வியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்: கவனிக்கப்படவேண்டியவை

மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடக்கலையின் எச்சங்களாய், பராமரிப்பு இல்லாமலும் அல்லது அழிவுக்கு உட்பட்டும் கைவிடப்பட்டும் சீர்குலைந்த கட்டமைப்புக்கள் மற்றும் இடிபாடுகள் தொல்பொருள் நினைவுச் சின்னங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்றன. இதோ நீங்கள் அதிகம் அறிந்திடாத இலங்கையின் தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சில :

மண்ணித்தலை சிவன் கோவில்

“பூநகரி” சைவத்தமிழர் வாழ்ந்த பழைமையான இடமே பூநகரி இராச்சியம். அங்குள்ள பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் வரலாற்றுத் தொண்மையான சோழர் காலத்து கோயில் ஆகும். 

சோழர் காலத்தை பிரதிபலிக்கும் விமான அமைப்பு, இடிந்த சுவர் மற்றும் தூண்களின் காட்சி

முழுமையான திராவிட கலை மரபை பிரதிபலிக்கின்ற மிகப் பழைமையான கோவில் இது. அங்குள்ள சுவர் ஆரம்ப கால சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் மடமானது ஆரம்ப கால பல்லவ, சோழ, பாண்டிய காலத்தை பிரதிபலிக்கின்றன. மிக முக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

அது ஆரம்ப கால பல்லவ, சோழ காலத்தைப் பிரதிபலிக்கின்றது. விமானத்தின் மூன்று தளங்களும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன் மேலே தூபி வைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமானமாக இது கருதப்படுகிறது. இந்த கோவிலின் எச்சங்கள் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதியன்று பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டன.

மகுல் மஹா விகாரை

லாகுகல மிகவும் பிரபலமான பண்டைய பௌத்த ‘மகுல் மஹா விகாரை’ ஆகும். அங்கு மன்னர் கவந்திஸ்ஸ மற்றும் இளவரசி விகாரமகாதேவியின் திருமண விழா கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நடந்ததாக நம்பப்படுகிறது.

மகுல் மஹா விகாரையில் காணப்படும் தொங்குப் பாறை, மிகுதியான சந்திரவட்ட கல் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட தலையணை கொண்ட படுக்கையின் காட்சி

மகுல் மஹா விகாரை என்பது இலங்கையின் அம்பாறை மாவட்டமான லாகுகலவில் அமைந்துள்ள ஒரு பழங்கால புத்த கோவில் ஆகும். லாகுகல தேசிய பூங்காவின் வடக்கு விளிம்பில் இந்த கோயில் அமைந்துள்ளது. சியம்பலாந்துவ நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்திலும், பொத்துவில் நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலும் உள்ளது. லாகுகல பண்டைய இலங்கையில் ருகுணு இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இந்த தளத்தின் மிக முக்கியமான தொல்பொருள் நினைவுச்சின்னம் அதன் பெரிய தூபி ஆகும். இந்த தூபியிற்கு அருகில் ஏராளமான தொங்குபாறைகள் மற்றும் கல்வெட்டுகள் சிதறிக்கிடக்கின்றன. மற்றொரு சுவாரஸ்யமான கலைப்பொருள் ‘kotta gala’ ‘கொட்ட கல’ அதாவது ஒரு பாறையில் செதுக்கப்பட்ட தலையணை கொண்ட ஒரு படுக்கை. இன்று மகுல் மஹா விகாரையின் இடிபாடுகள் கிழக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

சங்கானை ஒல்லாந்தர் தேவாலயம்

யாழ்ப்பாண வரலாற்றில் கி.பி 1658 – 1796 வரையான காலப்பகுதி முக்கியமானதாகும். இக் காலத்தில் தான் ஐரோப்பிய இனத்தவரில் ஒருவரான ஒல்லாந்தர் கைகளில் யாழ்ப்பாணம் உள்வாங்கப்பட்டது. இதன் வெளிப்பாட்டை ஒல்லாந்தர் கால எச்சங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

முருங்கை கற்களினால் அமைக்கப்பட்டு எஞ்சியிருக்கும் சுவர்கள், வளைவுகொண்ட ஜன்னல்கள் மற்றும் நுழைவாயில்கள்

சங்கானையில் காணப்படும் தேவாலயமானது ஒல்லாந்தர் கால கலை மரபில் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேவாலயம் முருங்கைக் கற்களினால் அமைக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான தேவாலயம் ஆகும். இது உள் மற்றும் வெளி மண்டப கூரைகளை கொண்டமைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் கால கலைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகின்றது. உள் மண்டபத்தில் 2 யன்னல்கள் காணப்படுகின்றன வெளிமண்டபத்தில் 9 யன்னல்கள் காணப்படுகின்றன. யன்னல்கள் மற்றும் வாசல் அமைப்பானது பிறை போன்ற அமைப்பினை கொண்டு காணப்படுகின்றன. இவ்வாறு ஒல்லாந்தர் கட்டடக் கலை மரபினை பின்பற்றி சங்கானைத் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்தின் இடிபாடுகள் 2007 பிப்ரவரி 23 இல் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டன.

தெகல்ஹெல விகாரை இடிபாடுகள்

தெகல்ஹெல விகாரை அம்பாறை சாலை வழியே சியம்பலாந்துவவில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் சியம்பாலந்துவவின் புதிய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது.

 தெகல்ஹெல பாறையின் அடிவாரத்தில் உள்ள இடிபாடுகள்

சியபலாந்துவவில் உள்ள தெகல்ஹெல பாறையின் அடிவாரத்தில் உள்ள ஹெலமுல்ல தெகல்ஹெல விகாரையில் உள்ள இடிபாடுகள் மற்றொரு ஆராயப்படாத மற்றும் அறியப்படாத பண்டைய பௌத்த தளமாகும்.

தெகல்ஹெல என்பது இரண்டு பாறைகளின் இணைப்பு என்பதாகும். இவ்விகாரை மலை அடிவாரத்தில் உள்ளதால் என்னவோ கவனிப்பாரற்று வெறிச்சோடியதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஈடுபாடுகளும் எச்சங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகின்றது.

வேம்படிக்குள பௌத்த மடாலய இடிபாடுகள்

வேம்படிக்குளம் என்பது அக்கரைப்பற்று சங்கமன் சாலையில் உள்ள சாகம நீர்த்தேக்கத்தின் தென்மேற்கே சற்று தொலைதூரத்தில் உள்ள ஒரு விவசாய கிராமமாகும். இதனை சாகம நீர்த்தேக்க வரம்பு அமைந்துள்ள கருங்கற் சாலை வழியாகவே சென்றடைய முடியும்.

வேம்படிக்குள வன ஒதுக்கீட்டின் கிழக்கு விளிம்பிலுள்ள பாறை சமவெளிகள்

வேம்படிக்குள வன ஒதுக்கீட்டின் கிழக்கு விளிம்பிலுள்ள பாறை சமவெளிகளில்தான் பண்டைய பௌத்த மடாலயத்தின் இடிபாடுகள் கண்டறியப்பட்டன.

இந்த இடிபாடுகள் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதியன்று அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தளமாக நியமிக்கப்பட்டுள்ளன.

ஹிங்குரான உத்தர ஜெயமஹா விகாரை தொல்பொருள் தளம்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஹிங்குரான’ பண்டைய திகமதுல்ல இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். இது 4ஆம் நூற்றாண்டில் இளவரசர் திகாயுவால் தொடங்கப்பட்டது.

திகமதுல்ல இராச்சியத்தின் கல்வெட்டுக்கள், கலைப் பொருட்கள் மற்றும் தொங்குப் பாறைகளின் எச்சங்கள்

இங்குள்ள கல் ஓய சர்க்கரைத் தோட்ட தொழிற்சாலைக்குப் பின்னால் உள்ள ஹிங்குரான வளாகத்தில் ‘உத்தர ஜெயமஹா விகாரை’ அமைந்துள்ளது. இது திகமதுல்ல இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால விகாரை ஆகும். இங்கு திகமதுல்ல இராச்சியத்தின் கல்வெட்டுக்கள், கலைப் பொருட்கள் மற்றும் தொங்குப் பாறைகளின் எச்சங்கள் காணப்படுகின்றன.

இவ்விகாரை 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதியன்று அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேலானது. இதன் நகரங்களில் எஞ்சியுள்ள பழங்கால புகழ்பெற்ற கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள், கோட்டைகள், கல்வெட்டுக்கள், சிலைகள், கலைப்பொருட்கள் இன்னும் பல இன்றும் மக்களை ஆச்சர்யமாக பார்க்க வைக்கும் திறன் கொண்டவை. அவை இன்று தொல்பொருள் சின்னங்களாய் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் அறியப்படாத ஆராயப்படாதவை எத்தனையோ!

Related Articles

Exit mobile version