Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நீலக்கல்

இத்தாலி, வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணியான  மார்க்கோ போலோ தனது  பயண அனுபவங்களை  பற்றி பதிவு செய்திருந்த ஒரு நூலில் “உலகிலேயே மிக அழகிய சிறந்த தீவுகளில் இலங்கை முதன்மையானது”  என தெரிவித்திருந்தார். அவரின் பயணங்களும் அதை பற்றிய பதிவுகளுமே ஐரோப்பியர்களை ஆசியாவின் பக்கமாக படையெடுக்க தூண்டியதென்பது வரலாறு.  ஏனைய தேசங்களை பார்க்கிலும் இயற்கை வனப்பிலும், புவியியல் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கும் மிக சிறந்த அமைவிடமாக இலங்கை அமைந்திருந்ததன் காரணமாக பிரித்தானிய  காலனித்துவ ஆட்சிக்கு “தங்க முட்டையிடும் வாத்ததாக” இலங்கை இருந்ததென்றே கூறலாம். தேயிலை. இறப்பர், வாசனை திரவியங்கள் உட்பட இயற்கையாகவே காணப்பட்ட இரத்தினக்கல் அகழ்வு வளங்கள்  அன்று முதல் இன்று வரை இலங்கையை இந்து சமுத்திரத்தின் முத்தாக மிளிரச்செய்கிறது.

இரத்தினக்கற்கள் அகழ்வினை விளக்கும் அழகிய ஓவியம் – புகைப்பட விபரம் – https://www.srilankanartgallery.com

இரத்தினக்கற்கள்  அதிகம் காணப்படும் இரத்தினபுரி நகரம் இலங்கையின் “இரத்தினத் தலைநகரம்” என அழைக்கப்படுகின்றது .பிரேசிலுக்கு அடுத்தபடியாக  இலங்கை,   50 க்கும் மேற்பட்ட வகையான இரத்தினக் கற்களை உற்பத்தி செய்யும் நாடாக திகழ்கின்றது.  சர்வதேச விற்பனை சந்தை வீதத்தில் இலங்கை  25%  பங்களிப்பை செய்வதுடன்,  அதன் மொத்த பெறுமதி  ஆண்டொன்றுக்கு  $350 மில்லியன் வரை இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்தே இலங்கையின் இரத்தின கற்களுக்கு அதிக கிராக்கி காணப்பட்டு வருகின்றது. மறைந்த முன்னாள் பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு இளவரசர் சார்ல்ஸினால் அணிவிக்கப்பட்ட நிச்சயதார்த்த மோதிரம் இலங்கையின் பிரபலம் வாய்ந்த Ceylon Blue Sapphire  என அழைக்கப்படும் நீலக்கல் பொறிக்கப்பட்ட மோதிரமாகும். தற்போது அதனை இத்தம்பதியினரின் மூத்த புதல்வர் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இக்கூற்றை  அரச குடும்பத்தில் எவரும் உறுதி இதுவரை உறுதிபடுத்தவில்லை என்றே கூறலாம்.

கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன்  அணிந்திருக்கும் நீலக்கல் மோதிரம்- பட உதவி BBC.com

கடந்த வாரம் இலங்கையின் இரத்தினபுரி நகரில் இரத்தினகல் வியாபாரி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் கிணறு ஒன்று வெட்டுவதற்காக நிலத்தை தோண்டிகொண்டிருந்த நிலையில், இது வரை உலகின் மிக பெரிய நீலக்கல்லாக கருதப்படும் இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 510 கிலோ எனவும்  ரத்தினங்களை அளவிடும் முறையில் சொன்னால் சுமார் 25 லட்சம் காரட் வரை பெறுமதியுடையது என கருதப்படுகின்றது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என கருதப்படுகின்றது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது முழுப் பெயரை வெளியிட விரும்பாத திரு. கமகே மூன்றாவது தலைமுறையாக இரத்தினக்கல் வியாபாரம் செய்து வருபவர். மேலும் இது குறித்து பேசிய திரு.கமகே “கிணறு தோண்டிக்கொண்டிருந்த நபர் ஏதோ ஒரு அரிய கல் இருப்பதாக எங்களிடம் கூறினார். நாம் அதனை கவனமாக மீட்டெடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருந்த மண் மற்றும் பிற அசுத்தங்களை நீக்கிவிட்டு அதை பகுப்பாய்வு செய்து சான்றிதழ்களுக்காக காத்திருந்தோம். இவ்வாறு சுத்தம் செய்யும்போது அந்த தொகுப்பில் இருந்து சில கற்கள் உதிர்ந்து விழுந்தன  அவை உயர் தரத்திலான நட்சத்திர நீலக்கற்கள் என நாம் உறுதி செய்துகொண்டோம்  என திரு கமகே அவர்கள்  தெரிவித்தார்.

‘இது  மிக சிறந்த வகையினை சேர்ந்த நட்சத்திர நீலக்கல் தொகுப்பாகும். உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்கள் மற்றும் இரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும் என நாம் நம்புகிறோம் என இலங்கையின் தேசிய இரத்தின கற்கள் மற்றும் நகைகள்  ஆணையத்தின் தலைவர் திலக் வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இரத்தினவியல் வல்லுநர் திரு.காமினி செய்சா அவர்கள் நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார்- பட உதவி -BBC.com

கடந்த ஆண்டுகளில் Covid-19 பெருந்தொற்று காரணமாக இரத்தினக்கல் அகழ்வு தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போதும், இதன்பின்னர் மீண்டும் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.

எது எவ்வாறாயினும், இரத்தினக்கற்கள் அகழ்வுத்தொழிற்றுறையில் மிக சிறந்த வரலாற்றினையும் இயற்கை வளங்களையும் ஒருங்கே கொண்ட இலங்கை இத்தொழிலில் ஈடுபடும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு சரியான ஊதியங்களும் தொழில் பாதுகாப்பினையும் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில் விலைமதிப்புள்ள கற்களை கண்டறிந்து அவற்றை விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டும் முதலாளிகளும், நகை வர்த்தகர்களும் தமது கடைமட்ட ஊழியர்களுக்கு அவர்கள் பெற வேண்டிய ஊதியங்களை சரியாக வழங்குவதில்லை.  பெரும்பாலான ஊழியர்கள் மிகச்சிறிய ஒரு தொகையே நாள் கூலியாக பெறுகின்றனர் என்பது அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.

Cover image credits: robbreport.com

Related Articles