உதவி இயக்குனர் வாய்ப்பு தேடி சென்னையில் சுற்றுபவனுக்கு லோக்கல் இரயிலும் இளையராஜா பாடலும் மட்டுமே இன்பம், அன்று அது போன்ற ஒரு இரயில் பயணம். “சென்ட்ரலில் இருந்து வேளச்சேரி” அந்த பெட்டியில் என்னையும் சேர்த்து 4 பேர்கள் மட்டுமே, அனைவருமே அவர், அவர்களின் “மொபைல் ” உலகத்தில் இருந்தோம்.
30 வயது மிக்க ஒரு பெண் ஒவ்வொருவரிடமும் யாசகம் கேட்டபடி வருவதை பார்த்து நான் தலையை குனிந்து கொண்டேன் (பைல பத்து பைசா இல்லை) என் எதிர் இருக்கை நபர் போ தள்ளி! என்று முகத்தில் அருவருப்பைக் காட்ட அந்த அக்காவுக்கும் அவருக்கும் சின்ன சண்டையே வந்தது, ஆம் “அந்த அக்கா ஒரு திருநங்கை” அடுத்து நான் தான்! கைகளை தட்டி காசு கேட்டார். சத்தியமா “நைட் சாப்பாட்டுக்கே காசு இல்லக்கா என்று என் சட்டை பாக்கெட்டை உதறிக் காட்ட (நம்பாம என் கிட்டையும் சண்டைக்கு வருவாங்களோனு பயம் அதான் உண்மைய சொன்னேன்) “என்ன வேலை பாக்குற” இது அந்த அக்கா, “உதவி இயக்குனராக முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” இது நான், இந்தா நைட் பட்னியா படுக்காத என்று 50 ரூபாயை என் பாக்கெட்டில் திணித்தார்! 45 நிமிட பயணம் அர்த்தம் உள்ளதாய் மாறிப் போனது எனக்கு.. அவரிடம் பேச ஆரம்பித்தேன்!
என்னப்பா என் கதைய படமா எடுக்கலாம்னு பாக்குறியா! என்று சிரித்து விட்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், எல்லா திருநங்கைகள் கதையும் ஒன்னு தான் தம்பி பெருசா வித்யாசம் இருக்காது. இரண்டு அக்கா கடைசியா நான், பள்ளிக்கூடம் போகும் போதே பசங்க நான் “நடக்குறத” வச்சு கிண்டல் பண்ணுவாங்க வீட்டுல ஆள் இல்லாதப்ப அக்காங்களோட துணிய போட்டு சந்தோசப்பட்டுப்பேன், வீட்டுல தெரிஞ்சு செம அடி! என்னால மாத்திக்க முடியல. கடைசியா எங்க அக்கா கல்யாணத்துக்கு நான் எதுவும் தடையா இருப்பேனு “விஷம்” வைக்கிற அளவு போய்ட்டாங்க, நான் ஓடி வந்துட்டேனு ரெம்ப சாதரணமா அவுங்க “வலிய” வார்த்தையால கடத்துனாங்க !.
சரிக்கா அதுக்காக இந்த…. இந்த பிச்சை எடுக்கிற பொழப்பு எதுக்குனு தானே கேக்க வர, ஓடி வந்து நானும் வேலை தான் தேடுனேன், யார் தந்தா! ஆம்பல மாதிரி உடை உடுத்தி வேலை பாத்துருக்லாம்னு உனக்கு கேக்க தோனும், அக்கா கல்யாணம் நிக்க நாம காரணம் ஆக கூடாதுனு எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தேன், ஆனா நான் ஆம்பளைனு எனக்கு கொஞ்சம் கூட தோண மாட்டேனுதே!. உனக்கு ஒன்னு தெரியுமா நாங்க ஆசிர்வாதம் பண்ணா அந்த காரியம் நல்லபடியா நடக்குமாம்!, ஹா ஹா நாங்களே தெருவுல தான் திரியிறோம். இது மட்டும் இல்ல நான் உட்பட பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில்தான் பண்றோம் அங்க ஒன்னும் அமையலனா தான் பிச்சை எடுக்க வறோம்.
என்னக்கா பாலியல் தொழில்னு சாதரணமா சொல்றிங்க!. சென்னை வந்த புதுசு என்ன தொட்டவன் நோக்கம் எல்லாம் ஒன்னு தான் அது என்னோட படுக்கனும் , பின்னாடி தட்டி கிண்டல் பண்ணிட்டே இருப்பான்க ரெம்ப கேவலமா பேசுவான்க, வேர வழி தெரியல சாகவும் தோணல. எனக்கு ஒன்னு தான் தெரியல ஏன் இவ்வளவு வன்முறையை படுக்கைல காட்றான்க! இப்படி தான் அவன்க பொண்டாட்டிடயும் இருப்பான்கனா, அதுங்களலாம்ம் கோயில் கட்டிதான் கும்புடனும். என் கூட இருந்த ஒரு திருநங்கைய நார் நாரா கிழிச்சு ரோட்டுல போட்டு போய்ட்டான்க. யார்ட போய் சொல்ல முடியம், என்று முடிக்கும் போது “சேப்பாக்கம் வந்திருந்தது”.
எனக்கு கிரிக்கெட்னா உயிரு தெரியுமா! “ஹோலி ” செம அழகா இருகான்ல, யுவராஜ்க்கு கேன்சர்னதும் நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா என்ற அக்காவின் அத்தனை வார்த்தைகளிலும் பெண்மையின் உச்சம்!. உங்களுக்குனு அமைப்பு எதுவும் இருக்கா? அதலாம் தெர்ல தம்பி நாங்க ஒரு 5, 6 திருநங்கைகள் சேர்ந்து இருக்கோம் வருசத்துல ஒருநாள், கூத்தாண்டவர் கோயில்ல கூட்டமா பாத்துப்போம், படிக்கனும்னு ஆசை இருக்கு, நடக்குதானு பாப்போம் என்று பெருங்குடி நிறுத்தம் வந்ததும் என் தலையில் கை வைத்து சாப்டு தூங்கு என்று சிரித்துவிட்டு செல்ல முனைகையில் தான் அக்காவின் பேர் கேட்கவில்லை என்ற நியாபகம் வர, அக்கா உங்க பேர் சோல்லவே இல்ல? பூங்கொடி …
இந்தியாவில் மொத்தம் 25 இலட்சம் திருநங்கைகள் உள்ளனர் என்று அரசு அறிக்கை உள்ளது. ஆனால் அதைவிட இரண்டு மடங்கு திருநங்கைகள் இருப்பார்கள் என்று தனியார் ஆய்வு சொல்கிறது. அமெரிக்காவில் “லாஸ் ஏஞ்சலஸ்” நகரில் ஒரு ஆய்விற்காக ஒரு நடிகையை திருநங்கை போல் வேடமிட்டு இரவில் நடமாட விட்டார்கள், சிறிது நேரத்திலயே அந்த நடிகை அதிக்கப்படியான பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இரத்த காயத்துடன் பாதியிலயே ஆய்வில் இருந்து விலகிக் கொண்டார். அத்தனையும் வீடியோ செய்யப்பட்டது தனிக்கதை. “ஓரினைச் சேரக்கையை ஏற்றுக் கொண்ட ஒரு தேசத்திலயே திருநங்கைகளின் நிலை இதுவென்றால் இந்தியாவில் செல்லித் தெரிய வேண்டியதில்லை!.”
இந்திய குடும்பங்கள் திருநங்கைகளை ஏதோ “இழி ” பிறப்பாக கருதுகிறார்கள் ஆனால் அத்தனையும் ஹார்மோன்களின் செயல்பாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதன் விளைவு அவர்கள் “பாலியல் விலை பொருளாக மாறுகிறார்கள்”. 70% திருநங்கைகள் பள்ளி கல்வியை முடிக்காதவர்கள். இவர்களுக்கான உரிமை என்பது முழுவதும் மறுக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு சென்னையில் திருநங்கைகளுக்கு என்று அரசின் சார்பாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது, அதன் செயல்பாடு தான் என்னவென்று தெரியவில்லை!. 2015 ஆம் ஆண்டு சிவா என்பவர் தனது முயற்சியால் நீதிமன்றத்தில் போராடி திருநங்கைகளுக்கு 2 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்று தந்தார். கடந்த வருடம் “யாஸ்னி பிரத்விக்கா” என்னும் திருநங்கை உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் ஆனார் (SI). எனவே எந்த விதத்திலும் அவர்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். அவர்களின் தேவை நாம் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே!.
பள்ளிகளில் உடன் பயிலும் நண்பர்களும், குடும்பமும் அவர்களை கேலிப் பொருளாக மாற்றி விட்டது. இதுவரை பாலியல் வன்கொடுமையால் இறந்த நிருநங்கைகளின் எண்ணிகை யாரிடமும் இல்லை. காரணம், அவர்கள் மனிதர்களாக மட்டும் இல்லை உயிர்களாகவே மதிக்கப்படுவதில்லை. காவல் துறை அவர்களை நடத்தும் விதம் உச்சக்கட்ட கொடுமை, சில திருநங்கைகள் மது அருந்தி பிச்சை கேட்கும் போது முகம் சுழிக்க வைக்கின்றனர். இது தவறுதான் ஆனால் அதற்கு பின் இருக்கும் அவர்களின் வாழ்வியல் வலி அதிகம்.
“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் ” என்றான் பாரதி, அப்படி காக்கை, குருவிலாம் சக உயிரா பாவிக்காவிடினும் நம்மைப் போன்ற உணர்வுகள் உடைய உயிர்களாக திருநங்கைகளை நடத்தினாலே போதும்!. எப்பொழுதும் போல அறைத்தோழனிடம் நடந்ததை கூற, பிச்சை எடுத்தவங்கள்டயே பிச்சை எடுத்துட்டு ஃபீலிங் வேற என்று கிண்டல் செய்ய, சற்று கோபத்துடன் திருநங்கை பத்தி உனக்கு என்னடா தெரியும்! என்றேன்.
டேய் இவ்ளோ பேசுறியே “பெண்களுக்கும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரந்து தான் ஒரு ஆணா வாழ ஆசைப்படுவாங்க அவுங்களுக்கு பேர் திருநம்பி ” கேள்வி பட்டுருக்கியா?, இல்லையேடா என்றேன் சந்தேகத்துடன். வெளிநாட்டுல நிறைய திருநம்பி இருகாங்க ஆனால், இந்தியாவில் நூத்துல 2 பேர் கூட தன்ன திருநம்பி-னு சொல்லிக்க மாட்டாங்க ஏன்னா “நாம தான் ஒரு பெண்ணை பெண்ணாவே வாழ விட மாட்டமே இதுல ஆணா வாழ விட்டுருவோமா என்ன!” என்று சொல்லிவிட்டு அவன் உறங்க சென்றுவிட்டான், எனக்குத்தான் “என்றோ ஒருநாள் கண்ணாடியில் தன் மெல்லிய மீசை முடிகளை தடவி பார்த்த என் அத்தையின் முகம் உறக்கத்தை தொலைக்க வைத்தது!.. “FM இல் பாடல் கேட்கலாம் என்று நினைத்து திருகினால் அங்கு “ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்!……….