ஒலிம்பிக்கையடுத்து பிரபலம் வாய்ந்தது, ‘பொது நலவாய விளையாட்டுப் போட்டி’ என்ற வகையிலேயே, பெரும்பாலான இன்றைய இளம் தலைமுறையினர் பொதுநலவாயத்தை அறிந்து வைத்திருக்கின்றனர். பிரித்தானியாவின் ஆளுகைக்கு கீழ் இருந்து பின்னர் சுய ஆட்சி அதிகாரம் பெற்ற நாடுகள் பலவும் இந்த பொதுநலவாய அமைப்பிற்குள் அடங்குகின்றன. இந்த அமைப்பினால் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ‘அனைவருக்குமான நலன்’ என்ற பொருளை அது தன் பெயரினூடாக குறிக்கின்றது.
ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் என்று சொல்லப்பட்டது பிரித்தானியப் பேரரசு. உலகின் நான்கில் ஒரு பாகம் பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் இருந்த வரலாற்றின் பக்கங்களில், ஓரிடத்தில் சூரியன் அஸ்தமித்தாலும் கூட பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட மற்றோரிடத்தில் சூரிய வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகப் பரந்துபட்ட வல்லரசாக விளங்கிய பிரித்தானியா பிற்காலத்தில் துண்டு துண்டாகச் சிதறியது. முதலாம் உலகப் போரினையடுத்து உலகின் முதன்மையான வல்லரசு என்ற பெருமையும் அதனிடமிருந்து அமெரிக்காவால் பறிக்கப்பட்டது.
பரந்து விரிந்த பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த நாடுகள், தாம் சுய ஆட்சி அந்தஸ்தினைப் பெற்ற பின்னர், புரிந்துணர்வின் அடிப்படையில், பிரித்தானிய மகுடத்தின் கீழ் உள்ள இந்த பொதுநலவாய அமைப்பில் இணைந்து கொண்டன. இந்த அமைப்பின் தலைமைத்துவம் எப்போதும் பிரித்தானிய முடிக்குரியவரிடமேயே இருக்கும். தற்போது அது இரண்டாம் எலிசபெத் மகாராணியிடம் காணப்படுகின்றது.
பொதுநலவாய அமைப்பில் தற்போது 53 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து போட்ஸ்வானா, கென்யா உள்ளிட்ட 19 நாடுகளும், ஆசியக் கண்டத்திலிருந்து இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. கரேபியன் மற்றும் அமெரிக்கப் பிராந்தியத்திலிருந்து கனடா, ஜமெய்க்கா, பார்படோஸ் உள்ளிட்ட 13 நாடுகளும் பசுபிக் பிராந்தியத்திலிருந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிஜி, நவுறு உள்ளிட்ட 11 நாடுகளும் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐரோப்பாவிலிருந்து சைப்ரஸ், மால்டா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன.
முன்னர் பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்து, தற்போது இந்தப் பொதுநலவாய அமைப்பில் உறுப்புரிமை பெற்றிருந்தாலும் கூட, எந்தவொரு நாடும் மற்றைய நாட்டுடன் சட்டரீதியான பொறுப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பது, இதன் முக்கியமான அம்சம். எனினும், இந்த உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஆங்கில மொழியாலும், பண்பாட்டாலும் பிணைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி தமக்கிடையே ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆளுகையையும் முன்னிறுத்தும் பணியையையும் பொதுநலவாய நாடுகள் ஆற்றுகின்றன.
வியப்பிற்குரிய விடயம் என்னவென்றால் பொதுநலவாய நாடுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவான 29,958,050 சதுர கிலோமீற்றரானது, ஏறத்தாழ உலகின் 20 சதவீதமாக இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டுக்குரிய சனத்தொகை மதிப்பீட்டின் படி, பொதுநலவாய அமைப்பு, அதன் கீழ் உள்ள உறுப்பு நாடுகளின் 2,418,964,000 குடிமக்களின் நலத்திற்காகவும் சேவையாற்றுகின்றது.
பொது நலவாய நாடுகளின் வரலாற்றில், அதன் உறுப்பு நாடுகளின் உறுப்புரிமை நிறுத்தி வைக்கப்பட்ட சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எழுத்தாளரும் சுற்றுச்சூழலியல் செயற்பாட்டாளருமான Ken Saro-Wiwa வை தூக்கிலிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நைஜீரியாவை பொதுநலவாய அமைப்பு உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தி வைத்தது. 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதியிலிருந்து, 1999 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உறுப்புரிமை இடைநிறுத்தம் இடம்பெற்றது.
அதே போல், பாகிஸ்தானும் உறுப்புரிமை இடைநிறுத்த நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த நாட்டில் இராணுவத்தைப் பயன்படுத்தி பர்வேஸ் முஷாரப் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கை, 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி, பொதுநலவாயத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த உறுப்புரிமை இடைநிறுத்த நடவடிக்கை 2004 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
அதே பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறையும் பொதுநலவாயத்தினால் தண்டிக்கப்பட்டது. அந்த நாட்டின் அப்போதைய ஆட்சியாளாரான பர்வேஸ் முஷாரஃப் அவசரகால நிலையை அமுற்படுத்தியமையை அடுத்து, 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி, பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போன்ற நடவடிக்கையை சிம்பாபேயும் எதிர்கொண்டது. அந்த நாட்டு ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் மற்றும் காணி மீளமைப்புக் கொள்கைகளே இதற்கு காரணமாக அமைந்தன.
உறுப்பு நாடுகளின் கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளிலும் சேவையாற்றி வரும் பொதுநலவாய அமைப்பின் மூலம் வழங்கப்படும் உயர் கல்விக்கான புலமைப்பரிசில்களும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இந்த அமைப்பில் இருக்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளின் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு இவை பெரிதும் உதவுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.