கொழும்பு – கண்டி வீதியை அமைத்த கப்டன் டோசனின் கதை

இலங்கையில் தற்போது நெடுஞ்சாலைகள் அங்கும் இங்கும் அமைந்திருந்தாலும், முதன்முதலில் நம் நாட்டில் வீதியை அமைத்தது என்னவோ ஆங்கிலேயர்கள்தான். அதுமட்டுமல்ல இன்னும் ஆங்கிலேயர்கள் அமைத்துக்கொடுத்த ரயில் பாதையில்தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இலங்கை வீதிகளின் வரலாறு பற்றி பேசுவோமானால் முதன்முதலில் அமைக்கப்பட்ட வீதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய வீதிதான். அந்த வீதியை அமைத்தவர் ‘கப்டன் டோசன்‘. யார் அந்த கப்டன் டோசன்?

கொழும்பிலிருந்து கண்டி செல்லும் வழியில் கடுகண்ணாவை மலை ஏறும்போது வலதுபுறத்தில் ஒரு பெரிய வெள்ளை கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கும். அதை நீங்கள் அவதானித்தது உண்டா? இந்த கோபுரத்தை பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் இது என்ன கோபுரம் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் டோசன் கோபுரம். காலத்தை அமைதிப்படுத்திக் கொண்டு டோசன் அமைத்த அந்த வீதியை பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறது.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிய வீதியை அமைத்த டோசனின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட டோசன் கோபுரம்

ஆம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிய வீதியை அமைத்த டோசனின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டதுதான் இந்த டோசன் கோபுரம். போர்த்துகேயர்கள் முதலில் நம் நாட்டிற்கு வந்தார்கள். பின்னர் டச்சுகாரர்கள் அதவாது ஒல்லாந்தர்கள். இறுதியாக, ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்கள் நம் நாட்டைக் கைப்பற்றிய பின்னர்தான் நம் நாட்டின் சாலை அமைப்பு உருவாகத் தொடங்கியது. அதுவும் அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதுதான். இலங்கையின் இயற்கையை அதாவது தேயிலை, தேங்காய், இறப்பர் மற்றும் மசாலாப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவது ஒரு பெரிய பிரச்சினையாக அமைந்திருந்தது ஆங்கிலேயர்களுக்கு. அந்த காலத்தில் மாட்டு வண்டிகள் மட்டுமே பாவனையில் இருந்ததினால் வெளி ஊர்களிலிருந்து கொழும்பு வரும் பொருட்கள் மிகவும் தாமதப்பட்டது. அதனால்தான் ஆங்கிலேயேர்கள் பாதைகளையும் ரயில் அமைப்பையும் உருவாக்கினார்கள். அவர்கள் கட்டிய சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை நாங்கள் இன்னும் சார்ந்து இருக்கிறோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இலங்கை புகையிரத சேவையானது இன்னும் ஆங்கிலேயர்கள் அமைத்த தொழில்நுட்பத்திலேயே இயங்குகிறது.

சரி நாம் மீண்டும் டோசன் கோபுரத்தின் கதைக்கு வருவோம். ஆங்கிலேயர்கள் இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும் கண்டி இராச்சியத்தை கைப்பற்றுவதில்தான் அவர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது. காரணம் கண்டியை அடைய அவர்களுக்கு எளிதான வழி ஒன்று இருக்கவில்லை. கண்டிக்கு வருவது என்றால் கடுகண்ணாவையில் ஏறி மகாவலி ஆற்றைக் கடக்கவேண்டும். நடையில் வரும் ஆங்கிலேய வீரர்களை அவதானித்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தாக்குதல் நடத்துவதற்கு கண்டி இராச்சிய வீரர்கள் அதற்கேற்ப கோட்டைகளையும் தடுப்பணைகளையும் கட்டி தாக்குதல் நடத்தினர். இதனால் ஆங்கிலேய வீரர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் கண்டி வருகை அவர்களுக்கு எளிதானதாக இருக்கவில்லை. அவர்கள் மா ஓயா பள்ளத்தாக்கு வழியாக கம்பளை வரை வந்து ருவன்வெல்ல வழியாக மகாவலியைக் கடந்து கண்டி நகருக்கு சென்றடைந்தனர். ஆனால் இந்த வழியில் கண்டிக்கு சென்று சேர அவர்களுக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது.

கண்டி நோக்கிய மகாவலி, கம்பளை, ருவன்வெல்ல மற்றும் மா ஓய ஆறுகள் மற்றும் வீதிகளை படத்தில் காணலாம்

1818ஆம் ஆண்டு நடைப்பெற்ற கண்டி கிளர்ச்சி போன்ற நிகழ்வொன்று மீண்டும் நடந்தால் அதனை தடுக்க இராணுவ வீரர்களை விரைவாக கண்டி நோக்கி நகர்த்துவதற்கு ஒரு பாதை தேவை என்ற அவசியத்தை உணர்ந்த அப்போதைய ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் அதற்கான வீதியை அமைக்க முடிவுசெய்தார். இந்த பொறுப்பை ரோயல் பொறியியலார்களின் படையணியின் பொறியியலாளர் கப்டன் டோசனுக்கு வழங்கியுள்ளார் அப்போதைய ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ். வில்லியம் பிரான்ஸிஸ் டோசன் என்ற இயற்பெயரைக் கொண்ட டோசன் 1820 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து கண்டி நோக்கிய சாலையை அமைக்கும் பணிகளைத் தொடங்கினார். தொடங்கிய நாள் முதல் வேகமாக நடந்து வந்த பணி ஹிங்குலாவையில் வைத்து தடைப்பட்டது. காரணம் கடுகண்ணாவை கல்லைத் துளைத்து பாதையை முன்னோக்கி அமைக்கும் பணி டோசனுக்கு பெரும் சவலாக அமைந்ததாம். ஆனாலும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காத கப்டன் டோசன் எப்படியோ அந்த சவாலை முறியடித்து அந்த பெரும் பாறையை குடைந்து அதன் வழியாக சாலையை அமைத்து முன்னோக்கி நகர்ந்தார். பெரும் காட்டை ஊடறுத்து சென்று வீதியை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டிருந்த கப்டன் டோசனுக்கு அந்த காலத்தில் இருந்தாக சொல்லப்படும் ‘காட்டு நோய்’ வந்ததாம். இந்த நோய் குறித்தான விளக்கம் பற்றி தௌிவாக இல்லை. ‘காட்டு நோய்’ என்றுசொல்வது எந்த நோய் என்ற அடிக்குறிப்பும் எமக்கு கிடைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். கப்டன் டோசனுக்கு ஏற்பட்ட காட்டுநோயைக் குணப்படுத்திக் கொள்ள டோசன் இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றாராம்.

கப்டன் டோசனுக்கு சவாலாக அமைந்த பாறையை குடைந்து அமைத்த வீதியின் புராதன மற்றும் தற்போதைய படங்கள்

கப்டன் டோசன் கடுகண்ணாவை வரை சாலை அமைத்த விதத்தைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி கொண்டாராம் ஆளுநனர் எட்வர்ட் பார்ன்ஸ். காட்டு நோயை குணப்படுத்திக் கொண்டு மீண்டும் இலங்கை திரும்பிய டோசனை அரச நிர்வாக பொறியியலாளர் என்ற பதவிக்கு உயர்த்தினாராம் ஆளுநர் பார்ன்ஸ். ஆனாலும் கப்டன் டோசனால் அதிக காலம் அந்தப் பதவியிலிருந்து கடமையாற்ற முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக 1829ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி கப்டன் டோசன் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது. மற்றொரு குறிப்பில் அவர் வயிற்றுப்போக்கு காரணமாக மரணமடைந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த இரண்டில் எது உண்மை என்பதில் தௌிவில்லாதபோதிலும் 1829ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி டோசன் இறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது.

கடுகண்ணாவையில் இன்றும் கம்பீரமாய் நிற்கும் டோசன் கோபுரம்

மூன்று ஆண்டுகள் கழித்து சரியாக 1832 ஆம் ஆண்டில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிய வீதி நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த சாலைதான் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் சாலை என்பதும் விசேட அம்சமாகும். இந்த சாலையை நிர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றிய அதேநேரம் பெரும் பிரயத்தனத்தை எடுத்துக்கொண்ட கப்டன் டோசனை நினைவுகூறும் வகையில் ஒரு கோபுரத்தை அமைக்குமாறு அவர்களின் நண்பர்கள், அப்போதைய ஆளுநராக இருந்த சேர் ரொபர்ட் ஹோர்டனிடம் வலியுறுத்தினராம். கப்டன் டோசனின் நண்பர்களின் வேண்டுகோளுக்கு ஆளுநர் பச்சைக்கொடி காட்ட, கொழும்பு – கண்டி வீதியின் உயரமான இடமான கடுகண்ணாவையில் இந்த டோசன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்திலிருந்து கொழும்புக்கு சரியாக 100 கிலோ மீற்றராம். 150 அடி உயரத்திற்கு எழுந்து நிற்கும் இந்த டோசன் கோபுரமானது வெறும் சீமெந்தால் அமையப்பெற்றது இல்லையாம். அதிலும் ஒரு சிறப்பு இருக்கிறதாம். இந்த கோபுரத்திற்காக கல், மணல் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இதன் அடித்தளம் மிகவும் ஆழமாக கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கோபுரத்தின் உச்சியில் உள்ள படிக்கட்டுக்களை இரண்டு பெரிய கும்புக் தண்டுகளைப் பயன்படுத்தி அமைத்துள்ளனர். கோபுரத்திற்குள் காற்று செல்வதற்கு காற்றோட்டப்புழைகளை (air ventilator) நிறுவி கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த 150 அடி உயரத்திற்கான படிகட்டுகளை ஏறுவது ஒரு விசித்திரமான அனுபவம்தான். அதைவிட இறங்குவது பெரும் அவதானம் மிக்கது. எனவே இந்த அனுபவத்தைப் பெற நீங்கள் ஒரு முறையாவது இந்த டோசன் கோபுரத்தில் ஏறி இறங்கத்தான் வேண்டும்!  

முகப்பு பட வடிவமைப்பு : JAMIE ALPHONSUS

Related Articles

Exit mobile version