ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்காணல் ஒன்றைக் காண நேர்ந்தது. தனது மிகச் சிறு வயதில் தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, அதைத் தொடர்ந்த மருத்துவமனை அலைச்சல்கள் என மிகவும் சிக்கலான ஒரு வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் ஆழமாகத் தைத்தது.

“அந்தச் சிறு வயதில் வாழ்க்கையின் கஷ்டத்தைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?” எனும் கேள்விக்கான அவரது பதில்: “அப்போது அது கஷ்டம் என்பது தெரியாது. அதுதான் வாழ்க்கை என்று நினைத்தேன்.”

எவ்வளவு கசப்பான உண்மை? ஒரு குழந்தையைச் சுற்றி இருப்பது மட்டும்தானே அதனுடைய உலகம். அதைத் தாண்டிய பரந்து விரிந்த உலகத்தைக் காண வாய்ப்புக் கிடைக்கும் வரை அது மட்டும்தான் தன் உலகமாகக் கருதப்படும். மாடிப்படியின் கீழ் இருக்கும் ஒரு சின்ன அலமாரியில் சிறு வயதில் இருந்து வாழும் சிறுவனுக்கு அதுமட்டும்தானே உலகம்?

அன்பும் நம்பிக்கைக் கீற்றும்

கட்டுப்பாட்டுடன் மட்டுமே வாழக் கூடிய வாழ்க்கைதான் ஹாரி உடையது. முதன்முறை தன் நண்பனாகிய ரான் வீட்டிற்குச் செல்லும்போது, அப்பாவுடன் சகஜமாகப் பேசும் மகன்களை வியப்புடன் பார்க்கிறான். “கரிந்து போன சாப்பாட்டைத் தனக்குத் தந்திருக்கலாமே” என்று சாதாரணமாகச் சொல்கிறான். இந்தக் குழந்தையின் மனநிலை என்னவாக இருக்கும்? தன்னைத் துன்புறுத்துபவர்களை, தன் கஷ்டங்களுக்குக் காரணமானவர்களை அவன் பழிவாங்க நினைப்பானா மாட்டானா?

இக்கேள்விக்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்ற இரு பதில்களும் பொருந்தும். தான் சந்திக்கும் மனிதர்கள், தன் நண்பர்கள், தான் வாழும் சூழல் போன்ற பல்வேறு கூறுகள்தான் ஒரு மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. ஹாரி பாட்டரில் ஹாரியும் வோல்டிமோர்ட்டும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குழந்தைப் பருவத்தையே கடந்து வந்திருக்கின்றனர். ஆனால், இருவரும் முற்றிலும் எதிர்ரெதிர் நிலைகளில் நிற்பவர்கள். இதற்கான முதன்மையான காரணமாக ரௌலிங் முன்வைப்பது: அன்பு. ஒரு பெண்ணுக்கு ஒருவன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது; தன் மந்திர சக்தியைப் பயன்படுத்தி அவனை அடைகிறாள். அதன் பிறகு, அவனுக்குச் சுயநினைவு வந்ததும், அவளை விட்டுச் செல்கிறான். விருப்பமில்லாத, காதலில்லாத, அன்பில்லாத ஓர் உறவில் பிறந்த குழந்தையே வோல்டிமோர்ட்.

பட உதவி :express.co.uk

தான் பிறந்ததும் தாய் இறந்து போகிறாள். வோல்டிமோர்ட்டுக்கு அன்பு செய்ய யாருமே இல்லாமல் போகிறார்கள். அவன் பெற்றோர் பற்றிய கசப்பான கதைகளே அவனிடம் மிச்சமிருக்கின்றன. அவன் படிக்கச் செல்லும் இடத்திலும், நட்போ அன்போ கிடைக்காமல், அவன் திசை மாறுகிறான். அதிகாரத்தின் மீது காதல் கொள்கிறான். அவனுள் உணர்வுகளுக்கு இடமில்லாமல் போகிறது. தனக்குக் கிடைத்திருக்கும் ‘பக்தர்கள்’ மாதிரியான கூட்டத்தை வைத்துக்கொண்டு இருள் கவியும் பாதையில் பயணிக்கிறான். உலகையே தன் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டு வர நினைக்கிறான். அன்பிற்கு மாற்றான பாதையாக அதிகாரத்தைத் தெரிவு செய்கிறான்.

விருப்பமில்லாமல் வாழும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு மனோரீதியான பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் தவறான பாதையில் செல்வது கிடையாது. காரணம், ஓர் இடத்தில் இல்லாத அன்பை, பிரிதொரு இடத்தில் பெறுகிறார்கள். வோல்டிமோர்ட்டுக்கும் அப்படியொரு அன்பு கிடைத்திருந்தால், கதையே மாறியிருக்கலாம். ஹாரியின் பெற்றோரும் இறந்திருக்கத் தேவையில்லை!

பட உதவி: aminoapps.com

ஹாரியின் பெற்றோர், குறிப்பாக அம்மாவின் மரணமே ஹாரியின் வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கதைக்களத்தில் அவளின் அன்பு ஹாரிக்கு ஒரு கவசம் மாதிரித் திகழ்ந்தது. ஹாரிக்கு மனோரீதியான கவசமாகவும் அது திகழ்ந்தது. ‘தன் அம்மா தனக்காக மட்டும் இறக்கவில்லை; அனைவரின் நலனுக்காகவும் உயிர் விட்டிருக்கிறாள்’ என்ற எண்ணமே அவன் பாதையில் ஒற்றை நட்சத்திரமாக ஜொலித்தது. ஒருவேளை ஹாரிக்கு, ரான் மற்றும் ஹெர்மாய்னியின் நட்பும், ஹாக்ரிட்டின் கபடமற்ற அன்பும் கிடைக்காமல் போயிருந்தால், அந்த நட்சத்திரத்தின் ஒளி வேகமாக மங்கியிருக்கக் கூடும். குழந்தைகளுக்கு எப்போதுமே தேவைப்படுவது இந்த நம்பிக்கைதான். வாழ்க்கையை எதிர்நோக்கும் ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று.

பெறுதலும் தருதலும்

மேற் சொன்னவற்றை கொண்டு, பின்வரும் கதாபாதிரங்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் கவனியுங்கள்.

ஹாக்ரிட்
பட உதவி : pottermore.com

ஹாக்ரிட் (Hagrid) சிறு வயதிலேயே அம்மாவை இழந்திருந்தாலும், அன்பையும் நம்பிக்கையையும் அவன் அப்பா அளித்தார். அம்மாவின் இன்மை அவனுள் தாய்மையை உருவாக்கியது. பிறருக்கு அளவற்ற அன்பைக் கொடுத்த கதாபாத்திரங்களில் முதன்மையானது ஹாக்ரிட்தான். அம்மாவாகவும் இருக்கும் அப்பாக்களின் குழந்தைகள் பிறர் உணர்வுகளுக்கு சென்சிட்டிவ் ஆகவே இருப்பார்கள். அதேவேளையில், அம்மாவை இழிவுபடுத்தும் அப்பாவைக் கண்டு வளரும் குழந்தைகளுக்குள் இயல்பாகவே ஒருவித குற்றவுணர்வும், கோபமும், ஆற்றாமையும் நிறைந்திருக்கும். காலப்போக்கில், அது பிறர் மீது திசைதிரும்பும்.

ஸெவ்ரஸ் ஸ்னேப்
பட உதவி : pottermore.com

ஸெவ்ரஸ் ஸ்னேப் (Severus Snape) தனது குழந்தைப் பருவம் முழுவதும், தன் அப்பா – அம்மாவை இழிவுபடுத்துவதைக் கண்டு வளரும் குழந்தையாக இருந்தான். மேலும், அவன் தோற்றத்தை பலரும் வெறுத்தனர். தனக்குள்ளே ஒரு தாழ்வுமனப்பான்மை வளர்ந்தது. அதை அதிகாரத்தின் பக்கம் திசை திருப்பினான். தனக்குக் கீழ் இருப்பவர்களை சிறுமைப்படுத்துவதில் ஒரு திருப்தி. தான் சந்தித்த அவமானங்களில் இருந்து தப்ப பலரும் தேர்ந்தெடுக்கும் வழி இதுவாகவே உள்ளது.

ரான் வீஸ்லி
பட உதவி : pottermore.com

குழந்தைப் பருவத்தில் சந்திக்கும் அவமானங்கள் ஒருபுறம் இருக்க, கவனிக்கப்படாத குழந்தைகளின் நிலை வேறு. அறிவாளிகளான அண்ணன்கள், அனைவருக்கும் செல்லமான ஒரே தங்கைக்கு மத்தியில் இருக்கும் ரான் ஒரு கவனிக்கப்படாத குழந்தையாகத் தோன்றுகிறான். நண்பர்களிலும் பிரபலமான ஹாரி ஒருபுறம், படிப்பில் சுட்டியான ஹெர்மாய்னி ஒருபுறம், நடுவில் ஒன்றுமில்லாமல் நிற்பதாய் நினைத்துக் கொள்கிறான். தனக்குள் திறமை இருந்தும், சரியான நேரத்தில் அதை வெளிப்படுத்த முடியாமல் போக, அவனது தாழ்வுமனப்பான்மை காரணமாகிறது. தாழ்வுமனப்பான்மை என்பது கர்வம் மிகுந்த பெற்றோரால்கூட ஏற்படலாம். அதாவது, அனைத்தையும் தீர்மானிக்கும், கட்டளையாக இடும் பெற்றோரின் குழந்தைகள் இப்படி குறுகிப் போகிறார்கள்.

நேவில்லே லாங்பாட்டம்
பட உதவி : pottermore.com

நேவில்லே-வின் (Neville) பாட்டி அப்படி அவனது வாழ்க்கையின் பெரும்பங்கு ஆக்கிரமித்திருந்தாள். அவனின் இயல்பே பயமாகிப் போனது. தைரியத்தின் உச்சகட்ட செயல்களைச் செய்த பிறகும்கூட, அவன் அதே மாதிரிதான் இருந்தான். அனைத்தும் கிடைத்து வளர்பவர்கள், தங்கள் வாழ்க்கையைக் குறித்த தெளிவோடு இருக்கிறார்கள், ஹெர்மாய்னி போல!

இவையெல்லாம் எப்படி நம் செயல்களில் பிரதிபலிக்கிறது? ஒரு காட்சியை எடுத்துக்காட்டாக வைக்கிறேன். யாருக்குப் பிரச்சனை என்றாலும், முதல் ஆளாக, தன் பாதுகாப்பைக் கூட பொருட்படுத்தாமல் வந்து நிற்பான் ஹாரி. அவனுக்கு, தான் ஒரு சேவியர் என்ற நினைப்பு உள்ளதாக ஹெர்மாய்னியே சுட்டுவாள். ஆம், ஹாரிக்கு அப்படியான எண்ணம் அடிமனதில் இருந்ததற்கான காரணம், அவனுடைய குழந்தைப் பருவம். தன்னைக் காப்பாற்ற 11 ஆண்டுகள் கழித்து ஹாக்ரிட் வந்ததும் அவன் அடைந்த மகிழ்ச்சி அவன் மனதில் இருந்தது. அதைப் பிறருக்கும் வழங்க நினைத்தான். நாம் எதைப் பெறுகிறோமோ, நம்மிடம் எது இருக்கிறதோ அதைத்தானே நம்மால் கொடுக்க முடியும்?

பட உதவி: http://geeksoncoffee.com

நம் குழந்தைப் பருவம், நம் வாழ்க்கையின் போக்கையே தீர்மானிக்கிறது. அதிலும், முக்கியமாக பெற்றோரின் பங்கு. நாம் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், பெரும்பாலும் நம் வாழ்வில் நேரடியான தாக்கத்தைச் செலுத்துபவர் அம்மா. ஆனால், நம் வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பது என்னவோ அப்பாவாகவே இருக்கிறார்.

(ஜாலம் நீளும்…)

> முந்தைய அத்தியாயம்:

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்: குறுந்தொடர் – அறிமுகம்
ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!

Related Articles

Exit mobile version