கத்தார் நெருக்கடியும் அமெரிக்கத் தொடர்பும்

“அந்தச் சாலையில் நடந்துபோகும் அந்தச்  சிறுவன், குழந்தையை சுமந்தபடி இருக்கும் அந்தத் தாய், பீடி சுற்றிக்கொண்டிருக்கும்  அந்தப் பெண், ஆட்டோ ஓட்டும் அந்த அண்ணன் உள்ளிட்ட நமக்கு எந்த சம்மந்தமும் இல்லாத ஏதோவொரு உலக பிரச்சனைதான் கத்தார் பிரச்சனை. அதன் பின்புலமும், விளைவுகளும் நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் நம்மைத்தாக்கிக் கொண்டேயிருக்கும்…  ” ஒரு நாட்டின் மீதான இன்னொரு நாட்டின் உச்சகட்ட நடவடிக்கை என்பது தூதரக உறவை முறித்துக்கொள்ளுதல். இது போர்த்தொடுத்தலுக்கு ஒப்பான நடவடிக்கை .  ஒரு நாட்டின் ஆத்திரமூட்டும்படியான வளர்ச்சி, அல்லது தங்கள் நாடுகளின் வளர்ச்சியில் பாதிப்பு அல்லது தங்களால் சுரண்ட முடியாத நிலை, அல்லது தங்களுக்கு லாபமில்லாத வளர்ச்சி அல்லது தங்கள் நாட்டிற்கு பாதுகாப்புப்  பிரச்சனை என்றாலோ இன்னொரு நாட்டின் மீது இத்தகைய நடவடிக்கையை எடுப்பார்கள். பனிப்போர் காலத்தில் சோவியத் ஆதரவு சோசலிச நாடுகள் மீது அமெரிக்க ஆதரவு கேப்பிட்டலிச நாடுகள் இத்தகைய தூதரக உறவு முறித்தல் உள்ளிட்ட பொருளாதாரத்தடைகளை விதித்திருந்தனர். கியூபாவின் மீது இன்னமும் அதன் தாக்கம் இருந்துகொண்டிருப்பது ஒரு உதாரணம். சோவியத் வீழ்ந்த பிறகான வடகொரியாவின் ஆயுத பெருக்க அச்சத்தால் எள்ளளவும் உலகத்தொடர்பில்லாமல் அந்நாட்டை உலக நாடுகளில் இருந்து துண்டித்து வைத்திருக்கிறோம். கத்தார் அத்தகைய முரண் கொள்கை நாடா?, அல்லது ஆயுத பெருக்கத்தில் அச்சமூட்டுகிறதா? இல்லை… இல்லவே இல்லை… மற்ற அரபு நாடுகளைப்  போல அதுவும் எண்ணெய் வளம்மிக்க ஒரு  இஸ்லாமிய நாடு, அதுவும் அமெரிக்காவிற்கு ஒரு நட்பு நாடு. குவைத்தை விடவும் சிறிய நாடு.  2022ல் உலகக்கோப்பைக்  கால்பந்து போட்டியை நடத்தும் அளவிற்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நம்பகத்தன்மையைப்  பெற்ற நாடு.  பிறகு எப்படி இப்படியான ஒரு நடவடிக்கை.

கத்தார் நாட்டுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. படம்: thefinancialexpress

கத்தார் நாட்டுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி நான்கு நாடுகளும்,  தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நான்கு நாடுகளுடனான அத்தனை உறவுகளிலிருந்தும் நீங்குமாறு கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாக்க, கத்தார் வழியான எல்லைகளையும் மூடிவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டமைப்புப்  படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராகச்  சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கத்தார் நாடோ, அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து அந்த நாட்டை தங்கள் நேச நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்றியுள்ளன இந்த அரபு நாடுகள்.

படம்: thenational

சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராகப்  போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு கத்தார் உதவுவதாகவும், முன்னாள் ஹமாஸ் தலைவர் காலீத் மெஷலுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான்கள் 2013ல் கத்தார் தலைநகர் தோகாவில் அலுவலகம் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இந்த நடவடிக்கைகளைக்  கண்டித்துள்ள கத்தார், இந்த நடவடிக்கைகளுக்கெதிராகவும் தன்னைத்  தயார்படுத்தி வருகிறது.  சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளதே அதற்கு உதாரணம்.

சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளதே அதற்கு உதாரணம்.
படம்: hcxypz

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவதான இந்த குற்றச்சாட்டுகள் மற்ற அரபு நாடுகளின் மீதும் உள்ளது. துருக்கி உள்ளிட்ட மற்ற நாடுகளின் மீதும் இந்த குற்றச்சாட்டுகளும், சந்தேக பார்வையும் இருக்கும்போது கத்தார் மீதான இந்த நெருக்கடிகளுக்கு நிச்சயம் அரசியல் ரீதியிலான, பொருளாதார ரீதியிலான காரணங்கள் வலுவாக இருக்கும். கத்தார் மீதான மற்ற அரபு நாடுகளின் நடவடிக்கைகள் கத்தாரைக்  கடுமையாக பாதிக்குமா ? இல்லை இந்த தடைகளையெல்லாம் தட்டிவிட்டு கத்தார் வீறுநடைபோடுமா என்றெல்லாம் யோசிப்பதற்கு முன், நம் கண் முன் வந்து நிற்கும் ஒற்றைக் கேள்வி, “ இதனால இந்தியாவுக்கு என்ன பிரச்சனை ? ”  ம்ம்ம்… ஒருவேளை பிரச்சனை தீவிரமானால், அதை நம் அரசுகள் கையாளத் தவறினால், நம்ம வீட்ல கொதிக்கிற உலை வரைக்கும்  பிரச்சனைதான். கத்தார் என்று இல்லை, பெரும்பாலும் உலகின் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அது நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உலகமயமாக்கல் கொடுத்திருக்கிறது.  கத்தாரை பொறுத்தவரை அந்த வாய்ப்பு கொஞ்சம் அளவில் பெரியது.

உலகின் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அது நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உலகமயமாக்கல் கொடுத்திருக்கிறது.  கத்தாரை பொறுத்தவரை அந்த வாய்ப்பு கொஞ்சம் அளவில் பெரியது. படம்: dawn

கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான இந்த மோதலால் அந்நாட்டில்  வாழும் இந்தியர்களின் நிலை சிக்கலில் உள்ளது. சுமார் 2.2 மில்லியன் அதாவது 22 லட்சம் மக்கள் வாழும் கத்தாரில்  கத்தாரிகளைவிட இந்தியர்கள் தான் அதிகமாக உள்ளனர். கத்தாரிகள் அதாவது கத்தார்  நாட்டின்  மண்ணின் மைந்தர்கள் வெறும் 12 சதவிகிதம் மட்டுமே. அதாவது 88 சதவிகித மக்கள் கத்தாருக்கு வந்து குடியேறிய அல்லது வேலை செய்யும் வெளிநாட்டினர் ஆவர்.  25 சதவிகிதத்திற்கும் அதிகமான கத்தார் வாசிகள் இந்தியர்கள். அவர்களில் தமிழர்களும், மலையாளிகளும் தனிப்பெரும்பான்மையினர். அதாவது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து நாடுகளின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பு என்பது, (எண்ணிக்கையில்) கத்தாரிகளை காட்டிலும் இந்தியர்களையே அதிகம் தாக்கும். அதுவும் நேரடியாக மட்டும் தான்.

88 சதவிகித மக்கள் கத்தாருக்கு வந்து குடியேறிய அல்லது வேலை செய்யும் வெளிநாட்டினர் ஆவர்.  25 சதவிகிதத்திற்கும் அதிகமான கத்தார் வாசிகள் இந்தியர்கள். அவர்களில் தமிழர்களும், மலையாளிகளும் தனிப்பெரும்பான்மையினர். படம்: workforceqatar

மறைமுகமாகக்  கத்தாருக்கான இந்தப்  பிரச்சனைகள் இந்தியாவை வெகுவாக பாதிக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய எரிசக்தி துறையின் வாயிலாக இந்திய பொருளாதாரத்தை தாக்கவல்ல ஒரு முக்கியமான பிரச்சனைதான் இது. இந்தியாவின் ஆற்றல் துறையில் கத்தார் முக்கிய பங்காற்றுகிறது.  ஆற்றல் மற்றும் பாதுகாப்பு துறையில் கத்தாரும், இந்தியாவும் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளன. கத்தாரின் டாப் ஏற்றுமதி நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல கத்தாரின் டாப் இறக்குமதி நாடுகள் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) இந்தியாவுக்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமானது கத்தார்.  இந்தியா இறக்குமதி செய்யும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 65 சதவீதம் கத்தார் நாட்டில் இருந்துதான் வருகிறது. எல்என்ஜி கேஸ் ஏற்றுமதியில் உலகளாவிய அளவில் கத்தார் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.  இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவுகளின் ஆண்டு மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கத்தாருக்கு நெருக்கடி அதிகரித்திருப்பது இந்தியாவுடனான வர்த்தக உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியா இறக்குமதி செய்யும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 65 சதவீதம் கத்தார் நாட்டில் இருந்துதான் வருகிறது. படம்: financialtribune

இந்த பிரச்சனையால் உடனடியாக எண்ணெய் விலை ஏறாவிட்டாலும், வருங்காலத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.  அதாவது விலைவாசி உயரும். எங்கோ ஒரு முஸ்லீம் நாட்டுக்கு வரும் பிரச்சனை, இங்க அயோத்தியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடவரும் ஸ்கூட்டர்காரரின் வீட்டிலும் எதிரொலிக்கும். அதே நேரத்தில்  கத்தாரோடு  நாம் கடல் வழியாக நேரடியாகத்தான் எல்என்ஜி கேஸைப் பெறுகிறோம். அதனால நமக்குப்  பிரச்சனை இருக்காது என்றும் சொல்லப்படும். ஆம் பிரச்சனை இருக்காதுதான். உடனடியாக. ராஜாங்க ரீதியிலாக சவுதி, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்திற்கு நாம் அடிபணியாமல் இருக்கும் வரை, அல்லது இப்பிரச்சனைகளுக்கு பின்புலம் நம்மை நெருக்காது இருக்கும் வரை. இப்படி வைத்துக்கொள்வோம், ஒருவேளை சவுதி,  ஐக்கிய அரபு அமீரகம் நம்மைக்  கத்தாருடனான தொடர்பை துண்டிக்க வலியுறுத்தினால்.  ஈரான் நமது பணத்திற்கே எண்ணெய் தருகிறோம் என்ற போதும் நாம் கையை பிசைந்த கதைதான் மீண்டும் வந்துநிற்கும். ஏறத்தாழ 7 லட்சம் இந்தியர்கள்  கத்தாரில் நேரடியாக பாதிக்கப்படும், ஒருவேளை இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி மறைமுகமாக 130 கோடி இந்தியர்களையும் பாதிக்க வாய்ப்புள்ள இந்த கத்தார் பிரச்சனைக்கு யார்தான் காரணம்… நமக்கு பதில் தெரியும். சட்டென்று அமெரிக்கா என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடலாம். ஆனால் எப்படி என்பது ஒரு சிலரே அறிந்திருக்க வாய்ப்புள்ளது…  ( தொடரும் )

உசாத்துணைகள்:

  • thenational
  • matiastania
  • negeztik

Related Articles

Exit mobile version