Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சார்லஸ் டார்வின் எவ்வாறு உலகை மாற்றினார்

நம் இந்திய குழந்தைகள் ஓரளவு வளர தொடங்கியவுடன் பெரும்பாலான பெற்றோர்கள் கற்று தரும் அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கடவுள் வழிபாடு. அவர்களுக்கு புரியும் மொழியில் உலகை உருவாக்கியவர் என்பது முதல் சில கதைகள் சொல்லப்படும். சில வருடங்கள் சென்றபின் தான் மத நம்பிக்கைகள் வேறு. அறிவியல் வேறு என்ற புரிந்துணர்வு ஏற்படத்துவங்கும். இவ்வகை வழிக்காட்டுதல் நமக்கு மட்டும் உரித்தானதா என்ன ? மேற்கத்திய நாடுகளில், பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்தால் அவர் கிறிஸ்துவ மத கோட்பாடுகளில் ஒரு சிலவற்றை ஒப்புக்கொண்டே செய்தாக வேண்டும். பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கு பிறந்திருந்தாலும் உலகின் தோற்றம் சார்ந்த கிறிஸ்துவ மத குறிப்புகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட முடியாது. அந்த கருத்துகள் சற்று வியப்பானது தான். தொடர்வோம்.

டார்வினுக்கு முன்னிருந்த நம்பிக்கைகள்

பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன், மேற்கத்திய நாடுகளின் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொண்ட கருத்து இந்த புவி தோன்றி வரும் 6,000 ஆண்டுகளே ஆனது என்பதும், அதற்கு சான்றாக அவர்கள் பைபிளின் கருத்துக்களை வழிமொழிந்தனர். பைபிளின் வேதப்படி கடவுள் ஒவ்வொரு உயிரினத்தையும், ஆதாம் ஏவாள் வரை தனித்தனியாக தோற்றுவித்தார் என்பதே அதன் கூற்று. மதத்தின் ஆளுமை வலிமையாக இருந்த காலம் என்பதால் இதை விமர்சிப்பவர்களும், மாற்று கருத்து உள்ளவர்களும் புரந்தள்ளப்பட்டனர்.

இதை தவிர பிற ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இயற்கையோடு ஒன்றிய ஜீவனாக மனிதன் கருதப்படவில்லை. விலங்குகளை போல தோற்றம் மனிதனுக்கு இருப்பதை அவர்களோடு விவாதித்தாலும் அவைகளுக்கும், மனிதனுக்கும், உள்ள வேற்றுமைகளை பெரிதளவில் கண்டார்கள். இந்த உலகில் உயிரிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது, பினைப்பில்லாதது மற்றும் மாற்றமில்லாதது என்ற விதி பிரபலம்.

Adam and Eval (Pic: thoughtco)

டார்வின் கோட்பாடுகள்

இந்த விதிகள் அனைத்தையும் மாற்றியவர் உயிரியல் உலகின் தந்தை என்றழைக்கபடும் சார்லஸ் டார்வின். இவரின் கோட்பாடுகள் அன்று முதல் இன்று வரை அறிவியல் உலகின் ஒரு பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும், மற்றொரு பிரிவினரால் விவாத பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. டார்வின் ஆய்வின் படி, அனைத்து உயிரினங்களும், தாவரங்களும் உலகில் தோன்றிய பொழுது இருந்தது போல இப்பொழுது இல்லை. அவை பலவிதமான சிக்கலான அமைப்புகளை கடந்து புதிய இனங்களாக மாறி இன்று,தான் கொண்டுள்ள வடிவத்தை அடைந்துள்ளன. இவ்வுலகில் அனைத்துமே இயற்கையால் உருவாக்கப்பட்டவைகள் தான். அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியால் அல்ல என்பதை ஆணித்தரமாக நிருபித்தது இவரின் “உயிரினங்களின் தோற்றம்” எனும் நூல்.

விலங்குகள், தாவரங்கள் என்று அனைத்திலும் வாழ்க்கைப்போராட்டதில் தகுதியானவை வாழ்கின்றது. தகுதியற்றவை பலமுடன் இருந்தாலும் அழிந்து விடுகிறது. தகுதியானவை பலம் குறைவாக இருந்தாலும் வாழ்வை நீடித்து கொள்கிறது. வாழ்விடம், உணவு, தட்பவெப்ப சூழ்நிலை, எதிரிகளிடம் போராடுதல், அதற்கான தற்காப்புகள் போன்றவற்றை அவை தேர்ந்தெடுக்கும் உருவாக்கும் விதம் போன்றவைகளை அவர் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். “பரிணாம வளர்ச்சி கொள்கை” யின் கோட்பாடுகள் பெரும்பாலான அறிஞர்களால் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மனிதன் குரங்கில் இருந்து பிறந்ததற்கான சான்றுகளும், விளக்கங்களும் இதில் அடக்கம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த கருத்துக்கள் பல அறிஞர்களிடம் தோன்றியது. ஆனால் அவற்றை விளக்க முயற்சி செய்த பொழுது மக்களின் நம்பிக்கைகள், சான்றுகள், வழிமுறைகள் போன்றவற்றில் அவர்கள் தவற விட்டிருக்கலாம். மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட  ஒரு சிலரின் கழுத்து துண்டாக்கப்பட்டதாக கூட செய்திகள் உண்டு. டார்வின் இந்த புத்தகத்தை பல ஆண்டுகளாக வெளியிட தயங்கி இறுதியாக வெளியிட்டுள்ளார். இன்றளவும் அதன் சர்ச்சைகள் தொடர்கின்றது.

Theory of Evolution (Pic: bbc)

வாழ்க்கை குறிப்பு

பதினெட்டாம் நூற்றாண்டின் கவிஞர் இராஸ்மஸ் டார்வின். உலகியல், அறிவியல் சார்ந்த இவரது கவிதைகள் பிரபலம். இவர் ஒரு இயற்கை விஞ்ஞானி. இவரின் பேரனாக பிறந்தவர் இயற்கையியலாளர் சார்லஸ் ராபர்ட் டார்வின் (பிப்ரவரி 12, 1809). செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த சிறுவன் டார்வினுக்கு சிறு வயதில் பறவைகளையும் உயிரிகளையும் கண்காணிப்பதும், புத்தங்கள் படிப்பதிலும் ஆர்வம் அதிகம். பறவைகளின் முட்டைகள், கடல் சங்கு, பாசிகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்களை சேகரிப்பான். வளர் இளம் பருவத்தில் அறிவியல் பாடத்திலும் உயிரியல் பாடத்திலும் நாட்டத்தை கொண்டிருந்தான். டார்வினின் தந்தை ஒரு மருத்துவர். ஆகவே டார்வினை ஒரு மருத்துவராக்க வேண்டும் என்ற எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் டார்வினுக்கு மருத்துவ கல்வி இனிக்கவில்லை. இதனால் அவனது தந்தை கடும் அதிருப்தியில் டார்வினை கிறிஸ்துவ மத பாதிரியார் ஆக்க முடிவு செய்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு அனுப்பி வைத்தார்.

டார்வினின் ஆர்வத்தை சரியாக இனம் கண்டு கொண்டது கேம்பிரிட்ஜ் வாழ்க்கை. அவரின் பொழுதுபோக்கான இயற்கை ஆர்வம் இப்பொழுது தீவிரம் அடைத்தது. சான்றோகளும் வழிகாட்டிகளும் டார்வினுக்கு பக்க பலமாக துணை நின்றனர். டார்வினின் பல விதமான ஆய்வுகள் மற்றும் பயணங்களுடன் பட்டப்படிப்பு வருடம் 1831 இல் நிறைவுபெற்றது. அதே வருடம் சார்லஸ் டார்வினுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இயற்கையாளர்கள், புவியியலாளர்கள் கொண்ட குழு ஒன்று கடல் பயண ஆராய்ச்சிக்கு டார்வினுக்கு பீகிள்ஸ் கப்பல் அழைப்பு விடுத்திருந்தது. தென் அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்பகுதி மற்றும் பல தீவுகளுக்கான அந்த பயணம் ஐந்து வருடங்களுக்கு நீடித்தது. டார்வினின் நூற்றுக்கணக்கான நோட்டுபுத்தகங்கள் நிரம்பியது. கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் புவியை பற்றிய பல விஷயங்களை உணர்ந்து கொண்டார். ஆயிரக்கணக்கான அவைகளின் மாதிரிகளை அவரின் மேல் ஆய்வுக்காக எடுத்து இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார். மத குருமாராக உருவாக பட்டப்படிப்பு படித்த டார்வின் இந்த பயணம் முடிந்து திரும்பிய பொழுது புது வடிவம் பெற்றிருந்தார்.

சாதாரண ஆய்வாளராக இருந்த டார்வின் ஆய்வு கொள்கைகளை உருவாக்குபவராக மாற்றம் அடைந்தார். அவரின் வாழ்நாள் முழுவதும் ஈடுபடப்போகும் ஆய்வுக்கான அஸ்திவாரமாக அந்த பயணம் அடைந்தது. சில மாதங்களில் டார்வின் லண்டன் நகருக்கு குடிபெயர்ந்தார். பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட துவங்கினார். அவர் வெளியிட்ட புத்தகங்கள் பரம்பரை மாற்றங்கள், இயற்கை தேர்வு, பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை மையக்கருத்தாக கொண்டது.

இறுதியாக, இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்திய அரசின் முக்கிய பதவிகளில் உள்ள ஒருவர் ஒரு கருத்து ஒன்றை வெளியிட்டார். சார்லஸ் டார்வின் கோட்பாடுகள் கூட இந்து மத ரீதியான கருத்துக்களை ஒட்டியே தான் வெளிவந்துள்ளன என்றார். குருஷேத்திர போரின் இறுதியில் கிருஷ்ணர் அளிக்கும் உபதேசத்தில் தமது அவதாரங்களை பற்றி குறிப்பிடுவார். அந்த அவதாரங்கள் அனைத்தும் பரிணாம வளர்சிக் கொள்கைக்கான மறைமுக குறியீடுகளாக இந்துக்களின் ஒரு சாரரால் இன்றளவும் (!!!) பார்க்கப்படுகிறது. மற்றொரு கதையில் பிரஜாப்பதி (உலகத்திற்கே கடவுள்), அவர் தக்ஷனின் பதிமூன்று மகள்களையும் மணமுடிக்கிறார். அவருக்கு பல இனங்களில் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிடும் அனைத்தும் ஒரு வகையில் பரிமாண வளர்ச்சி நிலைகளை குறிப்பிடுபவதாக நம்பப்படுகிறது.

charles Darwin (Pic: smithsonianmag)

அறிவியலுக்கு எப்படி என்று தெரியும். ஏன் என்று தெரியாது. மத அடிப்படையில் பார்பவர்களுக்கு ஏன் என்று தெரியும். எப்படி என்று விளக்க முற்பட்டால் அவர்கள் பதில் கடவுளே

Web Title: Charles Darwin Theory Changed The World

Featured Image Credit: biologywise

Related Articles