தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்

கேரளா தற்போது வரலாறு காணாத மழைப்பொழிவினாலும் வெள்ளத்தினாலும் தவித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கடந்த வியாழனன்று (16/08/2018) மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்றியுள்ளனர். மீட்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைவதற்கு 8 நாட்கள் ஆனது.

இழந்த அனைத்தையும் மறுசீரமைப்பு செய்து கட்டி முடிக்க எப்படியும் மேலும் ஒரு ஆண்டு தேவைப்படலாம். இங்கே மலையாள மக்களின் உந்துசக்தி அனைத்தையும் சரி செய்துவிடும் என்றே நம்புவோம். மலையாள மக்களுடன் சேர்ந்து இந்த வெள்ளத்தில் உயிர் சேதாரங்களை குறைக்க பெரிதும் உறுதுணையாக இருந்தது தேசியப் பேரிடர் மேலாண்மை குழு தான். காங்கிரஸ் உட்பட  பல்வேறு எதிர் கட்சிகள் இந்த வெள்ளத்தினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்க, தேசிய பேரிடம் மேலாண்மை என்றால் என்ன? அது எங்கனம் செயல்படுகிறது? இதுவரை தேசியப் பேரிடர் மேலாண்மையால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வோம். 

மக்கள் தொகை நெருக்கம், காலநிலை, மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்து இந்த படைகள் இந்தியாவெங்கும் 12 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கௌஹாத்தி (அசாம்), கொல்கத்தா(மேற்கு வங்கம்), ஒடிசா, காந்திநகர் (குஜராத்), காசியாபாத் (உத்திரப்பிரதேசம்), புனே (மகாராஷ்ட்ரா), பாட்டிண்டா (பஞ்சாப்), பட்னா (பிஹார்), விஜயவாடா (ஆந்திரபிரதேசம்), வாரணாசி (உத்திரப் பிரதேசம்) இட்டாநகர் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகிய இடங்களில் பட்டாலியன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரக்கோணத்தில் ஒரு பட்டாலியன் அமைக்கப்பட்டுள்ளது. 

இப்படையில் துணை ராணுவ வீரர்கள் இருப்பார்கள். பேரிடர் காலங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் காவல்படையினர் ஆகியோரும் களத்தில் சென்று பொது மக்களுக்கு உதவி புரிவார்கள். இயற்கை பேரிடர் மட்டுமன்றி அணு ஆயுதப் பேரழிவு, ரசாயனப் பேரழிவு ஆகியவற்றிலும் பங்கேற்பார்கள். 

பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் தேசிய பேரழிவு மீட்புப் படை அமைக்கப்பட்டது. பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005ல் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது உருவாக்கப்பட்டது. மசோதா மாநிலங்களவையில் நவம்பர் 28ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் டிசம்பர் 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக பிரதம அமைச்சரே பதவி வகிப்பார். அக்குழுவில் மொத்தம் 9 நபர்கள் இடம் பெற்றிருப்பார்கள். அவர்களின் பணிக்காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே. தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் 2005ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 இயற்றப்பட்டவுடன், ஆணையத்தின் முக்கியப் பணிகள் மற்றும் பொறுப்புகள் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கியத்துவத்தையும் இச்சட்டம் விவரிக்கிறது. இச்சட்டத்தின் 14வது சரத்துப் படி ஒவ்வொரு மாநிலமும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை வைத்திருக்க வேண்டும். அதன் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். அக்குழுவின் உறுப்பினர்களை முதலமைச்சரே தேர்வு செய்வார். ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் மாவட்டத்தின் கீழும் பேரிடர் மேலாண்மை குழு இருக்கும். அதன் தலைவராக மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பார். சில சமயங்களில் துணை நிலை ஆணையர் அல்லது மாஜிஸ்த்ரேட்டிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும். 

2001ல் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக முதல்முறையாக தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுதற்கான காரணங்கள் உருவாகின என்று கூறலாம். 1995 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை நிலையமாக விளங்கிய அரசு நிறுவனம், 2005ல் தேசிய பேரிடர் மேலாண்மைக்கான பயிற்சி நிறுவனமாக மாற்றப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல், “பேரிடர் மேலாண்மை தொடர்பான கல்வி மையமாக” செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவில் பேரிடர் என்ற வார்த்தைக்கான அர்த்தமே குஜராத் பூகம்பம் தான் மக்களுக்கு உணர்த்திச் சென்றது. 

அதற்கு முன்பு அப்படியான இயற்கை பேரிடரை இந்தியா கண்டதில்லை. இந்த இயற்கை சீற்றத்திற்கு பின்பு தான் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. குஜராத் பூகம்பம் போது நிதிகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்களாக குஜராத் வந்து சேர்ந்தது. 

ஆனால் மீட்புப் பணியை உள்ளூர் மக்களே மேற்கொண்டார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அரசாங்கமே செய்து வந்தது. அவர்கள் தான் கட்டிட இடர்பாடுகளை களைந்து புதிய குஜராத்தினை கட்டி எழுப்பினார்கள். 

தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் நிலவிய போது, அது தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் அனைத்தும் மாணவர்கள் மூலமாக மக்களிடம் சென்று சேர்க்கப்பட்டது.

Gujarat Earthquake (Pic: yahoo)

ஆணையத்திலும் சில இடர்பாடுகள்

இச்சட்டம் இயற்றப்பட்ட பின்பு,  ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், மாநில அரசுகளின் தொய்வு நடவடிக்கைகளால் பல மாநில அரசுகள் அச்சட்டத்தினை பின்பற்றவில்லை. அதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மற்றும் மகாராஷ்ட்ரா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ஒரு முறை கூட இவ்வமைப்பின் தேசிய செயற்குழு கூடியது இல்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Kerala Rescue (Pic: dnaindia)

நிதி ஒதுக்கீடு

பான் மசாலா, சிகரெட், மற்றும் புகைப்பான்கள் விற்பனையில் இருந்து பெறப்படும் வரியில் இருந்து ஒரு பகுதி பெறப்பட்டு பேரிடர் மேலாண்மைக்கான நிதியானது திரட்டப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தேசிய பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படும். மேலும் தனிநபர் அல்லது நிறுவனம் அதற்கான நிதியை அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக இந்தியாவில் ஏற்பட்டு வரும் பேரழிவுகளை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவிப்பதில்லை. காரணம், அப்படி அறிவிக்கப்பட்டால் மாநில அரசு கேட்கும் உதவித் தொகை அனைத்தையும் மத்திய அரசு அப்படியே அளிக்க வேண்டும் என்பதால் தான் இயற்கை பேரழிவு என்று கூறிவருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் பணியில் வீரராக பதவி வகிப்பவர்கள் மற்ற அரசு பணியில் எப்படி சேர்கிறார்களோ அப்படியே தேர்வுகள் மற்றும் உடல் தகுதியை வைத்தே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

2004ம் ஆண்டிற்கு முன்னதான காலத்தில் இந்தியாவில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் வெளிநாடுகள் பண உதவி செய்வது வழக்கம். ஆனால் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பேரிடர் நிதி வாங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டது. காரணம் உலக அரங்கில் இந்தியா ஏழை நாடாக சித்தகரிக்கும் செயலாக அது இருக்கும் என்று அவர் நினைத்திருக்கிறார். 

ஆழிப்பேரலை வந்த சமயங்களில் கூட வெளிநாட்டில் இருந்து வந்த நிதியினை வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளனர். அதன் பின்பு ஏற்பட்ட காஷ்மீர் வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம் ஆகிய சமயங்களிலும் இந்தியா வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறவில்லை. ஆனால் காஷ்மீரில் வெள்ளம் வந்த அதே சமயம் பாகிஸ்தானிலும் பெரும் வெள்ளம் சூழந்தது. அச்சமயத்தில் பாகிஸ்தானிற்கு நிதி உதவி அளித்திருக்கிறது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கத்து. 

இதில் நாம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், வெளிநாட்டு அரசின் மூலம் வரும் நிதியை இந்திய அரசு ஏற்பதில்லை. மாறாக, நிதியுதவி வழங்குவது, தனி நபரோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிதியாக இருந்தால் தற்போது ஏற்கப்படுகின்றது.

Kerala Rescue Operation (Pic: pmindia)

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் அசர வைத்த பணிகள்

இதற்கு வேறெங்கும் சான்றுகள் தேட வேண்டிய அவசியம் இல்லை. சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் சரி, அதன் பின்னால் ஏற்பட்ட வர்தா புயலின் போதும் சரி இப்படை வீரர்களின் பங்கு அளப்பரியது.

பருவநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்னரே தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்கும் அவர்கள் வருத்தப்படுவதில்லை.

உத்திரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் கடந்த 2013ம் ஆண்டு வெள்ளப் பெருக்கும் மண் சரிவும் ஏற்பட்டது.

கேதர் நாத் புனித வழிப்பாட்டுத் தலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டு தவித்தனர். விமானப்படை, தரைப்படை சேவையுடன் சேர்ந்து பணியாற்றிய மீட்புக் குழுவினர் சுமார் 1,00,000 நபர்களை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பத்திரமாக மீட்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை வெளியிட்ட அறிக்கையின் படி சுமார் 13 மாவட்டங்கள் முற்றிலும் இந்த மழை வெள்ளாத்தால் சேதாரமாகின.

வேறெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது மீட்புக் குழு. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானது. அதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தனை முயற்சிகள் மேற்கொண்டும் சுமார் 6000க்கும் மேற்பட்டவர்கள் அவ்வெள்ளத்தில் சிக்கி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு காஷ்மீரில் மழை பெய்து வெள்ளக்காடானது. ஒரே நாளில் மட்டும் 200 முதல் 300 மில்லி மீட்டர் வரை பெய்த மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காஷ்மீர்  விரைந்தனர்.

மின் இணைப்பு, அலைபேசி இணைப்பு, பாலங்கள், ரயில் பாதைகள், சாலை வசதிகள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனித்த தீவாக மாறியது காஷ்மீர்.

சிறிதும் காலம் தாமதிக்கமால் விரைந்த மீட்புக் குழுவினர் 8 நாட்கள் இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டனர், சரக்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு பொதுமக்களை மீட்டனர் மீட்புக் குழுவினர்.

இந்திய கப்பற்படை மற்றும் தரைப்படை 224 படகுகளையும், தேசியப் பேரிடர் மீட்புப் படை 48 படகுகளையும் இந்த மீட்புப் பணியில் பயன்படுத்தினர்.

Active Rescuing (Pic: dawn)

அரசு முறையான பாதுக்காப்புடன் மக்களை காக்கிறதா என்ற சந்தேகம் வலுப்பெறும் சூழல்களிலெல்லாம், அப்படியெல்லாம் இல்லை என்று மக்களுக்கென முதலில் களம் காண்கிறவர்கள் மீட்புக் குழுவினர் தான். மக்களை மீட்பது மட்டுமல்லாமல், சாலைகளை சீரமைத்தல், இணைய வசதி, தொலைபேசி வசதி, மின்வசதி ஆகியவற்றையும், மக்களின் அன்றாடத் தேவைகளை உறுதி செய்யும் பெரும் பொறுப்பினையும் தங்களின் முதுகில் தூக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள் பேரிடர் மீட்புக் குழுவினர்.

Web Title: History Of National Disaster Response Force

Featured Image Credit: dnaindia

Related Articles

Exit mobile version