வாடிவாசலில் துவங்கிய விவசாயிகளின் கிளர்ச்சி, இப்போது நெடுவாசலிலும் அறச்சீற்றத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாட்டைக் காக்கவும், நாட்டைக் காக்கவும் களமாடிக் கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். ஆனால் அவர்களைக் காக்க அரசு இயந்திரங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவுதான் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விவசாயத் தற்கொலைகள்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் முதுகெலும்பு வேளாண்மை தான். மருத்துவரின் வாரிசு மருத்துவர் ஆகவும், பொறியாளரின் வாரிசு பொறியாளராகவும், இவ்வளவு ஏன் அரசியல்வாதிகளின் வாரிசுகள் கூட அரசியல்வாதிகளாகவே உருப்பெறும் இந்த தேசத்தில் விவசாயிகளின் வாரிசுகள் வேளாண் துறைக்கு வருவதற்கு தயாராக இல்லை. காரணம் வேளாண் தொழிலின் மீதும், விவசாயிகளின் வாழ்க்கையின் மீதும் அரசு இயந்திரங்களுக்கு இருக்கும் புரிதல் மட்டுமே!
இன்று காணக் கூடிய தொழில் புரட்சிகளின் காலங்கள் எல்லாம் வெகு சொற்பம் தான். ஆனால் இத்தேசத்தின் பூர்வ தொழிலான வேளாண்மையோ ஓடி, உருக்குலைந்த ஓட்டை உடைசல் பேருந்தைப் போல மாறி நிற்கின்றது.
வேளாண்மையை விட்டு விட்டு பலரும் ஓட, பருவநிலை மாற்றம், விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையின்மை, தண்ணீர் தட்டுப்பாடு, உர விலையேற்றம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆனால் அதையெல்லாம் மிஞ்சிய ஒரு காரணமாய் துருத்திக் கொண்டு நிற்பது அரசு இயந்திரங்களின் தொடர்ச்சியான மவுனம் தான்.
நாடு முழுமைக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வித விதமாய் வேளாண் நசிவுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தாலும், குமரி மாவட்டத்தின் நிலை சற்றே வித்தியாசமானது. இது ஒரு வகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமும் கூடத் தான். ஒரு சோறு பதமாக குமரியை கையாளவும் முடியும்.
பாலை நீங்கலாக நான்கு வகை நிலங்களையும் ஒருங்கே பெற்ற குமரி மண்ணில் இன்ன பயிர்தான் என்றில்லாமல் உணவுப் பயிரிலிருந்து, பணப்பயிர் வரை சகல விவசாயமும், அது சார்ந்த உப தொழில்களும் மாவட்ட மக்களுக்கு வளம் சேர்த்துக்கொண்டிருந்தது. ஆனால் இவையெல்லாம் மாறி ஆண்டுகள் ஆகின்றன. குமரி மாவட்டத்தின் பிரதான சாகுபடி நெல். இப்பகுதிகளை நாஞ்சில் நாடு என்று சொல்லவும் காரணம் உண்டு. நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்று பொருள். ஆனால் இன்று நாஞ்சில் நாட்டில் விவசாயத்தை விட்டே பலரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு பற்பல காரணங்கள் சொன்னாலும், அழுத்தமான காரணங்களில் ஒன்று இது. ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்ததும், அரசு சார்பில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும். குமரி மாவட்டத்திலும் அதே போல் ஒவ்வொரு போகத்துக்கும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு, நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கடலோர மாவட்டம் என்பதால் பொதுவாகவே இங்கு காற்றில் ஈரப்பதன் அதிகம். அதனால் அரசு நிர்ணயித்த ஈரப்பதன் இல்லை எனவும், அதனை விடக் கூடுதலாக இருக்கின்றது எனவும் சொல்லி குண்டு மணி நெல் கூட அரசு கொள்முதல் செய்வது இல்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு போக அறுவடையின் போதும், அரசு இங்கு நெல்கொள்முதல் மையங்களை திறக்காமல் இருந்ததும் இல்லை. அங்கு அளவீட்டு கருவி கூட இல்லாமல் அமர்ந்திருக்கும் வேளாண் அதிகாரிகளுக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஆனால் விவசாயிகளோ வெளிச்சந்தையில் சிண்டிகேட் முதலாளிகளிடம் சிக்கித் தவிக்கின்றனர். நெல் விவசாயிகளின் பிரச்னைக்கு இந்த ஒரு சோறு பதம்.
கடந்த முறை ஒரே ஒரு விவசாயியின் நெல் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. அதுவும் முதல் முறையாக. மாவட்டத்தின் சீதோஷண நிலையை கணக்கில் கொண்டு ஈரப்பதத்தில் தரத் தளர்வு செய்து மொத்த விவசாயிகளையும் வாழ வைக்க வேண்டிய வேளாண் அதிகாரிகள், ஒரு சோறு பதமாக, ஒரு விவசாயியை தூக்கி அடையாளம் காட்டினால், அது சமுத்திரத்தில் கலந்த ஒரு துளி தேனை தேடுவது போலத் தான்!
இன்னொரு புள்ளி விவரத்தை பதிவு செய்வது இங்குள்ள பிரச்னையின் வீரியத்தை தெளிவாக உணர்த்தும். குமரி மாவட்டத்தில் 1950 கால கட்டங்களில் 55 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, இப்போது 8350 ஹெக்டேராக சுருங்கி நிற்கிறது. ஒரு ஹெக்டேயருக்கு இரண்டரை ஏக்கர். இந்த கணக்கில் பார்த்தால் கொடிகட்டிப் பறந்த குமரி இனி சொந்த தேவைக்கு கூட அண்டை மாவட்டங்களில் கையேந்த வேண்டியது தான். உழுவதும், அறுப்பதையும் மட்டுமே செய்து கொண்டிருந்த விவசாயிகள் வரவு, செலவு கணக்குகளை பார்க்கத் தொடங்கியதும்தான் அரசின் பாராமுகம் வெளிச்சத்துக்கு வந்தது.
முதியோர் ஓய்வூதியத் தொகையில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கும் 12 ஆயிரம் ரூபாய் கூட, ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு ஆண்டுக்கு நிகர லாபமாக கையில் நிற்பதில்லை. அதன் விளைவு விளைநிலங்கள் பலவும், வீட்டுமனைகளாக மீட்டுருவாக்கம் ஆகின. இந்த அனுமதியை தன்னிச்சையாக பல பஞ்சாயத்துக்களே கொடுக்கவும் தொடங்கின.
குமரி மேற்கு மாவட்டத்தை பொருளாதாரத்தில் வாழ வைப்பது ரப்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட இப்போது குறைந்துள்ளது ரப்பரின் விலை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பினாலும், மத்திய அரசு ரப்பர் இறக்குமதிக்கு வரியை ரத்து செய்துள்ளதனாலும் குமரியில் வீழ்ந்துள்ளது ரப்பர் சாகுபடியாளர்களின் வாழ்வு. உள்ளூரிலேயே ரப்பருக்கு நல்ல விலை கிடைக்க, இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற நீண்ட கால கோரிக்கையான ரப்பர் தொழிற்சாலை திட்டமும் கனவாகவே தொடர்கின்றது.
அதே போல மார்த்தாண்டம் சுற்றுவட்டாரம் முழுமைக்கும் தேனீ வளர்ப்பே பிரதானம். சற்றேறக்குறைய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வு இதை மையப்படுத்தியே உள்ளது. இருந்தும் தேனீ வளர்ப்பில் உள்ள சந்தேகங்கள், தேனீக்களுக்கு நோய் ஏற்பட்டல் போன்றவற்றுக்கு தீர்வு காண்பதற்கு வசதியாக தேனீ ஆராய்ச்சி மையம் கூட இங்கு இல்லை. மார்த்தாண்டத்தை தேன் கிண்ணம் என்கின்றார்கள். ஆனால் தேன் உற்பத்தி செய்பவர்களோ கன்னத்தில் கைவைத்து காத்திருக்கின்றனர்.
தமிழக, கேரள எல்லையோர விவசாயிகள் பயன்பெறும் வகையில் இரு மாநிலங்கள் சார்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த 1963ம் ஆண்டில் நெய்யாறு இடது கரை கால்வாய் வெட்டப்பட்டது. இதை மையமாக வைத்து கேரளத்தின் பாறசாலை, குமரி மாவட்டத்தின் விளவங்கோடு ஆகிய வட்டங்களில் விவசாயம் நடைபெற்றது. தமிழகத்தின் ரிசர்வ் வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீரால் வளம் பெற்று வரும் கேரளம், குமரிக்கு வந்து கொண்டிருந்த நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீரை நிறுத்தி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகின்றது. நெய்யாறு நீர் இனி தமிழகம் வரவே வராது என்ற ஆழமான நம்பிக்கையோ என்னவோ, அடுத்தடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்கள் அதன் பாசன கால்வாய்களைக்கூட கண்டுகொள்ளவில்லை.
இதே போலவே தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் என்னும் ஒரு சட்டத்தின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றது இங்குள்ள வேளாண் நிலங்கள். குறிப்பாக ரப்பர் சாகுபடி பரப்பு. இச்சட்டம், 1946-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறிமுகமானது. இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, 1949-ல் மெட்ராஸ் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என சட்ட வடிவம் பெற்றது. ஜமீன்தார் முறை இருந்த போது, மரங்கள் அழிப்பை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் இச்சட்டம்.
தொடக்கத்தில் கன்யாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு பகுதிகள் சென்னை மாகாணத்தில் இருந்தன. 1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. 1949ல் இயற்றப்பட்ட இச்சட்டம் குமரியில் நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது. ஏனெனில், இச்சட்டம் இயற்றப்பட்ட போது, குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததனால்தான்.
சென்னை மாகாணத்தின்கீழ் இருந்த கேரள பகுதிக்கும் இச்சட்டம் அமுலில் இருந்தது. அப்பகுதிகள் கேரளத்தில் இணைந்ததும், கேரள அரசு இச்சட்டத்தில் விலக்கு அளித்தது. அதே நேரத்தில் தமிழக அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இச்சட்டத்தை புதிதாக அமுல்படுத்தியது. 1979, 1980, 1982, 2002-ம் ஆண்டுகளில் ஆட்சியரின் அறிக்கைகள் மூலமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் பட்டா நிலங்கள், `தனியார் காடுகள்’ என அறிவிக்கப்பட்டன.
ஆனால், சிறு குறு விவசாயிகளுக்கு இதுபற்றி அறிவிப்பு கூட செய்யவில்லை. இச்சொத்துக்களை விற்கவோ, அடகு வைக்கவோ, வாங்கவோ முடியாது. இச்சட்டத்தின் கீழ் வரும் சொத்துக்களை உரிமம் மாற்றம் செய்ய, மாவட்ட ஆட்சியர், வன அதிகாரி, வருவாய் அதிகாரி, சுற்றுச் சூழல் பொறியாளர், வட்டாட்சியர் என பலரிடம் அனுமதி பெற வேண்டும். அடிப்படைத் தேவைக்கும், குழந்தைகளுக்கான கல்வி, திருமணம் போன்ற செலவுக்கும் கூட, சொத்தை விற்க முடியாமையால் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.
இதே போல் குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதியிலுள்ள ஆறுகாணி முதல் ஆரல்வாய்மொழி வரையிலான ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றுச்சூழல் உணர்வு மண்டலமாக அறிவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை கைவிடக் கேட்டும் வலுவான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கஸ்தூரி ரங்கன் அறிக்கை, முண்டந்துறை புலிகள் சரணாலய விரிவாக்கத்தாலும் குமரி விவசாயிகள் பாதிப்படையவே செய்கின்றனர்.
பொதுவெளியில் ஒற்றுமைக்கு முன்னெடுக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று இமயம் முதல் குமரி வரை என்பது. இங்கே கண்முன்னே குமரி முனையில் மட்டுமே விவசாயிகளுக்கு இத்தனை இத்தனை பிரச்னைகள். மக்கள் அடர்த்தியோடு ஒப்பிடுகையில், பரப்பளவில் குறுகலான மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு விவசாயிகளுக்கான பிரச்னைகளின் பட்டியலும் கூட நம் தேசத்தின் மீதான குறியீடு தான். இதன் தொடர்ச்சியை மாவட்ட வாரியாக, மாநில வாரியாக அலசி ஆராய்ந்தால் அவை அடையாளங்களாக அல்லாமல் அவமானமாகவே உருப்பெற்று நிற்கின்றது. முதுகெலும்பை முறித்து விட்டு, நிமிர்ந்து அமருதல் சாத்தியமே இல்லாததும் கூடத்தான். சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?
அப்புறம் இன்னொரு விடயம்,’’வரட்சி பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவும் நெல்லை வரை வந்து விட்டு, குமரி மாவட்டத்துக்கு வரவில்லை.