மனிதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்த உரிமைப் போராட்டத்தின் விளைவாக எந்த நாட்டிலாவது சட்டப்படி அளிக்கப்பட்ட உரிமைகள் எதேச்சதிகரமாக மறுக்கப்பட்டால், சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட நியாயமான உரிமைகள் அழிக்கப்பட்டால் அல்லது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றால், உலக நாடுகள் இவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் பொதுவாகத் தலையிடக்கூடாது எனும் நெறி இருந்தாலும் கூட மனித உரிமைகளைத் தொடர்ந்து நசுக்கும் நாடுகள் மீது பாதிக்கப்பட்ட மக்களின் மேல் கொண்டுள்ள மனிதாபிமான அடிப்படையில் பிறநாடுகள் அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்துள்ளன. தவறிழைக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டுள்ளன. துருக்கியானது கிரேக்க சிறுபான்மையினருககு இழைக்கப்பட்டு வந்த அநீதிகள் கண்டு பிரான்ஸ், ரஷ்ய நாடுகளோடு இணைந்து பிரித்தானியா மேற்கொண்ட மனிதாபிமான தலையீட்டின் மூலம்தான் கிரீஸ் நாடு 1827 ல் விடுதலை பெற வழிவகுத்தது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும் கண்காணிப்பின் கீழும் மேலதிகமாக மனித உரிமைகளை பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச தொழில் ஸ்தாபனம், உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (UNHRC) போன்றவற்றினை குறிப்பிடலாம். உலகில் பல நாடுகள் தமது அரசியல் யாப்பில் அடிப்படை மனித உரிமைகளை உள்ளடக்கியுள்ளது. இவ் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா தனது யாப்பில் அடிப்படை உரிமைகளை 6 வகையாக பிரித்துள்ளது.
சமத்துவ உரிமை, சுதந்திரமாக இருக்கும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமயச் சுதந்திரம், பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள், அரசியல் அமைப்புத் தீர்வு முறை உரிமைகள் இந்த 6 பெரும்பிரிவுகளின் கீழ் பல்வேறுபட்ட மனித உரிமைகளை அதாவது பேச்சுரிமை, சிந்தனை வெளிப்பாட்டுரிமை, அமைதியாக படையாயுதங்கள் இன்றிக் கூட உரிமை, கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைக்க உரிமை, இந்தியாவில் தங்குதடையின்றி எங்கும் நடமாடும் உரிமை, எங்கும் குடியிருக்க மற்றும் வீடமைத்துக் குடியேற உரிமை, வணிகத் தொழில், வாழ்க்கைத் தொழில், பணித் தொழில் எதனையும் மேற்கொள்ள உரிமை என விரிவான உரிமைகளை அரசியல் யாப்பின் மூலம் வழங்குகின்றது. இதன் மூலம் பல்வேறு இனக்குழுக்களை கொண்ட பெரியதொரு நாட்டில் ஒவ்வொரு மக்களும் தமது வாழ்க்கைக்கு தேவையான இன்றியமையாத உரிமைகளை அரசியல் யாப்பின் மூலம் பெறுகின்றார்கள். சாதியினால் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் ஏனைய பிரஜைகளுடன் ஒன்றியையக்கூடிய வகையில் தீண்டாமை ஒழிப்பும் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மூலம் உரிமை மீறல்களுக்கான பரிகாரம் காணக்கூடிய வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுரிமைகளை பாதுகாப்பதற்கான மனித உரிமைகள் ஆணைக்குழு எனும் அமைப்புக்கள் உதவக்கூடிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதைப்போலவே உரிமையுடன் சேர்த்து கடமையும் வளர்ச்சி பெற்றது. இவ்வாறு உலக ரீதியாகவும் பிராந்திய ரீதியாவும் நாடுகள் வாரியாகவும் பல மனித உரிமை ஏற்பாடுகள் மற்றும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்பட்டுள்ளதை காணலாம்.
மனித வாழ்வின் இயல்புகளோடு இணைந்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதும், மனிதனை அடையாளம் காட்டுவதும் மனித உரிமையாகும். எப்பொழுது ஒரு மனிதன் தன் உரிமைகள் பறிபோய்விட்டது எனவும் நீதி கிடைக்காமல் போய் விட்டது எனவும் உணர்கிறானோ அப்போது அவன் போராட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அவனைக் காக்கும் கவசமாக மனித உரிமையைப் பெற்றுக்கொள்கிறான். வரலாற்றுக் காலம் முழுவதும் மனிதன் போராடும் குணம் மூலம் தன் ஆளுமையை தக்க வைத்துக் கொள்வதோடு தனக்குரிய உரிமையையும் மதிப்பையும் சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றான். ஏனெனில் மனித உரிமைக்கோட்பாடு, நீதியை நிலை நாட்டுவதோடு மக்களின் நல்வாழ்விற்கும் துணையாக விளங்குகிறது. இங்கு குறிப்பிட்டபடி ஆட்சி ஒழுங்கின்மை, வன்முறை, அடக்குமுறை என்பன மக்களை கொதித்தெழ செய்ததுடன் மன்னராட்சிக் காலத்தில் மன்னனிடமே உரிமைகள் அனைத்தும் காணப்பட்டமையால் புரட்சியின் மூலமே உரிமையைப் பெற்றுக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 2ம் உலகப்போரிற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் மனித உரிமைப்போராட்டத்திற்கான விடிவெள்ளியாக அமைந்தது. அதன் பின்னரே மனித உரிமைகள் கரிசனை காட்டப்பட்டதுடன் பல மனித உரிமை ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டத்திற்கான தேவைகளை குறைத்துள்ளன.
மனித இனத்தின் வளர்ச்சியும் இன்றைய மனித உரிமைப் பொறிமுறைகளும் சாதாரணமாக கிடைத்தவையல்ல. அவை மனித இனத்தின் தொடர்ச்சியான கடுமையான போராட்டங்களினூடாகவூம் கோரிக்கை நிறைந்த போராட்டத்தினூடாகவூமே கிடைக்கப்பெற்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இன்றும்கூட போராட்டமே ஆதயும். “புரட்சி என்பது உரிமைகளின் மிகப்பெரிய ஆயுதம்” எனப்படும். இவ்வாறு வரலாற்று ரீதியாக மனித உரிமைகள் வளர்ச்சியடைந்து வந்தாலும் இன்னமும் அதன் முழுப்பயனையும் சமூகம் அனுபவிக்கிறதா என்பதே கேள்வியாகும். மனித உரிமைகள் ஒரு பக்கம் வளர்ச்சியடைந்து வரும் அதேவேளை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்களின் உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்பது ஒரு குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. உரிமைகளின் வளர்ச்சியூடன் மனித உரிமை மீறல்களும் அதிகரித்த வண்ணமே உள்ளமை விமர்சனத்துக்குரியது.