இலங்கையின் ஆதன தொழில்துறை மாற்றங்கள் பற்றி அறிவீர்களா?

போருக்கு பின்னான இலங்கையின் நம்பிக்கைக்குரிய பொருளாத வளர்ச்சியினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்திகொள்வதை அண்மைக்காலங்களில் கொழும்பை சுற்றி எழுந்துவரும் கட்டிடங்களும், தொடர்ச்சியாக ஆதனவியல் தொழிலில் (Real Estate Business) ஏற்படுகின்ற அதிகரித்த வளர்ச்சியும் காட்டி நிற்கின்றது.

படம் - lankapropertyweb.com

படம் – lankapropertyweb.com

உதாரணமாக, கொழும்பில் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பதாக இருந்த காணி ஒன்றின் பெறுமதிக்கும், தற்போதைய நிலையில் அதே காணியின் பெறுமதிக்கும் உள்ள வேறுபாடே இன்றைய நிலையை இலகுவாக வெளிக்காட்டிவிடும். இன்றைய நிலையில், கொழும்பும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வாயிலாக உள்ளன. இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும், மிகசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளான வேலைவாய்ப்பு, மருத்துவம் , அரச கருமங்கள் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ள கொழும்புக்கு அதிகம் வருகைதருகிறார்கள். கூடவே, இலங்கைக்குள் உட்பிரவேசிக்கின்ற எந்த சுற்றுலாப்பயணியுமே கொழும்பினுள் தங்காமல் தங்கள் சுற்றுலா பயணத்தை ஆரம்பிப்பதில்லை. இவ்வாறன ஒரு சூழ்நிலை வீடுகள், அடுக்குமாடிக்  குடியிருப்புக்கள், சுற்றுலா விடுதிகள் என்பவற்றுக்கான கேள்வியை இலகுவில் அதிகரித்துவிடுகிறது. இத்தகைய கேள்வி அதிகரிப்பு அதற்கான நிரம்பலையும், விலையையும் அதிகரிக்க செய்கிறது. இத்தகைய அதிகரிப்பு ஆரோக்கியமானதா ? நீண்டகாலத்தில் பேண்தகு அபிவிருத்திக்கு (Sustainable Development) ஆதாரமாக இது அமையுமா ? எனச் சிந்திக்க வேண்டும்.

ஆதனவியல் விலைகள் (Real Estate Prices)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்பகுதிகளில் குடியிருப்புக்களின் வாடகை மற்றும் விலைகளிலும் , வணிகம் சார்ந்த கட்டிடங்களின் வாடகை மற்றும் விலை வெறும் இரண்டே ஆண்டுகளில் (2014-2016) 20% விலை அதிகரிப்பைப் பெற்றிருக்கிறது.

Lamudi.lk Research Report 2015 (ALL LKR)

Lamudi.lk Research Report 2015 (ALL LKR)

மேற்குறித்த தரவுகள் அனைத்தும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் அமைக்கப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளினதும் , வீட்டு மனைகளினதும் விலைகளை பிரதிபலிக்கிறன. இவற்றுள் வெளிநாட்டு முதலீடுகளை அடிப்படையாக கொண்ட Altaire , Shangari La போன்ற ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்களும், உள்நாட்டு முதலீடுகளை கொண்ட கட்டிடநிர்மாண நிறுவனங்களின் ஆடம்பர மற்றும் மத்தியதர குடியிருப்புகளும் உள்ளடங்கும். இத்தகைய விலைகளைப் பார்க்கும்போது, இலங்கையின் சாதாரண சம்பாத்தியம் கொண்ட ஒரு குடிமகனால், கொழும்பிலும், அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் ஒரு வீட்டை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை எவ்வாறு கொள்வனவு செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அத்துடன், இலங்கை மெதுவாக செலவதிகரிப்பை கொண்ட நாடாக (Expensive Country) மாற்றமடைகிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
தொடர்ந்து, வணிக கட்டிடங்களுக்கான விலையை கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் ஆய்வு செய்கின்ற போது, பெரும்பாலான முதலீட்டாளர்கள் வணிகக்கட்டிடங்களை கொள்வனவு செய்வதிலும் பார்க்க வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. வணிக கட்டிடங்களைப்பொறுத்தவரையில், அதிகமான கேள்வி கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டத்திலேயே காணப்படுகிறது.

Lamudi Research Report 2015 (ALL Per LKR/Monthly)

Lamudi Research Report 2015 (ALL Per LKR/Monthly)

ஆடம்பர நிலை கட்டிடங்களில் World Trade Center , Orion City போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் வகைப்படுத்தபட்டுள்ளன. பெரும்பாலும் இத்தகைய கட்டிடங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வணிகத்தேவைக்கான இடங்களை பெற்றுக்கொள்ள, மத்தியதர பெறுமதியுடைய இடங்களை உள்நாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்திகொள்ளுகிறார்கள். இன்றைய நிலையில் , இலங்கை உள்நாட்டுத்திறன் தொழிலாளர்களை கொண்டு வெளிநாட்டு நிறுவகங்களின் வணிகச்செயன்முறையை முழுமையாக இங்கே செய்துகொள்ளகூடியவகையில் விருத்தியடைந்து வருகிறது (BPO HUB). இலங்கையை பொறுத்தவரையில் 2014ம் ஆண்டில் மாத்திரம் $944 மில்லியன் வெளிநாட்டு பணம் இத்தொழில்துறை மூலமாக இலங்கைக்குள் உட்கொணரப்படுள்ளது. கூடவே, இலங்கை அரசும் இத்தொழிற்துறைக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை வழங்குவது முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

Skyscraper in Srilanka. படம் - Altair.lk

Skyscraper in Srilanka. படம் – Altair.lk

சட்டங்களிலான மாற்றம்

எதிர்வரும் காலப்பகுதியில் சட்டங்களில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்களும் நிச்சயமாக ஆதனதொழிற்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தகூடியவனவாக அமையும். காரணம், 2013ம் ஆண்டுவரை இலங்கையில் எந்தவொரு வெளிநாட்டவரும் எந்தவித சட்டச்சிக்கலுமற்றவகையில், 100% வரியினை செலுத்தி ஆதனங்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும். ஆயினும், 2014ம் ஆண்டில் அமுலுக்குவந்த சட்டத்திற்கு அமைவாக, இலங்கை பிரஜாவுரிமை அற்ற எந்தநபரும் 99 வருடகால குத்தகை அடிப்படையில் மாத்திரமே ஆதனங்களை பெற்றுக்கொள்ள முடியும். இதனால், பெருபாலும் குடிபெயர்ந்த இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை ஊடாக ஆதனங்களை கொள்வனவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள். இதன்மூலமாக, வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களையும், அவர்களது பணவிபரங்களையும் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை பெரிதும் வெற்றியடைந்து இருக்கிறது.

வளங்களின் முறையான ஆட்சி

இலங்கையில் ஆதன தொழிற்துறையில் ஏற்படுகின்ற மாபெரும் வளர்ச்சியுடன் இணைந்ததாக, இலங்கைக்கு ஏற்படுகின்ற மிகப்பெரும் பிரச்சனை , தொழிற்துறைக்கான வளங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதே! கட்டிட தொழிலில் நிர்மாண நிலையில் சக்தி மேலாண்மை (Energy Management), கழிவு மேலாண்மை (Waste Management) , மீள்சுழற்சி பயன்பாடு (Recycle Management) என்பனவும், கட்டிட நிர்மாணத்தின் பின்பு பசுமைக் கட்டிட எண்ணக்கருவும் (Green Building Concept) முக்கியத்துவம் பெறுகிறது. இதன்மூலமாக, ஆடம்பர குடியிருப்பின் சாதாரண சக்திப்பயன்பாட்டிலிருந்து 35%வீதமான காபன் பயன்பாட்டையும், 40% வீத சக்திப்பயன்பாட்டையும் , 50% நீர் பயன்பாட்டையும் குறைக்க முடியும்.

Lamudi Research Report ஆதாரத்தின்படி, இலங்கையில் குடியிருப்புக்களை வாங்க விரும்புவர்களும் , சுற்றுலா பயணிகளில் 64% மானவர்கள் முறையான வளக்கையாளல் கொண்ட பசுமைக் கட்டிட எண்ணக்கருவுக்கு அமைவான குடியிருப்புக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவந்துள்ளது.

எனவே, கட்டிட நிர்மாணிப்பாளர்களும் இத்தகைய எண்ணக்கருவை முன்னிறுத்தி தங்களது கட்டிடங்களை அமைப்பதன் மூலாமாக, சந்தையில் அதிக அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சந்தை கேள்வி – நிரம்பல் சமநிலை

தற்போதைய கட்டிட நிர்மாணிப்புக்களின் போக்கின் அடிப்படையில், எதிர்வரும் 2018ம் ஆண்டில் 6,000 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கள் நிர்மாணிக்கபட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய பெரிய எண்ணிக்கையிலான ஆடம்பர வசதிகளைக்கொண்ட குடியிருப்புக்களை கொள்வனவு செய்யக்கூடிய வாடிக்கையாளர்களை இலங்கை கொண்டுள்ளதா என்கிற கேள்வி எழுமாயின், ஆம் அத்தகைய வாடிக்கையாளர்களை இலங்கை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொண்டுள்ளது என்பதே உண்மை. ஆயினும், மிகப்பெரிய தொகைக்கு கட்டிடங்களை கொள்வனவு செய்பவர்களில் சகலருமே அவற்றை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துபவர்கள் அல்லர். இரண்டாம் சந்தையில் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதன் மூலாமக வருமானத்தை பெற விரும்புவர்களாகவே  இருப்பார்கள். இவர்களுக்கான சந்தை எதிர்காலத்தை எவ்வாறு அமையப்போகிறது என்பதே முக்கியமானது.

இலங்கை அரசு நியாயமான விலைக்கொள்கைகளை அமுல்படுத்தல், சுற்றுலா பயணிகளுக்கு உகந்த விலைமுறையில்  அடுக்குமாடி குடியிருப்புக்களையும், சுற்றுலா விடுதிகளையும் பெற வழிசெய்தல் போன்றவற்றின் மூலமாகவே இத்தகைய சந்தையின் வியாபாரத்தை நிலையாகப்பேணமுடியும். இல்லையெனில், மிகச்சில வருடங்களில் கேள்விக்கு அதிகமான கட்டிடங்களை கொண்டதாக, வருமான மூலங்களை இழந்த செலவுமிக்க நாடாக இலங்கை மாறும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

Exit mobile version