இன்றைய இலங்கையின் தீராப் பிரச்சனைகளில் மிகப்பெரும் பிரச்சினையாகவிருப்பது கடன் சுமையாகும். இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்தநிலையில் இயங்குவதற்கும், அரசு தொடர்ச்சியாக சர்வதேச முதலீட்டாளர்களினதும், சர்வதேச நிறுவனங்களினதும் உதவியை நாடியே நிற்பதற்கும் இது காரணமாகவுள்ளது. ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசின் சார்பில், கடன் சுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றபட்டு வந்தாலும், அதன் தாக்கமும் வீரியமும் அதிகமாக இருப்பதையே இன்றும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். இந்தநிலையில், 2017ம் ஆண்டின் பாதிக்கடலை தாண்டவுள்ளநிலையில் இந்த தாக்கமும், கடனும் எந்த நிலையில் உள்ளது?
இலங்கையினை பொறுத்தவரை அதனது வெளிவாரியான நிதிப் பங்களிப்பானது (External Funding) அரசினையும், தனியார்துறையினரையும் பொறுத்தவரை கவலைக்கிடமாகவே உள்ளது. அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் ஏற்றுமதி-இறக்குமதிக்கிடையிலான இடைவெளியும், ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இதற்கு காரணமாகவுள்ளது. 2015ம் ஆண்டில் இலங்கையின் வணிக பற்றாக்குறை (Trade Deficit) அல்லது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கிடையிலான இடைவெளி சுமார் 8.5 அமெரிக்க டொலர் பில்லியனாகும். வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு வருமானம் 2015ல் 6.9 அமெரிக்க டொலர் பில்லியனாகும். இதனடிப்படையில் நிலுவைப் பற்றாக்குறை மட்டுமே 2015ல் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஏற்கனவே உள்ள கடன்களுக்கு மேலதிகமாக, வருடா வருடம் அதிகரித்து செல்லும் நிலுவையாக உள்ளது.
2015ம் ஆண்டின் பிரகாரம், உண்மையில் எமது நிலுவைப் பற்றாக்குறை கணக்குகளில் உள்ளதைவிட அதிகமாகியிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட அபரீதமான வளர்ச்சி அதனை தடுத்திருந்தது. சுற்றுலாத்துறை மூலமாக மாத்திரம் 2015ல் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசு வருமானமாகப் பெற்றதுடன், 2016ல் இது 24% சதவீதத்தினால் அதிகரித்து சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கிறது.
கணக்கீடுகள் மற்றும் எதிர்ப்பார்க்கைகளின் பிரகாரம், வருடாவருடம் ஏற்படும் வணிகப்பற்றாக்குறையான சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பல்வேறு முயற்சிகளின் பிரகாரம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடையுமாயின், சுற்றுலாத்துறை மூலமாக பெறப்படுகின்ற அதிகரித்த வருமானம், சேவைத்துறை மூலமாக ஈட்டப்படும் வருமானம் ஆகியவற்றினைக்கொண்டு பற்றாக்குறை நிலையினை மிகைநிலை நிலையாக மாற்றம் செய்யக்கூடிய வல்லமையை இலங்கையானது பெறும்.
இவற்றுக்கு மேலதிகமாக, எமது ஏற்றுமதி வருமானமானது ஒட்டுமொத்த இறக்குமதி செலவில் வெறும் 55% சதவீதத்தினையே பூர்த்தி செய்வதாக உள்ளது. இது குறுகிய மற்றும் நீண்டகால வெளிநாட்டு நிதிப்பற்றாக்குறைக்கு வித்திடுவதாகவே அமைந்துள்ளது. இதன்போது, இலங்கை அரசு இவ்வகை நிதிப்பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக குறுகிய வெளிநாட்டு நிதிமூலங்களை நாடவேண்டியநிலை ஏற்படுகிறது. இதுவும், இருக்கின்ற கடன்சுமைக்கு மேலதிகமான சுமையாக அமைந்துவிடும்.
இதனை தவிர்த்து, ஏற்றுமதி-இறக்குமதியில் அரசின் கொள்கை மற்றும் கோட்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக மாத்திரம் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. மாறாக, சர்வதேச சந்தையில் ரூபாவின் ஸ்திரத்தன்மை, சர்வதேச முதலீட்டாளர் ஈர்ப்புக்கொள்கை, கடன் பரிமாற்றம் (Debt Swaps), முதலீட்டு சபையின் வினைத்திறனான ஒத்துழைப்பு மற்றும் ஒதுக்கத்தில் உள்ள டொலர்களின் இருப்பு போன்றவற்றின் ஏற்ற தாழ்விலும் தங்கியே இருக்கிறது. எனவே, நிதி ரீதியில் நிதிமிகை நிலையினை கொண்டுவருவதற்கு இலங்கை அரசு கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் கடந்து மிக அதிகமாகச் செயலாற்ற வேண்டிய காலக்கட்டமாக இதுவுள்ளது.
அரச கடன் சுமை
2015ம் ஆண்டின் பிரகாரம் மத்தியவங்கியின் அறிக்கைகளில் மொத்த படுகடன் தொகையாக 103 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்ளது. இதில், இலங்கை அரசாங்கத்தின் மொத்த படுகடன் மாத்திரம் சுமார் 81 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் வெளிநாட்டு படுகடன் விகிதம் 60% சதவீதமாக உள்ளது. இதனடிப்படையில் பார்ப்பின் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் அளவுக்கு ஈடாக கடனுள்ளது. எனவே, இந்த நிலையை சீர்படுத்தவும் வருடாவருடம் ஏற்படவுள்ள வணிகப்பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் மேலும் செயற்படவேண்டியது அவசியமாகிறது.
கடந்தகாலங்களில் இலங்கை அரசானது தனது நிதிப் பற்றாகுறையை சீர்செய்யவென பெற்றுக்கொண்ட அதிகரித்த வட்டியிலான குறுங்கால கடன்களும், சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட நீண்டகால கடன்களும் வினைத்திறன் வாய்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தபடாததன் விளைவால் இந்த பொதுபடுகடனை இலங்கை அரசு மீள செலுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்தக்கூடிய வருமான மூலங்களை அவை கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில், இலங்கை அரசு அந்த வினைத்திறனற்ற திட்டங்களைபற்றிக் குறைகூறிக்கொண்டு இருப்பதனை விட, அதற்கென நாடுகளிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மீண்டும் மறுபரீசிலனைகுட்படுத்தி அதன் மீள்செலுத்துகை காலத்தையும், தொகையும், வட்டி வீதங்களையும் மீளமைத்துக்கொள்ளவேண்டும். அதனை செய்வதற்கு அல்லது அதனை செய்வதற்கான வாய்ப்புக்களை இலங்கை அரசு தவறவே விட்டிருப்பதனை சுட்டிக்காட்ட முடியும்.
அதுபோல, தற்போது இலங்கையின் பொதுப்படுகடனை அடைப்பதில் பெரும் நிதியினை வழங்கும் சர்வதேச நிறுவனமாக சர்வதேச நாணய நிதியமும், இலங்கையின் அபிவிருத்தி முறிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கு மேலாக, அரசின் வருமான மூலங்களை அதிகப்படுத்தவேண்டிய வகையில் நிதி மற்றும் வரிக்கொள்கையில் மேம்படுத்தப்பட்ட நடைமுறைக்கு பொருத்தமான கோட்பாடுகளை அமுலுக்கு கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது.
கடனை குறைக்கும் மூலோபாய வழிகள்
அடிப்படையில் எமது நாட்டின் பொது படுகடனில் வெளிநாட்டு கடன்கள் அதிகமாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், இலங்கையின் உள்நாட்டு சேமிப்பு வீதமானது மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதேயாகும். இலங்கையில் சராசரியாக ஒருவர் ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் வெறும் 17 ரூபாவையே சேமிக்கின்றார்கள். இது ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியில் 25% சதவீதத்தினை கூட எட்டுவதில்லை. ஆனால், நாம் மிக நீண்டகாலமாகவே எமது சென்மதி நிலுவையில் பற்றாக்குறையை கொண்டிருக்கிறோம். இந்தநிலையில், உள்நாட்டு நிதிமூலங்களில் நிதியும் பற்றாக்குறையாகவுள்ளபோது, வெளிவாரிக் கடன்களை நோக்கி செல்லுகின்றநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. இதுவே, இலங்கையின் கடன்படுநிலையில் வெளிநாட்டு கடன்களின் அளவு கணிசமான அளவு அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
இதற்க்கு மேலாக, அரசும் தனது வருமானங்களுக்கு மேலாக செலவீனங்களை செய்துகொண்டே இருக்கிறது. இது தவிர்க்க முடியாத செலவீனமாக உள்ளபோதிலும், இவற்றறை சமப்படுத்த மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிமூலங்களிலிருந்தே நிதியை பெறவேண்டியநிலை ஏற்படுகின்றது. இது மேலும் பொதுப்படுகடன் அளவினை அதிகரிக்க வழிகோலுகிறது.
இத்தகைய நிலையினை தவிர்த்துக்கொள்ள இலங்கை அரசானது மொத்த உள்நாட்டு சேமிப்பு மூலங்களை அதிகரிக்ககூடிய வகையில் அல்லது வெளிநாட்டு நிதிமூலங்களை நாடுவதனை தவிர்த்துக்கொள்ளக் கூடியவகையில் நிதிக்கொள்கையில் இறுக்கமான சட்டங்களையோ அல்லது கவர்ச்சியான சட்டத் தளர்வுக்கொள்கைகளையோ நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.
எதிர்காலம் எப்படியானது?
தற்போதைய நிலையானது கடந்தகாலங்களுடன் ஒப்பிடும்போது சற்றே முன்னேற்றகரமான நிலையாகவுள்ளபோதிலும், எதிர்பார்த்த அடைவுமட்டங்களை அடையவில்லை என்பதும், எதிர்பார்த்த அளவுக்கு இலங்கையின் பொதுப்படுகடன் அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதும் ஏமாற்றமானதே! ஆனாலும், இவற்றினை கட்டுக்கோப்பான வகையில் திட்டமிடுகின்றபோது எதிர்காலத்தில் திட்டமிட்ட அடைவுமட்டங்களை அடைந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, இலங்கை அரசானது கடந்தகாலங்களைப்போல அதிகரித்த வட்டிவிகிதங்களில் கடனை பெற்றுக்கொள்ளாது, நிச்சயக்கபட்ட நாணயமாற்று விகிதங்களின் பிரகாரம் (Foregin Currency Swap) இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து முறையே 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளது. இது ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையாக உள்ளபோதிலும், இவ்வாறு பெறப்படும் நிதியானது எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதிலேயே இதன் ஒட்டுமொத்த பயனும் தங்கியுள்ளது. இல்லையெனில், இத்தகைய நிதியும் விழலுக்கு இறைத்த நீர்போல் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்துடன், இனிவரும் காலங்களில் முதலீடு செய்ய எண்ணியுள்ள செயற்திட்டங்களும், தற்போது முதலிடப்படுகின்ற திட்டங்களும் எவ்வகையிலும் இருப்பிலுள்ள அந்நிய செலவாணி இருப்பினை (foreign exchange reserve) குறைத்திடாதவகையில் அமையப்பெறுவதனை அவதானிக்க வேண்டியது அவசியமாகிறது.
இவற்றுக்கு மேலாக, இலங்கை மத்தியவங்கியும் இலங்கையின் வட்டிவிகிதங்களை இலங்கையின் நிதிச்சமநிலையை பேணும் பொருட்டு அதிகரிக்கவே எதிர்பார்க்கிறது. ஆனால், இது முதலீட்டாளர்களுக்கு பாதகமாகவே அமையும். எனவே, நிதிச் சமநிலையை பேணக்கூடிய வகையிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களினதும் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியவகையிலும் போட்டித்தன்மை வாய்ந்த வட்டிவிகிதங்களை அறிமுகப்படுத்தவேண்டிய அல்லது பரிந்துரைக்கவேண்டிய கடப்பாடும் உள்ளது.
உதாரணமாக, இலங்கையின் மொத்த உள்நாட்டு பொதுக்கடனானது 2015ல் 4,278 பில்லியனிலிருந்து 2016ல் 5,332 பில்லியனாக அதிகரித்து இருந்தது. இதற்கு வட்டிவிகிதங்களில் ஏற்பட்ட மாற்றமும் காரணமாக அமைந்தது. இதன்விளைவாக, குறித்த காலத்தில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட கடன் வாங்கல் செலவீனம் மாத்திரம் (Cost of Borrowing) 315.5 பில்லியன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த அதிரித்த செலவீனங்கள் மற்றுமொரு வகையில் வரி அதிரிப்பு என்கிறவகையில் மீளவும் மக்கள் மீதே சுமத்தப்படும் என்பது கவலைக்குரியதாகும். எனவே, இவற்றினை கருத்தில்கொண்டு அரசின் நிதி சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
இலங்கை எதிர்காலத்தில் தனது கடன்நிலையை சீர்படுத்திக்கொள்ள கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு பகுதி வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (Foregin Direct Investment) ஆகும். குறைந்தது வருடம்தோறும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மூலமாக இலங்கை கொண்டிருப்பது அவசியமாகிறது. இவற்றுக்கு மேலாக முதலீடுகளைப்பெற முடியுமாயின், அது இலங்கையின் பொதுப்படுகடன் அளவினை மேலும் குறைவடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டு இலக்கினை அடைந்துக்கொள்ள குறுகியகாலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் நம்மவர்களால் உட்கொணரும் அந்நிய செலவாணியை அதிரிக்கக்கூடிய வழிமுறைகளை கையாளவேண்டியது அவசியம். இதற்க்கு மேலதிகமாக, தற்போது பெற்றுக்கொண்டுள்ள GSP+ சலுகையை முதலீட்டாளர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் கையாளுவதுடன், முதலீடுகளை கவரக்கூடியவகையில் சட்ட தளர்வுகளை கொண்டுவருவதும் அவசியமாகிறது.
ஒட்டுமொத்தமாக பார்ப்பின், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையானது சர்வதேச அளவில் கடந்தகாலங்களை விட மிக அதிக முக்கியத்துவத்தினை பெற்று இருக்கிறது. அதுபோல, கடந்த இரண்டு வருடங்களில் நிதிரீதியிலும் மிக அதிகளவில் சவால்களை சந்தித்து உள்ளது. இந்த சர்வதேச முக்கியத்துவத்தையும், நிதி சவால்களையும் சமப்படுத்தக் கூடியவகையில் தனத செயல்பாடுகளை இலங்கை அரசு எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்குமாயின், தற்போதுள்ள நிலையிலிருந்து மீண்டும் ஆசியாவின் மிகசிறந்த அதிசயமாக மாறக்கூடிய சாத்தியப்பாடுகளை கொண்ட நாடாகவே உள்ளது.