பிடெல் கஸ்ட்ரோ என்னும் பெருவீரன் !

ஒரு புரட்சிக்காரன்.. கலகம் என்பதையே வாழ்க்கையாக ஆரம்பித்து, போராட்டம், மோதல் என்பதையே தனது வழிமுறையாகக் கொண்டு – கியூபா என்ற தீவின் ஆட்சி அதிகாரத்தை ஐந்து தசாப்தங்களாகத் தனது இரும்புக்கு கரத்தினுள்ளே வைத்திருந்த ஒரு இராணுவ உடையணிந்த சர்வாதிகாரி.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழும் தனக்குப் பின்னர் தனது சகோதரன் ரவுல் கஸ்ட்ரோவை நாட்டின் ஆட்சியில் அமர்த்தினாலும் முணுமுணுப்புக்கள், விமர்சனங்கள் இல்லை. 90 வயதில் இறக்கின்ற இந்த மனிதருக்கு கியூபாவின் எல்லைகள் தாண்டியும், மொழிகள், இனங்கள் கடந்து அஞ்சலிகளும் புகழ் மொழிகளும் பொழிந்துகொண்டிருக்கின்றன.

ஏன்? எப்படி?

என்னதான் புரட்சிகள், போராட்டங்கள் , சமூக விடுதலை, மக்கள் விடுதலை என்பவற்றை நிகழ்த்தி தலைவர்களாக ஆட்சிப் பொறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களது வரலாறுகளைப் பாருங்கள்.. அவர்களது (பதவிகளின்) இறுதிக்காலங்கள் அவர்களால் ஆளப்பட்ட மக்களால் வெறுத்து, விலக்கப்பட்ட அல்லது விரட்டியடிக்கப்பட்டதாகவே அமைந்திருக்கும். புரட்சியின் மூலம் மக்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட ஆட்சிகள், பின்னாளில் தங்களது தனிப்பட்ட செல்வாக்கினுடனான சொந்த சொத்துடைமையாக மாற்றிக்கொண்ட நடைமுறை உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடந்துவந்திருக்கிறது.

(d.ibtimes.co.uk)

(d.ibtimes.co.uk)

மக்கள் நலன்கள் பின்தள்ளப்பட்டு தமது ஆட்சியிருப்பும், சொந்த நலன்களும் முதன்மை பெறுவதாலேயே அநேக புரட்சித் தலைவர்களும், போராட்டத் தலைவர்களும் பின்னாளில் சுயநல, எதேச்சாதிகார சர்வாதிகாரிகளாக உருமாறி வரலாற்றின் ஏடுகளில் இகழ்ந்து வெறுக்கப்படுவோராக மாறி நிற்கின்றனர். ஆனால், ஒரு சர்வாதிகாரிக்கு எதிராகத் தனது இளமைக் காலத்தில் போராட்ட வாழ்வை ஆரம்பித்த பிடெல் கஸ்ட்ரோ போராடி வென்று தலைவனாக மாறியபிறகு, தேர்தலோ (ஆட்சித் தலைமைக்கான), ஆட்சி மாற்றமோ இல்லாமல் ஐந்து தசாப்தங்கள் ஆண்ட ஒருவரைப் பற்றி பெருமையாக, ‘இவன் தான் தலைவன்’, ‘கஸ்ட்ரோ போல ஒரு தலைவன் கிடைப்பதரிது’ என்று கஸ்ட்ரோ கடைக்கொண்ட சித்தாந்தங்கள் பிடிக்காதோரும் கூட சொல்லிப் போற்றுகின்றனர் என்றால் அதன் பின் இருப்பது தான் இந்த மனிதரின் அரசியல் வாழ்க்கையின் வெற்றி என்று சொல்லவேண்டும்.

11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கியூபா, சர்வாதிகாரிகளால் ஆளப்பட்ட, ஆளப்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகள் போலல்லாமல் சகலவிதமான அளவீடுகள், தேர்ச்சி சுட்டெண், வசதி, வாய்ப்புக்கள், தராதரங்கள் போன்றவற்றில் உயர்தரத்தைப் பேணுகிறது. 1959இல் இடம்பெற்ற கியூபப் புரட்சிக்குப் பிறகு படிப்படியாகவும், 99-2000ஆம் ஆண்டுக்குப் பிறகு சடுதியாகவும் கியூபா வளர்ச்சி கண்டே வந்திருக்கிறது. இலங்கையை விட சற்றே பரப்பளவில் பெரிய நாடு. சனத்தொகை இலங்கையில் பாதி. எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மனித வள அபிவிருத்திச் சுட்டெண் என்ற அளவீடுகளில் எல்லாம் அபிவிருத்தியடைந்த நாடுகளோடு போட்டிபோடுமளவுக்கு கியூபா முன்னேற்றம் கண்டே வந்துள்ளது.

உலக வரைபடத்தில் கியூபா (huffpost.com)

உலக வரைபடத்தில் கியூபா (huffpost.com)

மருத்துவ வசதிகளில் அமெரிக்காவுக்கு சவால் விடக் கூடியளவுக்கு மாபெரும் முன்னேற்றம். 1000 மக்களுக்கு 5.59 வைத்தியர்கள் என்ற கணக்கில் கியூபாவின் சுகாதார சேவையை மற்ற நாடுகள் வியந்து பார்க்கின்றன. (அமெரிக்காவில் 1000 பேருக்கு 2.39 என்ற கணக்கு) இதுபோலதான் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்ப வசதி என்ற சகலதுறைகளிலும் கியூபா தன்னிறைவு கண்டு முன்னிலையில் திகழ்கிறது.

அமெரிக்க – ரஷ்ய பனிப்போர் காலம் முதல், ரஷ்ய ஆதரவுப் போக்கு, கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைக்கொண்டமை ஆகிய காரணங்களால் பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்குள்ளாகி தனித்துவிடப்பட்ட கியூபா, அதையெல்லாம் தாண்டி இத்துணை வளர்ச்சி கண்டிருக்கின்றதென்றால் கஸ்ட்ரோ தன்னுடைய இரும்புப்பிடி ஆட்சியுடன் நீண்டகால திடமான வியூகத்தையும் கொண்டிருந்தமை தான் காரணம்.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் பிடெல் காஸ்ட்ரோ (cdn.history.com)

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் பிடெல் காஸ்ட்ரோ (cdn.history.com)

சிறிய நாடாக இருக்கும்போதிலும் கூட உலகில் மருத்துவக் கல்வியின் கேந்திர ஸ்தானமாக கியூபா கருதப்படுகிறது. கல்வியறிவில் உலகில் மிக உயர்ந்த நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. கியூபாவின் கல்வியறிவு வீதம் 99.8 என்கிறது CIA World Fact book.

1989இல் சோவியத் யூனியனின் சிதறல் கம்யூனிசம் உலகம் முழுவதும் தோல்வியடைவதற்கான ஏதுவாக அமைந்தபோதும் கஸ்ட்ரோவின் இறுதிக்காலம் வரை கியூபாவின் மூலம் கம்யூனிசம் வெற்றிகரமாக நின்றுகொண்டேயிருந்தது.

80-90களில் பொருளாதார ரீதியில் நலிவோடு போராடிக்கொண்டிருந்தாலும் உள்நாட்டு உற்பத்திகளைத் தன்னிறைவுப் போக்கில் கொண்டுசென்ற கஸ்ட்ரோ நிர்வாகம், முதலீடுகளை நீண்ட நோக்கில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இட்டதன் நற்பலன்களை இப்போது கியூபா அனுபவிக்கிறது. எந்த மக்களின் நசுக்கப்பட்ட நலன்களுக்காக பிடெல் போராளியாக மாறினாரோ, அந்த மக்களுக்கு இலவச கல்வியும் மருத்துவமும் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.

(img.rt.com)

(img.rt.com)

மக்கள் ஆதரவு இறுதிவரை குறையாதவராக கஸ்ட்ரோ விளங்கியதற்கு இவற்றை நாம் காரணங்களாகக் கொண்டால், அவரை விமர்சிப்பதற்கும், கியூபாவிலிருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் வெளியேறி அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டும் சில கியூபர்கள் அவரை எதிர்ப்பதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. கஸ்ட்ரோ மிகவும் இறுக்கமாகக் கடைக்கொண்ட கம்யூனிஸக் கொள்கைகள் பொருளாதார சுதந்திரத்தையும், இன்னொரு பக்கம் ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தியிருந்தன.

எனினும், பிடெல் கஸ்ட்ரோ பதவியிலிருந்து விலகி ஓய்வுக்குச் செல்லமுன் ஆற்றிய உரையில் “கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்த உலகத்தின் சிறந்த உதாரணங்களாகத் திகழ்வார்கள். கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்கே உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டது போல, தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார்.

(bento.cdn.pbs.org)

(bento.cdn.pbs.org)

அதேபோல, அமெரிக்காவின் ஏகாதிபத்தியமும், திறந்த கொள்கையுடன் கூடிய முதலாளித்துவமும், வளச்சுரண்டலில் தமது நாட்டையும் விழுங்கிவிடக்கூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

இவரை மடக்கவும் , வீழ்த்தவும், அடிபணியவைக்கவும் அமெரிக்கா எத்தனையோ வழிகளில் முயன்றாலும் எதுவுமே இறுதிவரை பலிக்கவில்லை. அமெரிக்க உளவு நிறுவனமான CIA இவரைக் கொலை செய்ய 600க்கு மேற்பட்ட தடவைகள் முயன்று தோல்விகண்டதாகவும், இதற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் சொல்லப்படுவது மிகையானதொரு விடயமல்ல. (சரியாகச் சொல்வதானால் 638 தடவைகள். மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியதைப் பிரித்தானிய ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடெல் கஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” –  638 Ways to Kill Castro என்ற தலைப்பையே வைத்தது. பின்னர் இது நூலாகவும் வெளிவந்தது)

அமெரிக்கா தனக்கு எதிராக ஒரு சக்தி எழுந்திருப்பதையும், தன்னால் எதிர்க்கப்படும் ஒரு சித்தாந்தத்தை வேதமாகக் கொண்டியங்கும் ஒருவரை விட்டுவைக்க விரும்பாது என்பதும் உலகறிந்த ஒரு விடயமே. எனினும் சதாம் ஹுசேய்ன், கடாபி, எகிப்திய, சிரிய  தலைவர்கள், பல ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் போலல்லாமல் கஸ்ட்ரோ அசைக்க முடியாதவராக எழுந்து நிற்க காரணமாக அமைந்தது நாட்டுக்காக அவர் திட்டமிட்ட கொள்கைகள் காரணமாக மக்களின் குலையாத ஆதரவு அவருக்குத் தொடர்ந்தும் இருந்ததே ஆகும்.

“எமது தேசம் வெறுமனே கியூபா அல்ல, அது மனிதாபிமானத்தின் தேசமும் கூட. இதை வட அமெரிக்கர்கள் புரிந்து கொள்வதாக இல்லை!” இது ஐ.நா சபையிலும், தனது உரைகளிலும் பிடெல் அடிக்கடி முழங்கிய வாசகங்கள்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் உலகின் வல்லரசு நாடாகத் திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக அன்று முதல் இருந்தவர்தான் பிடெல் கஸ்ட்ரோ. போராட்டத்தை ஆரம்பித்ததது முதல், அமெரிக்கா  சில ஆண்டுகளுக்கு முதல் தன்னுடைய பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும்வரை கஸ்ட்ரோ அமெரிக்கப் பெரு வர்த்தகர்கள் தமது நாட்டை சுரண்டுவதைத் தடுத்தே வந்திருக்கிறார்.

அமெரிக்காவின் பொம்மை அரசாங்கமாக இருந்த புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை 1959ம் ஆண்டு  வீழ்த்தி கியூபாவின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார் பிடெல். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். இவர் ஆட்சியைப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தன.

முதலில் கஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களைத் தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர்தான் இவரைக் கொலை செய்வதற்கான பல்வேறு வியூகங்கள் விரிக்கப்பட்டன. போதாக்குறைக்கு கியூபாவினுள்ளேயே உள்ளக சாதிகள் பலவும் திட்டமிடப்பட்டன. அத்தனையையும் கஸ்ட்ரோ முறியடித்திருந்தார்.

கியூப அதிபர் ரயோல் காஸ்ட்ரோவுடன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா (usnews.com)

கியூப அதிபர் ரயோல் காஸ்ட்ரோவுடன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா (usnews.com)

கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என கஸ்ட்ரோ அறிவித்ததோடு, கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார். அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. இந்தத் தடைகள் அண்மையில் ஒபாமாவும் ரவுல் கஸ்ட்ரோவும் நடத்திய சுமுகப் பேச்சுக்களின் பின்னரே ஓரளவு தணிந்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முதல், கஸ்ட்ரோ தீர்க்கதரிசித்த ஒரு விடயமே இந்தப் பொருளாதாரத் தடைகளின் தளர்வுக்கு காரணம் என்று சிலாகிக்கப்படுகின்றது. “அமெரிக்காவுக்கு எப்போது ஒரு கறுப்பின ஜனாதிபதியும், போப்பாண்டவராக எப்போது ஒரு லத்தீன் அமெரிக்கரும் வருகின்றனரோ அப்போது அமெரிக்கா  பேசி, அங்கீகரிக்கும்” இது பிடெல் கஸ்ட்ரோவின் 1970களின் பிரபல கூற்று. ஒபாமா கியூபாவுக்கே தேடிவந்து படுக்கையில் கிடந்த கஸ்ட்ரோவை சந்தித்ததும், பின்னர் அமெரிக்க – கியூப பேச்சுவார்த்தைகளும் உலகை ஆச்சரியப்படுத்தியது.

முன்னாள் கியூப ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவை அவரது இல்லத்தில் சந்தித்த போப் பிரான்சிஸ் (a.abcnews.com)

முன்னாள் கியூப ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவை அவரது இல்லத்தில் சந்தித்த போப் பிரான்சிஸ் (a.abcnews.com)

பிடிவாதக்காரராக அறியப்பட்ட பிடெல், தனது கொள்கையிலிருந்து விலகாமல், அதே நேரம் தனது பிடிவாதத்துக்காக நாட்டை ஒரு சுடுகாடாக மாற்றிய ஒரு வறட்டு சர்வாதிகாரியாகவும் விளங்கவில்லை. பொருளாதாரத் தடைகளால் தமது உற்பத்திப் பொருட்கள் கியூபாவுக்குள்ளேயே தேங்கிய பொழுதில் நம்பிக்கையோடு அம்மக்களை திடப்படுத்திய கஸ்ட்ரோ, சுய உற்பத்தியிலேயே தன்னிறைவு காணச் செய்ததிலும் வெற்றிகண்ட ஒரு மக்கள் தலைவரானார்.

அமெரிக்காவையும் அதன் ஏகாதிபத்தியத்தையும் எத்தனையோ உலகத் தலைவர்கள் எதிர்த்து நின்றிருந்தாலும் பலர் தோற்று அழிந்து போனார்கள்; இன்னும் பலர் தங்கள் நாடுகளையும் சேர்த்தே அழியாச் செய்து, காவுகொடுத்து பலியாகிப் பாவம் தேடிக்கொண்டார்கள். ஆனால், சுருட்டையும் நிமிர்ந்து கம்பீரமாக தனது இராணுவ உடையையும் அடையாளமாகக் காட்டி நின்ற பிடெல் கஸ்ட்ரோ தானும் அடங்கவில்லை; தனது நாட்டையும் அடகு வைக்கவில்லை. இதனாலும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கப்போகிறார் இம்மாமனிதர்.

சர்வாதிகாரியாக – ஜனநாயக விரும்பிகள் இன்றும் எதிர்ப்புக் காட்டுகிற, விமர்சனத்துக்குள்ளாகும் ஒரு சர்ச்சைக்குரிய நபராக விளங்கினாலும் – தளர்ந்து கிடந்த ஒரு நாட்டின் தலைவராக கியூபாவை வீழ்ந்துவிடாத ஒரு தேசமாக வைத்திருந்த காரணத்தினாலேயே உலக மக்களின் மரியாதையோடு உலகிலிருந்து ஒரு பெரு வீரனாக கஸ்ட்ரோ விடைபெறுகிறார்.

Related Articles

Exit mobile version