கூந்தல் பராமரிப்பின் போது நாம் ஏன் சமையல் எண்ணெய்களை தவிர்க்க வேண்டும்?

பெண்களின் கூந்தலின் இயல்புகள் பற்றி வாதம் புரிய தெய்வங்களே பூமிக்கு வந்த கதைகளை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் (நடிகர் திலகத்தின் திருவிளையாடலை பார்த்தவர்களுக்கு புரியும்). அந்த அளவுக்கு பெண்களின் புற அழகியலில் அதிகம் கவனிக்கப்படும் கூறுகளில் மிக முதன்மையானது கூந்தல். சங்கப்பாடல்கள், பக்தி இலக்கியம் என தொடங்கி சமகால சினிமா வரையில் பெண்களில் நீண்ட கருங்கூந்தலின் அழகை வர்ணிக்காது கடந்து சென்ற கவிஞர்கள் எவருமில்லை. பெண்களின் நீள் குழல் என்பது வெறும் அழகியல் என்பதையும் கடந்து விஞ்ஞான ரீதியாக சில முக்கியமான நன்மைகளை கொண்டுள்ளதுள்ளதுடன், நம்முடைய நெடிய கலாச்சார, பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகவும் நோக்கப்படுகிறது. நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெறுவதற்கு முதன்மையான படிமுறை கேசப் பராமரிப்பு.

வெப்ப மண்டல நாடுகளில் வாழ்வோருக்கு கேசப் பராமரிப்பு என்பது இன்றியமையாததாகும். ஏனெனில் நம்முடைய தலை முடி வெப்பம் மற்றும் ஈரப்பதன் ஆகியவற்றினால் அதிகளவு பாதிக்கப்படக் கூடும். வெப்ப மண்டலத்தில் நிலவும் உயர் வெப்பம் மற்றும் ஈரளிப்பு ஆகியவற்றின் காரணமாக நமக்கு முடி உதிர்வு, பொடுகு, உச்சந்தலை உலர்வு, கூந்தல் உடைவு மற்றும் நலிவான கேசம் என்பன ஏற்படும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையிலேயே நம் முன்னோர்கள் பல்வேறு கூந்தல் பராமரிப்பு வழக்கங்களை நம்மிடையே உருவாக்கிச் சென்றுள்ளனர். அவற்றுள் மிக முக்கியமானது தலைக்கு எண்ணெய் தேய்த்தல். 

நாம் அனைவரும் நம்முடைய சிறு பாராயத்தில் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் முதல், பாடசாலையில் ஆசிரியர்கள் வரையில் அனைவரிடமும் இருந்து தலைக்கு எண்ணெய் வைப்பது குறித்த முக்கியத்துவம் பற்றி நிச்சயமாக கேட்டிருப்போம். வாரத்தில் இரு நாட்களேனும் தலைக்கு எண்ணெய் வைத்து நீராடுவது என்பது நம் வாழ்வியலின் ஒரு அங்கம். வருடத்தின் எந்தவொரு நாளிலும் நாம் எண்ணெய் வைப்பதை தவிர்த்து விட்டாலும் தீவாளித் திருநாளன்று நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவது என்பதை நம்மில் பலரும் கட்டாயத்தின் பெரிலாவது செய்திருப்போம். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்ற எண்ணெய்களில் ஒன்றை கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, கறிவேப்பிலை மற்றும் செவ்வரத்தை போன்ற மூலிகைகளுடன் சேர்த்து தலைக்கு தேய்க்கும் வழக்கம் நம்மில் பலரது வீடுகளிலும் இ(ருந்தி)ருக்கும். உடல் வெப்பத்தை தணிக்க உதவும் இந்த எண்ணெய் தேய்க்கும் மரபானது நம்முடைய நாட்டை காலனித்துவப்படுத்திய ஐரோப்பியர்களால் மெல்ல மெல்ல உலகம் முழுதும் கொண்டு செல்லப்பட்டு பிரபல்யமடைந்தது. இன்று உலக கேசப் பராமரிப்பு துறை என்பது இலட்சம் கோடிகள் புரளும் துறையாக மாறிவிட்டது. ஆனால் இந்த மரபை பல நூறாண்டுகளாய் பின்பற்றிய நாமோ இன்று இது குறித்த அக்கறை ஏதுமின்றி கடந்து செல்கிறோம். 

இன்றைய இளைய தலைமுறையினர் பலரிடம் எண்ணெய் தேய்க்கும் பழக்கமே மிகவும் அருகிவிட்டது. அதையும் கடந்து எண்ணெய் வைப்பவர்களோ தாம் பயன்படுத்தும் எண்ணெய் குறித்த பூரண அறிவில்லாது செயல்படுகிறார்கள். தங்களுக்கு எளிதில் கிடைக்கும், மலிவான எண்ணெயை கேசத்தில் பூசுவது என்பது தலைமுடிக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தும், காக்க வந்த தெய்வமே காவு கேட்டது போல, நாம் தேய்க்கும் எண்ணெயே நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். குறிப்பாக சமையல் எண்ணெய்களை தலைக்கு பூசுவது என்பது மிக புத்திசாலித்தனமான முடிவே இல்லை. 

சமையல் எண்ணெய்களானது சமையலுக்கு என்ற பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது, மேலும் நீண்ட கால பாவனை மற்றும் சுவை நோக்கம் கருதி அவற்றில் தனிப்பட்ட இரசாயனங்கள் சேர்க்கப்படும். மேலும் அவற்றின் உற்பத்தி முறை என்பது முற்றிலும் தனித்துவமானது. அதே சமயம் கூந்தல் பராமரிப்புக்கு என தயாரிக்கப்படும் எண்ணெய்களோ கூந்தலுக்கு வலுவூட்டும் மூலிகைகளுடன் சேர்த்து கவனமாக தயாரிக்கப்படும். மேலும் சமையல் எண்ணெய்கள் காரணமாக கேசம் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படுவதுடன், உச்சந்தலை சருமம் பாதிப்படைந்து பொடுகுத் தொல்லையும் ஏற்படும். ஆனால் கேசத்துக்கான எண்ணெய் வகைகள் கூந்தலுக்கும், உச்சந்தலைக்கும் ஊட்டமும், பொலிவும் தர வல்லது. பலர் இன்று எண்ணெய் வைப்பதை தவிர்க்க முக்கிய காரணம் எண்ணெய் வகைகளில் இருந்து வீசும் விரும்பத்தகாத மணமே. ஆனால் கூந்தல் எண்ணைக்களில் நறுமண சேர்க்கைகள் உள்ளதால் நல்ல வாசமும் உண்டாகும். சாதாரண சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது கூந்தல் எண்ணெய்கள் மிகவும் விலை உயர்வானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும், ஆனால் உண்மை அதுவல்ல. கேசத்துக்கான எண்ணெய்கள் அனைவராலும் வாங்கப்படக் கூடிய அளவில் சாதாரண விலைகளில் கிடைக்கிறது. 

ஆக நம்முடைய இலகுவுக்காக நம்மை நாமே சேதப்படுத்திக் கொள்ளும் வகையில் சாதாரண சமையல் எண்ணெய்களை நம்முடைய தலை மயிரில் பயன்படுத்துவதை தவிர்ப்போம். ஒவ்வொரு பொருட்களுக்கும் அதற்கேற்ற பணிகள் உள்ளன. அவ்வாறு இருக்க “சமையல்” எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்வானேன்? அந்தந்த தேவைகளுக்கு அதற்குரிய சாதானத்தையே பயன்படுத்த வேண்டும். அவ்வாறெனில் நம்முடைய கூந்தலுக்கு உகந்த எண்ணெய் வகை எது என்ற கேள்வி எழலாம். அதற்கான பொருத்தமான பதில் நல்லெண்ணெய். உண்மையில் ‘எண்ணெய்’ எனும் வார்த்தையே எள்ளில் இருந்து பெறப்படும் நெய்யை குறிப்பதே (எள்+நெய் = எண்ணெய்). அவ்வாறு நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய முதல் வகை தாவர நெய், நல்லெண்ணெய் என அறியப்படும் எள்ளெண்ணெயே. உடலை குளிர்வித்தல், சருமப் பொலிவை வழங்குதல் போன்ற பல நற்குணங்களை கொண்ட நல்லெண்ணெயே நம்முடைய தலை மயிருக்கு ஊட்டமும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் அளிக்க வல்லது.  

கூந்தல் என்பது அழகியல் அம்சங்களுள் முதன்மையானது. நம்முடைய அக்கறையின்மையாலும், தவறான புரிதலாலும் நம்முடைய அழகின் ஒரு பகுதியை நாமே அழித்துக் கொள்ள வேண்டாம். அதன் பின்னர் ஆயிரம் பயணம் செல்வழித்தாலும் இழந்தது மீண்டு வராது. வந்தாலும் பழைய பொலிவும், வசீகரமும் இருக்காது. எனவே சிந்தித்து செயலாற்றுங்கள். 

Image Credits: dailyhunt.in

Related Articles

Exit mobile version