்வேறு நிலைகளுக்கு மாற்றப்படக்கூடியது. எனினும் அதன் நிலைத்திருக்கும் தன்மையே அதிகம் முக்கியத்துவம் பெற்றது. பிளாஸ்டிக் ஆனது அடிப்படையில் செயற்கை பொலிமெர்(polymer) சேர்மானங்களால் உருவாக்கப்பட்டது. எனவே இவை சில நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் ஆற்றலை பெற்றவை. இயற்கையாக இவை பிரிகை அடைவதற்கு பலகாலம் எடுக்குமெனிலும், சிலவகை பிளாஸ்டிக்குகள் முழுமையாக மக்குவதில்லை. மாறாக சிறுசிறு துண்டுகளாக மாத்திரமே உடைக்கப்படும். இந்த சர்ச்சைக்குரிய இயல்பு நம்மால் பெரிதும் வரவேற்கப்படுவதற்கு உரியது அல்ல. இவைகளை தொடர்ச்சியாக நிலங்களிலும் நீர்நிலைகளிலும் விடுவதால் வருங்கால சந்ததியினருக்கு பாரிய நெருக்கடி நிலைகள் தோன்றும். பிளாஸ்டிக் அதீதமான நிலைத்திருக்கும் தன்மையை பெற்றுள்ள போதிலும் அவை அழிக்கப்பமுடியாதவையாக அடையாளப்படுத்தப்படுவது இல்லை. மேலும் இந்த நிலைத்திருக்கும் தன்மையே பிளாஸ்டிக்கை ஒரு பொதுவான பௌதீகக்கட்டுமான அலகாக அமைவதாய் தடுக்கிறது.

விஷ விளைவுகள்

1950 இல் இருந்து அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் நம் சூழலில் அதிகரித்து வரும் கழிவுகளின் அளவு மிகப்பெரியது. இவை இன்றைய நாட்களில் கணிசமான அளவில் பாதகவிளைவுகளை உண்டாக்கி வருகிறது. பயன்படுத்தப்பட்டு பின்பு கழிவாக சூழலை சேரும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு 400 முதல் 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. எனினும் இந்த காலப்பகுதிக்கு இடையே இவை காடுகளிலும் கடல்களிலும் சேர்வதால் விலங்குகள் அதிகம் பாதிப்பு அடைகின்றன. ஏற்கனவே மனித நாகரிக வளர்ச்சியால் பாதிப்பு அடைந்து, வாழ்விடங்களை இழந்து வரும் விலங்குகள் தங்கள் அறியாமையால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை உட்கொள்ள தொடங்கிவிட்டன. இதன் விளைவாக பூமி தினந்தோறும் பல உயிர்களை இழந்து வருகிறது.

பட உதவி : http://www.exploringbytheseat.com

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் போது சூழலுக்கு வெளியிடப்படும் நச்சுவாயுக்களால் (toxic gases) வரும் இந்த விளைவுகளை தடுக்கும் முகமாக பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்யும் முறையை அறிமுகம் செய்தனர் விஞ்ஞானிகள். எனினும் பிளாஸ்டிக் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் போதும் அதே வகையான டாக்ஸிக் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்ந்தவண்ணமே இருக்கின்றன. பிளாஸ்டிக் உற்பத்தியின் போது சேர்க்கப்படும் சில சேர்மானங்களால் மனித உடலின் அனுசேப தொழிற்பாடுகளை (metabolism) மோசமாக பாதிப்படைய செய்யும். தற்காலத்தில் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைவருமே தண்ணீர் கொண்டுசெல்ல பிளாஸ்டிக் போத்தல்களையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனினும் இந்த பிளாஸ்டிக் போத்தல்களுக்கு நிலைத்திருக்கும் ஆற்றலை வழங்குவதற்கு சேர்க்கப்படும் phthaletes மற்றும் BPA என்பவை ஆண், பெண் இருபாலாரிலும் கணிசமான ஹோர்மோன் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறான பிளாஸ்டிக் போத்தல்களை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது ஆண்களின் விந்து எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைவதுடன், பெண்கள் மிக இளவயதிலேயே பருவமடையும் (premature puberty) நிலையும் உருவாகும்.

பிளாஸ்டிக் இன்றைய காலகட்டத்தில் அநேகமாக பல்வேறு துறைகளில் மூலப்பொருளாக விளங்கிவருகிறது. அவற்றுள் மிகப்பெரிய துறைகளில் ஒன்று விளையாட்டு பொருட்கள். தவழ்ந்து திரியும் சிறுகுழந்தைகளில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்கள் வரையில் அனைத்து சிறார்களுமே பிளாஸ்டிக் விளையாட்டு பொம்மைகளை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக வைத்துக்கொள்வார்கள். சிறிய அளவிலான உருவத்தை உடைய விளையாட்டு பொம்மைகளை குழந்தைகள் வாயிலோ அல்லது மூக்கிலோ உட்செலுத்துவதன் மூலம் பல துர்மரணங்கள் சம்பவித்தமை உலக அளவில் பல நாட்டு அரசாங்கங்களின் கண்டனத்துக்கு உரியதாக மாறியது. இதனை தொடர்ந்தே ஒவ்வொரு விளையாட்டு பொருள் உற்பத்தியிலும் அவற்றை பயன்படுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது எல்லை அச்சிடப்பட்டது. இவற்றை விட பொலித்தீன் பைகள் குழந்தைகள் இடத்தில் மிகவும் ஆபத்தான பொருட்களாக மாறிவிட்டது. விளையாட்டாக பொலித்தீன் பைகளால் தலையை சுற்றிக்கொண்டு மூச்சுத்திணறலால் உயிரை விட்ட குழந்தைகள் பற்றி இந்நாட்களில் கூட செய்திகளை கேட்க முடிவது நம் சமுதாயத்தின் துர்பாக்கியமே.

பட உதவி : thehill.com

ஒருவருடத்தில் சராசரியாக 8 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்ந்தவண்ணம் உள்ளது. இக்கழிவுகளை உணவு என நினைத்து உட்கொள்வதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கும் பறவைகளின் வாழ்க்கைக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மீன்களை மனிதர்கள் உட்கொள்வதால் மனித உணவுச்சங்கிலிக்குள் பிளாஸ்டிக் சேர்ந்து மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலில் சேர்வதன் மூலம் நுளம்புகளுக்கு இனப்பெருக்கம் செய்வதற்கு அதிகமான இடம் கிடைக்கும் இதனால் டெங்கு முதலான ஆபத்தான நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கின்றது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையோரம் சேர்வதன் விளைவாக கடல்சார்ந்த சுற்றுலா துறையும் கணிசமான பாதிப்பை எதிர்நோக்குகிறது

பிளாஸ்டிக் வேண்டாம்

தேசிய அரசு என்ற பெயரில் இலங்கையின் இருபெரும் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்திவந்த போது 2017 இன் ஜுலை மாதத்தின் போது 20 மைக்ரான் அல்லது அதைவிட அடர்த்தி குறைந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டனர். இதன் மூலமாக பொலிஸ்டிரினால் செய்யப்பட்ட (polystyrene) உணவுப்பொதிகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் பொலித்தீன் உற்பத்திகள் ஸ்டைரொஃபோம் (styrofoam) பெட்டிகள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த யோசனையானது இலங்கையின் மேன்மைதாங்கிய ஜனாதிபதியும் அப்போதைய சுற்றாடல் அமைச்சருமான  மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதுடன் இலங்கையில் 20 மைக்ரான் அல்லது அதை விட குறைந்த அடர்த்தியை கொண்ட பொலித்தீன் பைகள் உற்பத்தி செய்வது தடைசெய்யப்பட்டது.

பட உதவி : http://envirocentre.wordjot.co.nz

பொலித்தீன் தாள்களும், ஸ்டைரொஃபோம் பெட்டிகளும் பெரும்பாலான உணவகங்களிலும் வீடுகளிலும் உணவை பொதி செய்வதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் நாடு முழுவதும் காணப்பட்ட கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டமானது மக்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணியாலான பைகளை பயன்படுத்துமாறு புதிய சட்டம் தெளிவுபடுத்தியது.

இந்த புதிய நடைமுறையால் 345 000 பேர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கக்கூடுமென பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசிடம் தெரிவித்தனர். எனவே தங்களுக்கு மேலதிகமாக இன்னும் சில காலம் அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக அரசதரப்பிடம் இருந்து பதில்கள் வந்தது. அதனடிப்படையில் குறித்த சட்டமானது செப்டெம்பர் 1 முதல் அமுலுக்கு வந்தாலும் 2018 ஜனவரி 1 வரையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது எந்தவித சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே குறித்த காலக்கெடுவுக்குள் பொருத்தமான மாற்றுவழிகளை பயன்படுத்த தொடங்குமாறும் அரசதரப்பிடம் இருந்து அறிவித்தல்கள் வழங்கப்பட்டது. இன்றைய தினத்தில் மேற்கூறிய தடைசெய்யப்பட்ட பொருட்களை உற்பத்திசெய்வது கண்டறியப்படுமாயின் சம்பந்தமுடைய நபருக்கு 2 வருட சிறை தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் இதனை தொடர்ந்து கழிவுகளை அப்புறப்படுத்தும் செயற்பாட்டிலும் முக்கியமான கட்டுப்பாடாக உணவுக்கழிவுகளும், மீள்சுழற்சி கழிவுகளும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றது.

#CleanSeas கடல் மாசடைத்தலுக்கு எதிரான கூட்டமைப்பு

பட உதவி : uk.lush.com

இலங்கையில் ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட அதிரடியான முடிவின் விளைவாக 2017 டிசம்பர் மாதம் 7ம் திகதி நைரோபியிலும், பாங்கொக்கிலும் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பின் CleanSeas செயற்திட்டத்தில் ஒரு அங்கத்துவ நாடாக இலங்கை இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போது இலங்கையுடன் ஓமான், தென்னாபிரிக்கா, மற்றும் சிலி ஆகிய நாடுகளும் புதிதாக அங்கத்துவம் பெற்றன. இந்த கூட்டமைப்பின் நோக்கமாக கடல்களில் குப்பை சேர்வதையும், சமூத்திரங்கள் மாசடைவதையும் தடுக்கும் வண்ணமாக பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றின் உற்பத்தியை தடைசெய்வதும், அவற்றை மீள்சுழற்சிக்கு உடப்படுத்துவதும் மற்றும் பாதுகாக்கப்பட்ட கடல் வளையங்களை உருவாக்குவதும் ஆகும்.

இக்கூட்டமைப்பின் அங்கத்துவ நாடாக இலங்கை பங்கேற்றத்தில் இருந்து 2030 ம் ஆண்டளவில் மாசில்லாத கடற்கரை மற்றும் சமுத்திரத்தை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கோள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நைரோபியில் நடைபெற்ற அமர்வில் இலங்கை உள்ளிட்ட புதிய நான்கு அங்கத்துவநாடுகளும் உலகம் முழுவதும் பல்லாயிரம் உயிர்களை பரித்தவண்ணம் இருக்கும் மோசமான சூழல் மாசடைவுகளுக்கு எதிராக போராடவுள்ளதாக அறிவித்தல்களை விட்டுள்ளது.

சூழல் மாசடைதல் என்ற தலைப்பின் கீழாகவே 2017 இன் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 40 நாடுகள் பங்கேற்றன. அரசாங்கங்கள் மட்டுமல்லாது தனிநபர்கள், நிறுவனங்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நீண்டகால பாவனை மற்றும் மலிவான விலையில் பொருட்களை பாதுகாப்பதற்கான ஒரு பொருளை தேடும்போதே பிளாஸ்டிக்கின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இருந்த போதிலும் இன்று அந்த பிளாஸ்டிக்கே நம்கழுத்தை நெறிக்கும் பெரும் சூழல் பிரச்சினையாக உருமாறியுள்ளது.

Related Articles

Exit mobile version