பாத்திரம் கழுவும் தேசத்தின் எதிர்காலம்

சுய சமையல் மிக மோசமாக செதப்ப, அதை நாய்க்கு போட்டேன் அது என்னை பார்த்த பார்வை!,  இனி சமையல் அறை பக்கமே போகக்கூடாது என்ற எண்ணத்துடன் வழக்கமாக செல்லும் உணவகம் சென்றேன். புதிதாக ஒரு சின்னபையனை வேலைக்கு சேர்துள்ளார் போல! பயல் பம்பரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

என்ன? குமார் அண்ணே தம்பி நம்ம ஊர் காரன் போலயே என்றேன். ஆமா  தம்பி எப்டி பார்த்தோனே கண்டு புடுச்சிங்க? என்றார். அதெப்டி தெரியாத பையனை வேலைக்கு சேர்பிங்க என்றேன், சிரித்தார். சாப்பிடும் போது முழு கவனமும் அந்த சிறுவன் மேல் மட்டுமே இருந்தது.

அதிகபட்சம் 5-6 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய வயது, இப்படி இந்த சின்ன வயதில் படிக்காமல் வேலை செய்கிறானே என்று கோபமாக வந்தது, கடை முடிந்ததும் உரிமையாளரிடமே கேட்டுவிட்டேன். இது சட்டத்துக்கு புறம்பானது ஏன் இப்படி பண்றிங்க அண்ணே? அண்ணன் ரொம்ப பொருமையா பேச ஆரம்பித்தார் .

2016ஆம் ஆண்டு இந்திய அரசு கணக்கீட்டின்படி இந்தியாவில் 12 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். (ytimg.com)

தம்பி, ஊர்ல அவுங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது, இவனுக்கு முன்னாடி 3 பொம்பள புள்ளைங்க இவன “கவர்மென்ட் ஸ்கூல் “-ல படிக்க வைக்க கூட அவுங்க நாள முடியல!, நான் இடை மறித்து இலவச கல்விதானே அண்ணே என்று சொல்ல, அதலாம் அங்கயும் காசு வேணும் தம்பி, மத்த பிள்ளைங்க வச்சுருக்க மாதி எனக்கும், அது வேணும் இது  வேணும்னு பள்ளிக்கூடம் போகம இருந்துருக்கான். எங்க, அங்க இருக்குற பசங்களோட சேர்ந்து கெட்டு போய்ருவானு என் கூட அனுப்பி வச்சாங்க.

இங்க ஒரு தொழில கத்துப்பான், 3 வேளை சாப்பாடு, சம்பளம், எல்லாம் இருக்குல அதையும் பாருங்க என்றார். சரி இப்ப இவனை ஊருக்கு அனுப்பிறேன் தம்பி! அவன் மூனு வேளை சாப்பாடுக்கும் , படிப்புக்கும் உத்தரவாதம் உங்களால தர முடியுமா என்றார் பேச வார்த்தைகள் அற்று அறையை அடைந்தேன்.

1986ஆம் ஆண்டே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்துவது சட்டத்திற்கு எதிரானது என்றும் மீறி ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சட்டம் உள்ளது. (huffpost.com)

அவர் சொல்வது அத்தனையும் சரி என்றாலுமே ஒரு குழந்தை அதன் பால்யத்தை தொலைக்க எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஒரு தேசத்தின் வருங்காலம் பாத்திரம் கழுவுவதுதான் விதி என்று விட்டுவிட மனம் இல்லாமல் அரசு  இலவச “குழந்தைகள் பிரச்சனை” தொடர்பு மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டேன், வெறும் 55 முறை தான். வரும் அழைப்புகளை எடுக்கக்கூட நேரம் இல்லாமல் உதவுகிறார்கள் போல என்று  சிரித்துக்கொண்டே (அறையில் இருக்கும் அனைவரும் வியக்கும் படி அன்று கோபத்தில் அந்த இலவச சேவை மையத்தை வசை பாடினேன்), இணையத்தில் குழந்தை தொழிலாளர்கள் பற்றி தேடினேன்.

1986ஆம் ஆண்டே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்துவது  சட்டத்திற்கு எதிரானது என்றும் மீறி ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சட்டம் உள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டு இந்திய அரசு கணக்கீட்டின்படி இந்தியாவில் 12 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். சேவை அமைப்புகளின் கணக்குப் படி 60 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர். வெறும் கணக்கு எடுப்பதால் இந்த நிலை மாறிவிடுமா?.

இந்தி பெண் குழந்தைளில் 10 இல் 8 பேர் உறவினர்களாலோ!, நண்பரகளாலோ பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். (myedge.in)

குடும்ப சூழல் காரணமாக வேலை செய்யும் சிறார்கள் ஒரு புறம் என்றால் கடத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கை நம்மை பதற வைக்கிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு கடத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 180 அதில் தலைநகர் தில்லியில் மட்டும் 22.

கடந்த 3 வருடங்களில் குழந்தைகள் கடத்தல் 80% அதிகரித்துள்ளது. 22,580 குழந்தைகள் காணமல் போன வழக்குகளில் வெறும் 9000 குழந்தைகள் மட்டுமே தில்லியில் மீட்கப்பட்டுள்ளனர் அப்பொழுது மீத குழந்தைகளின் நிலைதான் என்ன?.

சென்னை மெரினா கடற்கரையில் 3 சிறுமிகள் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர், நான் எவ்வளவு கேட்டும் யார் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார்கள் (பயிற்றுவிக்கிறார்களோ என்ற உணர்வு ஏற்படுவதை என்னால் நிறுத்த முடியவில்லை) சாப்பிட யார் எது கொடுத்தாலும் உடன் இருக்கும் சகோதரிகளுக்கு கொடுத்த பின் மட்டுமே மூன்று பேரில் மூத்த சிறுமி சாப்பிடுகிறாள். என்னுடைய பயம் எல்லாம் இந்த சிறுமிகள் எதிர் கொள்ளும் பாலியல் கொடுமைகள் பற்றியதாகவே இருந்தது.

காரணம் 60% குழந்தை தொழிலாளர்கள் பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். கடத்தப்படும் 80% குழந்தைகள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். பெண் குழந்தைகளின் நிலை இன்னும் மோசம், இந்தி பெண் குழந்தைளில் 10 இல் 8 பேர் உறவினர்களாலோ!, நண்பரகளாலோ பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். பெற்றோர்களிடம் பகிரவும் பயப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

பிஞ்சுகளின் பிணங்களை பாதுகாக்கவா நம் ராணுவம் உள்ளது? (aljazeera.com)

 

சரி குழந்தைகளுக்கு சரியான உணவாவது கிடைக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. இந்தியாவில் ஒரு நாளைக்கு 3000 குழந்தைகள் சத்து குறைவால் இறக்கின்றனர், அதுவும் 5 வயதை அடையும் முன்னே!.

இந்தியா வளர்ந்துவரும் நாடு, இந்த பிரச்சனைகள் சாதாரணமான ஒன்று என்று அரசு கூற முடியாது. காரணம் கடைசி “இந்திய பட்ஜட்” இல் இராணுவத்திற்கு ஒதுக்கிய தொகை பல வளர்ந்த நாடுகளை விட அதிகம். பிஞ்சுகளின் பிணங்களை பாதுகாக்கவா நம் ராணுவம் உள்ளது? நமக்கு இப்பொழுது தேவை மிக சிறந்த உட்கட்டமைப்பு. இந்த தேசத்தின் வருங்காலமான குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாய் அமைவதை உறுதிப் படுத்துவது இந்த சமுதாயம் மற்றும் அரசின் கடமையே ஆகும்.

இல்லையேல் நம் குழந்தைகள் மொழி தெரியாத மாநிலத்தில் விற்கப் படுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஆக்கத்தை பற்றி சிந்தித்துக்கொண்டு பேருந்தில் வரும்போது சிக்னலில் ஒரு சிறுவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். ஓரு இரு சக்கர வாகனம் இடித்து விட்டது, துளி கண்ணீர் கூட இல்லாமல் அடுத்த வண்டியை நோக்கி கை நீட்டி அவன் சென்று விட்டான்.

நமக்கு இப்பொழுது தேவை மிக சிறந்த உட்கட்டமைப்பு (4to40.com)

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த காவலருக்கு இது அனுதினம் பார்க்கும் ஒரு காட்சி போல அவர் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு இருப்பு கொள்ளாமல் மறுபடியும் அந்த குழந்தைகள் நல பிரிவை அலை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். (இப்பொழுதாவது எடுக்க மாட்டார்களா என்ற நப்பாசை தான்)

டொய்ங்.. டொயங்.. டொயங்.. உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை மீண்டும் முயற்சிக்கவும்…. 1, 2, 3ம் முறை.

Related Articles

Exit mobile version