சட்டக் கல்லூரியா? சட்ட பீடமா?

“இப்போது நீங்கள் எங்கே படிக்கிறீர்கள்?”

“சட்டக் கல்லூரியில்…”

“அதாவது கொழும்பு பல்கலைக்கழகத்தில்தானே?”

சட்டத்தரணியாகும் நோக்கில் இலங்கை சட்டக்கல்லூரியில் கற்கும் ஒருவர், அடிக்கடி எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினையே இது. சட்டத்துறை குறித்த பின்னணியற்ற, சட்டத்துறை குறித்த புரிதலற்ற ஒருவர் சட்டக் கல்லூரி மற்றும் சட்ட பீடம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு குறித்து சிறயளவு அறிவேனும் இல்லாமல் விடுக்கும் இக்கேள்விகள் கவலைக்குரியநவாகும்.

இலங்கை சட்டக் கல்லூரி (Sri Lanka Law College) என்பது கொழும்பு பல்கலைக்கழகத்துடன் எந்தவொரு தொடர்புமற்ற ஒரு நிறுவனமாகும். அது சட்டக் கல்வி சபையின் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற “சட்டத்தரணி (Attorney-At-Law)” என்ற தொழில் தகைமையை (Professional Qualification) வழங்குகின்ற ஒரு சுயாதீன நிறுவனமாகும். அதேவேளை, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம், சட்ட இளங்கலை (Bachelor of Law or LL.B) என்ற கல்வித் தகைமையை (Academic Qualification) வழங்குகின்றது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம் மட்டுமன்றி, பேராதனை பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் சட்ட இளங்கலை பட்டத்தை வழங்குகின்றன.

வரலாறு

1873 இல் ஸ்தாபிக்கப்பட்ட சட்ட கல்வி சபை (Council of Legal Education), இலங்கையின் முதலாவது தொழில் கல்வி நிறுவனமாக இலங்கை சட்டக் கல்லூரியை 1874 இல் ஸ்தாபித்தது. 1911 இல் கட்டப்பட்ட சட்டக் கல்லூரியின் பிரதான கட்டிடம், இலங்கை கட்டிடக் கலைஞர்களின் நிபுணத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்ற மிகவும் விசேடமான ஓர் கட்டிடமாகும். அது புதுக்கடை நீதிமன்றத் தொகுதிக்கு அருகாமையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரியின் தற்போதைய அதிபராக இந்திரா சமரசிங்க கடமை புரிகிறார்.

இலங்கை சட்டக் கல்லூரி (roarsinhala.lk)

இலங்கை சட்டக் கல்லூரி (roarsinhala.lk)

இப்போது கொழும்புப் பல்கலைக்கழகத்திலுள்ள 7 பீடங்களில் ஒன்றான சட்ட பீடம், கலைப் பீடத்தின் ஒரு பிரிவாக 1947 இல் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல் அது ஒரு தனியான பீடமாக கருதப்பட்டது. கொழும்புப் பல்கலைக்கழக வளாகத்திலேயே அமையப்பெற்றுள்ள சட்ட பீடத்தின் பீடாதிபதியாக டபிள்யூ. இந்திரா நானாயக்கார கடமை புரிகிறார்.

சட்ட பீடம் - கொழும்பு பல்கலைக்கழகம் (law.cmb.ac.lk)

சட்ட பீடம் – கொழும்பு பல்கலைக்கழகம் (law.cmb.ac.lk)

சட்டக் கல்வி

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, சட்டக் கல்லூரி ‘சட்டத்தரணி’ என்ற தொழில் தகைமையை வழங்குகின்றது. சட்டக் கல்லூரியில் மூன்று வருடங்கள் கற்கையை மேற்கொண்டு, இன்னும் ஆறு மாதங்கள் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் தன்னார்வலராக செயற்பட்ட ஒருவருக்கு, உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்ய முடியும்.

சட்ட பீடத்தில் கற்கும் ஒருவருக்கு, சட்டத்தரணியாவதற்கு இதனையும் விட கூடுதலான காலம் எடுக்கின்றது. அவ்வாறான ஒருவர் நான்கு வருடங்கள் ‘சட்டப் பட்டப்படிப்பை’ மேற்கொண்டு, அதன் பின்னர் சட்டக் கல்லூரியின் இறுதி பரீட்சையை எழுத வேண்டும். பின்னர், இன்னும் ஆறு மாதங்கள் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் தன்னார்வலராக செயற்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்ய முடியும்.

சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்யாத சட்டப் பட்டதாரி ஒருவருக்கு, இலங்கையின் எந்தவொரு நீதிமன்றிலும் இன்னுமொருவருக்காக ஆஜராகி, விளக்கமளிக்க முடியாது. அத்தோடு,சட்டத்தரணியாகியதுமே காணி உறுதிகள் எழுதவும் (Conveyancing)முடியாது. அதற்கு நொத்தாரிசு பரீட்சை அல்லது சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் காணி உறுதி எழுதும் பாடத்தில் சித்தியடைந்திருத்தல் மற்றும் காணி உறுதி எழுத எண்ணியிருக்கும் மொழியில், சாதாரண தரப் பரீட்சையில் சாதாரண சித்தி போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும். பின்னர், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடமிருந்து, நியமன அனுமதிப்பத்திரம் மற்றும் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்திடமிருந்து நொத்தாரிசாக பணியாற்றுவதற்கான வருடாந்த சான்றிதழ் என்பன பெறப்படல் வேண்டும்.

உள்நுழைவு

சட்டக் கல்லூரி அனுமதிக்கான நுழைவுப் பரீட்சையை (Law Entrance) நடத்துவதன் மூலமே, பல வருடங்களாக சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். உயர்தரப் பரீட்சையில் எந்தப் பிரிவிலேனும் (அழகியற் கலைகள் தவிர) மூன்று எஸ். சித்திகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஏதேனும் ஒரு மொழியில் சி. சித்தி பெற்ற ஒருவர், இந்த நுழைவுப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.

(belarustourism)

பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய குறைந்தளவு இஸட் புள்ளி 1.9389 ஆகும். (belarustourism)

2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி, சட்டக் கல்லூரி அனுமதிக்கான பரீட்சை ‘மொழி’, ‘பொது அறிவு மற்றும் நுண்ணறிவு சோதனை’ என்ற இரு வினாத் தாள்களைக் கொண்டமைந்துள்ளது. இந்த பரீட்சையை எழுதுவோர், ஆங்கிலம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் என்று இரு மொழிகளிலும் பரீட்சையை எழுதலாம். 2017 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை, கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஞாயிறன்று நடைபெற்றது.

சட்ட பீடத்துக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, வழமைபோன்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெறுகின்றது. உயர்தரத்தில் எந்தப் பிரிவிலேனும் (அழகியற் கலைகள் தவிர) உயர் புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வருடம் கொழும்பு மாவட்டத்தில், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய குறைந்தளவு இஸட் புள்ளி 1.9389 ஆகும்.

எனவே, உயர்தரப் பரீட்சையில் பெற்ற பெறுபேறுகளைக் கொண்டு பல்கலைக்கழகம் செல்ல முடியாது போனோருக்கும் சட்டத்தரணியாகும் வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு, முயற்சியும் அர்ப்பணமுமே தேவைப்படுகின்றது.

தமிழாக்கம் – அஷ்கர் தஸ்லீம்

Related Articles

Exit mobile version