உலகிலேயே விலையுயர்ந்த உணவு எது தெரியுமா?

சாப்பாடு: சிலர் ருசிக்காகவும் பலர் பசிக்காகவும் எடுத்துக்கொள்கிற ஒரு பண்டமாய் மாறியிருக்கிற இந்தக் காலத்தில் தொன் தமிழன் தந்த மரபியலில் அது ஒரு அரும் மருந்தாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இப்போதெல்லாம் உலகம் முழுக்கவும் தாங்கள் சாப்பிடுகிற சாப்பாட்டின் மூலம் தங்களுடைய ஆடம்பரத்தையும் செல்வந்தர்கள் காட்டுகிறார்கள். மன்னர்கள் காலத்தில் அரிதாக காணப்பட்ட இந்த ஆடம்பர சாப்பாடுகள் பழக்க வழக்கம் மத்திய தர வர்க்கத்திடையேயும் தற்போது மெல்லமாய் ஆட்கொண்டிருப்பதை சமூக வலைத் தளங்கள் காட்டி நிற்கிறது.

புகைப்பட விபரம் – www.istockphoto.com

என்றாலும் சாப்பாடு என்றதும் நம்மைப் போன்றவர்களுக்கு  பட்ஜெட்டுக்குள் சாப்பிட சோறும் கறியும் எனத் தொடங்கி சின்னச் சின்ன பசிகளுக்கு கொறிப்பதற்கு பீட்சா , பர்கர் என நீண்டு கொஞ்சம் ஒசத்தி விலையில் பெரிய ரெஸ்டாரண்ட்களின் கடலுணவு வரை பில்லு கட்டிய அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். அந்த பில்லையோ அல்லது உணவையோ மறக்காமால் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து மாஸ் காட்டியும் இருக்கலாம். சிலர் அதுக்காக மட்டுமே இந்த கெத்து காட்டும் சாப்பாடு வகையறாக்களை தேடு சாப்பிட்டு பகிர்வதும் வேறு கதை.

சரி!  உலகிலேயே விலையுயர்ந்த உணவை சாப்பிட வேண்டும் என்று நீங்கள் விரும்பி இருந்தால் அல்லது இனி விரும்புவீர்கள் என்றால் நீங்கள் சாப்பிட வேண்டியது மீன் முட்டையைத் தான். என்னது???  கிலோ ஒன்று ரூபா 250க்கு உள்ளூர் மார்கெட்டில் கிடைக்கும் மீன் முட்டைக்குத் தான் இவ்வளவு பில்டப்பா என்றால் இல்லை நிச்சயமாக இல்லை.

கேவியார்  எனப்படும் ஸ்டேர்ஜன் இன மீன் வகைகளின் முட்டை தான் அது. அடடே! உலகிலேயே விலையுயர்ந்தது ஒரு மீன் முட்டையா? எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் தேடிப் பார்த்தால் சில வேளை உங்கள் மூளை கொஞ்ச நேரம் நாக்-அவுட்டாகி விடும். ஒரு கிலோ கேவியார் முட்டைக்கு அதிகபட்சம் 35000 டாலர்கள். சுமாராக இலங்கை ரூபாய்களில் 70 இலட்சங்கள். அடேயப்பா! அவ்வளவு விலையா என்று பார்த்தால், 70 இலட்சங்கள் இருந்தாலும் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் நம்மூரில் அது கிடைப்பதென்பது அரிது தான்.

கேவியார் எனப்படும் ஸ்டேர்ஜன் மீன் முட்டைகள் – புகைப்பட விபரம் – www.freepik.com

ஏனென்றால் இந்த முட்டைகளை இடும் இனமான ஸ்டேர்ஜன் மீன்கள் தற்போது உலகில் அருகி வரும் இனமாக சிவப்புப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

இந்த கேவியார் மீன் முட்டைகளின் தாயகம் ஈரான், ரஷ்யா, கஜகஸ்தான், டர்க்மெனிஸ்தான் மற்றும் அஸர்பைஜானினால் சூழப்பட்ட கேஸ்பியன் கடல் தான். 24 அடி யும் 1500 கிலோகிராமும் வரை வளரும் இந் ரக மீன்கள் பெரும்பாலும் தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 2300 பண்ணைகளில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஸ்டெர்ஜன்கள் மீன்களில் பெலுகா வகை ஸ்டெர்ஜன் மீன்களுக்கு தான் மவுசு அதிகமாம். அதனாலேயே பெரும்பாலும் பண்ணைகளில் வைத்து பராமரிக்கப்படுவது இவைதான்.

இப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும், வரலன்னாலும் வருதுன்னு வெச்சிகங்க, அதாவது இவ்ளோ பெறுமதியான மீன்களை அதிகமான பண்ணைகளில் வளர்த்து “காசு பணம் துட்டு மனி, மனி” என உழைக்கலாமே என்றால், அங்குதான் சிக்கல் இருக்கிறது.

இந்த ஸ்டேர்ஜன் மீன்களுக்கான உணவு, பண்ணை உருவாக்கம் மற்றும் பராமரிப்பு என்பனவற்றுக்கான முதலீடு ஒரு மாதத்திற்கு கோடிகளை தாண்டிவிடுமாம் ஆனால் இம்மீன்கள் 10 தொடக்கம் 15 வருடங்களில் தான் முட்டையே இட ஆரம்பிக்குமாம். இதனாலேயே பல முதலீட்டாளர்கள் இதனை நாடுவதில்லை. ஆனாலும் அதையும் தாண்டி ஒரு சிலரால் தான் இத்துறையில் சாதிக்க முடிகிறது.

ஸ்டேர்ஜன் மீன்கள் புகைப்பட விபரம் – www.pexels.com

இதனால் தான் கேவியார் மீன் முட்டைகளுக்கான டிமான்ட் அதிகமாக இருந்தும் உற்பத்தி குறைவாக இருப்பதால் இதன் விலைகள் தாம் தூம் என எகிறி இருக்கிறது. 19ம் நூற்றாண்டுகளில் சாதரண மீன் முட்டைகளைப் போலவே கருத்திற்கொள்ளப்பட்டு காலுக்கு கீழ் நசுங்கிக் கிடந்த கேவியார்கள் இப்போது மனித வேட்டையினால் அரிதான இனமாகி இப்போது ராஜ விருந்தாக மாறி இருக்கிறது.

கேவியார் மீன் முட்டைகளை எடுப்பதற்காக 15 வருடம் வளர்த்த மீன்களை கொல்ல வேண்டி இருந்தது எனினும் தற்போது அவை கொல்லப்படாமல் எடுக்கும் நவீன முறைகளும் புழக்கத்திற்கு வந்து விட்டன. இம்முட்டைகளை வெளியில் எடுத்து உப்புப் போட்டு புரட்டி எடுத்து டப்பாவில் அடைத்தால்,

அடடடடே! உலகின் பெறுமதியான உணவு ரெடியகி விட்டது என்று நினைத்தால் இல்லை. இவற்றை சில ரெஸ்டாரண்ட்களில் சிறப்பு மெனுக்களின் கீழ் சட்டியில் வறுத்து இன்னமும் அதன் விலையை கூட்டி விடுகிறார்கள். இதனை தங்களால் வாங்க முடியும் எனும் ப்ராண்ட் பிரியர்கள் அல்லது லக்ஸரி விரும்பிகள் காசப் பார்க்காமல் வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஸ்டேர்ஜன் மீன்கள் புகைப்பட விபரம் –  bigfishesoftheworld.blogspot.com

இவ்வளவு நேரமும் வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள் இந்த உணவு நளபாகத்தையும் மிஞ்சியதாய் இருக்கும் போல என்று ஒரு பொய்யான எண்ணம் உருவாகி இருக்கும், உண்மையில் அதன் சுவை வித்தியாசமாக இருந்தாலும் முதல் தடவையிலேயே லயித்து சாப்பிடும் சுவையை தராது ஆனால் அதனை சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தை அந்த சுவை தூண்டுமாம். இது கேவியாரின் இன்னொரு ஸ்பெசல் என்கின்றனர் அதனை சுவைத்தவர்கள்.

என்றாவது ஒரு நாள் சாப்பிடுவோம் என்று மனதிலே பதிந்து வைத்திருக்கிறேன். கிலோ கணக்கில் சாப்பிட வயிறும் சரி பாக்கெட்டும் சரி இடம் தராது என்பதால்  70 இலட்சங்கள் உழைக்க வேண்டியதில்லை கிராம்களிலேனும் சாப்பிட்டு திருப்தி கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

Related Articles

Exit mobile version