அப்பாக்கள் எப்போதுமே விசித்திரமானவர்கள். அவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதே இல்லை. ஆனாலும், நம் செயல்களிலும் சிந்தனையிலும் மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்துவது அப்பாக்களே.
அப்பா இல்லாத போதும் கூட அவரே ஹாரியின் வாழ்வில் அதிகமான தாக்கத்தைச் செலுத்துகிறார். ஹாரி தனது பதினோறாவது வயதில்தான் முதன்முதலாக தன்னுடைய அப்பாவைப் பற்றி கேள்விப்படுகிறான். அதுவரையிலும், ஏதோ ஒரு விபத்தில் இறந்து போனவர் என்ற ஒற்றை நினைவு மட்டுமே அவனிடத்தில் இருக்கிறது.
அப்பாக்களின் ஆதிக்கம்
ட்ராக்கோ-வை எடுத்துக் கொண்டால், அப்பாவின் அச்சுப் பிரதியாக இருக்கிறான்;
டட்லி-யும் அதேபோலத்தான்.
அப்பாக்களின் பிம்பம் தம்மை ஆக்கிரமித்து, தன் சுயத்தையே இழந்துவிட்டோம் என்று தெரிவதற்கே அவர்களுக்குப் பல ஆண்டுகள் ஆகின. இப்படியாக, அப்பாக்கள் கலங்கரைவிளக்கமாகவும் இருக்கின்றனர்; நம்மைச் சுற்றிச்சுழல வைக்கும் மீன்வலையாகவும் இருக்கின்றனர்.
அப்படி மீன்வலையான இரண்டு தந்தைகளே லூஷியஸ் மால்ஃபாய் மற்றும் வெர்னான் டர்ஸ்லி.
தன் குழந்தைகளை வழிநடத்த வேண்டும் என்பதற்கு மாறாக, அவர்களைத் தம் கட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். தங்கள் குணங்களை பிசகில்லாமல் பிள்ளைகளிடம் சேர்ப்பித்தனர். லூஷியஸ் தன் அதிகாரத் திமிரையும், பணம் இருக்கிறது என்ற கர்வத்தையும் அப்படியே மகனிடம் கண்டும் அதைத் திருத்தாமல், வளரச் செய்தார். காலங்கள் செல்லச் செல்ல, தன் தவறை உணர்ந்த ட்ராக்கோவால் எதுவும் செய்ய முடியவில்லை. குற்றவுணர்வும், விட்டுவிட முடியாத கர்வமும் அவனை மன உளைச்சலில் சிக்க வைத்தன. அவனால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. ட்ராக்கோவின் தேவை அனைத்துமே ஒரு சாதாரண குழந்தை வாழ்க்கை, பாரபட்சம் பார்க்காத நண்பர்களுடன். ஆனால், அவனுக்கு அது வாய்க்கப் பெறவில்லை.
டட்லியின் கதை சற்று வேறு. தான் நினைத்ததைச் சாதிக்கும் குணம். எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் அப்பா – அம்மா. அவனது பார்வையில் அவன் செய்வது சரி. தான் தவறு செய்கிறோம் என்பதையே உணர முடியாத நிலைதான் பரிதாபத்திற்குரியது. அவன் சிந்திப்பதற்கான வாய்ப்பே அவனுக்கு வழங்கப்படவில்லை. இறுதியாக பிரிவதற்கு முன்பு “நீ ஒன்றும் தேவையில்லாதவன் என்று நான் நினைக்கவில்லை!” என்று டட்லி சொல்லும் வார்த்தைகள் மட்டுமே முழுக் கதையிலும் அவன் சொந்தமாக சிந்தித்துப் பேசிய வார்த்தைகள். அப்போதும்கூட தன் அப்பா வெளியில் சென்ற பிறகுதான் பேசினான். அந்தளவிற்கு அப்பாவின் ஆதிக்கம் அவனுள் ஊடுறுவி இருக்கிறது!
ஹாரி பாட்டரின் ‘தந்தைகள்’
கதை நெடுகிலும், ஹாரி பாட்டருக்கு தந்தை இடத்தில் முக்கியமாக நான்கு நபர்கள் இருந்திருக்கின்றனர். ஹாரியின் எண்ணங்களும் இவர்களை அடிப்படையாக வைத்தே பயணமாகிறது. ஆல்பஸ் டம்பிள்டோர் எந்தச் சூழலிலும் இவனைக் காப்பாற்றும் நபராக இருக்கிறார்.
ஹாரி எந்த ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும்போதும், அவனுக்குத் தோன்றும் முதல் பிம்பம் டம்பிள்டோர் உடையதே. அனைத்தும் முடிந்துவிட்டது என்ற நிலையிலும் கூட டம்பிள்டோரின் கரம் இவனைக் காப்பாற்ற வரும். இறுதி பாகத்தில் ஹாரி இறந்துவிட்ட போதிலும் டம்பிள்டோர்தான் அதைக் குறித்தத் தெளிவைக் கொடுக்கிறார். வெண்தாடியும் அந்த நீலக் கண்களும் தரும் அமைதியை வேறு எங்கும் ஹாரியால் உணர முடிவதில்லை. டம்பிள்டோர் முழுக்க முழுக்க ஹாரியோடு இல்லாவிட்டாலும், அவரது பார்வை எப்போதுமே ஹாரியைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டம்பிள்டோரை ‘மீட்பர்’ என்றுகூட சொல்லலாம். அனைவரின் ஒற்றை நம்பிக்கையாக விளங்கியவர். அவரின் மரணம், ஹாரியின் தனித்த போராட்டத்தின் ஆரம்பமாக இருந்தது. மரணத்திற்குப் பிறகும், ஹாரிக்குத் தேவையானவற்றை டம்பிள்டோர் செய்துகொண்டே இருந்தார்.
மரணம் எதற்கும் முடிவில்லை என்பதை உணர்த்தும் மற்றொரு கதாபாத்திரம்தான் ஜேம்ஸ்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ‘ஜேம்ஸ்… ஹாரியின் ஞானத்தந்தை’. ஜேம்ஸைப் பற்றிய கதைகளே ஹாரிக்குப் போதுமானதாக இருந்தது. ஜேம்ஸ் தனது சிறு வயதில் செய்த தவறுகளை ஹாரி திருத்திக் கொண்டான். எந்தவொரு சூழலிலும் தன் அப்பாவை அவமரியாதை செய்யும் சொல்லை அவன் பொறுத்துக்கொண்டது இல்லை. அப்பா செய்த தவறுகளைக் குறித்த கதைகளை அவன் நம்ப விரும்பவில்லை. காரணம், அவனிடம் இருந்தவை அனைத்தும் அப்பாவின் கதைகள் மட்டுமே. அக்கதைகளே ஹாரியை உருவாக்கியவை.
தன் அப்பாவைப் பற்றிய எந்தவொரு சந்தேகம் வந்தாலும், அவன் ஓடிச் செல்லும் முதல் நபர் சிரியஸ்.
ஹாரியின் அப்பாவாக, அதற்கும் மேல் நண்பனாக இருக்க விரும்பினார் சிரியஸ். அத்தனை ஆண்டுகள் ஹாரி சந்தித்த துயரங்களைக் களைய விரும்பினார். ஓராண்டு மட்டுமே நீடித்த அவர்கள் உறவில், ஹாரியின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான அன்பை, நம்பிக்கையை விட்டுச் சென்றார் சிரியஸ்.
அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டியவர், லூப்பின்.
ஆசிரியராக அறிமுகமாகி, தான் நினைத்துப் பார்த்திராத அளவிற்கு நெருக்கமான நபராக மாறியவர் லூப்பின். ஹாரிக்கு அறிவுசார்ந்த, வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை அவர் அதிகம் கற்றுக்கொடுத்தார். ஹாரிக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக, தந்தையின் மாதிரியாகத் திகழ்ந்த அவர் தனது குழந்தைக்குத் தந்தையாக வாழ முடியாமல் போனது. ஹாரி பாட்டர் கதை எங்கு தொடங்கியதோ அதே இடத்தில் லூப்பினின் மரணம் மூலம் வந்து முடிந்தது. ஹாரியைப் போல, பெற்றோரைப் போரில் இழந்த ஒரு மகன். ஆனால், அவனுக்கு ஆகச் சிறந்த தந்தையாக ஹாரி விளங்கினான்!
பேசப்படாத தந்தை
ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருப்பதைவிட, பல குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பது சிரமம். பாரபட்சம் பார்க்காமல் நடந்துகொள்வது முக்கியமான வேலை. அதையும் தாண்டி சிறந்த தந்தையாக இருந்தவர், ஆர்துர் வீஸ்லி.
அப்பா என்று பேசத் தொடங்கி இவரை மறக்க முடியாது. ஒரு ஐடியல் அப்பா. ஓர் அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். ஆர்துரின் தாக்கத்தை அதிகமாக பெற்றது ரான். படிப்பில் சராசரியான மாணவன்; ஆனால், சிறந்த குணமுடையவன். ஆர்துரின் சிறு வயது பிம்பம்தான் ரான். பல நிகழ்வுகளால் பின்னால் தள்ளப்பட்டாலும், தன் நட்பாலும் அன்பாலும் கதைக்கு உயிர் கொடுப்பது எப்போதுமே ரான் தான். ரானை வலிமையான ஆளாக மாற்றியதில் முழுப் பங்கும் ஆர்துருடையது!
பல சமயங்களில் அப்பாக்களின் இருப்பு தெரியாமலேயே போய் விடுகிறது. காரணம், அவர்கள் தம்மை முன்னிறுத்திக் கொள்வதில்லை. ஓவியம் தீட்டுகையில், பின்னால் இருக்கும் பேக்ரவுண்ட் வண்ணமாக விளங்குகின்றனர். அவ்வண்ணம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாது, ஆனால் அதன் இருப்புதான் ஓவியத்திற்கான ஜீவனை அளிக்கிறது. அப்படியான பேசப்படாத தந்தையாக விளங்குகிறார், ரூபியஸ் ஹாக்ரிட்.
ஹாரிக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பக்கபலமாக நின்றது ஹாக்ரிட். அவரின் எதிர்பார்ப்பு ஹாரியின் நல்வாழ்க்கை மட்டுமே. ஆனால், ஹாக்ரிட் கண்டுகொள்ளப் படாததற்கான காரணம், குழந்தை மாதிரியான அவரின் குணம் என்று சொல்லலாம். “அப்பா” ஏன்ற சொல்லின் கட்டமைப்பிற்குள் ஹாக்ரிட்டை வைத்துப் பார்க்க முடியாது. ஆனால், ஒரு ‘சைலன்ட் ஃபாதர்’ ஆக கதை முழுவதிலும் பயணித்த ஹாக்ரிட்டிற்குக் கோடி அன்பு!
நம் கதையின் போக்கையே தந்தைகள்தான் தீர்மானிக்கிறார்கள். டாம் ரிட்டில் மனைவியை விட்டுச் சென்றதே வோல்டிமார்ட்டை உருவாக்கியது; ஜேம்ஸ் பாட்டரின் உயிர்த் தியாகமே ஹாரி பாட்டரை உருவாக்கியது; ஆர்துரின் அமைதியே ரானுக்கு அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் வலிமையை அளித்தது. ஜின்னிக்கு எதையும் எதிர்க்கும் துணிச்சலையும் அளித்தவர் அவரே. டோபியாஸ் ஸ்னேப் அம்மாவைத் துன்புறுத்தியதுதான், ஸ்னேப்பை கராராக மாற்றியது; மிஸ்டர் கிரேஞ்சர் அளித்த சுதந்திரமே ஹெர்மாய்னியை வலிமையான பெண்ணாக மாற்றியது; க்ஸெனோஃபிலியஸ் லவ்குட் அளித்த ஒப்பற்ற நம்பிக்கையே லூனாவை அன்பான பெண்ணாக மாற்றியது.
ஒவ்வொருவர் கதையிலும் அப்பா முதுகெலும்பாகவே நிற்கிறார். இப்படி அப்பாவை மட்டும் வலிமையானவர்களாக சித்தரிக்க முடியுமா?
சரி! அம்மா?
ஆண் என்றால் வலிமை, பெண் என்றால் அன்பு என்பது மாதிரியான எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஹாரி பாட்டரா?
(ஜாலம் நீளும்…)
*
முந்தைய அத்தியாயங்கள்:
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்: குறுந்தொடர் – அறிமுகம்
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்!