2001 செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 8 மணி. உலக வர்த்தகத்தின் தலைநகரம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வீதிகளில் வாகனங்களின் படையெடுப்பு, ஹாரன் சப்தங்கள், கோட் சூட் போட்டோரின் வேக நடை, என அன்றாட பணிகளில் மக்கள் வழக்கம் போல் ஈடுபட்டிருந்த நேரம். விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த உலக வர்த்தக மைய கட்டடங்கள், அன்றைய உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க தயாராகிக்கொண்டிருந்தன.
அந்த எதிர்பாராத சம்பவம்
சரியாக காலை 8 மணி 46 நிமிடங்கள். 110 மாடிகள் கொண்ட உலக வர்த்தக மைய கட்டடத்தின், வடக்கு கட்டடத்தின் 93 மற்றும் 99 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் திடீரென விமானம் ஒன்று அதிபயங்கர வேகத்துடன் மோதி, வெடித்து சிதறியது. சற்றும் எதிர்பாராத வகையில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மேலே பார்க்க, விமானம் ஏதே விபத்தில் சிக்கிக்கொண்டதாகத்தான் எண்ணியிருந்தனர். 81 பயணிகள், 11 பணியாளர்களுடன் பாஸ்டனின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் போயிங் 767 விமானம்தான் அது. சுற்றியிருந்தவர்கள் பரிதாபப்பட்டிருப்பார்கள். தீயணைப்புத்துறையினர் தயாராகியிருப்பர். போக்குவரத்துக்காவலர் வாகனங்களை மடைமாற்றியிருப்பார்.
செய்தித்தொலைக்காட்சிகள் நேரலையை துவங்கிவிட்டனர். எப்படி அணைக்கப்போகிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள், எப்படி இந்த விபத்து நடந்தது, கரும்புகை காட்சி எப்படியிருக்கிறது என்று வர்ணனை செய்ய ஆரம்பித்தாகிவிட்டது.
அதேநேரம் 14 நிமிடங்கள் கழித்து, 56 பயணிகள், 9 பணியாளர்களுடன் அதே பாஸ்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் 175, போயிங் 767 ரக விமானம், காலை 9 மணி 3 நிமிடத்திற்கு உலக வர்த்தக மையத்தின் தெற்கு கட்டடத்திற்குள் மோதி, வெடித்தது.
அதை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் சரி, ஒளிபரப்பிக்கொண்டிருந்தோருக்கு
உண்மையை உணர்ந்த அமெரிக்கர்கள்
அமெரிக்கா. சர்வ வல்லமை பெற்ற உலக வல்லரசு. எவராலும் அசைத்துவிட முடியாதபொருளாதாரம். உலகமே சேர்ந்தாலும் வீழ்த்திவிட முடியாத ஆயுத படைபலம். உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தானின்றி உலகில் ஒன்றும் இல்லை என்பதான தோற்றத்தை கொடுத்திருந்தது. அப்படியான அமெரிக்காவின் அதிகாரத்தின் மீதான தாக்குதல். அந்நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமான தாக்குதல். சிங்கத்தின் குகையில் அதன் பிடறியையே அறுப்பதற்கு சமமான தாக்குதல்.
அமெரிக்காவின் மட்டுமல்ல உலக வர்த்தகத்திற்கே மையமாய் இருந்த உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல். அமெரிக்காவின் அடையாளமாக, அத்தனை கம்பீரமாக இருந்த அந்த இரட்டை கோபுரங்களின் மீதான தாக்குதல் அமெரிக்காவிற்கு பேரிடியாக இருந்தன.
அப்போதுதான், நியூயார்க் நகர மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை உணர தொடங்கினர். மளமளவென இரண்டு கட்டடங்களும் இடிந்து விழுந்த நிலையில், வானை கரும்புகை சூழ்ந்தது. கட்டடங்கள் இடிந்து கிளம்பிய பெரும் புழுதி, தெருக்களை மூடி மறைத்துக்கொள்ள, இருண்ட கண்டமானது அந்த இரும்புக்கோட்டை.
இந்த கோர சம்பவத்தை, தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருக்க, வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை மட்டும், உலக முழுக்க மக்கள் யூகிக்க தொடங்கினர். பதற்றமும், பரபரப்பும் அமெரிக்க மக்களையும், உலக நாடுகளையும் தொற்றிக்கொண்ட அந்த வேளையில், மூன்றாவதாக ஒரு விமானம், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனைத் தாக்கியது. உலகின் மாபெரும் ராணுவத்தை கட்டுப்படுத்தும் அந்த கட்டிடமும் தாக்குதலுக்கு இலக்கன போது அமெரிக்காவே ஒருகணம் நிலைகுலைந்தது.
தாக்குதல், தீவிரவாதம் என்பதையெல்லாம் எங்கோ நடக்கும் ஒன்றாக டிவியில் பார்த்துவந்த அந்த தலைமுறை அமெரிக்கர்களுக்கு இழப்பின், தீவிரவாதத்தின் கோரம் கண்முன் காட்டப்பட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கபளீகரம் செய்யப்பட்ட அந்த வானுயர கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள், ஒட்டுமொத்த உலக நாடுகளையும், மக்களையும் அல் கொய்தாவின் வீரியத்தை உணர வைத்தன.
அல் கொய்தா
ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 19 பேர், அடுத்தடுத்து மூன்று தாக்குல்களை, அரங்கேற்றியதை அறிந்துக்கொண்டது அமெரிக்காவிற்கு, கடத்தப்பட்ட 4வது விமானம், வெள்ளை மாளிகையை தாக்குமோ என்ற அச்சம் தொற்றிக்கொள்ள, பென்சில்வேனியா மாகாணத்தில், Shanksville என்ற இடத்தில் வெட்ட வெளிப்பகுதியில் அது விழுந்து நொறுங்கிய செய்தி ஓரளவிற்கேனும் ஆறுதல் கொடுத்திருக்கும். விமானத்தில் இருந்த பயணிகள், தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டதால், விமானம் நிலை தடுமாறி, வயல் வெளியில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியானது. அமெரிக்க வரலாற்றின் மாபெரும் வீர, தீர செயலாக அமெரிக்க பயணிகளின் அந்த போராட்ட நிகழ்வு அறிவிக்கப்பட்டது. தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு, மரணமடைந்த மக்களின் உண்மையான தேச பக்தியை மெச்சி, விமானம் விழுந்து நொறுங்கிய வயல்வெளிக்கு சென்று முதலில் அஞ்சலி செலுத்தினார் அதிபர் புஷ். அந்த 4வது விமானத்தை கடத்திய தீவிரவாதிகள், எங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்ற கேள்விக்கு, இதுவரை விடை கிடைக்கவே இல்லை.
உலக வர்த்தகம் மையம், பென்டகன் மீதான தீவிரவாத தாக்குதல்களில், சுமார் 3 ஆயிரம் உயிர்கள் மடிய, 6000 ஆயிரம் பேர் காயமுற்றனர். அடுத்த சில மணிநேரங்களில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, அல் கொய்தா அமைப்பு பகிரங்கமாய் அறிவித்தது. பாலஸ்தீனை ஒடுக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவது, ஈராக் மீதான பொருளாதார தடைகள், காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்தது, சவுதி அரேபியாவில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளது என்பன போன்ற அடுக்கடுக்கான காரணங்களை, தாக்குதலுக்கான காரணமாக சொன்னது அல் கொய்தா. இதனை அடுத்து, அல் கொய்தா அமைப்பை களையெடுக்க ஆயத்தமானது அமெரிக்கா. தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச போரை பிரகடனப்படுத்தினார் அமெரிக்க அதிபர் புஷ்.
ஆப்கான் மீது போர்
இந்துகுஷ் மலைப்பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் பின்டேலனை ஒப்படைக்குமாறு, ஆப்கானிஸ்தான் ஆட்சி பீடத்தில் இருந்த தாலிபான்களை எச்சரித்த அதிபர் புஷ், அவர்கள் மறுத்த நிலையில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி ஆப்கன் மீது போர் தொடுத்தார். பிரிட்டனும், கனடாவும் முதலில் ஆதரவு அளிக்க, பின்னர் 29 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படைகளும் அமெரிக்காவுடன் கைகோர்த்தன. தாலிபான்களை விரட்டியடித்து, ஆப்கானிஸ்தானை தன்வசப்படுத்தியது அமெரிக்கா. நீண்ட நெடிய தேடுதல் வேட்டை நடத்திய போதிலும், முக்கிய குற்றவாளியான ஒசாமா பின்டேலனை பிடிக்க முடியாமல் போனது.
ஒரு பக்கம் பின்லேடனை பிடிக்க முடியாமல் போன நிலையில், மற்றொரு பக்கம் ஈராக் அதிபர் சதாம் உசேன் பேரழிவு ரசாயன ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி, 2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஈராக் மீது போர் தொடுத்தனர், ஈராக்கையும் கைப்பற்றினர். பல மாத தேடுதல் வேட்டைக்குப்பின், 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திக்ரிக் நகரில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசேனை கைது செய்தனர். பேரழிவு ஆய்தங்கள் எதையும் கைப்பற்ற முடியாவிட்டாலும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு அல் கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டாலும், விமான எரிபொருளால் இவ்வளவு பேரழிவு எப்படி சாத்தியமாகும்? என்ற சந்தேகங்களையும் கிளப்பினர் சிலர். பிரம்மாண்ட கட்டடங்களுக்கு வெடிகள் வைத்து, அருகிலுள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், எப்படி இடிக்கப்படுகிறதோ, அதேபோன்று, உலக வர்த்தக மைய கட்டடங்கள் சரிந்தது, அந்த சந்தேகங்களுக்கு பெரும் தீனி போட்டன. இது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல் என்றும், இதில் அமெரிக்கர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.
விமான பாதுகாப்பு
விமான விபத்துகள் என்றால், மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுவது கறுப்பு பெட்டி. ஆனால் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களின் கறுப்பு பெட்டிகள் தீயில் அழிந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது, சந்தேக நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது. சுமார் 3 ஆயிரம் டிகிரி செல்சிஸ் உருகுநிலைக் கொண்ட கருப்புப்பெட்டி, எப்படி சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகியது என்ற கேள்வியும் எழுந்தது.
அதேநேரம் இப்படி ஒரு தாக்குதல் மீண்டும் நிகழா வண்ணம் தடுக்க விமான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. விசா நடைமுறையில் கடுமை காட்டப்பட்டன. பயணிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், உலகநாயகன் கமல்ஹாசன் போன்றோர் அமெரிக்க விமான நிலையங்களில் அவமானங்களை சந்தித்தனர். உச்சமாக மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் அவமானங்களை சந்தித்தார். இந்தியாவில் இருந்து கண்டனக் கணைகள் பறந்தன. இருப்பினும் அமெரிக்கா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பின்லேடனும் கொல்லப்பட்டான். பாகிஸ்தானில் அந்நாட்டிற்கே தெரியாமல் அமெரிக்கா எடுத்த ரகசிய நடவடிக்கையின் வாயிலாக இரட்டை கோபுரத் தாக்குதலுக்கான முழு எதிர்வினையை செய்து முடித்தது அமெரிக்கா. இந்த தாக்குதலால் உலக இளைஞர்களின் அமெரிக்க கனவுதான் சிதைந்து போனது.
Web Title: 9/11 An Unforgettable Date In World History, Tamil Article
Featured Image Credit: i.ytimg