கறுப்பு வெள்ளையாக மாறுமா? மோடியின் திட்டம் ஓர் அலசல்

இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தினங்களில் நவம்பர் 8ம் திகதியும் ஒன்றாக பதிவாகியிருக்கிறது. அன்றைய தினம்தான், இந்தியாவின் பிரதமர் மோடி, அதிகளவில் புழக்கத்தில் உள்ள 500 , 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என அறிவித்ததுடன், புதிய 500 மற்றும் 2000 நாணயத்தாள்களையும் அறிமுகம் செய்திருந்தார். இதன்போது, குறித்த அறிவிப்பினை கறுப்புபண போராட்டத்திற்கான புதிய முயற்சி எனவும், நாணய பரிமாற்றம் அற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான புதிய முயற்சி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

(cdn.pymnts.com)

மோடியின் திட்டப்படி நவம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக பத்துலட்சம் கோடிரூபாய்வரை வங்கிகளில் வைப்பிலிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. (cdn.pymnts.com)

குறித்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஒரு மாதத்தினை இந்தியா கடந்துள்ளநிலையில், மோடியின் திட்டமும், அதன் நோக்கமும் சரியான இலக்கை நோக்கி நகர்ந்து செல்கிறதா ? இல்லையா ? என்பது தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது.

மோடியின் திட்டம்! கறுப்புப்புப்பண ஒழிப்பா? வேறேதும் அரசியலா?

குறித்த சுட்டியில், மோடியின் அறிவிப்பின் போதான அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.

மோடி எதிர்பார்த்ததும், நடந்தவையும்

சிலவருடங்களுக்கு முன்னதாக, “அனைவருக்கும் வங்கிக்கணக்குஎன்கிற திட்டத்தின் மூலமாக, மோடி அவர்கள் கறுப்புபணத்தினை ஒழிப்பதற்கும், நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்றத்தை சடுதியாக நிறுத்தும்போது, சாமானியர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், எதிர்வரும் காலத்தில் நாணய பரிமாற்றம் அற்ற இந்தியாவை உருவாக்கவும் அடித்தளத்தினை இட முனைந்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 93%மானவர்கள் தமக்கென வங்கிக் கணக்குகளை உருவாக்கியும் கொண்டனர். இதன்மூலமாக, நவம்பர் 8 திட்டத்தினை சடுதியாக நடைமுறைப்படுத்தும்போது, பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் புழக்கத்திற்கு வரும்போது அல்லது வங்கிகளில் வைப்பிலிடப்படும்போது அவற்றை இலகுவாக கண்காணிக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் இவ்வங்கிகணக்குகள் உறுதுணையாகவிருக்கும் என திட்டமிடபட்டிருந்தது.

(si.wsj.net)

ரூபாய் நோட்டுக்களை மாற்றம் செய்வதற்காக முண்டியடிக்கும் மக்கள் (si.wsj.net)

மோடியின் திட்டப்படி நவம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக பத்துலட்சம் கோடிரூபாய்வரை வங்கிகளில் வைப்பிலிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக, ஒருவரது இயலுமைக்கு மேலதிகமாக வைப்பிலிடப்படுகின்ற பணத்திற்கு 50% – 200% வீத வரிவிதிப்பினை மேற்கொள்வதன் மூலம், கறுப்பு பணத்தினை கணக்குகளுக்குள் கொண்டுவரவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிஜத்தில் கடந்த நவம்பர் 10-27ம் திகதி முதல் வங்கிகளில் சுமார் 8.45 லட்சம் கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்டதாக அறிவித்ததுடன். கறுப்புப் பணத்தினை வைத்திருப்போருக்கு தண்டனை அற்றகாலமான நவம்பர் 30ம் திகதியான இறுதி தினத்தில் மட்டும், சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் வைப்பிலிடபட்டதாக அறிவிக்கபட்டிருக்கிறது. இது, மோடியின் கனவு திட்டத்தில் வங்கிகளில் பணத்தை வைப்பிலிடுகின்ற திட்டத்தில் பெரும்பகுதியை பூர்த்தி செய்திருந்தபோதிலும், கறுப்பு பணத்தினை மீட்டெடுக்கும் முயற்சியில் போதிய முன்னேற்றத்தை காட்டவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, அரச அமைப்பில் முற்றுமுழுதாக ஊடுருவியிருக்கும் ஊழல், அரச அமைப்பில் உள்ள வினைத்திறனற்ற திட்டங்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்பன பெரும் பணமுதலைகளில் கறுப்புப்பணத்தினை வெள்ளையாக்கும் முயற்சியை சாதகமாக்கியிருக்கிறது.

மோடியின் திட்டத்தின் மற்றுமொரு பகுதியான பணப்பரிமாற்றமற்ற இந்தியாவை உருவாக்கும் திட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றத்தை காட்டவில்லை. இந்தியாவின் எழுத்தறிவு வீதம் 74%மாக உள்ளநிலையில், இன்னும் பல லட்சம் இந்தியர்களுக்கு தங்களுக்கான சுய கையொப்பத்தை கூட உருவாக்கிகொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், பணமற்ற கொடுக்கல்,வாங்கல்களுக்கு தேவையான அடிப்படை அறிவினை எல்லா இந்தியர்களுக்கும் ஏற்படுத்துவதில் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்தியாவின் NTI நிறுவனத்தின் பிரதம அதிகாரியாக உள்ள அமிதாம் காந்த் அவர்களின் கூற்றின்படி,

பணமற்ற இந்திய கொடுக்கல் வாங்கல்களை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர 3-6 வருடங்களை செலவிட வேண்டியதாக இருக்கும்.அதனை 3-6 மாதங்களுக்குள் நடைமுறைபடுத்த வேண்டும் என மோடி எதிர்பார்க்கிறார் என கூறியிருக்கிறார்.

இது ஒன்றே போதும், பணமற்ற இந்தியாவை (Cashless Money) உருவாக்குவதில் உள்ள சிக்கல்நிலையை தெளிவுபடுத்த…

கறுப்பு பணம் வெள்ளைப் பணமாக மாறியது எப்படி ?

மோடியின் திட்டம் நடைமுறைக்கு வந்ததுமே, கறுப்பு பணத்தினை வைத்திருந்தவர்கள் எல்லோருக்குமே அபாயசங்கை ஊதிவிட்டதாகத்தான் இந்திய அரசும், அதுசார்ந்த ஊடகங்களும் அறிவித்துக் கொண்டிருக்க, இந்தியாவின் பல இடங்களில் சத்தமே இல்லாமல் பண முதலைகள் தங்கள் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக்கொண்டதுதான் வேதனையானது.

(himachalwatcher.com)

பல்வேறு வழிகளில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய சம்பவங்கள் இத்திட்டத்தின் எதிர்பார்த்த விளைவுக்கு சவாலாக இருந்தன (himachalwatcher.com)

குறிப்பாக, வங்கிகளில் போலிக்கணக்கினை உருவாக்கி பணத்தினை வைப்பு செய்தல், வங்கி ஊழியர்களையே விலைக்கு வாங்குதல், முகவர்கள் ஊடாக பெரும் தரகுக்கு பணத்தை மாற்றிகொள்ளுதல், கோவில்களின் கஜானாவில் தங்களது பணத்தையும் சேர்த்து கணக்கு காட்டி, மீண்டும் அவற்றை பாவனைக்குரிய பணமாக மாற்றுதல், இந்தியாவின் வரிவிலக்கு உள்ள வடகிழக்கு பிரதேசங்களை நோக்கி பணத்தை நகர்த்தல், தங்கம் மற்றும் ஆதனத்துறையில் முதலிடுதல் போன்ற வழிமுறைகளின் மூலமாக கறுப்பு பணத்தினை பாதுகாத்துக்கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

இந்திய அரசும், வருமானவரித்துறை அதிகாரிகளும் முறைகேடான நிகழ்வுகள் நடைபெறக்கூடியது என கணித்துவைத்திருந்தவற்றுக்கு மேலதிகமாக, இவை இடம்பெற்றதன் விளைவாக, அதற்கு ஏற்றால்போல செயல்படுவதற்கு முன்பே இந்த பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை இடம்பெற்று முடிந்துவிட்டன. குறிப்பாக, தங்கம் மற்றும் ஆதனதுறைகளின் கொடுக்கல் வாங்கல்களில் கட்டுப்பாடுகளை திடீரென நடைமுறைப்படுத்தியமை சிறந்த உதாரணமாகும்.

இவற்றுக்கு மேலதிகமாக, சில தொழிலதிபர்கள் முறையாக பணத்தினை வைப்பு செய்து ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேலாக வரியினை செலுத்த முன்வந்திருந்த நற்செய்திகளும் இடம்பெறத்தான் செய்திருந்தன. இவர்களுள் பலர், எல்லா முறைகேடான வழிமுறைகளையும் முயற்சி செய்து தோற்றநிலையில், கையில் இருப்பவற்றை இழக்க விரும்பாத நிலையிலேயே இந்த முடிவை எடுத்திருந்தார்கள். இவர்களுக்கு மேலாக, பலர் இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான இந்திய நோட்டுக்களை குப்பையிலும், ஆற்றுபடுக்கைகளிலும் கொட்டிய சம்பவங்களும் இடம்பெற்றன. இவை எல்லாம், இந்திய தேசத்தின் வெளிச்சத்திற்கு வராத கறுப்பு பக்கங்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

பணமில் இந்தியா (Cashless India)

பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளநிலையில், மக்களை வேறேதும் வழிகளின்றி பணமல்லாத வழிமுறைகளில் பரிவர்த்தனைகளை செய்ய மோடி அரசு நிர்பந்திப்பதுடன், சலுகைகளையும் வழங்க முன்வந்திருக்கிறது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் புகையிரத நுழைவுசீட்டு கொள்வனவில் சலுகைகளை வழங்குதல், வாராந்த அதிர்ஷ்டசாலிகளை தெரிவு செய்து, அவர்களுக்கு பணப்பரிசில்களை வழங்கல் போன்ற திட்டங்களின் ஊடாக, மக்களை பணமல்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்த்த முனைகிறது. ஆனாலும், இந்தியாவில் அனைவருக்கும் முழுமையாக வங்கிகணக்குகள் கிடைக்காத நிலையிலும், அது தொடர்பிலான போதிய அறிவினை பெறக்கூடிய நிலையில் இந்தியர்கள் அனைவரும் இல்லாத நிலையிலும், மிகக்குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை நடைமுறையில் அமுலாக்கல் என்பது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

(cfoinnovation.com)

இந்தியாவின் பல இடங்களில் சத்தமே இல்லாமல் பண முதலைகள் தங்கள் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக்கொண்டதுதான் வேதனையானது. (cfoinnovation.com)

இந்தநிலையில், இந்தியாவின் எதிர்கட்சிகள், மோடியும் அவர் அரசும் தொழிலதிபர்களிடமும், பல்தேசிய கம்பனிகளிடமும் இந்தியாவை விற்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, பணமில் இந்தியா திட்டத்திற்கு சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தங்களை மாற்றிக்கொள்வதில் சிக்கல்களை சந்திக்க, மிகப்பெரும் இணையத்தள வியாபார நிறுவனங்களான Amazon India, Flipkart , paytm போன்ற நிறுவனங்கள் சந்தையை ஆக்கிரமித்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை தவிர்த்து உண்மைநிலையினை ஆராய்ந்தால், மொத்த இந்தியாவின் பரிவர்த்தனையில் தற்சமயம் 5%த்தினையே பணமில்  பரிவர்த்தனை முறைமை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதனை மேலும் அதிகரிக்க மோடி அரசு நிறைய தூரம் பயணிக்க வேண்டியதாக இருக்கும்.

திட்டங்கள் வெற்றியா ? தோல்வியா ?

மோடியின் திட்டம் இன்னமும் முழுமையாக தீர்மானிக்கப்படக்கூடிய வெற்றி நிலையினையோ அல்லது தோல்வி நிலையினையோ அடைந்துவிடவில்லை. இவை இரண்டுக்கும் இடையிலான தளம்பல் நிலையில் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டதாக ஒரு மாதத்தினை கடந்து இருக்கிறது.

(assets.entrepreneur.com)

மக்களுக்கு பணமற்ற கொடுக்கல்வாங்கல்களை நடைமுறைபடுத்துவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டியிருக்கும். (assets.entrepreneur.com)

இந்திய மத்திய வங்கியின் கருத்துப்படி, சாதாரண கொடுக்கல் வாங்கல் நிலையினை ஏற்படுத்துவதற்கு, சுமார் 80%மான புதிய பணத்தினை சந்தைக்கு கொண்டுவரவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இது மக்களை சென்றடைய குறைந்தது 3-4 மாதங்களாவது ஆகலாம். அதுபோல, வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தில், தனிநபர் அளவுக்கு அதிகமான பணத்தினை கொண்ட வங்கிக்கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, முடிவுகளை எடுக்க சுமார் ஒருவருடத்திற்கு மேலாக செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. அதுபோல, மக்களுக்கு பணமற்ற கொடுக்கல்வாங்கல்களை நடைமுறைபடுத்துவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டியிருக்கும்.

எனவே, மிக நீண்டகாலத்திலேயே புதுமை இந்தியாவை உருவாக்கும் திட்டம் என்ன ஆனது என்பதனை கணிக்க முடியும். அதுவரை, நடைமுறையில் உள்ள குறைபாடுகளை அரசும் சரி, மக்களும் சரி நிவர்த்தித்துக்கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டும்

Related Articles

Exit mobile version