காணாமல் போகும் தளபாடங்கள்

எமது அன்றாட வாழ்க்கையில் ஏராளமான பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன, இருந்தன. அப்படி இருந்தவை பற்றிதான் இன்று மீட்டிப்பர்க்கப்போகிறோம். எம் நினைவுகளோடு ஒன்றியவை. காலவோட்டத்தில் காணாமல்போகும் நிலையில் உள்ள எம் வீட்டு பொருட்கள் எவை என்று நாம் உணரவேண்டும். இன்றைய சிறுவர்கள் கண்டிருக்க வாய்ப்பே இல்லாத பல பொருட்கள் உள. பலருக்கு பல கதைகள் அவற்றை சுற்றி இருந்திருக்கும். குழந்தையாக இருக்கும்போது சிலவற்றை அண்டவிடாமல் நம் பெற்றோர் தடுப்பதும், சொல்பேச்சுக்கேளாமல் நாம் விளையாடி தண்டனை பெறுவதும் அன்றைய நாளில் வாடிக்கை.

உரல், உலக்கை 

எமது முன்னோர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பயன்படுத்திய உரல், உலக்கை மற்றும் சுளகுகள் போன்றவை இன்று காணக்கிடைக்கா அரிய தளபாடங்களாக ஆகிவிட்டன. பட உதவி:  myjunkdiary.blogspot

இந்தபட்டியலில் இது இடம்பெறுவது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம், சிலர் உண்மைதான் என பெருமூச்சு விடலாம். இரண்டுமே இன்றைய நாளில் சாத்தியம், ஆனால் எதிர்காலம்? அன்றாட பாவனையில் அற்றுப்போய்விடும் நிலையில் இது உள்ளது தவிர்க்கமுடியாத உண்மை. வீடுகளில் சில வாசனைத்திரவியங்களை வைத்து இடித்து அந்தப்பொடியை கறிகளில் அம்மா தூவும் போது எட்டிப்பார்த்து முகரும் நினைவுகள் இனி மீளாது. தேங்காய் சம்பல் என்றால் உரலில் இடிக்கும் போது அதன் சுவையே தனி. மரம் அல்லது உலோகத்தால் செய்யப்படும் இது இன்று காணாமல் போக காரணம் தயார்நிலை மசாலாக்கள், அரைக்கும் இயந்திரங்களின் அதீத பயன்பாடு போன்றவையே. இதற்கெல்லாம் மேல் உரலில் இடிக்கும் ஒலி பல சமூக ஆர்வலருக்கு ஒலிமாசை ஏற்படுத்துவதாகவும் தோன்றியிருக்கலாம். இந்து ஆலயங்களில் திருவிழா நேரங்களில் ‘பொற்சுண்ணம்’ இடிக்கும் நிகழ்வு, ஈமைக்கிரியைகளின் போது சுண்ணம் இடித்தல் ஆகிய சடங்குகள் இருக்கும் வரை இதன் பாவனை ஆண்டுக்கொருமுறையாவது இருக்கும். இது பல்வேறு அளவுகளில் தேவையை பொருத்து காணப்படும். வெற்றிலை,பாக்கு இடிப்பது முதல் நெல் இடிப்பது வரை இதன் அளவு மாறும். 

அம்மி, குழவி  

இது அருகி அல்ல அற்றே போய்விட்ட பொருட்களின் பட்டியலில் இணைத்தாலும் வியப்பில்லை. இன்றும் ஏதாவது கிராமத்தில் சிலவீடுகளில் இருக்க வாய்ப்புண்டு. முழுக்க முழுக்க கருங்கல்லாலானது. சரிவக வடிவான ஒரு பாகம்(அம்மி), அதன் அகலமளவு நீளமுடைய உருளை (குழவி) இணைந்ததே இது. அம்மியின் மேல்தளம், குழவி ஆகியவை சிறு குழிகள் கொண்டவை. இந்துக்களின் திருமணத்தில் ‘மெட்டி அணிவிக்கும் சடங்கு’ இருக்கும் வரை இதனை நாம் திருமணங்களில் நிச்சயமாக காணலாம். ஆயிரந்தான் நவீன கருவிகள் இதன் பாவனையை மழுங்கடித்தாலும் அனுபவம் மிக்கவர்கள் அம்மியில் அரைக்கும் பதம் எப்பேற்பட்ட அரைப்பானிலும் வராது என்பர். அம்மிக்கல்லில் உள்ள சிறு குழிகளை கண்கள் என்பர். தொடர் பாவனையின் காரணமாக அவை மழுங்கும் போது அவற்றை செம்மைப்படுத்த அம்மிக்கல் பொளிவோரிடம் கொண்டுசெல்வர். இன்றைய நாளில் அப்படி ஒரு தொழில்வர்க்கமே அழிந்துவிட்டது என்பதுதான் உண்மை. இன்றும் சில மூலிகை மருந்து தயாரிக்க அம்மியை தான் பிரயோகிப்பர். காரணம் மேற்கூறியது போல அதன் பதமாக அரைக்கும் தன்மை தான்.

ஆட்டுக்கல், குழவி 

எமது முன்னோர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பயன்படுத்திய அம்மி மற்றும் ஆட்டுக்கல் போன்றவை இன்று காணக்கிடைக்கா அரிய தளபாடங்களாக ஆகிவிட்டன. பட உதவி:  myjunkdiary.blogspot    

 அழிந்து விட்ட பட்டியலில் அடுத்தவர் இவர். முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆனது. பெரிய விட்டமுடைய கல்லில் ஓரளவான குழி அதனுள் வைத்து ஆட்டும் வகையில் குழவி, ஆனால் இந்த குழவி அம்மியுடையதை போன்றன்று. மேல்முனை சிறிய விட்டமும், கீழ்முனையில் பெரிய விட்டமும் உடையது. ஒரு வகையில் கூம்பு போன்ற வடிவுடையது. இட்லி, தோசை, வடை போன்றவற்றுக்கு மாவரைக்க இது பயன்படும். இதிலரைக்கும் போது வரும் பதம் எந்த மின்கருவியாலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இதனை மையப்படுத்தி சடங்குகள் இன்மையால் இனிக்காண்பது இயலாத காரியம் தான். 

திருகைக்கல் 

முழுவதும் கருங்கல்லால் ஆனது. இருபாகமுடையது, மேல்பாகம் சுழலக்கூடியது, கீழ்பாகம் நிலையானது. அரிசிமா, குரக்கன்மா போன்ற மாவரைக்க பயன்படும். இதனிடையில் தானியங்களை இட்டு சுழற்ற வேண்டும். மா அதுவாகவே நாலாபக்கமும் வெளிவரும். அந்தக்காட்சி பார்க்கவே அழகாக இருக்கும். புகைப்படக்கலைஞருக்கு நல்ல தீனி.  

சுளகு

பனையோலையால் பின்னப்பட்டது இது. தானியங்களில் உள்ள அழுக்குகளை நீக்க பயன்படும். வீடுகளில் அரிசியிலுள்ள கல், உமி(நெற்கோது) ஆகியவற்றை நீக்க இதன் மூலம் புடைப்பர். சுளகு மூலம் புடைத்தல் உண்மையிலேயே ஒரு கலை. மிகக்கவனமாக அதன் மீது விசையை வழங்க வேண்டும். கூடினால் முகத்தில் தானியங்கள் மழை பொழிவது உறுதி. சுளகு மூலம் புடைக்கும் போதும் புகைப்படக்கலைஞனுக்கு தீனி போடும் காட்சிகள் ஏராளம் கிடைக்கும். 

தடுக்கு 

இதுவும் ஓலையால் பின்னப்பட்ட சற்சதுரமான பாய். அக்காலத்தில் குழந்தைகளின் உடல்மீது எண்ணெய் பூசி சூரியஒளி படுமாறு இதன்மீது படுக்கவைப்பர். சாதாரணமாகவே குழந்தைகளை படுக்கவைக்க இதனைத்தான் பயன்படுத்துவர். குழந்தைகளின் உடலமைப்பு சீராக வருவதற்கு இது உதவும். ஒரு குழந்தை முதன்முதலில் பிறழ்வதும் இதன்மீதே. 

புற்பாய், ஓலைப்பாய் 

பலருக்கு ஆச்சரியமாக இருப்பினும் இதுதான் உண்மை. பிளாஸ்டிக் யுகத்தில் பாயும் பிளாஸ்டிக் ஆனது. புற்பாயானது நாணல் எனப்படும் ஆற்றங்கரையோரத்தில் வளரும் ஒரு வகைப்புல்லால் தயாரிக்கப்படும். மற்றையது பனையோலைப்பாய் இவற்றின் மீதுறங்குவது ஒரு தனி சுகம் என பலர் கூறுவர். உடலுக்கும் சுகாதாரமானது. 

குழந்தைகளின் தள்ளுவண்டி 

முந்தைய தலைமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் நடைபழக உதவியாக நடைவண்டிகளை பெற்றோர் வைத்திருப்பர். இக்காலத்திலும் சில இடங்களில் இது பயபடுத்தப்படுகிறது . பட உதவி:  eluthu.com

அக்காலத்தில் குழந்தையொன்று நடக்கப்பழக வழங்கும் விளையாட்டு உபகரணம் இது. மூன்று சக்கரங்களை கொண்டதும் ஒரு கைப்பிடியுடையதும் மிக எளிமையான ஒரு விளையாட்டுப்பொருள். எல்லா வீடுகளிலும் தமது குழந்தைக்காக தச்சனிடம் சொல்லி செய்விப்பர். அதில் அந்த குழந்தை விளையாடுவது பார்க்கவே கொள்ளை அழகு. பல வீடுகளில் குழந்தை இளைஞனான பின்பும் இதனை பார்த்து மகிழ்வர். 

பம்பரம் 

முழுவதும் மரத்தாலான இது. இன்று அழிந்துவிட்ட ஒரு அற்புதமான விளையாட்டுப்பொருள் ‘BayBlade’ வருவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பாவனையிலிருந்தது. இதனை கையிலெடுத்து கையிற்றை சுற்றி அப்படியே வேகமாக சுழல விடுவது தனித்திறமை. பௌதிகவியல் தத்துவத்தை பள்ளிப்பருவத்திலேயே சிறார்கள் புரிந்து கொண்டனர். 

திருவுபலகை 

சில வீடுகளில் இது இப்போது பாவனையில் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதிர்காலம் இதற்கு இல்லை என்பதே நிதர்சனம். பொதி செய்த தேங்காய் பால் அதுவும் பொடியாக கிடைக்கிறது. இல்லத்தரசிகளுக்கு அப்படியே கறியில் போடுவது தான் வேலை. ஆகையால் தேங்காய் துருவ இது இனி தேவை இல்லை. பல கடைகளில் மின்னியந்திரம் பொருத்திய திருவு இருப்பதால் சிலர் கடைகளில் தேங்காயை கொடுத்து தேங்காய்ப்பூ பெறுவதும் வாடிக்கையாகி விட்டது. 

பாக்குவெட்டி, கால்தட்டம் 

வயோதிபர்கள் பாக்கு வெட்ட பாக்குவெட்டியை பயன்படுத்துவர். கால்தட்டம் என்பது இவற்றை வைத்து பரிமாற பயன்படும் ஒரு தட்டாகும். இக்காலத்தில் இதன் பாவனை வெகுவாக குறைந்து விட்டது. 

ஏணை/தூளி

முந்தைய தலைமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் தூங்கவைக்க, தாலாட்ட இது பயன்படுத்தப்பட்டது. இப்போதும் பயன்படுத்தப்ட்டு வருகிறது. ஆனால் புதிய சில தொட்டில்களின் வருகையால் இவை இல்லாது போய்விடலாம். பட உதவி:  subaillam.blogspot

குழந்தையை தாலாட்ட பயன்படும். வீட்டிலுள்ள தீராந்தி(கூரையை தாங்கும் பலகை)யில் பருத்தி சேலையால் ஊஞ்சல் போன்ற அமைப்பை உருவாக்குவர். அதில் குழந்தையை வளர்த்தி தாலாட்டுவர். ஏணை கட்டுவதற்காகவே தாய்மார் பருத்தி சேலை வாங்கி அணிவர். இதில் குழந்தை உறங்கும் போது தாயின் கருப்பையில் இருப்பது போன்ற நிலையில் இருக்கும். அத்துடன் குழந்தை நிறைய நேரம் நிம்மதியாக உறங்கும். இன்றைய நாளில் பலவிதமான குழந்தை தொட்டில்கள் வருகையால் தூளி கட்டும் பழக்கம் வீடுகளில் இல்லை. 

இது போலவே மட்பாண்டங்கள், அரிவாள், ஏர் ஆகியவற்றின் பாவனை நவீன யுகத்தில் அருகிப்போய் விட்டது. அம்மி, ஆட்டுக்கல், திருகைக்கல் மற்றும் திருவுபலகை போன்றன வெறுமனே சமையல் உபகரணங்கள் மட்டுமின்றி உடற்பயிற்சி உபகரணங்களும் தான். இவற்றை பாவித்த பெண்மணிகள் ஆரோக்கியமாகவே இருந்தனர், இருக்கின்றனர். அன்றைய பெண்கள் மென்மையானவர்கள் என்று கூறுவோர் அம்மிக்கல்லை தூக்கிப்பார்த்திருக்க மாட்டார்கள் போலும். எது எப்படி இருப்பினும் சமைக்க நேரமில்லை என்று நவீனம் நாடி ஓடும் நாம் உடல் பருத்துவிட்டது என்று உடற்பயிற்சிக்கூடத்தில் மணிக்கணக்கில் செலவுசெய்யும் எம் வாழ்க்கைமுறை உண்மையில் நகைப்புக்குரியதே.   

Related Articles

Exit mobile version