ஹைதராபாத்தில், லக்டிகாபுல் பகுதிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அரங்குக்கும் இடையில், கன் பார்க் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பூங்காவை நீங்கள் காணலாம். பூங்காவின் நடுவில் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. பார்வைக்கு மிகவும் ஆடம்பரமற்றதாகத் தோன்றும் இது பல முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தளமாக விளங்குகிறது. 1969 தெலுங்கானா போராட்டத்தின் போது உயிரிழந்த 369 மாணவர்களின் நினைவாக இச்சின்னம் கட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான பின்னரும் பிரத்யேக தெலுங்கானாவுக்காக மக்கள் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
2014 பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு மசோதா மார்ச் ஒன்றாம் திகதி இந்திய ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டு, 70 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் ஜூன் 2ம் திகதி, தெலுங்கானா கனவு நனவாகியது. தெலுங்கானாவுக்கான மக்கள் போராட்டத்தின் பின்னணி என்ன? இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ஏன் 70 ஆண்டுகள் ஆனது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, நாம் வரலாற்றில் பின் நோக்கி செல்ல வேண்டும், மன்னர் ஔரங்கசீப் காலம் வரை.
1687 இல், மொகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் கோல்கொண்டா கோட்டையின் குதுப் ஷாஹி வம்சத்தை தோற்கடித்து தக்காணத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினார். சிறிது காலத்திற்குப் பிறகு, கமர்-உத்-தின் கான் தக்காணத்தின் மீது கட்டுப்பாட்டை கைக்கொண்டு நிஜாம்-உல்-முல்க் என்ற பட்டத்துடன் அசஃப் ஜாஹி வம்சத்தைத் தொடங்கினார். இந்த வழியினரே நிஜாம்கள் என்று அறியப்பட்டனர். நிஜாமின் ஆட்சியின், தெலுங்குப் பகுதிகளை தெலுங்கானா, ராயலசீமா மற்றும் வடக்கு சர்க்கார் (அல்லது கடலோர ஆந்திரா) என மூன்று வெவ்வேறு பகுதிகளாக வகைப்படுத்தலாம். நிஜாமின் தெலுங்கானாவானது தற்கால மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி அமைந்தது. மிர் ஒஸ்மான் அலி கான் ஆட்சியின் போது, ஆங்கிலேயர்கள் வடக்கு சர்க்கார் மற்றும் ராயலசீமாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால், அப்பகுதிகள் ஆங்கிலேயர்களின் மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக மாறியதுடன் நிஜாமின் ஆட்சி ஹைதராபாத் மாநிலம் என்று அறியப்பட்ட தெலுங்கானா பகுதியுடன் எல்லைப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகள் அனைத்தும் இந்தியா என சுதந்திரம் பெற்றது. சர்தார் வல்லபாய் படேல் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைக்க தன்னை அர்ப்பணிப்புடன் செய்யலாற்றினார். ஆனால் ஹைதராபாத் மாநிலம் இந்திய யூனியனில் சேர மறுத்தது. இந்திய இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆபரேஷன் போலோ மூலம் நிஜாம்கள் அதிகாரம் பறிக்கப்பட்டு, ஹைதராபாத் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாறியது. சில காலத்துக்குள்ளாக மதராஸ் மாநிலத்தில் வசிக்கும் தெலுங்கர்கள் தங்களுக்கான தனி மாநில கோரிக்கையுடன் தீவிரமான போராட்டங்களில் இறங்கலாயினர்.
பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திராவுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தது தனி மாநில கோரிக்கையை மத்திய அரசால் புறக்கணிக்க முடியாத தலைப்பாக மாற்றியது. இதன் விளைவாக, காங்கிரஸ் அரசின் தலைவர்கள் 1953 இல் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவை ஒன்றிணைத்து கர்னூலைத் தலைநகராகக்கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்கினர். தெலுங்கானா பகுதியோ ஹைதராபாத் மாநிலமாகவே நீடித்தது. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டவுடன், மற்ற மொழியினரும் தனி மாநிலங்களைக் கோரத் தொடங்கினர். எனவே, இப்பிரச்னையை கையாள மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. மாநிலங்களுக்கு என உருவாக்கப்பட்ட இவ்வாணையம் ஹைதராபாத் மாநிலத்தின் எதிர்காலம் குறித்து விசேட பரிந்துரையொன்றை முன்வைத்தது.
ஹைதராபாத் மாநிலம் தனியே தெலுங்கு பேசும் பகுதிகளால் மாத்திரம் ஆனதல்ல. அதன் மராட்டியப் பகுதி பம்பாய் மாநிலத்துக்கும், கன்னடப் பகுதி மைசூர் மாநிலத்துக்கும் உரிமையாக வேண்டும் என பரிந்துரைத்த ஆணையம் தெலுங்கு பகுதி ஆந்திராவுக்கு செல்லக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியது. தெலுங்கானாவும் ஆந்திராவும் குறைந்தபட்சம் 1961 வரை தனி மாநிலங்களாக இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தெலுங்கானா ஆந்திராவுடன் இணைய வேண்டுமா என்பதை மக்கள் வாக்களித்து முடிவு செய்யலாம் என்றும் ஆணையம் கூறியது. தெலுங்கானாவை தெலுங்கு பேசும் ஆந்திராவுடன் இணைக்க ஆணையம் ஏன் எதிர்த்தது எனும் கேள்வி பலருக்கும் எழக்கூடும். தெலுங்கானா மக்கள் ஒப்பீட்டளவில் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளதால், கடலோர ஆந்திரா மக்களால் சுரண்டலுக்கு ஆளாக நேரிடும் என அந்த அறிக்கை தெரிவித்தது. உதாரணமாக, இந்திய ராணுவம் நிஜாமின் படைகளைத் தோற்கடித்து ஹைதராபாத்தைக் கைப்பற்றிய பிறகு, கடலோர ஆந்திராவில் இருந்து பல அரசு அதிகாரிகள் பணி நிமித்தம் அங்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தங்களை மிகவும் மோசமாக நடத்தியதாக தெலுங்கானா மக்களிடையே கருத்து நிலவியது. ஆந்திராவில் மதுபானங்களுக்கு இல்லாத கலால் வரி தெலுங்கானாவில் விதிக்கப்பட்டதால் அங்கு அதிக வருவாய் உண்டாக்கியது. இந்த வருமானம் ஆந்திராவை நோக்கி திருப்பி விடப்படலாம் என்று தெலுங்கானா மக்கள் அஞ்சினார்கள். அதனோடு கிருஷ்ணா, கோதாவரி நதிநீர் பயன்பாடு குறித்தும் இருதரப்பினருக்கும் ஒருமித்த முடிவுகள் கிடைக்கவில்லை.
இந்த அச்சங்களுக்கு முக்கிய காரணம் நிஜாம் தலைமையிலான ஹைதராபாத் பிரிட்டிஷ் தலைமையிலான ஆந்திராவை விட பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக இருந்தமையே. நிஜாம்கள் விதித்த வரியால் தெலுங்கானா மக்கள் அவதிப்பட்டு வந்த நேரத்தில், ஆங்கிலேயர் தலைமையிலான ஆந்திராவில் நீர்ப்பாசனம் மற்றும் ரயில்வே திட்டங்கள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது, இதனால் ஆந்திரர்கள் ஆங்கில மொழியிலும் கல்வியையும் அதைத் தொடர்ந்த அரசாங்க வேலை அனுகூலத்தையும் பெற்று வந்தனர். உருவாகியுள்ள புரிந்துணர்வற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவர ஆந்திராவின் அரசியல் தலைவர்கள் தெலுங்கானா மக்களுக்கு ‘தெலுங்கானாவின் வருமானம் அங்கு மட்டுமே செலவிடப்படும்’ போன்ற பல்வேறு உறுதிகளை அளித்து ஒரு ஜென்டில்மென்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த வாக்குறுதிகள் பிரிந்துகிடந்த தெலுங்கர்களின் நிலங்களை ஒன்றிணைத்ததுடன் அதன் தலைநகராக ஹைதராபாத்தை மாற்றியது.
இந்த ஒருங்கிணைந்த மாநிலத்தின் உருவாக்கம் பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் ஏற்பட்டது. உதாரணமாக, ஆந்திராவுக்கான பல்வேறு மூலதனங்களை திராட்டிக்கொள்வதற்கு உள்ள சிக்கலை இந்த ஒருங்கிணைப்பு தீர்த்து வைக்கும் என்று சில தலைவர்கள் கருதினர். என்னதான் உடன்படிக்கை இருந்தபோதிலும், தெலுங்கானா மக்கள் பலரும் இது நிரந்தரமானது இல்லையென்றே கருதினர். இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தவொன்று நீர். இயற்கையில் வறண்ட தெலுங்கானா வரலாற்று ரீதியாக தொட்டி பாசனத்தையே பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், ஆந்திர அரசின் பொது முதலீடுகள் போதுமானளவு இல்லாததால், விவசாயிகள் தனியார் துளைக்கிணறுகளை நம்பியிருக்க வேண்டிவந்தது, இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகம். மறுபுறத்தில் ஆந்திரப் பகுதிகளில் வலுவான பொது முதலீடு காரணமாக, அதன் விவசாயிகளுக்கு கிருஷ்ணா மற்றும் கோதாவரிக்கு எளிதாக அணுக முடிந்தது.
இரண்டாவது முக்கிய காரணம் மக்கள் பிரதிநிதித்துவம். தெலுங்கானா தலைவர்கள் மாநில அரசியலில் துணைப் பங்கு மாத்திரமே வகிக்க வேண்டியிருந்தது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகளிலும் இதே போன்ற பாகுபாடு தொடர்ந்தும் நிலவியது. சமூக-பொருளாதார வேறுபாடுகள் போக, தெலுங்கானாவில் உள்ள தலைவர்கள் தாங்கள் ஆந்திராவை விட தனித்துவமான சொந்த கலாச்சாரம், உடை பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்ததாக உணர்ந்தனர்.
ஆந்திர அரசு பல்வேறு வகைகளில் ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை மீறியதால், தெலுங்கானா மக்கள் 1969 இல் ஒரு பெரிய கிளர்ச்சியைத் தோற்றுவித்தனர். சிலர் ஜென்டில்மேன் ஒப்பந்தத்தைக் கடுமையாக அமல்படுத்த நிர்பந்தித்தனர், மற்றவர்கள் தனி தெலுங்கானா மாநிலமே ஒரே தீர்வு என வாதிட்டனர். இந்த மக்கள் கிளர்ச்சி இயக்கம் ‘ஜெய் தெலுங்கானா இயக்கம்’ என்று அறியப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய பங்குதாரர்களாக அமைந்தவர்கள் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆவர். கல்லூரிகளிலும் அரச வேலைகளிலும் தங்களுக்குப் போதிய பதவிகள் இல்லை என்று குரல்கொடுத்த இயக்கத்தினர் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், சிலர் கடுமையான வீதி போராட்டத்திலும் ஈடுபடலாயினர். போராட்டம் சூடுகண்ட வேளையில், ஆத்திரமடைந்த போராட்டக்கார கும்பல் துணை ஆய்வாளர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்க முயன்றது. இதனால் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூடு களத்தில் பல மாணவர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. அரசியல் ரீதியாக தெலுங்கானாவின் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்த, தெலுங்கானா பிரஜா சமிதி (டிபிஎஸ்) என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது. இதனால மக்கள் போராட்டம் நிறுத்தப்பட்ட போதிலும் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படவில்லை.
இந்திய பசுமைப் புரட்சி விவசாயத்தை அதிகளவு நீரைச் சார்ந்ததாக மாற்றியது. அதிகரித்த நீர்த் தேவைப்பாட்டுக்கு ஏற்றவாறு, ஆந்திராவுக்கு நீர்வரத்து அதிகமாக கிடைத்தமையால் அங்கு நிலைமை சாதகமாக இருந்தது. ஆனால் தெலுங்கானாவில் நிலை வேறு கிருஷ்ணாவின் நீர்ப்பிடிப்புப் பகுதியின்படி, தெலுங்கானா அதிலிருந்து 69% நீரைப் பெற வேண்டும் என்று கோரியது. ஆனால் உண்மையில் அதில் பாதிதான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால், தெலுங்கானா விவசாயிகள் ஆந்திராவுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தெலுங்கானா விவசாயத் துறையில் கணிசமான பின்னடைவை ஏற்படுத்தியது. ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஆந்திர உரிமையாளர்களுக்கு சொந்தமானவை என்றும், அவர்கள் உள்ளூர் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
தெலுங்கானாவில் பொருளாதார ரீதியாக கடலோர ஆந்திரா ஆதிக்கம் செலுத்திய அதே நேரத்தில் ராயலசீமா அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆதிக்கம் பெரும்பாலும் இரண்டு சாதிக் குழுக்களின் கைகளில் இருந்தது – ரெட்டிகள் மற்றும் கம்மாக்கள். டாக்டர் அம்பேத்கர் ஒருமுறை கூறியது போல், ரெட்டிகளும் கம்மாக்களும் நிலம், அலுவலகம் மற்றும் வணிகம் அனைத்தையும் தங்கள் கைகளுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஸ்திரமான அரசியல் பிடிப்பை பேணிவந்தது. எனவே, தெலுங்கானாவுக்கான அரசியல் கோரிக்கை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் கே. சந்திரசேகர ராவ் அவர்களின் எழுச்சியுடனேயே முக்கியத்துவம் பெற்றது. தெலுங்கானா தனி மாநிலமாக அமைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தனிக்கட்சி ஒன்றையும் உருவாக்கினார். அவரது சொற்பொழிவுகளே அவரது தனித்தன்மை. தெலுங்கிலும் உருது மொழியிலும் அவருக்கு இருந்த வலுவான புலமை அவரது பேச்சுக்களை நோக்கி பெரும் கூட்டத்தை ஈர்க்க உதவியது.
2004 தேர்தலில், தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி வழங்கியதைத் தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார் கே.சி.ஆர். சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில், அவரது கட்சி, சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டிய போதும், தெலுங்கானா கோரிக்கை நிறைவேறவில்லை. தன் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணி 2009-ல் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் கேசிஆர். அதிகரித்து வந்த பதற்றம் மற்றும் கேசிஆரின் நலிவடைந்து வந்த உடல்நிலை ஆகியவற்றால், தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டியதாயிற்று. இந்தியாவின் 29வது மாநிலமாக உதித்த தெலுங்கானாவின் முதல் முதல்வராக கே.சி.ஆர். பதியேற்றார்.
இந்த மாநில சீரமைப்புடன் சில குறிப்பிடத்தக்க விடயங்களும் முன்வைக்கப்பட்டன. அதிலொன்று 2024 வரை ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக செயலாற்றும், அதன் பிறகு அமராவதி நகரம் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக மாறும். தனி மாநிலம் உருவானாலும், மேலும் மாநிலங்களுக்கு இடையே அரசு ஊழியர்கள் எவ்வாறு பிரிக்கப்படுவார்கள், நதிநீர் பங்கீடு போன்ற பிரச்சினைகளுக்கு இதற்குள் தீர்வு காணப்பட்டாக வேண்டிய நிலையுள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்தின் விளைவாக இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் நதிநீர் பங்கீடு வரும் நாட்களில் இரு தெலுங்கு மாநிலங்களிடையே பெரும் முரண்பாடுகளை உண்டாக்கும். பொருளாதார வளர்ச்சியை பொறுத்தமட்டில் இந்த பிளவு மூலம் தெலுங்கானாவே பெரிதும் பயனடைந்துள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டி. நரசிம்ம ரெட்டி, இந்த சீரமைப்பு தெலுங்கர்கள் மத்தியில் நிலவும் சமத்துவமின்மையை மாற்றியமைக்கலாம் என கருதுகிறார். இந்த பிளவு காரணமாக ஆந்திரப் பிரதேசம் நிச்சயம் பல வகைகளிலும் பாதிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார். ஆந்திரா உண்டாக்கியிருக்கும் விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பின் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, பாரிய பொருட்செலவில் தலைநகரங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்தடுத்து ஆந்திராவில் உருவாகும் அரசாங்கங்கள் தலைநகரங்கள் பற்றிய பிரச்சினையை வெவ்வேறு விதமாக அணுகிவருகின்றனர். இருப்பினும், பல வளர்ச்சி மையங்களைக் கொண்டிருப்பதால் ஆந்திரப் பிரதேசம் குறுகிய காலத்துக்குள்ளாகவே மீண்டும் வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கிவிடும், ஆனால் தெலுங்கானாவின் வளர்ச்சி ஹைதராபாத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால் அதன் வளர்ச்சியில் அது சவாலாக அமையும்.
இந்தியாவின் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வது எல்லாம் ஒரு வலுவான சமூகம் மற்றொரு வலுவான சமூகத்தை பிரதியீடு செய்கிறதன்றி சாமானியர்களின் பிரச்சினைகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.