அநியாயத்தைக் கண்டு திரையில் மட்டுமே பொங்குவீரோ?

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. நான் மட்டுமல்ல 60 வயதைக் கடந்த என் போன்ற  பலருக்கும் இது இயல்பான விடயமாகவும் இருக்கக்கூடும். பிள்ளைகள் நம்மை மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு திரையரங்கிற்கு அழைத்து செல்வதும் உண்டு.

படம் – thehindu.com

ஆனாலும் முந்தைய வாத்தியார் படமோ, நடிகர் திலகம் படமோ பார்த்த திருப்தியோ, பூரிப்போ இப்போது வர மறுக்கிறது. வீட்டிற்கு வந்து இதைச் சொன்னால் உங்களுக்கு வயசாகிடுச்சு. இப்போது வரும் படங்களை ரசிக்கத் தெரியவில்லை என்றும் குறைபட்டுக் கொள்கின்றனர். அதனாலேயே இப்போது ஒரு வெள்ளிக் கிழமை வெளியாகி, அடுத்த வெள்ளி கிழமை வரை அல்ல….சனி, ஞாயிறு வரை கூட தாக்குப் பிடிக்காத படங்களையும் பாராட்டித் தள்ளுகிறேன். இப்போதும் பிள்ளைகள் வயசாகி விட்டதுதான் பிரச்னை என்கிறார்கள்.

ஆம்… ஒரு வகையில் வயதாகிவிட்டதும் பிரச்னை தான். அன்றைய கால திரைப்படங்கள், திரையரங்குகள் அத்தனையும் தொலைத்து விட்டு, தமிழில் தமிழ்ப் படங்களுக்கு பெயர் வைப்பதற்கே கேளிக்கை வரி ரத்து செய்து சலுகை கொடுக்கும் தலைமுறைக்குள் நுழைந்து விட்டோம். மனம் தான் கடந்த காலங்களை ஏற்க மறுக்கிறது. தரை டிகெட்டில் டூரீங் டாக்கீஸில் மண்ணை குவித்து அமர்ந்து திரைப்படம் பார்த்த சந்தோசத்தில் நான்கில் ஒரு பங்கைக் கூட இன்றைய மால்களுக்குள் மாட்டிக் கிடக்கும் திரையரங்குகளால் தர முடியாததை உணர்வதற்கு வயசாகிப் போனது கொஞ்சம் துணைக்கு வருகிறது.

இன்றும் எத்தனை பேரின் நாள் சராசரி வருமானமே 100 ரூபாயைக்கூட எட்ட முடியாத நிலைக்கு உள்ளது? முறைப்படுத்தப்படாத எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறார்கள்? நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதையெல்லாம் கடந்து எட்டு மணி நேரம் கூட நாள் ஒன்றுக்கு ஓய்வில்லாமல் ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே” என எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் விளிம்பு நிலையில் கிடக்கிறார்கள். முன்பெல்லாம் இவர்களுக்கான இளைப்பாறுதலாக திரையரங்கங்கள்தானே இருந்தன. ஆனால் இன்று சாமானியர்கள் திரையரங்கை நெருங்க முடிகிறதா? ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படம் பார்த்தாலே குறைந்த பட்சம் 1000 ரூபாய் காலியாகி விடுகிறது. நாம் என்ன பிக் பாஸ் வீட்டிலா இருக்கிறோம்? ”லக்சரி பட்ஜெட் காலியாகி விடும்” என பதற்றப்பட என்கிறீர்களா?

ஆஸ்தான நாயகர்களின் புதுப்படங்கள் இறங்கும் போது, முதல் நாள், முதல் காட்சி பார்க்கும் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து எத்தனை குடும்பங்களின் மாதாந்த பட்ஜெட்டில் துண்டு விழுந்திருக்கிறது தெரியுமா? பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இப்போது ஒரு நபருக்கு முதல் வகுப்பில் வசூலிக்கப்படும் கட்டணத்தில், நான்கு பேர் முதல் வகுப்பில் பார்த்து விட முடியும் என்று தான் நிலை இருந்தது. ஏன் இப்போதும் கூட திரையரங்க தொழில், ஏதோ திரைமறைவு தொழில் போலவே தானே ரசிகர்களின் சட்டை பாக்கெட்டை பதம் பார்க்கிறது.

பேரூராட்சிப் பகுதிகளில் குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்குகளுக்கு அதிகபட்சக் கட்டணம் 25 ரூபாய், குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாய். படம் – thebetterindia.com

அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு தெரியுமா? மாநகராட்சிகளில், குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணம் 50 ரூபாய். குறைந்த பட்ச கட்டணம் 10 ரூபாய். குளிர்சாதன வசதி இல்லாத மாநகராட்சி திரையரங்குகளுக்கு அதிகபட்சம் 30 ரூபாயும், குறைந்த பட்சம் 7 ரூபாயும் கட்டணம். இதேபோல் நகராட்சிப் பகுதிகளில் குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்குகளுக்கு அதிகபட்சம் 40 ரூபாயும், குறைந்த பட்சம் 10 ரூபாயும் கட்டணம். அதே குளிர் சாதன வசதி இல்லாத நகராட்சி பகுதி திரையரங்குகளுக்கு அதிகபட்ச கட்டணம் 30 ரூபாய். குறைந்தபட்ச கட்டணம் 4 ரூபாய்.

பேரூராட்சிப் பகுதிகளில் குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்குகளுக்கு அதிகபட்சக் கட்டணம் 25 ரூபாய், குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாய். அதே குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணம் 20 ரூபாயும், குறைந்தபட்சக் கட்டணம் 4 ரூபாயும் வசூல் செய்யப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சம் 120 ரூபாய் கூடுதல் டிக்கெட்டும், குறைந்த கட்டணம் 10 ரூபாயும் வசூல் செய்ய வேண்டும். ஆனால் மல்டிபிளஸில் அனைத்து கட்டணமும் 120 தான் வசூல் செய்யப்படுகிறது. சாதாரண நகராட்சி திரையரங்குகளே 150, 200 என தன் மனம் போன போக்கில் கட்டணம் வசூல் செய்கிகின்றனர்.

1967ம் ஆண்டு “பாலும் பழமும்” என்ற முதல்படத்தோடு தன்னுடைய ஓட்டத்தை தொடங்கிய கருங்கல் கிராமத்தில் இருந்த ராஜா டாக்கீஸ், கடந்த 1998ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. குலசேகரத்தில் சென்ட்ரல், ஸ்ரீ பத்மநாபா என்ற இரு திரையரங்கள் இயங்கி வந்தன. இவை மூடப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. படம் – hindustantimes.com

திரையரங்கிற்கு அதிகம் வருவது இளம் தலைமுறையினர்தான். 60 வயது வயோதிகனின் மனநிலையில் இருந்து சொல்வதென்றால் அத்தனையும் இளம் ரத்தம். முறுக்கேறிய வயது. முப்பது ரூபாய் என அச்சிடப்பட்ட டிக்கெட்டை கொடுத்து விட்டு, 120 ரூபாய் பெறுகின்றனர். ஆனால் சண்டை அல்ல… விளக்கம் கூட கேட்காமல் வாங்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைகின்றனர். உள்ளே அவர்களது ஆஸ்தான நாயகன் வரி கட்டுவதன் முக்கியத்துவம் குறித்து திரையில் பக்கம், பக்கமாய் வசனம் பேசுவதைக் கேட்டு விசில் அடிக்கிறார்கள். ஒரு படத்துக்கு சென்று விட்டு வந்தால், இது போன்ற காட்சிகளினாலேயே கூடுதலாக ஒரு பிரஷர் மாத்திரை போட வேண்டிய சூழலும் ஏற்பட்டு விடுகிறது.

ஆனால் இதில் இன்னொரு அபாயமும் உள்ளது. என் அனுபவத்தில், என் ஊரில் நான் பார்த்த எத்தனை திரையரங்குகள் இன்று மூடுவிழா கண்டு, வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறி நிற்கிறது. அவைகளின் பின்னணியை, காரணத்தை அலசுவதும் இந்த இடத்தில் அவசியமாகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் சமகாலத்தில் ஓட்டத்தை நிறுத்திய திரையரங்குகளின் கதை இது.. 1967ம் ஆண்டு “பாலும் பழமும்” என்ற முதல்படத்தோடு தன்னுடைய ஓட்டத்தை தொடங்கிய கருங்கல் கிராமத்தில் இருந்த ராஜா டாக்கீஸ், கடந்த 1998ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. குலசேகரத்தில் சென்ட்ரல், ஸ்ரீ பத்மநாபா என்ற இரு திரையரங்கள் இயங்கி வந்தன. இவை மூடப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  60 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரிய பெருமைமிக்க இரணியல் ஹவ்வாய் டாக்கீஸ், பத்மநாபபுரம் பேலஸ் ரோட்டில் இயங்கி வந்த முத்தமிழ் தியேட்டரும் மூடு விழா கண்டு வருடங்கள் ஆகின்றன.

கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி டாக்கீஸ், கொட்டாரம் பொண்ணு டாக்கீஸ், மயிலாடி ஸ்ரீவிநாயகா டாக்கீஸ், தெங்கம்புதூர் சிவசக்தி டாக்கீஸ், ஆரல்வாய்மொழி செல்வன் டாக்கீஸ், தெற்கு தாமரை குளம், லெவஞ்சிபுரம், மணத்தட்டை, ராஜாவூர் உள்ளிட்ட குட்டி குட்டி கிராமங்களில் இயங்கி வந்த டாக்கீஸ்கள் ஓட்டத்தை நிறுத்தி, பாழடைந்தும், உருமாறியும் போய் உள்ளன. சுசீந்திரத்தில் இருந்த செல்வம் டாக்கீஸ் இப்போது செல்வம் மண்டபமாக மாறி நிற்கிறது.

படம் – imesofindia.indiatimes.com

நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் இயங்கி வந்த ராஜ்குமார் தியேட்டர் இப்போது திருமண மண்டபமாக மாறி நிற்கிறது. மணிமேடை பகுதியில் இயங்கி வந்த பிக்சர் பேலஸ், அண்ணா பேருந்து நிலைய முகப்பில் இயங்கி வந்த லெட்சுமி தியேட்டர் ஒழுகினசேரி பகுதியில் இருந்த சரஸ்வதி தியேட்டர் ஆகியவையும் மூடப்பட்டு விட்டது. டவர் ஜங்சன் பகுதியில் கோல்டன்  என்று ஒரு தியேட்டர் இருந்தது. அது தான் மாவட்டத்தில் வந்த முதல் தியேட்டர். ஆனால் இவையெல்லாமே இப்போது கடந்த தலைமுறையினரின் அனுபவத்தில் மட்டுமே!

ராஜா, யுவராஜாவில் கடைசியாக பருத்திவீரன் படம் வெளியானது. கடைசியாக கார்த்தி அறிமுக நாயகனாக நடித்த பருத்திவீரன் இங்கு வெளியாகி  100 நாள்கள் ஓடியது. இப்படம் இன்றே கடைசி என்று பார்த்த போஸ்டர் திரையரங்கிற்கும் சேர்த்து என பின்பு தான் புரிந்தது. ரஜினியின் சந்திரமுகி, தொடங்கி லிங்கா வரை வந்த சுவாமி தியேட்டர் இப்போது குடோன். தரமான படங்களை தெரிவு செய்து போட்டு வந்த பயோனியர் முத்து திரையரங்கமும் இப்போது இல்லை. இவையெல்லாம் என் தலைமுறையில்  கண்ணால் கண்டு மூடப்பட்டவை. இவை மூடப்பட்ட பின்னணியை அலசுவதும் இங்கே அவசியமாகிறது.

இந்த காலகட்டம்தான் தூர்தர்சன் ஒலியும், ஒளியும் துவங்கி வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டிகள் எட்டிப் பார்த்த காலம். இதில்  டாக்கீஸ்கள் காலியாகின. தொலைக்காட்சியின் மித மிஞ்சிய பெருக்கம் வீட்டுக்கு, வீடு நடுக்கூடத்தை அது ஆக்கிரமித்துக் கொண்டது. இல்லம் தோறும் தொலைக்காட்சிகள் பல திரையரங்களை ஆட்டம் காண வைத்தன. அடுத்தது குறுந்தகடுகளின் காலம். புதுப்படங்களின் சி.டிக்கள் காய்கறி கடைகள் வரை குறியீட்டு, சமிஞ்சை வார்த்தை சொல்லி வாங்கிச் சென்ற காலம். அந்த சூழலில் தான் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகளின் பக்கத்திலேயே டி.வி.டி பிளேயரும் முளைத்தது.

இரண்டரை மணி நேரம் ஒரு படம் பார்க்க 120 முதல் 200 வரை வசூல் செய்கின்றனர். எத்தனை பேருக்கு இன்னும் ஒரு நாள் சம்பளமே இதை எட்டவில்லை. படம் – aolcdn.com

ஆனால் இப்போதைய காலம் இதையெல்லாம் விட ஆபத்தானது. புதுப்படங்கள் வெளியாகும் நாளிலேயே இணையத்தில் பதிவு இறக்கம் செய்யும் காலம் வந்து விட்டது. இந்நேரத்தில் இப்படி அபரிமிதமான கட்டணத்தை வசூலித்தால் சாமானியனால், சாமானிய குடும்பங்களினால் எப்படி திரையரங்கிற்கு செல்ல முடியும்? நான்கு பேர் சேர்ந்து படம் பார்த்தோம். உள்ளே நொறுக்குத் தீனிகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என அனைத்துக்கும் டோக்கன் கொடுத்து உள்ளே விட்டனர். உள்ளே ஒரு காபி 30 ரூபாய்! அதுவும் சர்க்கரை இல்லாமல் கிடைக்கவில்லை. பிறகென்ன திரையங்கம் தந்த அழுத்ததிற்கு போட்ட பிரஷர் மாத்திரையோடு, ஒரு சுகர் மாத்திரையும் போட்டாயிற்று.

இரண்டரை மணி நேரம் ஒரு படம் பார்க்க 120 முதல் 200 வரை வசூல் செய்கின்றனர். எத்தனை பேருக்கு இன்னும் ஒரு நாள் சம்பளமே இதை எட்டவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் திரைத்துறையினருக்கு ஏன் கவலை வரப்போகிறது? அத்தனையையும் பொறுத்துக் கொண்டு படம் பார்த்துக்கொண்டிருந்தேன். திரையில் நாயகன் வரி கட்டுவதன் அவசியத்தை பேசிக் கொண்டிருந்தார். சட்டைப் பாக்கெட்டை துளாவினேன். திரையரங்க டிக்கெட்டை எடுத்தேன். முதல் வகுப்பு முப்பது ரூபாய் என போட்டிருந்தது. என்னிடம் வாங்கியது 120 ரூபாய்! இப்போது திரையை பார்த்தேன். நாயகன் இன்னும், இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்..

”ஆமாவோய்…..நீரு திரையிலத்தான் வோய் பொங்குவீரு”…மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். வெறென்ன செய்ய?

Related Articles

Exit mobile version