இயற்கை ஒரு விசித்திரமான விஞ்ஞானி. ஓர் உயிரினத்துக்கு எவ்வளவு பலத்தைக் கொடுக்கிறதோ, அதே அளவுக்குப் பலவீனத்தையும் கொடுத்துவிடுகிறது. அவற்றை முறையாகப் பயன்படுத்தி வாழ்வதும் வீழ்வதும் அவற்றின் செயற்பாடுகளைப் பொறுத்தது. உயிரினங்களின் உயிர்வாழும் தகைமைகள் சொல்லும் கதைகள் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. அதில் தேள் சற்று விசித்திரமானது என்றே சொல்ல வேண்டும்.
உலகில் மொத்தம் 2000 வகையான தேள்கள் உள்ளன. அவற்றில் 25 வகையான தேள்கள் வீரிய விஷத் தன்மை கொண்டவை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல வில்லாதி வில்லன் தேளுக்கு தன் உடல் தான் ஆயுதம். தேள் ஒரு வருடம் முழுவதும் உணவு இல்லாமல் வாழ முடியும். அதன் படைப்பு அவ்விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தேள் வளர்சிதை மாற்றத்தைக் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் திறன் தேள்களுக்கு உண்டு. தேள் புத்தக நுரையீரலை கொண்டிருப்பதால் அவை 48 மணிநேரம் நீருக்கு அடியில் மூழ்கி உயிர்வாழ முடியும். தேள் கடிமான வறண்டச் சூழலிலும் வாழக்கூடியது. இதற்கு அதன் உணவிலிருந்து கிடைக்கும் ஈரப்பதன் மட்டுமே அவசியம். ஒட்சிசனில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அவை உயிர்வாழ தேவைப்படுகின்றது. இயற்கை ஒரு விசித்திரமான விஞ்ஞானி. தேளுக்கு பன்னிரண்டு கண்களை கொடுத்த இயற்கை சரியான பார்வைத் திறனைக் கொடுக்காமல் விட்டுவிட்டது. தலை பகுதியில் இரண்டு கண்களும் நெஞ்சுப் பகுதியில் ஐந்து ஜோடிக் கண்களும் உள்ளன. விளைவு, இவை இரையை அதிர்வு மற்றும் வாசனையை வைத்துதான் கண்டுபிடித்தாக வேண்டும்.
தேள்கள் எந்த உயிரினத்தை இரையாகப் பிடித்தாலும், அவற்றைத் திரவ வடிவத்தில் மட்டுமே உட்கொள்ள முடியும். அதனால் பிடிக்கிற இரையை நன்கு கொறித்து திரவமாகவே உள்ளே அனுப்புகின்றன. தேள் இரையை உண்ணும்போது அதன் முகப் பகுதியை நன்கு கவனித்துப் பார்த்தால் கொடூரமான ஒரு விலங்கைப் போல காணப்படும். செரிமான திரவங்கள் அவற்றின் உணவில் ஊடுருவி பின்னர் திரவ வடிவில் சத்துக்களாக உறிஞ்சப்படுகின்றன.
இனப்பெருக்க நேரத்தில் ஆணுடன் பெண் இணைந்துவிடுகிறது. ஒருவித நடனம் மூலம் இனப்பெருக்கச் செயல் நடைபெறுகிறது. இனப்பெருக்க செயல் முடிந்ததும் ஆணுடன் பெண் தேள் இருப்பதை விரும்புவதில்லை. அவை தனித்துச் சென்று விடுகின்றன. பொதுவாக உடலுக்கு வெளியே முட்டைகளை அடைகாக்கும் பூச்சிகளைப் போல் இல்லாமல், தேள் நேரடியாகவே உடலுக்குள் குட்டிகளை உருவாக்குகிறது, இது விவிபரிட்டி (viviparity) என அழைக்கப்படுகிறது. முட்டையிட்டு பிறகு அவை இயற்கையான முறையில் முட்டையிலிருந்து வெளியே வருகிற முறை ஒவிபரிட்டி (Oviparity) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு ஆமை. இனப்பெருக்கம் செய்கிற பெண் தேள் ஒன்றிலிருந்து 100 குட்டிகள் வரை இடும். எல்லா குட்டிகளையும் தன்னுடைய முதுகில் சுமந்து கொண்டு வேறு இடத்துகு இடம் பெயரும். தேள்கள் தன்னுடைய முட்டைகளை அதன் உடலுக்குள்ளாகவே வைத்து அடைகாக்கின்றன. குட்டிகள் கருவில் உருவாகி, பிறகு புழுக்களாக உருமாறும் வரை அதன் உடலிலேயே இருக்கின்றன. குட்டிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அங்கிருந்தே அவற்றுக்குக் கிடைத்து விடுகின்றன. அதனால்தான் குட்டிகள் பிறந்து வளரும் வரை தாயின் முதுகிலே பயணிக்கின்றன. குறிப்பிட்ட காலம் வரை குட்டிகள் தாயோடு இருக்கின்றன. பிறகு தாயிடமிருந்து பிரிந்து சென்றுவிடுகின்றன. சர்வைவல் குறித்த எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாத பல குட்டிகள் மற்ற விஷப் பூச்சிகளுக்கு இரையாகி விடுகின்றன. Assassin bug என்றொரு பூச்சி வகை உள்ளது. அதற்குத் தமிழில் கொலையாளிப் பூச்சி என்று பெயர். இவை தனியாகப் பிரிந்து வருகிற தேள் குட்டிகளை சமயம் பார்த்துக் கொன்று, தின்று விடுகின்றன. குடும்பத்திலிருந்து பிரிந்துபோகிற எந்த உயிரினமும் தனித்துப் பிழைப்பதெல்லாம் அவற்றின் தனிப்பட்டப்பாடு.
தேளின் உடலில் அடிவயிற்றின் மேல் 5 பகுதிகள், மேல் நோக்கி வளைந்திருக்கும். அதன் இறுதிப் பகுதி டெல்சன் (telson) என்று அழைக்கப்படுகிறது. டெல்சன் என்பது விஷம் உற்பத்தி செய்யப்படும் இடமாகும். டெல்சனின் நுனியில் அக்குலியஸ் (aculeus) எனப்படும் கூர்மையான ஊசி போன்ற அமைப்பு உள்ளது. சுருங்கச் சொன்னால் இதுவே தேளின் ஆயுதக் கிடங்கு. இரையைப் பிடிக்க விஷமுள்ள கொடுக்கை ஒரு முறைப் பயன்படுத்தினால் விஷம் உருவாக ஒரு வாரக் காலம் ஆகும் என்பதால், இரையைப் பிடிப்பதற்கு அதன் முன் கொடுக்குகளைப் பயன்படுத்தவே அவை விரும்புகின்றன. முடியாத பட்சத்தில்தான் விஷக் கொடுக்கை பயன்படுத்துகின்றன. மனிதர்களைப் பயத்தின் காரணமாகவே தேள்கள் கொட்டுகின்றன. எல்லா தேள்களும் விஷம் கொண்டவைதான் ஆனால் சில தேள்கள் மட்டுமே உயிரிழப்புக்கு காரணமாகின்றன. இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகின்றது. கருந்தேள் இந்த வகையைச் சார்ந்ததுதான். உலகத்தில் இருக்கிற தேள் வகைகளில் Arizona bark என்கிற தேள் அதிக விஷம் கொண்டது. தேள் கொட்டி இறந்து போகிற 75 சதவிகித இறப்புகளுக்கு இந்தத் தேள்கள்தான் பொறுப்பு. தேள்களின் விஷம் சயனைட் விஷத்தை விடப் பல மடங்கு அதிகம் விஷம் கொண்டவையாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இரையைப் பிடிப்பதற்கு மட்டுமே தேள் தன்னுடைய விஷத்தைப் பயன்படுத்துகிறது. விஷம் கொண்ட சிலந்திகள், தவளை, பல்லிகள், பூச்சிகள்தான் தேளின் முக்கிய உணவு. உயிருக்கு அச்சுறுத்தல் என்று வரும்பொழுது தற்காப்புக்காக இவை மனிதர்களைக் கொட்டிவிடுகின்றன.
பொதுவாகத் தேள் இரவில் இரை தேடும் உயிரினம். தேள் புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் தன்மை கொண்டது. இந்த ஒளிரும் தன்மை தேள் ஆராய்ச்சியாளர்களின் பணியைக் கணிசமாகக் குறைக்கிறது. 100 வருடங்களுக்கு முன்னாள் சுமார் 600 தேள் இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தன. இரவில் ஒளிரும் தன்மை கொண்டதால் விஞ்ஞானிகள் இப்போது யு.வி. (Ultraviolet) விளக்குகளைப் பயன்படுத்தி 2,000 வகையான தேள்களைக் கண்டறிந்துள்ளனர். தேள் தீயில் சிக்கி இறந்து போயிருந்தால் அதனுடைய தோல் இருளில் ஒளிராது, மாறாக இயற்கையாக இறந்திருந்தால் பல ஆண்டுகள் ஆனாலும் ஒளிரும். கரப்பான் பூச்சியைப் போலவே, இந்த உயிரினங்களும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சைக் கண்டறிவதில் திறன் வாய்ந்தவை. மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது அணுசக்தித் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு இவற்றுக்கு மிக அதிகம். தேள் எந்தச் சூழ்நிலையிலும் உயிர் வாழக் கூடியவை. அதிகபட்சமாக 2 வருடங்களிலிருந்து எட்டு வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை. இவை 9 அங்குலம் வரை வளரக் கூடியவை. இவை நம் நாட்டிலும் இந்தியாவிலும் மட்டுமே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதய செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பு தடுக்கப்படுகின்றது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதில் மேலும் கூறப்பட்ட விடயம் இதயத்தின் இரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை உள்ளவர்களின் இதய இரத்த தமனிகளில் இரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் இரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சினை வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் (Professor Peter Weissberg of the British Heart Foundation) கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத்தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்கிறார்.