இலங்கையில் COVID-19 இன் முதல் ஐந்து மாதங்களின் நிலையை சித்தரிக்கும் வரைபடங்கள்

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹானில் உள்ள  சந்தையில் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் இந்த வைரஸானது, இலங்கையில் முதலாவதாக, வெளிநாட்டு பயணி ஒருவருக்கு தொற்றியிருப்பதாக ஜனவரி 27, 2020 அன்று பதிவாகியது. ஆனால் அதே நேரத்தில், ஏற்கனவே மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருந்தபோதும் – அதுகுறித்த அவதானமும் முன்னெச்சரிக்கையும் இலங்கையில் மிகக் குறைவாகவே இருந்தது:  அதேபோல முதல் நோயாளர் அடையாளம் காணப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், அரசாங்கம் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர்களை நிறுவியிருந்தது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இவ்வைரஸினால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது. COVID-19 ஐ எதிர்த்து 22 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நடவடிக்கைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தேசிய தொற்று நோய் மருத்துவமனைக்கு (IDH) மாற்றப்பட்டிருந்த முதல் நோயாளர், ஒரு மாதகால சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்கு பிறகு  முழுமையாக குணமடைந்து மிகுந்த ஆரவாரத்துடன் மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டார். கொடியதொரு வைரஸ் தொற்றின் முதலாவது நோயாளரை இலங்கை வெற்றிகரமாக கையாண்டு தன் பெயரை செய்தியறிக்கைகளில் இடம்பிடிக்கச் செய்தது அப்படித்தான்.

ஒரு மாதத்திற்குப் பிறகு,சுதேச பிரஜை ஒருவருக்கு COVID-19 தொற்று முதன்முதலாக கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் நான்கு பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இலங்கை இப்போது COVID-19 தொற்றுப் பரவலின் ஆறாவது மாதத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதகால ஊரடங்கு உத்தரவில் இருந்து வெளிவந்த போதிலும், அனைத்து பொது நடவடிக்கைகளும் முற்றிலுமாக குறைக்கப்பட்டிருந்தாலும், வைரஸ் தொற்றுள்ளவர்கள் புதிதாய் இன்னும் பதிவாகிக்கொண்டுதான் உள்ளனர்.

இலங்கையில் COVID-19 தொற்றுநோயின் கடந்த ஐந்து மாத விளைவுகளை (2020, ஜனவரி-மே) சித்தரிக்கும் நோக்கில், நாம் (roar media) இங்கு தரவுகளை வரைபடமாக தந்துள்ளோம். உலகளாவிய நெருக்கடிக்கு இலங்கையும் பதில்சொல்லவேண்டியதாய் இருக்கும் இச்சமயத்தில், சீனாவில் வைரஸின் தோற்றம் மற்றும் இலங்கையில் முதல் தொற்று பதிவானதிலிருந்து, தேசிய அளவிலான முடக்கம் மற்றும் தற்போதைய விளைவுகள் வரை- இத் தரவுகள் சித்தரிக்கின்றன.

தோற்றம்

டிசம்பர் 31, 2019 அன்று சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் இருந்து அறியப்படாத நோய்க்காரணியுடனான நிமோனியா காய்ச்சல் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களுக்குள், 40 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்-இதுவே இவ் வைரஸின் பரவலுக்கு வித்திட்ட ஆரம்பப் புள்ளியாகும்.

சீனாவுக்கு வெளியே COVID-19 இன் முதல் தொற்று  2020 ஜனவரி 13 அன்று தாய்லாந்தில் பதிவாகியது, வுஹானில் இருந்து சென்ற ஒரு சுற்றுலாப் பயணியே அவ்வாறு கண்டறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, தாய்வான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் வரை பரவி இலங்கையையும் வந்தடைந்தது – உலகளவில் COVID-19 தொற்றுப்பரவலை உறுதிசெய்த நாடுகளில் இலங்கை 12 வது நாடாகும்.

வடிவமைப்பு : ஜேமி அல்போன்சஸ்

இலங்கை

ஜனவரி மற்றும் பெப்ரவரி

இலங்கையின் முதல் நோயாளி, ஜனவரி 27 அன்று அடையாளம் காணப்பட்ட, ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதான சீன சுற்றுலாப் பயணி ஆவார். அவர் பிரிதொரு பயணிகள் குழுவுடன் இலங்கைக்கு வந்திருந்தார்.

வடிவமைப்பு : ஜேமி அல்போன்சஸ்

பிப்ரவரி மாத தொடக்கத்தில், வுஹான் மற்றும் ஹூபே மாகாணத்தின் பிற நகரங்களுக்கு விதிக்கப்பட்ட முடக்கத்தின் விளைவாக அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களை திருப்பி அனுப்ப சீன அதிகாரிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அவ்வாறு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்பு  தியதலாவ இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்கள் இரண்டு வார கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். அதேசமயம் பிப்ரவரி 19 அன்று, சீன நோயாளி முழு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மார்ச் 2020

சுதேச நபர் ஒருவருக்கான தொற்று முதலாவதாக மார்ச் 11 அன்று கண்டறியப்பட்டது. 52 வயதான சுற்றுலா வழிகாட்டியான இவருக்கு இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் குழுவிலிருந்து வைரஸ் பாதித்ததாக நம்பப்பட்டது. அப்போது வைரஸ் தொற்று அனைத்து பகுதிகளுக்கும் பரவியிருந்தது.

அதிகாரிகள் உடனடியாக தொற்று ஏற்பட்டுள்ளவரின் ”தொடர்புத் தடத்தைத்” பரிசோதிக்கத் தொடங்கினர். 50 பேர் வரையில் இனம்கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தினர். சில நாட்களில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது ”தொற்றுடைய நோயாளர்கள்” பதிவாகினர்- அவர்கள் அனைவரும் முதல் உள்ளூர் வைரஸ் தொற்றாலரான சுற்றுலா வழிகாட்டியுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்- இவர்களே இலங்கையில் COVID-19 நோய்த்தொற்றுக்கு உள்ளான முதல் தொகுதியை குறிக்கும் நோயாளர்கள்.

இந்த சமயத்தில் தான் , COVID-19 பரவலை எதிர்ப்பதில் அரசாங்கம் தனது மூலோபாயத்திட்டங்களை கணிசமான அளவில் மாற்றிக்கொள்ளத்தொடங்கியது. மார்ச் 18 அன்று, வெளிநாட்டிலிருந்து திரும்பும் அனைத்து உள்ளூர் மக்களையும் தனிமைப்படுத்தவும், பகுதியளவில் பிரதான விமான நிலையத்தை மூடவும் உத்தரவிட்டது. அதுவரை, அக்காலப்பகுதியில் வைரஸ் பரவிவரும் அபாயம் நிறைந்த நாடுகளென இனம்காணப்பட்ட இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்று திரும்பி வந்தவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுவந்தனர்.

பாடசாலைகள், ஏப்ரல் விடுமுறைக்கு மூடப்படவிருந்தபோதும் முன்னதாகவே மார்ச் 13 ஆம் தேதி அன்று முன்னெச்சரிக்கையுடன் மூடப்பட்டன. ”அத்தியாவசியம் அல்லாத’ சேவை, பொருட்களை வழங்கும் வணிகங்களுக்கு  மார்ச் 17 -19 வரை  ‘விடுமுறை’ என்று அறிவிப்புடன் தொடங்கப்பட்ட பகுதியளவிலான ஊரடங்கு, இறுதியில் மார்ச் 20 அன்று நாடு முழுவதுமான பூரண ஊரடங்கு உத்தரவுக்கு வழிவகுத்தது. இதில் அனைத்து பயணங்களும் உயர்க்கட்டுப்பாட்டுடன் தடைசெய்யப்பட்டதுடன், மீறுபவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகின.

மார்ச் 23 அன்று, முதல் உள்ளூர் நோயாளர்-சுற்றுலா வழிகாட்டி, முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதே மாதத்தில் மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வைரஸ் தொற்றினால் நிகழ்ந்த் முதல் உயிரிழப்புகள் பதிவாகின. மார்ச் 31 அன்று, 21 புதிய  நோயாளர்களுடன் அந்த மாதத்திற்கான எண்ணிக்கையில் உச்சத்தை கண்டது COVID-19.

ஏப்ரல் 2020

இந்த மாதம் இலங்கையில் மூன்றாவது COVID-19 மரணத்துடன் தொடங்கியது: ஏப்ரல் 1 ஆம் தேதி, மரதானாயைச் சேர்ந்த 72 வயதான ஒருவர் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அந்த மாதத்தில் மேலும் நான்கு உயிரிழப்புகள் பதிவாகின. ஏப்ரல் மாதம் இலங்கை நாட்டில் அதிக உயிரிழப்புகளைக் கொண்ட மாதமாக பதிவாகியது.

இரண்டாவது பெரிய வைரஸ்நோயாளர் தொகுதி ஜா-எலவின் சுதுவெல்ல பகுதியில் பரவியது. அங்கு ஒரு COVID-19 நோயாளருடன் தொடர்பு கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட குழு, சுய தனிமைப்படுத்தலுக்கான வழிமுறைகளை புறக்கணித்து, வைரஸ் தொற்றுக்கான காவிகளாக செயல்பட்டனர். இக்குழுவினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் வசதிக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அதற்குள் தொற்று நோயின் சேதம் நிகழ்ந்துவிட்டிருந்தது: அந்த வைரஸ்நோயாளர் தொகுதி அம்மாதத்தில் மேலும் விரிவடைந்தது, அந்த பகுதி முழுவதுமே தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு சென்றது.

சுதுவெல்ல தொகுதியின் விளைவாக, மூன்றாவது பெரிய தொகுதி பரவத் தொடங்கியது. ஜா-எல சுதுவெல்லவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சுற்றி காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒரு கடற்படை அதிகாரி வைரஸால் பாதிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது. வெலிசர கடற்படை முகாம் முழுவதுமே ஏப்ரல் 23 அன்று தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் கடற்படையிலிருந்து தொற்றுடையவர்கள் தொடர்ந்து பதிவாகினர். இதன் விளைவாக, கடற்படை தொகுதி தற்போது, இலங்கையில் 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 50 பேருடன் மிகப்பெரிய நோயாளர் தொகுதியாக மாறியுள்ளது.

அதே ஏப்ரல் மாதத்தில்தான், கொழும்பு 12 இன் பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர்களிடையே நான்காவது பெரிய COVID-19 தொகுதி கண்டறியப்பட்டது. இந்தியாவில் இருந்து திரும்பி வந்த ஒரு வைரஸ் அறிகுறியற்ற நோயாளர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, அவரது இருப்பிடத்திலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும்   சுதந்திரமாக நடமாடித்திரிந்துள்ளார். அவருக்கு தொற்றுள்ளமை உறுதியாகி சிகிச்சைக்கு அழைத்துசெல்லப்பட்ட பின்னர், அந்த மாதத்தில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டனர். இது அடுத்த மாதத்தில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் எண்ணிக்கையை 1,000 பேராக அதிகரித்தது..

மே 2020

மே 11 அன்று, இரண்டு மாதங்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கான நோக்குடன் அரசாங்கம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது. குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் பொதுமக்கள் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எச்சரிக்கையுடன் இருந்தபோதிலும், புதிதாய் தொற்றுயுடையவர்கள் தொடர்ந்து பதிவாகி வந்தனர். மே 4, 5 மற்றும் 25 ஆகிய திகதிகளில் COVID-19 இன் விளைவாக மேலும் மூன்று பேர் இறந்தனர். இது வைரஸ் தொற்றுநோயினால் இறந்தவர்களின்  மொத்த  எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இருப்பினும், இதே காலப்பகுதியில், இலங்கையில் சமுதாயப் பரவல் மற்றும் புதிய நோய்த்தொற்று பதிவுகள் எதுவும் நிகழாமல் வெற்றிகரமாக நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. மே மாத இறுதியில் விதிவிலக்காக தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலிருந்து ஒரு புதிய நோயாளருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மே மாதத்தில் மற்றொரு பெரிய தொகுதி தோன்றியதையும் இலங்கை பதிவுசெய்தது. வெவ்வேறு நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பும் இலங்கையர்களில் பலர் இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 44 தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை சோதனைகளில் உறுதியானது. இந்த மாதமே இதுவரை அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகிய மாதமாக கணக்கிடப்படுகிறது – மே 26 அன்று 137 பேர், மே 27 அன்று 150 பேர். (தற்போது, குவைத்திலிருந்து திரும்பி வந்த 467 பேரில் 412 பேர் வரையில் வைரஸ் தொற்றுள்ளவர்களாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்).

மே 28 அன்று, கொழும்பில் உள்ள கஃபூர் கட்டிடத்தில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, 200 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய பெரிய கடற்படைத்தொகுதியில் இணைந்தனர். வெளிநாட்டிற்கு திரும்பியவர்கள் மற்றும் கடற்படையினர் ஆகிய இந்த இரண்டு தொகுதிகள்தான் நாட்டில் இன்னும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் தொகுதிகள்.

தினசரி COVID-19 பதிவுகள்

மேலே உள்ள வரைபடம் தொற்றுநோயின் முதல் ஐந்து மாதங்களில் அறிக்கையிடப்பட்ட தினசரி பதிவுகள், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழப்புகளை  கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. தினசரி பதிவுகளின் (சிவப்பு வரைகோட்டில் காட்டப்பட்டுள்ளவை) குறிப்பிடத்தக்க கூர்முனைகள் ஐந்து பெரிய ‘நோயாளர் தொகுதிகளை’ குறிக்கின்றன – ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 31 தொகுதிகளை அதிகாரிகள் தெரிவித்தனர். “போலீசார் 31 தொகுதிகளை அடையாளம் கண்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகள் ஐந்து பெரிய தொகுதிகளை மட்டுமே அங்கீகரித்தனர்.” என தொற்றுநோயியல் பிரிவின் டாக்டர் சமிதா கினிகே ரோர் மீடியாவிடம் கூறினார். 

மார்ச் 17 அன்று உச்சத்தில் இருக்கும் பதிவுகளின், தொடர்ச்சியான உயர்வு; முதல் தொகுதியில் உள்ள நோயாளர்களைக் குறிக்கிறது – இது ‘இத்தாலிய தொகுதி’ என அறியப்படுகிறது. ஏப்ரல் 14 ஆம் திகதியன்று ஜா-எல, சுதுவெல்ல பகுதிலிருந்து கண்டறியப்பட்ட தொற்றுடன் தொடர்புடைய மிகப்பெரிய தொகுதியான கடற்படை அதிகாரிகளின் தொகுதி ஏப்ரல் 27 அன்று வெளியானது. பண்டாரநாயக்க மாவத்தை தொகுதி ஏப்ரல் 20 அன்று குறிப்பிடப்பட்டுள்ளது. மே 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் மே மாதத்தின் இரண்டு பெரிய கூர்முனைகள் உள்ளன: இவை திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இனம் காணப்பட்ட தொகுதியை அடையாளம் காட்டுகிறது.

இந்த வரைபடம் இலங்கையின் மொத்த இறப்பு எண்ணிக்கையையும் குறிக்கிறது. மே 31 வரை – உயிரிழப்பு சம்பவங்கள் 10 ஆக இருந்தன.

சிகிச்சை பெறுவோர், குணமடைந்தோர், மற்றும் மரணங்கள்

இங்கே, சிவப்பு வரைகோடு 2020 ஜனவரி முதல் மே வரை பதிவான நோயாளர்களில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைக் குறிக்கிறது; இது தொடர்ந்து வளர்ந்துகொண்டே வருகிறது. இருப்பினும், குணமடைந்தவர்கள் பதிவு சற்று மெதுவாகவே பின்தொடர்ந்து வந்தாலும், மே மாத இறுதியில், சிகிச்சை பெற்றுவருபவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் பதிவு ஒன்றை ஒன்று ‘சந்திக்கும்’ இடமானது, நாட்டில் COVID-19 பதிவுகளின் அளவை சமன் செய்வதைக் குறிக்கிறது. மீட்டெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், குணமடந்தவர்களின் என்ணிக்கையானது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையை முறியடிக்கும். 

உலகின் பிற நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, சில முடிவுகளை தாமதமாகக் கையாண்டும், பிந்தள்ளப்பட்ட மற்றும் சர்ச்சைகள் இருந்த போதிலும், COVID-19 ஐ நிர்வகிப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இருப்பினும், ஆண்டின் முதல் ஐந்து மாதங்களின் வெற்றிகரமான செயற்பாடுகளால் மனநிறைவு காணமுடியாது. அதிகாரிகள் அல்லது பொதுமக்களின் மத்தியில் எழும் எந்தவொரு அலட்சியமும் இரண்டாவது அலைக்கு வழிவகுக்கும். COVID-19 இன் அச்சுறுத்தல் இன்னமும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கான தடுப்பூசியை உருவாக்கும் காலம் வரும்வரை அதுவும் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

Related Articles

Exit mobile version